Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
22 février 2007

உயிர்மெய் இதழ் குறித்த அறிமுகம்- உள்ளோட்டமும் வெளியோட்டமும்

katsura

பெண்களுக்கான காலாண்டிதழாக நோர்வேயில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது இச்சஞ்சிகை.  இதுவரை 3 இதழ்கள் வெளிவந்திருக்கிறது. தமயந்தியும் பானுபாரதியும் அதன் ஆசிரியர்கள். புகைப்படக் கலைஞராக நமக்குப் பழக்கப்பட்ட தமயந்தி இதழில் புகைப்படக் கலைக்கு மிக முக்கியம் கொடுத்து வருகிறார். இதழின் அட்டைதொடக்கம் அனைத்துப் பக்கங்களும் புகைப்படங்களால் அதிகம் நிரம்பியுள்ளன. அதிகமான விவாதங்களையும் அரசியல் முரண்பாடுகளையும்  இதழில் உள்ள புகைப்படங்கள் முன்நிறுத்துகின்றன.

புலம் பெயர் சூழலில் 80களிலிருந்து வெளிவந்த எத்தனையோ சிற்றிதழ்கள் இன்று ஆவணங்களாகிப்  போய்விட்டது. வெளியிட்டவர்களிடமே அவை இருக்கும் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. பள்ளம் ஓசை, தூண்டில், ஊதா, கண், சிந்தனை, சுவடுகள், மௌனம், புன்னகை, சக்தி, தேனீ, அக்கினி, ழகரம் வளர்நிலா, தேடல், அம்மா, சஞ்சீவி, சுமைகள் காலம் , எக்ஸில், அஆஇ, மனிதம், நான்காவது பரிமாணம், உயிர்நிழல், மற்றது, நம்மொழி, கைநாட்டு என்று எண்ணிக் கொண்டே போகலாம்.

ஆனால் இந்த சிற்றிதழ்கள் குறித்து நமது கரிசனை மிக மட்டமாகவே இருந்து வருகிறது. ஈழத்தின் போர்ச் சூழலுக்கு அப்பால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த பகுதிகளில் இருந்து வெளிக் கொண்டு வந்த சிற்றிதழ்கள் ஈழத்தமிழர்கள் வரலாற்றில் பாதிப்பைச் செலுத்தி விட்டிருக்கிறது. அதிகாரமயப்பட்டுப் போன பத்திரிகைத் துறையிலிருந்து விலகி புதிய ஒரு கேள்விக் குறியோடு வெளிவந்தவை அவை. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் எந்தவொரு பணபலமோ பொது மக்களின் செல்வாக்கோ இருந்ததில்லை. ஆகக் குறைந்தது அவற்றிடம் இருந்தது அறம் மட்டுமே. அறம் என்பது தமதளவிலான கருத்தின் மீதான அறம். அந்த அறத்தின் மீதிருந்தே சமூகத்தை  உற்று நோக்கியது அச்சிற்றிதழ்கள். அந்தக் கருத்து நிலை மாறும் பட்சத்தில் அல்லது தவறும் பட்சத்தில் அவை நின்று போக வேண்டி ஏற்பட்டிருக்கிறது. uyir

உண்மையில் நின்று போனது என்று நாம் ஒற்றைச் சொல்லில் சொல்வது தவறானது. அது இன்னொன்றாய் பரிணாமம் அடைந்தது என்றுதான் நோக்க வேண்டும். சிற்றிதழ்கள் ஒருபோதும் நின்று போவதில்லை. ஏனெனில் அது பெரிய திட்டமிடலோடோ மிகப்பெரிய நிறுவனங்களின் பணமுதலீட்டோடோ அல்லது விளம்பரப் பணங்களிலோ வெளிவருவதில்லை. வெளியிடுபவர்களின் சொந்த வருமானத்தில் ஒதுக்கப்படும் ஆகக் குறைந்தளவு தொகையை நம்பியே அதன் வரவு தீர்மானிக்கப்படும்.இதன் ஆயுட்காலம் ஒரு இதழாகவும் இருக்கலாம் ஒருநூறு இதழாகவும் இருக்கலாம். இங்கே தொடர்ச்சி தொடர்ச்சியின்மை பற்றி யார் கவலை கொள்ள முடியும். இத்தகைய குணவியல்புகள் குறித்து வாசகனும் தெளிவாகவே இருக்கிறான்.

இதற்குமப்பால் சிற்றிதழ்களைத் தொடர்ந்து தேடவேண்டி வாசகனை நிற்பந்தித்துக் கொண்டேயிருக்கிறது ஏதோ ஒன்று. ஒரு பொது வெளியில் கிடைக்காத, சமரசமற்ற, சமூக ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட மறு முனைகளை இத்தகைய சிற்திதழ்களில் மட்டுமே உணர முடியும். இது நின்று போவதாலோ காலம் பிந்துவதாலோ எதையும் இழக்கப்போவதில்லை எந்த வருமானத்தையும் எதிர்பார்க்காத ஒன்று என்பதில் மட்டுமே அது தேவையானபோது சமூகத்திற்கெதிராக முழுமையாக முரண்பட முடிகிறது. இன்றைய சிற்றிதழ்களின் தேவையும் அதுவாகவே இருக்கிறது.

இப்போது உயிர்மெய் இதழ்  நம்மை எவ்வகையில் அணுகுகிறது? நாம் அதனுடன் எந்த வகையில் ஒரு உறவைப் பேணவேண்டிய தேவை உண்டாகிறது என்று பார்க்க வேண்டும். நான் நினைக்கிறேன் எல்லாவற்றின் கருத்துக் களமாக சிற்றிதழ்கள் இருப்பது இன்று தேவையற்றது. எல்லோருக்கும் நல்லவனாக நடிக்கும் நடுநிலைமைப் பாணி இன்று ஒவ்வாத தன்மைக்குப் போய்விட்டதை  அனைவரும் உணருவார்கள். சிற்றிதழ்கள் செட்டிமாரின் பணத்திலும் சீட்டுக் கொம்பனிகளின் பணத்திலும் வெளிவருவதில்லைத்தானே. எங்கேயோ ஏதோ ஒருகடையில் கோப்பை கழுவி அல்லது குப்பையள்ளி அல்லது யாரோ சொன்னது போல் மனைவியின் தாலியை விற்றுத்தானே வந்து கொண்டிருக்கிறது. ஜோசப்பு சலூனுக்குள் வைத்துத் தானே மல்லிகை வெளிவந்தது. அதில் ஒரு இதழ் வந்ததா ஒன்பது இதழ் வந்ததா என்று யாரைப் பிடித்துக் கணக்குப்பார்த்துக் கொண்டிருக்க முடியும்? வறுமையும் இயந்திரமாக்கப்பட்ட தொழில் முறைக்கிடையிலும் கிடந்து திண்டாடும் கலைஞன் தன்னுடைய சுயவெளிப்பாட்டை தனித்துவத்தை எதிர்ப்புணர்வை சமூகத்திடம் முன்வைக்க இந்தச் சிற்றிதழ்கள் மூலமே சாத்தியமாகிறது. தன்னுடை பொருளாதார நிலைக் கேற்ப வளைந்து கொடுக்காதபடி சமூகத்திடம் மண்டியிடாது தன்னை முழுமையாகக் காப்பாற்றிக் கொள்ள சிற்றிதழின் தன்மையைவிட வேறென்ன இருந்து விடமுடியும். குமுதத்தில் எழுதினால் காசு உயிர்மையில் எழுதினால் மவுசு என்று மண்டியிட்டவர்கள் எல்லோருக்கும் சிற்றிதழ்கள் என்றால் மிகக் கேவலமான ஒன்றாகவே இருக்கும். என்ன பிச்சைக்காரத்தனம் என்பது போல் எழுதிக் கொளவார்கள். நாங்கள் அவர்களை விட்டு விலகி விடுவதே உத்தமம். அது அவர்கள் உழைப்பு சார்ந்த விடையம்.

உயிர் மெய்யின் முதலாவது இதழ்  மித்திரன் மூலம் கைக்குக் கிடைத்த அன்று  தமயந்திக்கு மெயில் பண்ணினேன். தலைவா...கரைமீது சிறு நண்டு கோடொன்று வரையும் என்று படம் காட்டாதை மனித அவலம் இரத்தமும் தோலுமாய் சிதைவுண்டு தொங்குது. நீகடலும் நண்டும் பனித்துளியும் புல் நுனியும் என்று படம் போடாதை என்று எழுதினேன். மறுநாள் மிகப்பெரிய பதில். எதை வன்முறை என்கிறாய்? உனக்குத் தெரிந்த வன்முறை அதுமட்டும் தானா? உன்னால் ஏன் நண்டு ஒன்றிற்கு இருக்கும் வலியை உணரமுடியாமல் போகிறது? எப்படி இடிந்த கட்டடத்திற்குள் மாண்டுபோன மனித உழைப்பினை உன்னால் காணமுடியாமல் போகிறது? என்று கேட்டு எழுதியிருந்தான். இங்கேதான் முதலாம் எதிரி இரண்டாம் எதிரி விளையாட்டை நாம் யோசிக்க வேண்டும்.

இலங்கையின் சமாதான-போர்ச் சூழலில் நோர்வே தன்னை நுழைத்துக் கொண்டதின் பின் நோர்வே அரசின் தகிடுத்தித்தங்கள் பல அம்லமாகின. உயிர்மெயியிலும் அதுசார்ந்த கட்டுரைகள் வெளிவந்தன. அவை பெரும்பாலும் பூரணமற்று இருந்தன. உயிர் மெய் இதழுக்கு அதுசார்ந்த தரவுகளைச் சேர்த்து  கட்டுரைகள் எழுத வேண்டிய கட்டாயம் ஒன்று உண்டு.நோர்வேயின் தமிழ்ச் சமூகத்திற்குள் இருக்கின்ற அனைத்து அதிகார, சாதிய, நெருக்கடிகளை மீறி ஒவ்வொரு இதழ்களையும் கொண்டுவருவதாக பானுவும் தமயந்தியும் சொல்லிக் கொள்வார்கள். அப்படியிருக்க இன்னும் இறுக்கமாயும் ஆக்குரோசத்துடனும் வரவேண்டிய தேவையுள்ளதையே உணரமுடிகிறது.

இன்று நாம் படுமோசமான பாசிச சமூகத்திற்குள்ளிருந்து தமிழ் இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்  இந்த சமூகம் குறித்த அத்தனை வடுக்களையும் அது குறித்த எதிர்ப்புணர்வுகளையும்; பதிவுசெய்யாத சிற்றிதழ்கள் நமக்கு அந்நியமானவையே.ஆதலினால்தான் உயிர்மெய் இதழை இன்னும் நெருக்கமாக நாம் உணர்ந்த கொள்கிறோம்.

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité