Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
3 mars 2007

தமிழீழம் எனும் பெருங்கதையாடல் தகர்த்தெறியப்பட்ட தினம் மார்ச் - 03

காலணித்துவ ஆதிக்க சக்திகள் இந்திய உபகண்டத்தைவிட்டு வெளியேறிய பின்பு அந்த ஆட்சி அதிகாரங்களை புதிய புதிய ஆதிக்க சக்திகள் தமக்குள் பங்கு போட்டுக்கொண்டன. இந்தியாவில் படித்த பார்ப்பனர்கள் வடக்கே புதிய ஆளும் வர்க்கமாக பரிணமித்தனர். அதேபோன்று இலங்கையிலும் வடக்கேயிருந்த படித்த வேளாள மேட்டுக்குடிகள்தான் காலணித்துவ ஆட்சியாளர்களின் எச்சங்களான புதிய ஆளும் வர்க்கத்தை பரிணமித்தனர். தென்னிலங்கையில் இதுபோன்று உருவாகிய புதிய ஆதிக்க குழாமாக உயர்சாதி (கொவிகம) சிங்களவர்கள் காணப்பட்டார்கள். 20 நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் இலங்கையில் போடப்பட்ட தரகு முதலாளித்துவ அரசொன்றிற்கான அத்திவாரமான செனட்சபையின் “படித்த இலங்கையர்” என்ற அந்தஸ்த்தோடு பொன்.இராமநாதன் என்பவரே முதலில் அமர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் தமிழ் - சிங்கள சமூகங்களிடையே உருவாகிய வெள்ளாள - கொவிகம கூட்டு பரஸ்பர புரிதலோடு செயற்பட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும் சுதந்திரத்தை ஒட்டிய காலத்தில் இருந்து வெள்ளையர் விட்டுச்சென்ற அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதில் இந்த ஆதிக்கத் தரப்புகளிடையே முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. இந்த முரண்பாடுகளே வேளாள ஆதிக்க சக்திகளால் தமிழ் - சிங்கள முரண்பாடுகளாக திரிபுபடுத்தப்பட்டன.

யாழ் - சைவ - வேளாள ஆதிக்க சக்திகளின் இந்த திரிபுவாதமே தமிழீழ பெருங்கதையாடலை முன்மொழிந்தது. அன்றில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புரட்சிகர அரசியல் கருவ+லமாக இந்த தமிழீழக் கனவானது எல்லோர் மனங்களிலும் விதைக்கப்பட்டது.
1970 கள் வரைக்கும் இந்த தமிழீழம் எனும் கருத்துருவம் தமிழ் அரசியல்வாதிகளின் ஜனநாயக ரீதியான கோரிக்கையாகவே வெளிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த வெளிப்பாடுகளின் தாக்கமானது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த ஒவ்வொரு தனிமனிதர்கள் இடத்திலும் ஒருவித புரட்சிகர மனோவியல் உருவாக்கத்திற்கு வித்திட்டது.

சாதி, மதம், பிரதேசம், வர்க்கம், பால்..... என்று பலவிதமான உள்ளக முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டிருந்த தமிழ் பேசும் மக்களிடையே இருந்த இயங்கியல் உறவுகள் தமிழீழத்தை முன்வைத்தவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டன. இத்தகைய உட்கூறுகளை நிராகரித்து தமிழன் எனும் ஒற்றை அடையாளத்தை எல்லோர் மீதும் திணிப்பதாகவே இந்த தமிழீழம் பற்றிய பிரச்சாரங்கள் பரப்பப்பட்டது.

அந்தவகையில் தமிழீழத்தை நோக்கிய ஆயுதப்போராட்டம் ஒன்றை ஆதரிக்கின்றவர் மட்டுமே முற்போக்கானவராகவும், புரட்சியாளராகவும் இருக்க முடியும் எனும் பொது உளவியல் ஒன்றுக்குள் வடக்கு, கிழக்கு வாழ் ஒவ்வொரு சாமானியர்களும் உள்வாங்கப்பட்டனர். தமிழன் எனும் இருத்தலின் அடிப்படை அம்சத்தில் இருந்து மீள்வதற்கான ஒரே கட்டமைப்பாக தமிழீழம் தன்னை வெளிக்காட்டியது. தமிழர்களின் விடுதலைக்காக என்ற ஏகாந்த விளிப்பில் எத்தைனையோ ஆயிரம் விளிம்புநிலை மாந்தர்கள் சமூகவிரோகளாக சுடப்பட்டு மின்;கம்பங்களில் தொங்கவிடப்பட்டார்கள். தலித்துகளும், பிச்சை எடுப்போரும், அபலைப்பெண்டீரும் சமூகவிரோதிகளாக்கப்பட்டு ஒற்றைத்தடமாக சமூக ஒழுங்கு ஒன்றைப் பேணுமாறு ஒவ்வொரு பிரசைகளிடத்திலும் கோரப்பட்டது. தமிழீழத்திற்கு வெளியே எந்தவிதமான அரசியல் விருப்புக்களையும் யாரும் வெளிக்காட்டி விடாதவாறு துப்பாக்கி முனையில் கருத்துச் சுதந்திரம் பறித்தெடுக்கப்பட்டு வன்முறை அரசியல் தலைதூக்கியது. அதுமட்டுமன்றி தமிழ் தேசியம் என்ற வரையறுப்பு தமிழர்களாகவும் அதே நேரத்தில் முஸ்லிம்களாகவும் இருக்கக் கூடிய சமூக யாதார்த்தத்தை நிராகரித்து இஸ்லாமியத் தமிழர்களை எதிரிகாளக கட்டமைத்தது. இந்த கட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் சைவ வேளாள கருத்தியலே செயற்பட்டது. இந்த வேளாள அரசியல் தம்மைத் தவிர மற்றைய எல்லோரையும் 'எழிய' சாதி என்றும் 'வன்னிக்காட்டான்' என்றும், மட்டக்களப்பு மக்களை 'மடையர்கள'; என்றும், மலையக மக்களை 'தோட்டக்காட்டான'; என்றும், முஸ்லிம்களை 'தொப்பி பிரட்டிகள'; என்றும் ஏளனம் செய்து எட்டி உதைத்தது. ஆனால் மறுபுறத்தில் தமிழீழத்திற்காக அத்தனையையும் பொறுத்துக் கொள்ளுமாறும் எல்லோரும் தமிழர்களே என்றும் போலிக்கதையாடல்களை முன்வைத்தது.

யாழ்பாணத்தது ஆதிக்கவர்க்கம் நலினப்பட்ட அனைத்து பிரிவுகள் மீதும் தனது அதிகாரத்தை தொடர்ந்து பேணிக்கொள்ளவே இந்த தமிழீழம் எனும் தங்க முலாமினை பூசிக்கொண்டது. இந்த யாழ்ப்பாண சைவ வேளாள ஆதிக்கத்தின் அரசியல் முகவர்களாகவே தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு திகழ்ந்தது. அற்ப சொற்பமாகவேனும் இந்த சைவ வேளாள சிந்தாந்தத்தில் இருந்து விலகி செயற்பட முனைந்த அனைத்துவிதமான மாற்று அரசியல் சக்திகளையும் அழித்தொழித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கொலைவெறி தாண்டவமாடியது. வேளாள ஆதிக்கத்தை காப்பாற்றுகின்ற ஒரே அதிகார மையமாக தமிழீழ விடுதலைப்புலிகள் திகழ்வதாலேயே புலம்பெயர்வாழ் மேட்டுக்குடிகளும் இன்றுவரை ஓடி ஓடி அவர்களை காப்பாற்ற முனைகிறார்கள்.

1990 களில் இருந்து முஸ்லிம்களை படுகொலைகள், வெளியேற்றங்கள் மூலம் இனச்சுத்திகரிப்புச் செய்வதில் புலிகள் வெற்றிக்கொடி நாட்டினார்கள். இறுதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மைத்தாமே பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண ஆதிக்கத்தின் அதிகார மையமாக புலிகள் இறுமாப்புடன் பவனி வந்தனர். 2002 சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து புலிகள் ஏற்படுத்திய நிர்வாகக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட 30 துறைசார் செயலாளர்களும் வடமாகாணத்தவர்களாகவே இருந்தனர். கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரையேனும் இத்தகைய பொறுப்புமிகு பதவிகளுக்கு நியமிப்பதற்கு புலிகளின் உயர்மட்டதில் இருந்த யாழ் பிரதேச மேலாதிக்கவாதிகள் இடமளிக்கவில்லை. இதற்கெதிராக கிழக்கில் இருந்து எழும்பிய அதிருப்த்திக் குரல்கள் அலட்சியம் செய்யப்பட்டது. அசைக்க முடியாத ஒரே தலைமை பிரபாகரன் என்கின்ற ஆணவமே ஈழத்தில் வீசிய காற்றிலும்கூட எதிரொலித்துக் கொண்டிருந்தது.

ஆனால் அன்றையதொரு நாளில் யாரும் எதிர்பார்த்திராத கணப்பொழுதொன்றில் அந்த அதிகார மையம் உடைத்தெறியப்பட்டது. தமிழீழம் எனும் பெருங்கதையால் தகர்ந்து போனது. கிழக்கில் ஏற்பட்ட மார்ச் பிளவு தமிழ்த் தேசியத்தின் போலித்தன்மையை அதன் முகத்தரையை தோலுரித்துக் காட்டியது. யாழ் மேலாதிக்கத்திற்கெதிரானதும் மாற்றானதுமான கிழக்கின் அரசியலை அந்தப் பிளவு பறைசாற்றியது. அந்த இனிய தினத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

பின்நவீனன்

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité