Canalblog
Suivre ce blog Administration + Créer mon blog

thuuuu

26 avril 2008

'தூ' வின் மின் சஞ்சிகை முகவரி மா

Publicité
Publicité
22 avril 2008

10 avril 2008

கரி நாள் ஏப்ரல் 10.

வெருகல் படுகொலை - 4 வது ஆண்டு நினைவு தினம்

அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு மண்ணின் மீது வன்னிப்புலிகள் தமது காட்டுமிராண்டித்தனங்களை அரங்கேற்றியநாள். ஆயுதம் தாங்கிய பிரபாகரனின் ஏவலாளிகள் கிழக்கு மாகாணத்துக்குள் புகுந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய 175 போராளிகளை கொன்று வீசிய நாள். பெண்போராளிகளை மானபங்கம் செய்து குற்றுயிராக்கி கொலைவெறியாடிய நாள். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 நாள் இந்தபடுகொலையை நிறைவேற்றியதன் ஊடாக எந்தவரலாற்றின் தொடக்கத்தைக் கட்டிப்போட வன்னிப்புலிகள் முயன்றனரோ அந்த வரலாறு இன்று நிமிர்ந்து நிற்கிறது. அன்று கொன்று வீசப்பட்ட கிழக்கு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அந்த கொடிய நாளை கரிநாளாக அனுஸ்டிக்கும் கிழக்குமாகாண மக்களுடன் எமது முன்னணியும் கரம்கோர்த்துக் கொள்கிறது.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

10-04-2008

kilakku@hotmail.com

8 avril 2008

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவர் திஸ விதாரண விடம் தலித் அறிக்கை கையளிப்பு

tissa_v_thevathas_1_

6-4-2008 ஞாயிறு லண்டனில் இலங்கை ஜனநாய ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இலங்கை அரசியல் தீர்வுக்கான சர்வகட்சிப் பிரதிநிதகள் குழுவைச்சேர்ந்த 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன் தலைவர் திஸ விதாரணவும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பின் ஏற்பாட்டாளர்களான இலங்கை ஜனநாயக ஒன்றியமானது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரையும் அழைத்திருந்தனர். இக்கலந்துரையாடலில் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் சார்பாக தலைவர் தேவதாசன் அவர்கள் உரையாற்றியதோடு தலித் அரசியல் அறிக்கை ஒன்றையும் கையளித்தார்.

'தலித் அறிக்கை' கையளிக்க முன் ஆற்றப்பட்ட உரை வருமாறு.

மதிப்புக்குரிய திஸ்ஸ விதாரண அவர்களுக்கும், சர்வகட்சி பிரதிநிதிகளுக்கும் மற்றும் சபையினருக்கும் வணக்கம்.

நான் உங்களிடம் கேள்விகள் கேட்பதற்கு இங்கு வரவில்லை. மாறாக ஓர் அறிக்கையினை உங்களிடம் சமர்ப்பிப்பதற்காகவே வந்துள்ளேன். உங்களுக்கு பல அரசியல் கட்சிகளும், மக்கள் மன்றங்களும் பலதரபட்ட அரசியல் தீர்வுத்திட்டங்களையும் அலோசனைகளையும் வழங்கியிருப்பார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டும் தீண்டாமைக் கொடுமைக்கும் உள்ளான ஒரு மக்கள் சமூகம், கடந்த கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் கொடூரமான யுத்தத்தால் மிகவும் துன்புற்று வாழுகிறார்கள். இம்மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதை வலியுறுத்தும் அரசியல் தீர்வுத்திட்ட ஆலோசனைகள் எதுவும் உங்களுக்கு கிடைத்திருந்ததாக நாம் அறியவில்லை.

1977ம் ஆண்டு வரை சாதியின் பெயராலொடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க பலவித போராட்டங்களையும் உயிர்த்தியாகங்களையும் செய்துள்ளனர். அப்போராட்டத்திற்கு உறுதுணையாக தமிழ் இடதுசாரிகளும், சிங்கள இடதுசாரிகளும் முஸ்லிம் முற்போக்கு சக்திகளும் உதவியுள்ளனர். 1977ம் ஆண்டு தமிழீழ பிரகடனம் செய்யப்பட்டு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியதன் காரணமாக கடந்த முப்பது வருடங்களாக சாதிய விடுதலை பற்றிய பேச்சு பேசாப் பொருளாகி கிடப்பில் போடப்பட்டது. இந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களாக தலித் சமூக மக்களே உள்ளனர். உண்பதற்கு உணவும், இருப்பதற்கு வீடும், உழைப்பதற்கு தொழிலும் அற்றவர்களாக பெரும் துன்பத்தில் வாழும் தலித் மக்களுக்கு வெளிவரப்போகும் அரசியல் தீர்வுத்திட்டத்தில் அவர்களது சமூக அரசியல் பொருளாதரத்தை மேம்படுத்தும் முகமாக விசேட தீர்வுகள் முன்வைக்கப்பட்டு அது அரசியல் சட்டமாக்கப்பட வேண்டுமென இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

2006ம் ஆண்டு நவம்பர் ஜேர்மனியில் உள்ள சுட்காட் நகரில் சகல ஐரோப்பிய ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கி நடாத்தப்பட்ட இரு நாள் மாநாட்டில் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ஓர் 'தலித் அறிக்கையை' வாசித்து வெளியிட்டோம். இவ்வறிக்கையானது 2007 ஒக்டோபர் மாதம் 20,21ம் திகதிகளில் பாரிசில் நடாத்தப்பட்ட 1வது தலித்மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்களின் ஒப்புதலையும் பெற்றுக் கொண்டது.அதனைத் தொடர்ந்து 2008 பெப்ரவரி 16,17ம் திகதிகளில் லண்டனில் நடாத்தப்பட்ட 2வது தலித் மாநாடும் இவ்வறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டது. நேற்றைய தினம் (05ஃ04ஃ2008) இம்மண்டபத்தில் நிகழ்ந்த இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் ( SLDF) கூட்டத்திலும் 'தலித் அறிக்கையை' முன் வைத்தோம்.

இன்று ஒரே மேடையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினரான உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எமது 'தலித் அறிக்கையை' உங்கள் முன்வைக்க கிடைத்த சந்தர்பமும் மிகவும் மகிழ்ச்சிக்குரியதே.

மதிப்புக்குரிய திச விதாரன அவர்களுடைய அரசியல் தீர்வுத்திட்டத்தை தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சமாதானத்தினதும் ஜனநாயகத்தினதும் வருகைக்காக காத்துக் கிடக்கிறார்கள். எனவே நீங்கள் முன்மொழியும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் தலித் மக்களின் மன உணர்வுகளையும் புரிந்துகொண்டு 'தலித் அறிக்கை'யில் எம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளையும் இடம்பெறச் செய்து சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வேண்டுமென்று கேட்டு, இந்தச் சந்தர்ப்பத்தை எமக்கு வழக்கிய இலங்கை ஜனநாயக ஒன்றியத்துக்கு நன்றியையும் தெரிவித்து, விடைபெற்று, தீர்வுக்காகக் காத்திருக்கிறோம்.

24 mars 2008

23-03-2008 ஞாயிறு பிற்பகல் பிரான்சில் தோழர்

23-03-2008 ஞாயிறு பிற்பகல் பிரான்சில் தோழர் புஸ்பராஜாவின்  இரண்டாவது நினைவு தினமும் அவரது படைப்பிலக்கியத் தொகுப்பின் அறிமுகமும் நடைபெற்றது.

Sans_titre___4


‘சி. புஸ்பராஜாவின் படைப்புகள்’ எனும் தலைப்பில்  தோழர் புஸ்பராஜா அவர்கள் எழுதிய சிறுகதைகள் உட்பட கவிதைகளும் அடங்கியதாக அத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பை புஸ்பராஜா அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வெளியிட விரும்பியபோதும் 'மரணம்' அவரைத் துரத்தியதால் அது அவரால் இயலாது போனது..  தோழர் புஸ்பராஜா அவர்கள் உயிருடன் இருக்கும்போதே இத்தொகுப்பை வெளியிடுவதற்கான எந்த ஆயத்தமும் அவரால்  மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும்  அவரது துணைவியாரான திருமதி மீரா அவர்களே  இத் தொகுப்பு வெளிவருவதற்கான அனைத்து சுமைகளையும் தாங்கி அவரது இரண்டாவது வருட நினைவு நாளில் அவரது படைப்புக்களையும் வெளியிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

தோழர் புஸ்பராஜாவின் இரண்டாவது வருட நினைவு பகிர்தலையும் அவரது இலக்கியத் தொகுப்பின் அறிமுக நிகழ்வையும் இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் உப தலைவரான தோழர் யோகரட்ணம் அவர்கள் நெறிப்படுத்தினார். புஸ்பராஜாவின் நினைவுகளையும் அவரது இலக்கிய ஆளுமைகளையும் நெருக்கமாக அருகிலிருந்து சுமந்தவரான சுசீந்திரன் அவர்கள் ஜேர்மனியிலிருந்து வருகைதந்து புஸ்பராஜாவின் இலக்கிய ஆளுமைகள் பற்றி உரையாற்றினார். பிரான்சில் நிண்டகாலமாகவே அரசியல் வேலைகளிலும் கலை இலக்கியப்பணிகளிலும் புஸ்பராஜவுடன் இணைந்து பணிபுரிந்த  தோழர் அருந்ததி அவர்கள் புஸ்பராஜாவின் தொகுப்பை அறிமுகம் செய்தார். புஸ்பராஜாவின் சகோதரியான புஸ்பராணி அவர்களும் உரையாற்றினார்கள். புஸ்பராஜாவின் முதலாவது வெளியீடான ‘தோற்றுத்தான் போவோமா’ உட்பட அவரது ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ எனும் நூல் வெளிவருதற்கான பணிகளில் மறைந்த கலைச்செல்வனுடன் சேர்ந்து பணியாற்றிய லக்சுமி அவர்களும் இந்நிகழ்வில் உரையாற்றினார்கள். லக்சுமி அவர்கள் திருமதி மீரா அவர்களால் தொகுக்கப்பட்ட ‘சி. புஸ்பராஜாவின் படைப்புகள்’ எனும் நூல் வெளிவருவதற்கான முயற்சிகளிலும் தனது காத்திரமான  பங்களிப்பை செலுத்தியவர்.

இந்நிகழ்வில் புஸ்பராஜாவின் உறவினர்கள் உட்பட நண்பர்கள் தோழர்களெனெ நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Sans_titre___5

தலைமை உரையாற்றிய தோழர் யோகரட்ணம் அவர்கள் பேசுகின்றபோது, புஸபராஜாவின் படைப்புகளில் தலித் சமூகம் சார்ந்த கேள்விகள் எழுப்படுவதை தாம் உணர்வதாக குறிப்பிட்டார். அத்துடன் நாம் பல காலங்களாக நட்புடன் பழகுபவர்களுடன் சில கணங்களில் அரசில் காரணமாக முரண்படுகின்றபோது நீண்டகாலமாகப் பேணிய நட்புகளும் முரண்பட்டுச் சிதைந்து போய்விடுகின்றது. ஆனால் புஸ்பராஜாவிடம் அரசியல் முரண்பாடுகளுக்கும் அப்பால் நடபைத்  தொடர்ந்தும் பேணுகின்ற பாங்கு அது அவரின் தனித்துவச் சிறப்பு எனக் குறிப்பிட்டார்.

முதலாவதாக புஸ்பராஜாவின் நூலை அறிமுகம் செய்த தோழர் அருந்ததி அவர்கள் பேசுகின்றபோது. புஸ்பராஜாவின் முதலாவது படைப்பான ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ எனும் நூலை பலர் பொய்ச் சாட்சியம் என விமர்சித்தார்கள் ஆனால் அது உண்மையாகவே துணிவுடன் படைக்கப்பட்ட வரலாற்றுச் சாட்சியம் தான் எனக் குறிப்பிட்டதோடு. திருமதி மீரா அவர்களால் தொகுக்கப்பட்ட ‘சி. பு;ஸ்பராஜாவின் படைப்புகள்’ எனும் நூலில் உள்ள இரண்டு கதைகள் பற்றிய தனது அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தினார்.

Sans_titre___6

சுசீந்திரன் அவர்கள் பேசுகின்றபோது புஸ்பராஜாவை ஓர் ஆக்க இலக்கியவாதியாக இத் தொகுப்பினூடாக தான் காண்பதாக் குறிப்பிட்டார். இதில் வரும் ஏழு சிறுகதைகள் இலங்கை அரசியலை பின்னணியாகக் கொண்டிருக்கின்றது எனக் கூறினார். மேலும் இதில் உள்ள ‘பூச்சியும் நானும் கொலையும்’ எனும் கதை நகர்த்தலானது அவரது இலக்கிய ஆளுமைக்குச் சான்றாக உயர்வதைத் தான்  காண்பதாகக் கூறினார். கரப்பான் பூச்சி மனிதனாக மாற்றம் கொள்வதான படைப்பாற்றல் தகைமையானது ஆக்க இலக்கியத்திற்கான தகுதியை பெறுகிறதென்பதாகவும் குறிப்பிட்டார்.

லக்சுமி அவர்கள் பேசுகின்றபோது, மீராவின் பணி குறித்து இங்கு பேசுகின்றபோது ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஓரு பெண் இருப்பதென்பது உண்மைதான் என்றெல்லாம் புகழப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார். இது போன்ற சொல்லாடல்களானது ஆண்களால் பெண்கள் மேல் ஏற்றப்படும் இரடடைச் சுமைகள்தானே தவிர பெண்கள் மீதான நியாயமான கருசனையல்ல என்றார். அத்துடன் புஸ்பரஜா   இருக்கும்போது மீராவைப் பற்றி எந்த ஆண்களும் பேசியதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

புஸ்பராணி அவர்கள் பேசுகின்றபோது 73-74 ஆம் ஆண்டுக் காலங்களில்  பெண்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாத காலகட்டம். அந்தக் காலகட்டங்களில் எனது வீட்டிலுள்ள பலருடைய எதிர்ப்புகளுக்கும் மத்தியில் புஸ்பராஜாவின் முயற்சியின் காரணமாகவே நான் அரசியல் போராட்டங்களில் கலந்து கொண்டேன் என்பதாகக் கூறினார். புஸ்பராஜா அண்மைக்காலங்களில்தான் இலக்கியத்தில் ஆர்வம் உடையவராக இருந்தார் என்பதை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார். தாம் சிறுவர்களாக இருக்கும்போதே இலக்கிய வாசிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்ததாகவும் வீட்டில் ஒன்றாக இலக்கியம், சினிமா போன்ற விடயங்களில் ஆர்வமுமடையவர்களாகவும், அது பற்றிய விமர்சனங்களை தானும் புஸ்பராஜாவும் பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட
ஜென்னி
அந்தோனிப்பிள்ளை
காராளபிள்ளை
விஜி
அலெக்ஸ் (ஜேர்மன்)
உதயன்
வி.ரி. இளங்கோ
தேவதாசன்
போன்றோரும் புஸ்பராஜா அவர்களுடன் தாம் பேணிய உறவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.


Publicité
Publicité
20 mars 2008

சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? -மீராபாரதி

சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? -மீராபாரதி

இலண்டனில் 2008 ஆண்டு பெப்பிரவரி மாதம் 16 - 17 நதிகதிகளில் நடைபெறவுள்ள இரண்டாவது தலித் மாநாட்டிற்கான இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. பொருளாரதரா காரணங்களினால் மாநாட்டில் நேரடியான பங்குபற்ற முடியாமையினால் இக் கட்டுரை மாநாட்டிற்கும் மற்றும் பிற சஞ்சிகைகளுக்கும் அனுப்பப்படுகின்றது. கட்டுரை எழுதியவர் தொடர்பான அறிமுகம் தேவையானவர்களுக்கு கட்டுரையின் இறுதியில் உள்ளது.

சுமூக விடுதலைப் போராட்டமோ அல்லது தேசிய விடுதலைப் போராட்டமோ சாதியின் பெயரால் அடக்கப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆயுதங் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் கடைசிவரை சாதி விடுதலையை முன்னெடுத்து விடுவிக்கும் என்பதற்கான எந்த சாத்தியப் பாடுகளும் இல்லை. தேசிய விடுதலையையே பெற்றுத்தராது விடப்போகும் இன்றைய போராட்டமும் அதன் அணுகுமுறையும் சாதிய விடுதலையை பெற்றுத் தரும் என எவ்வாறு எதிர்பார்ப்பது. ஆகவே பல்வேறு வகைகளில் அடக்கப்படும் ஒவ்வொரு மனிதரும் தம் மீதான அடக்குமறைகளை களைந்தெறிவதற்கு தமக்கமான பொருத்தமான வழிமுறைகளை முன்னெடுப்பது தவிர்க்கமுடியாததே. இந்தவகையில் தலித் மாநாடு வரவேற்கத்தக்கதே.

உலகத்தில் இன மத மொழி சாதி பால்....என ஒவ்வொரு வகையிலும், பல்வேறு வகைகளில், அல்லது எல்லா வகைகளிலும் அடக்கப்படும் ஒவ்வொரு மனிதரும் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க உரிமையுடையவர்களே.இவ்வாறான மாநாடுகள் சாதிக் கொடுமைகள் பற்றியும் அதன் அமைப்பு முறை செயற்பாடுகள் தொடர்பாகவும் மேலும் ஆழமாக அறிவதற்கும் பரப்புரை செய்வதற்கும் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். இந்தவகையில் தலித் மாநாடு வரவேற்கத்தக்கதே.

ஆனால் இச் செயற்பாடுகளின் மூலம் மட்டும் சாதி அடிப்படையில் அடக்கப்பட்ட மனிதர்கள் விடுதலை பெறுவார்களா? இதற்கு வழி செய்யுமா? இல்லை எனில் எது வழி?

நாம் நமது சிந்தனைகள் செயற்பாடுகளை கடந்த காலங்களுடன் முறித்துக்கொண்டு புதிய சிந்தனைகள் புதிய பார்வைகளை நோக்கி நமது தேடல்களை விரிவுபடுத்த வேண்டிய தேவை இன்று உள்ளது. ஏனனில் மீண்டும் மீண்டும் நம் மீதான அடக்குமுறைகளை உடைத்து எறிவதற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான கருத்துகளை நிலைநாட்டுவதையும் வன்முறை செயற்பாடுகளையுமே இதுவரை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.   இந்த முறைமையே காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இது எந்த வகையிலும் முன்னேறிய அல்லது சிறந்த சமூக அமைப்பை உருவாக்க தவறிவிட்டது நாம் காணும் ஒரு உண்மை. புரட்சிகள் பல நடந்த பல நாடுகளும் தமிழ் தேசிய விடுதலைப்போரட்டத்தின் இனறைய நிர்க்கதி நிலைமையும் இதை நிரூபிக்கின்றன.

மனிதர்கள் மீதான பல்வேறு வகை அடக்குமுறைகளான இன, மத, மொழி, சாதி, பால் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் மனிதர்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக வன்முறை செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முதல் தான் விடுதலை பெறுவதற்கும் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்று தனது பங்கு பொறுப்பு என்ன என்று சிந்திப்பது உணர்வது மிக மிக முக்கியமானது. இதுவே கூட்டுமுயற்சியின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கு வழிவகுக்கும். அல்லது அடக்கப்படும் மனிதர்களின் விடுதலைக்காக ஒரு சிலர் போராடி விடுதலையை சுதந்திரத்தை பெற்றுத்தர முனைவர். இது ஒரு இரவல் விடுதலை அல்லது சுதந்திரம். இது முழுமையானதல்ல. ஏனனில் இந்த விடுதலை சட்டப் புத்தகங்களிலும் பெற்றுக்கொடுத்தவர்களின் வாக்கு வங்கிக்கான ஒரு தரப்பாக அல்லது அவர்களின் புகழைக் கூறும் ஒரு வாசகமாக வரலாற்றில் இடம்பெறும். ஆனால் இவ்வாறான ஒரு விடுதலையின் பின்பும் அடக்கப்பட்டவர்கள் அடிமை மனநிலையில் வாழ்வர்கள். ஆதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம். ஏன்? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

மனிதர்கள் மீதான ஒவ்வொரு அடக்குமுறைக்கும் மிக நீண்ட கால வரலாறுகள் உண்டு என்பது நாம் அறிந்தது. இவ்வாறான நீண்ட நெடிய கடினமான பயணத்தில் நமது இரத்தத்தில் மட்டுமல்ல எலும்பு மச்சைக்குள்ளும் கலந்துள்ளது நமது அடிமை வாழ்வு. இதிலிருந்து நமது அடக்குமுறையை அகற்றுவதே பெறும் பணி மட்டுமல்ல முக்கியமான பணி கூட. ஆகவே சட்டப் புத்தகத்தில் எழுதப்படும் விடுதலை  அல்லது சுதந்திரம் ஒரு பகுதி வெற்றியே. இது தவிர்க்க முடியாததாயினும் முழுமையானதல்ல. ஆகவே முழுமையான விடுதலையை நோக்கி எவ்வாறு பயணிப்பது?

குறிப்பாக சாதிய அடக்குமுறை தொழில் சார்ந்து உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் மனிதர்கள் மீது சுமத்தப்பட்ட அல்லது பச்சை குத்திய ஒரு அடையாளம். இன்றும் சாதிய அடக்குமுறை காவிச் செல்லப்படுவதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று பரம்பரை தொழிலிலிருந்து விடுபடாமை அல்லது விடுபடமுடியாமை. இரண்டாவது பரம்பரை தொழிலிலிருந்து விடுபட்டாலும் நமது; சாதிய அடையாளத்தை விரும்பியோ விரும்பாமலோ விடமுடியாமை. இந்த இரண்டு காரணங்களையும் சாதியால் அடக்கப்பட்வர்களிலிருந்து களைய முடியுமாயின் முழுமையான விடுதலைக்கான சுதந்திரத்திற்கான சாத்தியம் உண்டு.

பரம்பரை தொழில் தொடர்பாக இரண்டு கருத்துக்களை முன்வைக்கலாம். சுமூக இயக்கத்திற்கு மனிதரின் வழமான வாழ்வுக்கு நடைமுறைகளில் உள்ள பல்வேறு தொழில்கள் மிக முக்கியமானவை. ஆகவே தொழில்களுக்கு ;எதிராக நமது பார்வையை திருப்பத்தேவையில்லை. மாறாக அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்குவது.  ஆகக்குறைந்தது 12ம் வகுப்பு (மிகக் குறுகிய எதிர்காலத்தில் ஒரு துறைதொடர்பான பட்டப்படிப்பே ஆகக்குறைந்த தகுதியாக இருக்கும்) வரை கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்துவது. இது ஒரு தொழிலை (பரம்பரை தொழில் உட்பட) ஒரு மனிதர் தன் சுய விருப்பில் தெரிவு செய்வதற்கான தகுதியை வழங்குகின்றது. இதற்கான உரிமை ஒரு மனிதரின் அடிப்படை மனித உரிமை தொடர்பானது. இரண்டாவது அனைத்து தொழில்களையும் குறிப்பாக தலித்துக்ள எனப்படும் மனிதர்கள் செய்யும் தொழில்களாயினும் சரி பிற சாதிகள் எனப்படும் மனிதர்கள் செய்யும் தொழிலாயினும் சரி சமூக அந்தஸ்து வழங்கப்படவேண்டும். உயர்வான ஊதியம் இந்த மாற்றத்தை உருவாக்குவது மட்டுமல்லாது இம் மனிதர்களின் வாழ்வு நிலையையும் இது மாற்றியமைக்கும். குறிப்பாக துப்பரவுத் தொழிலாளர்கள் வேலை செய்யாது விடுவார்களாயின் அதன் விளைவுகள் இன்றைய சூழலில் கற்பனை கூட செய்யமுடியாதளவு பயங்கரமானது. ஆகவே இது போன்ற தொழில்களின் முக்கதியத்துவம் உணர்த்தப்படவேண்டும்;. இது உடல் உழைப்பாயினும் பிற உடல் அல்லது மன அல்லது முளை வேலைகளுடன் சரிசமமானது என்று ஏற்கும் நிலை வரவேண்டும்.

இன்று உலக சமூகம் நோக்கும் பல பிரச்சகைகளுக்கு அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் இருப்பது அடையாளம் சார்ந்த ஒருமைப்பாடும் அதன் விளைவான பிரச்சனைகளுமே. இங்கு ஒரு மனிதரின் அடையாளம் எனக் கூறும்பொழுது இது இன, மத, மொழி, சாதி, நாடு, தேசம், பால், வர்க்கம் .... எனப் பல அடையாளங்களுடன் பிணைந்துள்ளது. கால நேர சூழ் நிலைக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் ஒரு மனிதருக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அடையாளங்கள் அனைத்தும் மனிதராக பிறக்கும் அனைவருக்கும் இயற்கையாக இருந்ததல்ல. செயற்கையான பலவந்தமாக வழங்கப்பட்டவகைகளே இந்த அடையாளங்கள். இந்த அடையாளங்களிலும் சிலவற்றை நாமாக வலிந்து ஏற்றுக்கொள்வது நாம் வாழும் சூழலுக்காகவும் வாழ்க்கையை தொடர்ந்தும் வாழ்வதற்காகவும் இசைவாக்கமடைகின்றோம். இதனால் நன்மைகள் அதிகமாக கிடைக்கலாம். புhதிப்புகள் குறைவாக இருக்கலாம். ஆனால் சாதிய அடையாளத்தை தொடர்ந்தும் நாம் கடைபிடிப்பது ஆதிக்க சாதிகளுக்கு நன்மையாகவும் அடக்கப்படும் சாதிகளுக்கு பாதகமாகவும் முடிகின்றது. ஆகவே அடக்கப்படும் சாதிகள் தமது அடையாளத்தை இழப்பது அல்ல தூக்கி ஏறிவது அல்லது அடியோடு அழிப்பதே புதிய மனிதாராக பிறப்பதற்கு வழிவகுக்கும்.

இந்த அடிப்படையில் சாதியத்துக்கு எதிராகப் போராடும் நாம் தலித்துக்கள் என்றடிப்படையில் இணைந்து செயற்படுவதை தவிர்த்து மனிதர்கள் என்ற அடிப்படையில் முன்நோக்கி செயற்படுவதே சாதிய அடையாளங்களை களைவதற்கு வழிவகுக்கும். அல்லது மீண்டும் மீண்டும் தலித்துக்கள் என்றும் வேறுபெயர்கள் கொண்;டும் ஒன்றினைவது இருக்கின்ற சாதிய ;அமைப்பைக் கட்டிக்காப்பதற்கு வழிவகுக்குமே அல்லது விடுதலைக்கு வழிவகுக்காது. வுhழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமது சாதிய அடையாளத்தை களைந்து மனிதர் என்ற அடையாளத்தை ஆணித்தரமாக உறுதியாக பயமின்றி துணிவுடன் முன்வைக்கவேண்டும். ஏனனில் நமது இயற்கை அடையாளமான மனிதர் என்பது மறுக்கப்பட்டு மிக நீண்ட காலம் சென்றுவிட்டது. முதலில் நாம் மனிதர் என்பது உணரப்படவேண்டும். மதிக்கப்படவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மனிதராக அடையாளங் கண்டு மதிப்போமாயின் இன்று நடைபெறும் பல பிரச்சனைகள் தாமாக இல்லாதுபோய்விடும். மொழி சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு மாறாக நாம் அறிந்த மொழிகளினுடாக உயர்ந்த இலக்கியங்கைளப் படைப்பதே அந்த மொழியை அழியவிடாது வரலாற்றில் உயர்ந்து நிற்க்கச் செய்யும். இதேபோல் மனிதர்களின் உடல் மனம் ஆன்மா என்பவற்றை ஒன்றினைத்து சுத்தமாக்கி மனிதரை மேன்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல மேலும் பரிணாம வளர்ச்சியடைய வழி காட்ட வேண்டிய மதங்கள் ;மதம் பிடித்து அலைவது மட்டுமல்ல மனிதரை மனிதர் கொன்று குவிப்பதற்கு வழிகாட்டுகின்றன. ஆகவே மத அடையாளங்கள் களையப்பட்டு ஒவ்வொரு மனிதரும் தமக்கான பாதைகளில் மேலும் பரிணாம வளர்ச்சியடைவதற்கான பாதையே ஒவ்வொருவரதும் ஆன்மீகப் பாதையாகும்.

நமக்கு இன்று தேவை புதிய பார்வையும் புதிய செயற்பாடுகளும் புதிய பாதையுமே.

புழையன கழிதலும் புதியன வருதலும் இயற்கையின் நியதி.

புழையதைக் கடைபிடிப்பதா புதியதை கண்டுபிடிப்பமா தெரிவு நமது கைகளில்.

முதலில் மனிதர், உலகின் பிரiஐ

நன்றி

  நான் யார்?

கம்யூனிஸ்ட் எனக் கூறப்பட்ட ஒருவரின் மகன். பதினாறு வயதில் ஒரு இயக்கத்தில் சுழ்நிலையால் இணைந்து செயற்பட்டு மீண்டும் பதினெட்டு வயதில் வேறு ஒரு இயக்கத்தில் சுய சிந்தனையில்(?) சேர்ந்து பணியாற்றி நம்பிக்கை இழந்தபோதும் சிறு நம்பிக்கையுடன் வாழ்ந்து, இன்னுமொரு முயற்சியாக இடதுசாரி கட்சி ஒன்றுடன் ஒன்றினைந்த ஒரு வருடத்தில் ஓடித்துக்கொண்டு ஓடிவந்து பத்திரிகையாளனாகி, மீண்டும் நம்பிக்கையுடன் முழுமுச்சாக புரட்சிகர கட்சி என்றழைக்கப்பட்ட ஒன்றுடன் ஒரு அங்கமாகி, ஆயிரம் கேள்விகள் என் மனதில் எழ என் கண்களைத் திறந்தார் ஓசோ என்ற ஞானி. இவர் எனக்கு 20ம் நூற்றாண்டின் சோக்கிரட்டிஸ் உம் புத்தரும் இணைந்த ஒரு ஆன்மா. ஆசான். இயற்கையின் சீடனாக நான் வாழ்வதற்கான என் வழி காட்டி. கடந்த  ஏழுவருடங்களில் இவர்; மூலம் கற்றதும் அனுபவமாகப் பெற்றதும் மேலும் தொடரும் இந்த வாழ்வும் என் வாழ்வில் முக்கியமான ஒரு படிப்பினை. ஆர்வமுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு தயாராக உள்ளேன்.

மீராபாரதி

Buddas for love and peace – in srilanka 

buddhas@rogers.com

20 mars 2008

மக்களின் தீர்ப்பை மதிக்கின்ற பக்குவத்தை

மக்களின் தீர்ப்பை மதிக்கின்ற பக்குவத்தை
ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல்கள் (10-03-2008) நீதியான முறையிலும் சுதந்திரமான முறையிலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாநகரசபை மற்றும் 8 நகரசபைகளையும் ரி.எம்.வி.பி. கைப்பற்றியதின் ஊடாக புதியதொரு அரசியல் எழுச்சியையும் கிழக்குமாகாண மக்கள் தோற்றுவித்துள்ளார்கள். கடந்துவந்த 30 ஆண்டுகாலங்களில் நடந்துமுடிந்த எல்லாத் தேர்தல்களையும்விட ஜனநாயக மீட்சிக்கான போராட்டப்பாதையில் இத்தேர்தலானது பாரிய திருப்பு முனையொன்றையும் ஏற்படுத்திச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புகள் எழுந்துகொண்டிருந்தன. சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் எதிர்க்கட்சிகள், வெகுஜன ஊடகங்கள் அனைத்தும் இத்தேர்தலானது சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடத்தப்படுமா என்று கேள்வியெழுப்பின. பலத்த சந்தேகங்களும் நம்பிக்கையீனங்களுமே மக்களிடத்தில் பரப்பப்பட்டன.

இம்முறை கிழக்குமாகாணம் மீட்கப்பட்டது போல கடந்த காலங்களிலும் தமிழீழவிடுதலைப்புலிகளிடமிருந்து பலதடவைகளில் வடக்கு கிழக்கின் பல பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. எனினும் அப்பகுதிகளில் ஆயுதக் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளை ஒழித்து இயல்புநிலை ஒன்றுடனான சுதந்திரமான தேர்தல் ஒன்றை இதுவரை சாத்தியப்படுத்த யாராலும் முடியவில்லை. இதற்கு இந்திய அமைதிகாக்கும் படையினரின் மேற்பார்வையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்கூட விதிவிலக்காக அமையமுடியவில்லை என்பது கசப்பான உண்மை.

மட்டக்களப்பில் இம்முறை உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளில் மேற்படி கடந்தகால தேர்தல் அனுபவங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் காரணமாக இருக்கலாம். ஆனாலும் பலதடவைகளில் இத்தேர்தலினூடு ஜனநாயக நீரோட்டத்தில் கலக்க விரும்பிய ரி.எம்.வி.பி. எனும் பதிய அரசியல் கட்சியின் வரவுமீதான காழ்ப்புணவே மேலோங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. இப்புதிய அரசியல் சக்தி கொண்டிருந்த மாற்று அரிசயல் சிந்தனையே இவ்வெதிர்ப்புகளுக்கு காரணமாயிற்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கோலலோச்சி வந்த தமிழ் தேசியக் கோட்பாட்டின் போலித் தன்மையை ரி.எம்.வி.பி. எனும் புதிய அரசியல் கட்சியின் வரவு கேள்விக்குள்ளாக்கியிருந்தது. இந்நிலையில்தான் புலி ஆதரவு, புலிஎதிர்ப்பு என்கின்ற வேறுபாடுகள் அற்று தமிழ் தேசியக் கோட்பாட்டின் சார்பு நிலையில் இருந்து எழுந்த குரல்களே மனித உரிமைக் குரல்களாக மேலேழுந்து இத்தேர்தல் நடாத்தப்படுவதை தடுக்க முனைந்தன.

ஆனாலும் நடந்துமுடிந்திருக்கின்ற இத்தேர்தலானது அதைத் தடுக்க முனைந்தவர்கள் முன்வைத்த எதிர்வு கூறல்களையெல்லாம் பொய்யாக்கியுள்ளது. கண்காணிப்பு அமைப்புகளும் போலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்புகளும் இத்தேர்தலானது சுதந்திரமாகவும் நீதியாகவும் நடந்து முடிந்திருப்பதை உறுதி செய்திருக்கின்றன. அந்த வகையில் ஒரு பாசிச அமைப்பான தமிழிழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தவர்கள் ஜனநாயகத்தின்பால் கொண்டிருக்கக்கூடிய தமது ஈடுபாட்டை மீள உறுதிசெய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான முன்னாள் தீவிரவாதிகளை கொண்டிருந்த போதிலும் ரி.எம்.வி.பி.ஆனது ஒரு சிறந்த பண்பட்ட அரசியற் கட்சிக்குரிய அறிகுறிகளை வெளிக்காட்டியுள்ளது. சிறந்த கட்டுக்கோப்பும் ஜனநாயகப் பாரம்பரipயங்களை மதிக்கின்ற பக்குவமும் தமது அமைப்பு உறுப்பினர்களுக்கு உண்டு என்பதை சர்வதேசத்திற்கு இப்புதிய அரசியற் கட்சியானது பறைசாற்றியுள்ளது.

தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் யாழ் மேலாதிக்க தலைமைகளைக் கொண்ட தமிழ் தேசியவாதக் கட்சிகள் படுதோல்வியைத் தழுவியுள்ளமையையும் கிழக்கில் இருந்து உருவாகிய ரி.எம்.வி.பி.யானது அமோக வெற்றியீட்டியுள்ளமையும் கீழ்வரும் செய்தியை வெளிக்காட்டியுள்ளது. கிழக்கிலங்கை மக்கள் தமிழ் தேசியத்தை முற்றாக நிராகரித்திருக்கின்றார்கள். தமது தலைமையை தமது அரசியலை தாமே தீர்மானிக்க வேண்டும் என்கின்ற உரிமைக்குரலை தமது தீhப்பின் மூலம் அம்மக்கள் பறைசாற்றியிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ் இன ஒற்றுமை என்கின்ற இனவாதப் பார்வைகளுடனான அரசியலை நிராகரித்து கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லினங்களை கொண்ட பிரதேச ஒற்றுமையின் அவசியத்தை இத்தேர்தல் முடிவுகள் எல்லோருக்கும் எடுத்துச் சொல்லியிருக்கின்றது. மக்கள் வழங்கியுள்ள இந்தத் தீhப்பினை எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசியல்வாதிகள் அனைவரும் மதித்து அதன்படி ஒழுகவேண்டும், அதுவே ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒவ்வொருவரினதும் பண்பாக இருக்கமுடியும் என ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி   

19-03-2008

kilakku@hotmail.com

14 mars 2008

தோழர் புஸ்பராஜாவின் இரண்டாவது நினைவஞ்சலியும்

தோழர் புஸ்பராஜாவின் இரண்டாவது நினைவஞ்சலியும் அவரது இலக்கியத் தொகுப்பின் அறிமுகமும்....  மேலதிகவிபரம் அறிய

20 février 2008

பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித்

london_conference

    பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாட்டைத்தொடர்ந்து,இரண்டாவது தலித் மாநாடு லண்டனிலும் சிறப்புடனும், பல விவாதங்களுடனும் நடந்து முடிந்தது. கடந்த 16ஆம்17ஆம் திகதிகளில் லண்டனிலுள்ள  LEYTONSTON எனும் சுரங்கப்பாதை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள  QUACKERS HOUSE எனும் மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது. ஏற்கனவே தயாரித்த நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட புதியஜனநாயக் கட்சி உறுப்பினரான தோழர்  ந.ரவீந்திரனும் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட அ.மார்க்ஸ் அவர்களும் நேரடியாகக் கலந்து கொள்ளமுடியாது போனது. இருப்பினும் தோழர் ரவீந்திரனும், அ. மார்க்சும் காத்திரமான கட்டுரைகளை மாநாட்டுக்கு அனுப்பிவைத்தனர். குறிப்பாக அ.மார்க்ஸ் அவர்கள் கட்டுரையாகவும் ஒலி வடிவத்திலும் தனது கட்டுரையை அனுப்பிவைத்தார்.

london_conference

முதல் நாள் கலந்து கொண்டவர்களின் சுய அறிமுகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரான்சில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் கலந்து கொண்ட தோழர் பரா மாஸ்டர் அவர்கள் இரண்டாவது மாநாடு நடைபெறும்போது எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரை நினைவுகொண்டும் கடந்த காலத்தில் தலித் சமூக விடுதலைப்போராட்டத்தில் களப்பலியானவர்களையும் மனதில் இருத்தி சில நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இலங்கைத் தலித் சமூக விடுதலை முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பிற்பாடு அவரின் தலைமையிலேயே தோழர் ந.ரவீந்திரனின் கட்டுரையை ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.பௌசர் அவர்கள் வாசித்தார். அதைத்தொடர்ந்து புஸ்பராணி அவர்கள் சாதியமும் பெண்களும் எனும் தலைப்பில் பேசினார்.

london_conference

தோழர் ரவிந்திரன் அவர்கள் இலங்கையில் சாதியம் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதை பல ஆதாரங்களுடன் தனது கட்டுரையில் வெளிப்படுத்தியிருந்தார். யுத்த சூழலில் மறைந்து உறைந்து நீறுபூத்துக் கிடந்த சாதியமானது சில கால சமாதானச் சூழலில்  சாதிய ஒடுக்கமுறையாக கொழுந்துவிட்டெரிந்த   சம்பங்களை விபரித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர முதல்வராயிருந்த செல்லையன் கந்தையாவிற்கு நிகழ்ந்த சம்பவமும், அண்மையில் கொலைசெய்யப்பட்ட புலிகளின் சுப. தமிழ்ச்செல்வனின் மரணத்திலும் கூட சாதியம் பின்னணியாக இருந்திருக்கும் என ’தேசிய எழுச்சியின் இன்றைய போக்கில் தலித் பிரச்சனை’ என்ற தலைப்பிட்ட தனது கட்டுரையில் விபரிக்கிறார்.

சாதியமும் பெண்களும் எனும் தலைப்பில் உரையாற்றிய புஸ்பராணி அவர்கள் புகலிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சாதியப்பிரச்சனைகள் பற்றிய தனது அனுபங்களை எடுத்துக் கூறினார்.

london_conference

இரண்டாவது நிகழ்ச்சியாக தோழர் வேலுவின் தலைமையில் இந்தியாவிலிருந்து வருகைதந்த ‘புதியவிசை’ சஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் தலித்தியமும் இலக்கியமும் எனும் தலைப்பில் உரையாற்றினார். ‘’இங்கிலாந்துக்கு வந்திருக்கும் இந்தக்கணத்தில் நான்  இந்தியாவிலிருந்து வந்திருப்பதாய் சொல்லுவது எனது பூர்வீகத்தை உணர்த்திடப் போதுமானதாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவிற்குள் என்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்கான அவசியம் எதுவும் நேர்ந்ததாக நினைவில் இல்லை. இதேகதிதான் தமிழன் என்பதற்கும் ஒரு பொது அடையாளம் போல் தோற்றமளிக்கும் இந்த வார்த்தைகள் தலித்துக்களைப் பொறுத்தவரை அன்னியமானவை.‘’ என அவரது கட்டுரை தொடங்குகிறது.  அதைத்தொடர்ந்து அ.மார்க்சின் கட்டுரையின் ஒலிப்பதிவு கேட்கப்பட்டது. அவரின் கட்டுரையின்  தலைப்பு ‘தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்.’

london_conference

இதைத்தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ந்தது.

london_conference

london_conference

london_conference

london_conference

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அசுராவின் தலைமையில் ‘இலங்கைத் தலித் சமூக அரசியலும், அதன் அவசியமும்’ எனும் தலைப்பில் தேவதாசன் அவர்கள் உரையாற்றினார். கடந்தகால தலித் சமூக விடுதலைப் போராட்டத்திற்கு இடது சாரிகளின் பின்புலமும் அவர்களின் பங்களிப்பும் காத்திரமானதாகவே இருந்ததையும் சுட்டிக்காட்டினார். அன்றைய காலகட்டத்தில் இடது சாரிகள் தமது கட்சியின் நிலைப்பாட்டிற்கே முதன்மை இடமளித்தமையாலேயே தலித் மக்களின் பிரச்சனைகளை அவர்கள் தனித்துவமாக பார்க்கத் தவறிவிட்டார்கள் எனவும்  குறிப்பிட்டுப்பேசினார். 

இதைத்தொடர்ந்தும் கலந்துரையாடல் நிகழ்ந்தது.

london_conference

london_conference

கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் தலித்மக்களின் பிரச்சனைகளுக்கு தனித்துவமான அரசியல் உத்தரவாதங்கள்  பேணப்படவேண்டும் என்பது பற்றிய தமது அபிப்பிராயங்களை எடுத்துக் கூறினார்கள். இருப்பினும் இலங்கைத் தலித் சமூக முன்னணியானது  மார்க்சிய விரோதச் செயல்பாட்டுத் தளத்தில் இயங்குகிறதா எனும் சந்தேகமும் சிலரிடம் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

london_conference

இடதுசாரிகளின் வர்க்கப்பார்வையினாலான அணுகுமுறையே தலித் மக்களின் தனித்துவமான பிரச்சனைகளை அணுகத் தடையானது.  எனவே மார்க்சியத்தின் போதாமைகளை இடதுசாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டுமேயல்லாது. இடது சாரிகள் மீது நாம் என்றுமே விரோதிகள் அல்ல விமர்சகர்ள் மட்டுமே என்பதை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சுட்டிக்காட்டினார்கள்.

london_conference

இறுதி நிகழ்ச்சியாக ஓர் நாடகமும்   கிழக்கமாகாணப் பாராம்பரியக் கூத்துப்பாடல்களும்  நடைபெற்றது.நாடகத்தில்கே கிருஸ்ணராஜா, நிர்மலா, நவரட்ணராணி, சாந்தன் போன்றோர் பங்கு பற்றினர்.

31 janvier 2008

இரண்டாவது தலித் மாநாடு லண்டன்

வரும் 16-02-2008  சனிக்கிழமையும் 17-02-2008 ஞாயிறும் லண்டனில் நடைபெறுகிறது.

மாநாட்டு நிகழ்ச்சி நிரல்_

Publicité
Publicité
1 2 3 4 5 6 7 8 9 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité