Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
27 août 2007

‘இலங்கை அரசியலும் சிறுபான்மைத் தமிழ் சமூகமும்’

‘இலங்கை அரசியலும் சிறுபான்மைத் தமிழ் சமூகமும்’  என்ற தலைப்பில் 2001 ஆம் ஆண்டு மு. பாக்கியநாதனால் எழுதப்பட்ட ஓர் கட்டுரை, வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது.  அக்கட்டுரையை நாம் மீளப் பதிவு செய்கின்றோம். மு. பாக்கியநாதன் அவர்கள் இலங்கை பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் தலைவராக 1994-2001 வரை கடைமாயாற்றியவர் தற்போது கனடாவை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். அவரின் கட்டுரை அன்று பேசிய விடயத்தைத்தான் நாம் இன்றும்; மிக அதிகமாக உரத்துப்பேச வேண்டிய தேவையுள்ளது. அதன் அவசியம் கருதியே அக்கட்டுரையை மீண்டும் பதிவு செய்கிறோம். அந்த வகையில் தோழர் மு. பாக்கியநாதனுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


   கடந்த பன்னிரெண்டாவது பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்பத்தின்போது புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களை வாழ்த்திப் பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கிம் அவர்கள, சபாநாயகர்- பிறந்த சமூகத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட முதலாவது சபாநாயகர் என்று குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் பேசிய அனுரா பண்டாரநாயக்கா அவர்கள் பேசும்போது அது அப்படியல்ல எனது தாயாரது காலத்திலேயே அவரது சமூகத்திலிருந்து சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். இக்கட்டுரையில் இதனைக் குறிப்பிடுவதன் நோக்கம், பெரும்பான்மை இனத்தில் உள்ள சிறுபான்மைச் சமூகங்களை மதித்து அவர்களையும் மேன்மைப் படுத்த தென்னிலங்கை ஒரு நாளும் பின் நிற்பதில்லை என்பதனை மீண்டும் சொல்லி வைத்துள்ளார்கள். தென்னிலங்கை அரசியலில் இதற்கு முன்பும் சிங்கள இனத்தில் உள்ள சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து  ஜனாதிபதியாகவும், பல அமைச்சுக்களை அலங்காரம் செய்த அமைச்சர்களாகவும் நாம் பலரை கண்டுள்ளோம். ஆனால் இவர்கள் அரசியலில் புகுந்ததோ அன்றி அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததோ அவர்கள் சாதி ஒடுக்குமுறைக்காக போராடி யதனால் அல்ல. சிங்கள அரசியல் கட்சிகள் அந்தந்த சமூகங்களை அரசியல் ரீதியில் திருப்திப் படுத்துவதற்காக செய்த நடவடிக்கைகளும் அல்ல. சிங்கள இனத்தில் சமூக ரீதியாக சாதிப்பாகுபாடு கலியாணம் தவிர்ந்த (தற்போது இதுகூட அருகி வந்துவிட்டது.) ஏனைய சமூக பொது நடவடிக்கைகளில் காட்டப்படாததனால் சிங்கள இனத்தின் சிறுபான்மை இனங்கள் அரசியல் பிரதிநித்துவத்தினை இலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் சிங்கள சமூகத்துடன் ஒப்பு நோக்கும்போது தமிழ் சமூகத்தில் அரசியல் அந்தஸ்தினை தமிழ் அரசியல் தலைமைகளிடம் கேட்டுப் பெற வேண்டிய நிலையிலேயே சிறுபான்மைத் தமிழ் சமூகம் இருக்கின்றது. அப்படிக் கேட்கும் போதுகூட அது புறக்கணிப்பு நிலையிலேயே உள்ளது என்பது இன்றுள்ள யதார்த்தமாகும்.

தமிழ் அரசில் வரலாற்றினைப் பொருத்தவரையில் இப்படியாக மிக உயர்ந்த ஸ்தானங்களுக்கு சிறுபான்மைத் தமிழர் சமூகம் வருவதென்பதும், அல்லது அவர்கள் வர முயலும்போது தடைக்கற்களாக உயர் சமூகம் என்றுமே செயற்பட்டு வருவது என்பதுவும் இன்று நேற்றல்ல!! தொடர்ந்து நடைபெறும் ஒரு செயற்பாடாகவே நடைபெற்று வருகின்றது. 1950 ஆம் ஆண்டுகளில்  முதன் முதலாக படித்த சிறுபான்மைத் தமிழ் சமூகத்திலிருந்து முதலியார் இராஜேந்திரா (1947) அவர்கள் செனெட்டராக தெரிவு செய்யப்பட்டார். இதனை அடுத்தே 1960 அம் ஆண்டுகளிலே திரு ஜி.நல்லை அவர்களை இலங்கையின் இரண்டாவது சபையான செனட் சபைக்கு தமிழரசுக் கட்சி நியமித்திருந்தது. 1947 ஆம் ஆண்டுகளில் இருந்து தென்னிலங்கையில் தோன்றிய இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகியன யாழ் குடாநாட்டில் வேரூன்றத் தொடங்கின. இதனை படித்த நடுத்தர வர்க்க சில முற்போக்கு எண்ணங்கொண்ட உயர்குலம் என்று கூறிக் கொள்ளும் யாழ்ப்பாணத் தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களும், அக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் தென்னிலங்கை இடதுசாரித் தலைவர்களுடன் படித்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து தொழில் பார்த்த, அவர்களுடன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களும் யாழ்ப்பாணத்தில்  இக்கட்சிகள் தமது நடவடிக்கைகளை தொடங்க காரணகர்த்தாக்களாக இருந்தனர். யாழ்ப்பாண நிலவுடைமைச் சமுதாயத்திலே இருந்த சாதியக் கொடுமைகள் காரணமாக அங்கு சிறுபான்மைத் தமிழ் சமூகம் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தளவிற்கு தீண்டத்தகாதவர்களாக இச்சமூகம் ஒதுக்கப்பட்டிருந்தது. முற்போக்கு கொள்கைகளைக் கொண்ட இடதுசாரிக்கட்சிகளுக்கு தமது கட்சிகள் நிலை கொள்ளுவதற்கு  இச்சமூகம் ஒரு நிலைக்களனாக இடம் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. இக் கட்சியின் சிங்களத் தலைவர்களோ அன்றி உள்ளுர் தலைவர்களோ இச்சமூகத்தினரை சரிசமனாக நடாத்த முற்பட்டதினால் இச் சமூகத்தின் பெரும் பகுதியினர் இடது சாரிக் கட்சிகளுக்கு பின் அணி திரண்டிருந்தனர். இதன் காரணமாகவே சிறுபான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் வடமராட்சியின் பருத்தித்துறைத் தொகுதியில் இருந்து கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பாக திரு பொன். கந்தையா அவர்கள் 1956 இல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சிறுபான்மைத் தமிழர்கள் அணிதிரண்டால் அரசியலில் எதனையும் சாதிக்கலாம் என்பதனை வடமராட்சி சிறுபான்மைச் சமூகம் இலங்கைத் தமிழ் அரசியலுக்கு முதன் முறையாக உணர்த்தியிருந்தது.

1943 ஆம்       ஆண்டுகளிலே   சிறுபான்மைத்      தமிழர் மகாசபை    என்ற அமைப்பு பல் வேறுபட்ட
ஒதுக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்த்து ஆரம்பிக்ப்பட்டிருந்தது. இதில் கட்சி வேறுபாடின்றி கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாயக் கட்சி, மற்றும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இந்த அமைப்பில் அங்கத்துவம் வகித்தனர். ஆனால் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு இச் சமூகத்தில் அங்கத்தவர்களோ அன்றி ஆதரவாளர்களோ இருக்கவில்லை. காரணம், இக்கட்சி யாழ்ப்பாண நிலவுடைமைச் சமுதாய சாதிய அடக்கமுறையின் சின்னமாக அக்காலத்தில் விளங்கியமையே அதற்கான அடிப்படைக் காரணமாகும். காலம் செல்ல செல்ல மகாசபையானது பல கட்சி அமைப்பிலிருந்து விடுபட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கிற்குட்பட்டது. இதன் பின்பு மகாசபையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்தவரும் நீண்டநாளைய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான திரு எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் 1970 பாராளுமன்ற நியமன உறுப்பினராக கம்யூனிஸ்ட் கட்சியால் தெரிவு செய்யப்பட்டு 1970 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்தார். இவரே முதன் முதலாக பாராளுமன்றத்துக்குச் சென்ற சிறுபான்மைச் சமூகத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினராவார். இவர் உறுப்பினராக இருந்த காலத்தில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாத பல பலவேலைகளையும், சேவைகளையும் இச் சமூகத்திற்காக செய்தார். இவரின் இந்த நியமனம் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை விழித்தெழச் செய்தது. இதன்  பின்பு யாழ் மாநகர சபையில் திரு.என்.ரி.செல்லத்துரை அவர்களும் அதன் பின்பு திரு சேவியர் அவர்களும் உதவி மேயர்களாக நியமிக்கப்பட்டனர். இப்படியாக கஞ்சிக்குப் பயறு போட்டது போல இங்கொன்றும், அங்கொன்றுமாக ஒரு சில அரசியல் நியமனங்கள் தமிழரசுக் கட்சியாலும், அதனைத் தொடர்ந்து கூட்டணியாலும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் ஒப்பீட்டளவில் யாழ் மாவட்டத்தில் சிறுபான்மைச் சமூகம் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகையைக் கொண்டதாக அக்காலத்தில் இருந்தும் அதற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகி 1977 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகிய முடிந்த முடிவாகிய தமிழீழத் தீர்மானத்தினை  எடுத்தபோது தென்னிலங்கைக்கும், முழு உலகிற்கும் ஒரு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ்த் தலைமைகள் தள்ளப்பட்டிருந்தது. அதாவது தமிழினத்திற்குள்ளேயே பல சாதிகளை  வைத்து அவர்களை அடக்கு முறையில் சாதியைச் சொல்லி ஒதுக்கி வைத்திருக்கின்றீர்களே  உங்களுக்கு சிங்களவர்கள் ஒதுக்குகின்றார்களே, சம உரிமை மறுக்கப்படுகின்றதே என்று அவர்களிடம் இருந்து பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்க என்ன தார்மீகம் இருக்கின்றது? இதற்க விடை காணவேண்டிய கூட்டணித் தலைமை உடனடியாக சிந்தித்து 1977 ஆம் ஆண்டுத் தேர்தலிலே உடுப்பிட்டித் தொகுதியிலே திரு.த.இராஜலிங்கம் அவர்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தது. அதன் வெற்றிக்கு இயக்கங்களின் தோற்றுவாயாக விளங்கிய தமிழ் இளைஞர் பேரவையின் தீவிர பிரசாரமும் முக்கிய காரணங்களில் ஒன்றாக திகழ்ந்தது. வடமராட்சி மக்கள் இரண்டாவது முறையாகவும் சாதனையைச் செய்தார்கள். முதலாவது பொன்.கந்தையாவையும் இரண்டாவது இராஜலிங்கத்தினையும் தெரிவு செய்ததாகும்.

யாழ் மாவட்டத்தில் தேர்தலில் நிற்பவர்கள் யாவரும் சொந்த, சொந்த ஊர்கள் உள்ள தொகுதிகளிலேயே நிற்பார்கள். ஆனால் 1977ஆம் ஆண்டு இதற்கு மாறாக தனது ஊரும், தான் பாராளுமன்ற உறுப்பினராக நின்று இரண்டு முறை வென்ற தொகுதியாகிய உடுப்பிட்டித் தொகுதியை த.வி.கூட்டணியின் தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் மனமுவந்து இராஜலிங்கம் அவர்களுக்கு விட்டுக் கொடுத்திருந்தார். இது சிவா அவர்களின் பெரும்தன்மையையும் அவரின் குடும்ப சிறப்பையுமே காட்டுகின்றது. இவரது பேரன் சித்தமணியம் என்பவர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வதிரி சூரன் அவர்கள் முதன் முதலாக இச்சமூகத்திற்கென பாடசாலை ஒன்றை வதிரியில்  உருவாக்க நினைத்தபோது அதற்கு உதவி ஒத்தாசை புரிந்ததோடு மாத்திரமல்லாமல் பண உதவியும் புரிந்த முற்போக்கான எண்ணங்கள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவராவர். அதனாலேயே இப்படியான முற்போக்கு எண்ணத்தினை இவர் கொண்டிருந்தார் என்பதனை இது காட்டுகின்றது. இக்காலத்திலே சிறுபான்மைத் தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். அத்தோடு சிவா அவர்களின் இளமை அரசியல் கம்யூனிசத்திலேயே தொடங்கியது. அடுத்ததாக இந்த ஆண்டுத் தேர்தலிலேயே சிவா அவர்கள் நல்லூர்த் தொகுதியில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். சொந்த தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறி வெற்றியும் பெற்றது கூட உடுப்பிட்டித் தொகுதியில் செய்யப்பட்ட மாற்றத்தினாலேயே.  இது தமிழ் அரசியல் வரலாற்றிலே ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்தது. இதன் பின்பே அமுதர் காங்கேசன்துறையிலும், மாவை திகாமடுல்லையிலும் தேர்தலில் நிற்கக்கூடிய துணிவினைக் கொடுத்தது.

இதன் பின்பு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றங்கள் இப்போக்குகளில் ஒரு மந்த நிலையினை ஏற்படுத்தியிருந்தது. அதாவது 1983 ஆம் ஆண்டிற்கு பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இயக்கங்களின் தோற்றங்களும் சமூகரீதியான சாதிய ஒடுக்கு முறைகளில் ஒரு மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றே கூறவேண்டும். இது அரசியல் ரீதியில் எதுவித விடிவினையும் தேடுவதாகவோ அன்றி அதனை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாக யாரும் கூறிவிட முடியாது. அல்லது அது அடங்கிவிட்டதோ அன்றி ஒடுங்கி விட்டதென்றோ கூற முடியாது. இன்றும் அணைந்து போகாமல் புகையோடு மேலே சாம்பலாகவும் உள்ளே நெருப்பாகவும் உள்ளது. கடந்த கால இயக்க வரலாறுகள் கூட சாதிய நடவடிக்கைகளுக்கு சமரசம் தேடுவதாவே இருந்ததே அன்றி அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் எந்த இயக்கம் தானும் ஈடுபாடு காட்டியதாக அண்மைய வரலாறு இல்லை. பல கோயில் பிரவேசங்களில் கூட இரு பகுதியினரும் பிரவேசிக்கக்கூடாது என்ற  உத்தரவுடன் சமரம் காணப்பட்டதனைக் கண்டோம் அன்றி ஐக்கிய நாடுகள் சபையினால் பட்டயத்தில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதும் அன்றி இலங்கை அரசியலமைப்பில் உறுதிப் படுத்தப்பட்டதுமான அடிப்படை உரிமைகளைக் கூட இங்கு பல விடையங்களில் பேணப்படவில்லை.

  கடந்த பொதுத் தேர்தலின்போது யாழ் மாவட்டத்திலும் கொழும்பிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக தலா ஒருவர் நிறுத்தப்பட்டனர். அவர்களை நிறுத்துவதற்கு கூட பெரும் இழுபறி நிலையிலேயே அவர்களுக்குரிய  நியமனத்தினை போராடி பெற வேண்டிய நிலை  இருந்தது. தலைமைகளின் மனமாற்றத்தினால் இந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற பரந்த நோக்கினால் இந்த நியமனம் கொடுக்கப்படவில்லை. வேறொரு யதார்த்தத்தினை இச்சந்தர்ப்பத்தில்  இங்கே குறிப்பிட்டாக வேண்டும். யாழ் குடாநாட்டின் வெகுஜன இடப்பெயர்வின் போது பல குடும்பங்கள் கொழும்பு, தென்னிலங்கை, இந்தியா, மேற்கு நாடுகள், இதனை விட பல குடும்பங்கள் வன்னிக்கும் இடம் பெயர்ந்து இருந்தனர். யாழ்ப்பாண மொத்த சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசிப் பகுதியினரே யாழ்ப்பாணத்தில் தற்போது இங்கு வாழுகின்றனர். ஆனால் தற்போது வாழும் சனத் தொகையில் ஏறத்தாள அரைப்பங்கினர் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் தற்போது யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். இது இவ்வாறிருக்க அவர்களுக்கு ஒரு அரசியல் நியமனம் வழங்குவதில் கூட பழைய இழுபறி நிலையே மீண்டும் காணப்பட்டது. உண்மையின்படி நோக்கின், இச்சமூகத்திற்கு தற்போதைய சனத் தொகை அடிப்படையில் குறைந்தது நான்கு பிரதிநிதித்துவமாவது கிடைக்க வேண்டும் ஆனால் அப்படியான நிலைமைகளுக்கு தலைமைகள் இடம் கொடுக்கவில்லை. ஈ.பி.டி.பி கூட பத்தோடு பதினொன்றாக ஒருவரை நிறுத்தியிருந்தது. ஆனால் அவரை இதய சுத்தியுடன் முன்னிலைப்படுத்தி பிரதிநிதி ஆக்குவார்களா?

யாழ் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற யாழ் மேயர் ரவிராஜ் அவர்களின் இடத்திற்கு ஒரு மேயரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் வந்துள்ள போது உதவி மேயராக இருப்பவரை மேயராக தெரிவு செய்வதே மரபு. ஆனால் ஓர வஞ்சனையுடன் அவரது சமூகத்தினை அடி மனதில் வைத்து தட்டிக்களிப்பு நடைபெறுகின்றது. அது மட்டுமல்ல தேர்தலில் நியமனம் கிடைக்காததனால் முன்னால் உதவி மேயருக்கு தற்போதைய மேயர் பிரதிநிதியாகும் பட்சத்தில் மேயர் பதவி வழங்குவதாக கூட்டணியால் உறுதி மொழி வழங்கப்பட்டும் தலைமையின் விருப்பமான ஒருவருக்கு இப்பதவியினை வழங்கும் நோக்குடன் பொதுச் சபையினைக் கூட்டியே இதனை வழங்க வேண்டும் என்ற சாக்கு போக்கு கூறப்படுகின்றது. அது மட்டுமல்ல இன்னும் மூன்று மாதங்களில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெற இருப்பதனால் இந்த நியமனம் இப்போது தேவையில்லை என்ற ஒரு கருத்து முன்வைக்கப் படுகின்றது.

அடுத்ததாக கடந்த தேர்தலின் போது இச்சமூகத்தின் வாக்கு வங்கி சூறையாடப்பட்ட விதம் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். ஈ.பி.டி.பியின் வாக்கு வங்கி இச்சமூகத்தினை மையப்படு த்தியதாகவே இருந்தது. இன்றைய யுத்த சூழ் நிலையால்  பொருளாதார ரீதியில் நலிவு பெற்ற இந்த சமூகமும், கரையோர வாழ் சமூகமும் இவர்களது வாக்கு வங்கிக்கு ஆதாரமாக அவர்களால் எதிர்பார்த்து செயற்பட்டார்கள். இதனை மையமாக வைத்து அரசாங்க புனர்வாழ்வு நிதியினை பயன்படுத்தி யாழ் மாவட்ட 3000 சீவல் தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்புறுதி செய்யப்பட்டது. இதே புனர்வாழ்வு அமைச்சானது வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள  சீவல் தொழிலாளர்களுக்கு இந்த வரப்பிரசாதத்தினை மறுத்தது. காரணம் ஈ.பி.டி.பி இந்த மாவட்டங்களில் தாம் வெல்ல முடியாதென்ற அவநம்பிக்கையுடன் இருந்ததேயாகும். சீவல் தொழிலாளர்களுக்கு தலா  ரூபா 3000 வீதம் புனர் வாழ்வு நிதியென்று வழங்கப்பட்டது. அத்துடன் இவர்களுக்கு புதிய சையிக்கில்களும் வழங்கப்பட்டன. இதே விதமான உதவிகளே மீனவ சமூக தனிப்பட்டோருக்கும், மீனவ சங்கங்களுக்கும் வழங்கப்பட்டன. மீனவ சங்க அங்கத்தவர்கள் பலர் தென் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பல வரப்பிரசாதங்கள்  அவர்களுக்கு வழங்கப்பட்டன.  இப்படியாக இச்சமூகங்கள் விலைக்கு வாங்கப்பட்டன. அவர்களது நன்றி உணர்விற்கு சோதனை வைத்தனர். எங்கு பலவீனமான பகுதி உள்ளது என்று பார்த்து அங்கு தட்டப்பட்டது. எனினும் கரையோர சமூகம் தனக்கென ஒரு பிரதிநிதியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் சிறுபான்மைத் தமிழ் சமூகம் ஏமாந்து விட்டது. ஏமாற்றப்பட்டு விட்டது. கூட்டணி கூட 1977இல் இராஜலிங்கத்திற்கு செய்த பிரசாரம் போல் தங்கவேலிற்கு செய்யவில்லை. மாறாக அவரிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஒரு சில கூட்டணியினர் ஈடுபட்டதாக அறியப்படுகின்றது. தங்கவேலுக்கு நியமனம் வழங்குவதில் பின் நின்றவர்கள் எதிராக செயற்பட்டதில் வியப்பேதுமில்லை.

மேற் கூறப்பட்டவைகள் உணர்த்தி நிற்கும் நிலைப்பாட்டினை சிறுபான்மைச் சமூகம் ஆழமாக யோசித்து தனது நிலைபற்றி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது காலவரையும் எதுவித அரசியல் தலைமையும் இல்லாதிருந்த இச்சமூகத்திற்கு ஓர் அரசியல் அமைப்பு தேவை என்ற நிலை காலத்தின் தேவையாக இருக்கின்றது. முன்பு இயங்கிய சிறுபான்மைத் தமிழர் மகாசபை கூட இயங்காமல் விட்டு ஏறத்தாள இரண்டு தசாப்தங்களாகின்றன. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் இன்று சிறுபான்மைக் கட்சிகள் பல முன்னெப்போதும் இல்லாத அளவில்  தமது பிரதிநிதிகளைப் பெற்றுள்ள போது கணிசமான சனத்தொகையில் உள்ள சிறுபான்மைச் சமூகத்திற்கு இன்று பிரதிநிதிகள் எதுவும் பெற முடியவில்லை. தமிழ் கட்சிகள் இச்சமூகத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்காது விட்டால், இவர்களுக்கு ஒரு அரசியல் கட்சி கட்டாயம் தேவையானது என்பதனைக் காலம் உணர்த்தியுள்ளது. இதனை காலம் செய்து வைக்கும்.

நான்கு கட்சிகளில் ஒன்றுதானும் தங்கள் பிரதிநிதிகளில் ஒருவரையாவுதல் இச்சமூகத்திற்கு வழங்குவார்களா? சிவா அவர்கள் தேசியப் பட்டியலுக்கு  நியமிக்கப்பட்டபோது அதனை எனக்குத் தா உனக்குத் தா என போட்டா போட்டியிட்டதனை அண்மையில் நேரில் கண்டோம். இக் கட்டுரை மூலம் ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். அதாவது சிவா அவர்களால் இப்பிரதிநிதித்துவம் அவரது சுகவீனம் காரணமாகவோ அன்றி அவரது வயது காரணமாகவோ செய்ய முடியாதவிடத்து இதனால் ஏற்படும் வெற்றிடம் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தாலேயே நிரப்பப்பட வேண்டும். நான்கு கட்சிகள் கூட்டு மொத்தமான முடிவினை இதில் எடுக்க வேண்டும். உடுப்பிட்டியில் தனது தொகுதியை மனமுவந்து கொடுத்து சிறுபான்மைச் சமூகத்தினை மதித்த சிவா மீண்டும் தனது பதவியை இவர்களுக்கு வழங்கி தனது பெருந்தன்மையைக் காட்டி கூட்டணிக்கு பெருமை சேர்ப்பாரா?

இக்கட்டுரையின் தாற்பரியம் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையினைக் குழப்பியடிப்பதோ அன்றி அதில் குளிர் காய்வதோ அல்ல. அன்றி ஆயுதப் போராட்டத்தின் இன்றைய கால மாற்றத்தினை கொச்சைப் படுத்துவதோ அல்ல. இது இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழலில் இச்சமூகத்தின் காலத்துக்குரிய தேவை.

நன்றி வீரகேசரி 2001ஆம் ஆண்டு.

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité