Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
19 mai 2007

"கிழக்கு மக்களின் உரிமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு"

கிழக்குமாகாணம் எதிர்கொண்டுவருகின்ற யுத்த அனர்த்தங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது. படுகொலைகளும், ஆள்கடத்தல்களும், பெண்கள் மீதான வன்முறைகளும் எமது மக்களின் வாழ்வை துரத்திக்கொண்டேயிருக்கின்றன. பிரமாண்டமான விளைநிலங்களும், மீன்பிடித்துறையும் கைவிடப்பட்டு பொருளாதார அபிவிருத்திகள் சீர்குலைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.இளம்பராயத்தினரின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அகதி வாழ்வும், விதவைகளின் அவலமும், அனாதைகளின் உருவாக்கமும் பெருகிக்கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இயல்புவாழ்க்கை முற்றாகவே மறுக்கப்பட்ட இருள்வெளிக்குள் கிழக்குமாகாண மக்கள் தள்ளிவிடப்பட்டிருக்கிறார்கள்.

ஆயுதக்கலாசாரத்துக்குள் சிக்கவைக்கப்பட்ட வறியமக்களின் குழந்தைகள் வாழ்வின் உன்னதங்களை புரிந்துகொள்ளமுடியாத வீணர்களால் புதைகுழிகளை நோக்கிய பயணத்திற்காய் இழுத்துச்செல்லப்படுகிறார்கள். மக்களுக்காகவே அரசியல் எனும் நிலை தலைகீழாக மாறி அரசியல் கோசங்களுக்காகவே மக்களென்று அலைக்கழிக்கப்படுகின்றார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், பறங்கியர்கள் என்று பல்லின மக்கள் கொண்டிருந்த ஒற்றுமையான வாழ்க்கைமுறை மாறி இன்று இனக்குரோதங்களின் விளைநிலமாக கிழக்கு மண் காட்சியளிக்கின்றது. இனக்கலவரங்களை மூட்டிவிடக்கூடிய வாய்ப்பான தருணங்களுக்காக அரசியல்வாதிகள் சூட்சிகளுடன் காத்துக்கிடக்கிறார்கள்.

வந்தாரை வாழவைத்த கிழக்கு என்று புகழ்கொண்ட எமது மாகாணத்து மக்கள் இன்று அடுத்தவேளை சாப்பாட்டுக்காக என்.ஜீ.ஓ.களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நானாவித துறைகளிலும் உலக மக்கள் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்க நமது மக்களோ அரசையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் நோக்கி உயிர்ப்பிச்சை கேட்டு உத்தரித்துக்கிடக்கிறார்கள். எண்ணிலடங்காது தொடரும் இத்துயரங்களையிட்டு நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். எமது மக்களின் மறுவாழ்வு பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் எமது மாகாணத்தின் அபிவிருத்தி பற்றியும் நாம் முழுக்கவனம் செலுத்தவேண்டிய காலகட்டம் இதுவென உணருகிறோம். இவைபற்றி ஐரோப்பாவாழ் கிழக்குமாகாண தமிழ், முஸ்லிம், சிங்கள உறவுகளிடையே நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த உரையாடல்களின் தொடர்ச்சியாக "கிழக்கு மக்களின் உரிமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு" ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் அமைப்புக்களில் பங்கெடுத்து வந்தவர்களினதும், பத்திரிகைத்துறை மற்றும் சமூகநல ஸ்தாபனங்களின் கூடிய அனுபவம் வாய்ந்தவர்களினதும் பங்களிப்புடன் உருவாகியுள்ள இவ்வமைப்பானது எமது மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களில் கூடிய கவனம் செலுத்தும் வகையில் தனது கொள்கைகளை வரித்துக்கொண்டுள்ளது. அத்தோடு கிழக்கில் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதோடு, பதிவுசெய்யவும் அவற்றை ஆவணப்படுத்தவும் வேண்டிய நடவடிக்கைகளை எமது அமைப்பு மேற்கொள்ளும். அதேவேளை இன, மத பேதமற்ற கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்பவும் அதன் அரசியல் உரிமைக்காக ஓங்கிக் குரல்கொடுக்கவும் வேண்டிய வரலாற்றுக்கடமையையும் எமது அமைப்பு கவனத்தில் கொள்கிறது.

இவையனைத்தையும் முன்னெடுத்துத் செல்லும் எமது பயணத்தில் எமது கரங்களை பலப்படுத்துமாறு உலகெங்கிலும் பரந்துபட்டுவாழும் கிழக்கு மாகாண உறவுகளையும், நண்பர்களையும், தோழர்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

"கிழக்கு மக்களின் உரிமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு"
(O.R.D.E.P)

ORD-EP@hotmail.fr

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité