Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
3 mai 2007

ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் வெளியிட்டுள்ள தீர்வு திட்டம் தொடர்பாக ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினரின் விமர்சன அறிக்கை.


இலங்கையினுடைய தேசிய இன பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்றுவருகின்ற சர்வகட்சி மாநாட்டின் கவனத்திற்கென பல அரசியல் கட்சிகள் தமது யோசனைகளை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். எனப்படுகின்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அண்மையில் தமது யோசனைகளை தெரிவித்துள்ளது. எழுத்து மூலம் வெளியாகியுள்ள இந்த யோசனைகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருதல் சம்பந்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயதானங்கள் கிழக்கிலங்கை வாழ் சமூகங்களிடையே பலத்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளன. கிழக்குமாகாண மக்களின் அரசியல் தலைவிதியை இன்னும் இன்னும் யாழ்ப்பாணதலைமைகளே தமது நலன்களில் அடிப்படையில் இருந்து தீர்மானிக்க முயல்வதே இதற்கு காரணமாகும்.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வடக்கும் கிழக்கும் வரலாற்றில் முதல் தடவையாக இணைக்கப்பட்டன. அதுவும் ஒருவருடத்திற்கு மட்டுமான ஒரு தற்காலிக ஏற்பாடாகவே அந்த இணைப்பு இருந்தது. குறித்த ஒருவருடத்தின் பின்னர் கிழக்குமாகாண மக்களிடையே நடத்தப்படும் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மக்களது ஆணையே இந்த இணைப்பை நிரந்தரமாக்கும் வலிமையுடையது. இதுபற்றி ஒப்பந்தத்தின் உபசரத்துக்களில் தெளிவான வரையறைகள் உண்டு. ஆனாலும் கிழக்கு மக்களது ஆணை பெறப்படாமலேயே கிழக்கு மாகாணம் சுமார் 20 வருடங்கள் வடக்குடன் இணைந்த நிர்வாகத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த 20 வருட காலங்களும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமைகளை ஒரு பொருட்டாக கூட யாருமே மதிக்காத நிலைமையே நீடித்து வந்தது. எனினும் கடந்த ஆண்டின் இறுதியில் உச்ச நிதீமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றின் மூலமே வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பு நீடித்திருந்த நிலைமையானது சட்டவிரோதமானது என கருதப்பட்டு அவ்விணைப்பு ரத்துச் செய்யப்பட்டது. இத்தீர்ப்பின் மூலமே சுமார் 20 வருடகாலம் உதாசீனம் செய்யப்பட்டடிருந்த கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமையானது மதிக்கப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் மக்களது ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற எந்தவொரு அமைப்பும் மீண்டும் கிழக்கு மாகாணத்தை அங்குவாழும் மக்களின் ஒப்புதல் இன்றி வடக்கு மாகாணத்துடன் இணைக்கின்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டாது.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணம் தனது அரசியல் பயணத்தை யாழ்ப்பாண தலைமைகளின் பின்னால் அணிவகுத்து செல்லவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் எந்தவொரு தமிழின அடையாளம் அந்த ஒன்றிப்பை சாத்தியமாக்கியதோ அந்த தமிழின தலைமைகளே கிழக்கு மாகாண மக்களை இரண்டாம் பட்சமாக நடத்தி வந்துள்ளனர். கடந்த கால அனுபவங்களே எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான நிகழ்கால முடிவுகளுக்கு வழிகாட்டுபவையாகும். அந்த வகையில் இன்றைய நிலையில் கிழக்கு மாகாண மக்கள் தாம் யாழ் மேலாதிக்க தலைமைகளால் பிரதேசரீதியாக வஞ்சிக்கப்பட்ட வரலாற்றை மீட்டுப்பார்க்கின்றார்கள். அதேவேளை ஒரு குறித்த சமூகமானது தனது சமூக, பொருளாதார, கல்வி போன்ற அம்சங்களில் அடைகின்ற வளர்ச்சிப் போக்கில் தமக்கான அரசியல் அதிகாரங்களை கோருவது இயல்பானதே. இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கிழக்கு மாகாணம் குறித்து கொண்டுள்ள அரசியல் முடிவுகள் மேற்படி சமூக யதார்த்தங்களை காண மறுத்துள்ளது. மக்களது புரட்சிகர விடுதலை பற்றி அவா கொண்டுள்ளவர்கள் இப்படி வரலாற்றுக் குருடர்களாக செயற்படுவது மிக வேதனைக்குரியதொன்றாகும்.

வடக்கு, கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகம் எனும் கோட்பாடு இன்று எல்லாவழிகளிலும் பொருத்தமற்றும், வலுவிழந்தும் போன நிலையில் அதனை அடியொற்றிய தீர்வுகளிலேயே ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. எப்படியோ ஒற்றுமை என்பதும், இணைப்பு என்பதும் பரஸ்பர விட்டுக்கொடுப்பிலும் அங்கீகரிப்பிலும் ஏற்பட வேண்டும். அதைவிடுத்து கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் அரசியல் அபிலாசைகளை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமாக அம் மாகாணத்தை வடக்குடன் இணைக்கக் கோருவது அப்பட்டமாக மேலாதிக்க சிந்தனையாக மட்டுமே இருக்கமுடியும். யாழ் - மேட்டுக்குடிகளினது அதிகார போட்டிகளின் விளைவாக உருவாகிய தமிழ்தேசியம் என்னும் கோட்பாடே இந்த பாரம்பரிய தாயகம் எனும் கோரிக்கையை வெளிக்கிளப்பியது. ஆனாலும் கிழக்கு மாகாணத்தின் யதார்த்த சூழ்நிலை இன்று இந்த வடக்கு கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகம் என்னும் கோரிக்கையில் இருந்து வெகு தொலைவிற்கு சென்றுவிட்டது. இந்நிலையில் விடாப்பிடியாக கிழக்கு தமிழர்களின் நிலங்களை மட்டுமாவது வடக்குடன் இணைந்துகொள்ள முயல்வது ஈ.பி.அர்எல்.எவ். இன் யோசனைகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதற்காக கிழக்கு மாகாணத்தை இனவாரியாக கூறுபோட்டு பலவீனப்படுத்தும் ஆபத்தான யோசனைகளும் இதில் அடங்கியுள்ளமை கடுமையான விசனத்திற்குரியது. கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் தொகுதியான அம்பாறையை ஊவா மாகாணத்துடனும், சேருவலத் தொகுதியை வட மத்திய மாகாணத்துடனும் இணைப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு ஆலோசனை கூறுமளவிற்கு புரட்சிகர முன்னணித் தோழர்களின்சிந்தனைகள் தரம் தாழ்ந்துவிட்டன. இப்படி இனரீதியாக மாகாணங்களை வரையறுக்கக் கோருவது என்பது அடிப்படையில் இனவாத தன்மையில் இருந்தே எழுவதாகும். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு நிலத்தொடர்பற்ற சுயாட்சியை அங்கீகரித்திருப்பதை கூட தமது ஜனநாயக முகங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் கபடநாடகமாகவே கொள்ளவேண்டி இருக்கிறது.

1987 இல் வடக்கு கிழக்கு மாகாணங்களை அங்கு வாழும் முஸ்லிம் மக்களினதோ, பிரதிநிதிகளினதோ அனுமதியின்றி இணைத்ததன் ஊடாக கிழக்கில் 32மூ மாக இருந்த முஸ்லிம்களை வடகிழக்கு இணைந்த ஒற்றை நிர்வாகத்தில் ஒரே நாளில் 17மூ வீதமாக மாற்றியது இலங்கை இந்திய ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தத்திற்கு முன்னின்று ஒப்புதல் அழித்தவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினர். பெருந்தலைவர் அஸ்ரப் அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்களினூடாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் எனும் அமைப்பை அரசியலில் களமிறக்கினார். அந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களை பற்றிப் பேசும் யோக்கியதை இல்லை. அதுமட்டுமின்றி கிழக்கு மக்கள் தமது சுய அதிகாரங்களை பாதுகாத்து கொள்வதற்கான போராட்டத்தில் கடந்த மூன்றாண்டு காலமாக அங்கே அனுபவித்து வரும் ஆக்கினைகள் சொல்லும்தரமன்று. அந்த போராட்டமே இன்று புலி பாசிசத்தின் நகங்களையும் பிடுங்கியெறிந்திருக்கின்றது. தமிழ் தேசிய ப+தத்தையும் ப+ச்சியமாக்கியிருக்கின்றது. இந்த நிலையில் கிழக்கு வாழ் மக்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவுகளை மறந்து ஒரே பிரதேச அடையாளத்துடன் நெருங்கிவாழத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் முஸ்லிம் மக்களுக்கான சுயாட்சியை அங்கீகரிக்கின்ற அதேவேளை கிழக்கு தமிழர்களின் சுயநிர்ணயத்தை மறுப்பது மேலாதிக்க சக்திகள் மேற்கொள்ளும் பிரித்தாளும் தந்திரங்களை அடிப்படையாக கொண்டதேயாகும். சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் தனித்தனியாக பிரித்து ஒதுக்கிவிடுவதன் மூலம் கிழக்கு வாழ் தமிழர்களை மட்டும் வடக்குடன் இணைத்துவிட ஈ.பி.ஆர்.எல்.எவ். கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையானது கிழக்கு மாகாணத் தமிழர்களை சிறுபான்மையாக்கி பலவீனப்படுத்தும் முயற்சி என நாம் சந்தேகம் கொள்ளுகின்றோம். இவ்யோசனைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து எதிர்காலத்தில் இன உணர்வுகளை கடந்த இன ஐக்கியத்தில் நம்பிக்கை கொண்ட பலமான தலைமைகள் உருவாவதை தடுப்பதற்கான யோசனைகளே அன்றி இனப்பிரச்சனைத் தீர்வுக்கான யோசனைகள் அல்ல.

கிழக்கு மண் ஆனது 1000 ஆண்டுகால தமிழ் முஸ்லிம் உறவுகளின் பலத்தினால் கட்டியமைக்கப்பட்டதொரு பிரதேசமாகும். தமிழ் தேசியம் என்கின்ற கருத்தியல் கிழக்கில் காலூன்றிய பின்னரே அங்கு இன உறவுகள் விரிசலடைந்தன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் இன்று புலிகள் மட்டுமே முஸ்லிம்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கியதாகவும் இனவிரிசல்களுக்கு தூபமிட்டதாகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த திரிபுவாதங்களில் பல தமிழ்தேசிய ஜனநாயகவாதிகள் களமிறங்கியிருக்கிறார்கள். எல்லாவித விடுதலை இயக்கங்களும் முஸ்லிம்களின் இரத்தக்கறை படிந்த கரங்களுக்கே சொந்தமானவை. ஈ.பி.ஆர்.எல்.எவ். உட்பட. ஆகவே கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று ஆலோசனை கூறும் அருகதை எந்தவொரு யாழ்ப்பாணத் தலைமைகளுக்கும் கிடையாது. யாழ்ப்பாணத்தலைமைகளுக்கு பின்னால் கடந்த காலங்களில் இழுபட நேர்ந்திருந்ததனால் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்ட படுமோசமான அனுபவங்கள் போதுமானவையேயாகும். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் என்று பல்லினங்களின் கூட்டுவாழ்வே கிழக்கு மாகாணத்தில் உன்னதமான பாரம்பரியமாகும். இழந்துபோன அந்த அற்புதமான காலங்களை மீட்டெடுப்பதே இன்று அங்கு வாழும் மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் சவாலாகும்.

இந்த சவாலை கிழக்கு மாகாண மக்கள் வெற்றிகொள்கின்ற வழிகளே இலங்கை தீவில் பற்றியெரிகின்ற தீச்சுவாலையை அணைப்பதற்கான முன்மாதிரிகளாகும். இந்த இக்கட்டான வரலாற்றுச் சூழலில் கிழக்கு மாகாணத்தினை இனரீதியாகப் பிளவுபடுத்தி அங்கு வாழும் மக்களை இனக்குழுமங்களாக பலவீனப்படுத்தி பிரித்தாளும் நீண்டகால தந்திரம் ஒன்றையே ஈ.பி.ஆர்.எல்.எவ். உடைய ஆலோசனைகள் கொண்டிருப்பதை நாம் மிக அபாயகரமானதாக உணர்கின்றோம். இதுபோன்ற சிந்தனைகள் அமூலுக்கு வந்தால் கிழக்கு மாகாணம் அதை பெறுமதிமிக்க தனித்துவ பாரம்பரியங்களை இழந்து சிதைந்து போகின்ற பேராபத்து காத்திருக்கின்றது. ஆகவே யாழ்ப்பாண நோக்கில் இருந்து உருவாகிய தமிழ் தேசியம் என்கின்ற அரசியல் கோட்பாட்டினை அடியொற்றி அதனூடாக அணுகப்படுகின்ற எந்தவொரு ஆலோசனைகளும் கிழக்கின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவாது. மாறாக அந்த மாகாணத்தில் வாழும் பல்லின சமூகங்களின் பிரதிநிதிகள் தமக்குள்ளான உரையாடல்களினூடாகவே அந்த பல்லின சிக்கல்களுக்கு விடைகாண முடியும். அது தனித்தனியாக சுயாட்சி அலகுகளை அமைப்பதாகவோ, அல்லது பல்லினங்களின் கூட்டமைப்பில் உருவாகின்ற ஒரே அலகாக கிழக்கு மாகாணத்தை கொள்வதாகவோ, அல்லது வேறு ஒரு விதமாகவோ இருக்கலாம். இதுபற்றி ஈ.பி.ஆர்.எல்.எவ்.இல் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாணத் தோழர்கள் மிகுந்த கவனம் கொள்ளவேண்டும். கட்சிக்கொள்கைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமது சொந்த பிரதேசமக்களுக்கு துரோகமிழைக்கக் கூடாது. கட்சியின் நலன்களை விட மக்களின் நலங்களே மேலானவை என்பதை அறியாதவர்கள் அல்ல நீங்கள். எமது மக்களின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை நீங்கள் மறுக்கப்போவதில்லை. ஆனால் நீங்கள் அங்கம் வகிக்கும் அமைப்பானது இன்று எடுத்துள்ள நிலைப்பாடானது எமது மக்களின் சுயநிர்ணயத்தை மறுக்கின்றது. இந்த முரண்நிலையில் உங்களது வரலாற்றுப் பாத்திரம் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன என்பது குறித்து ஆழமாக சிந்திக்குமாறு தயவுடன் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாம் கிழக்கு மாகாணம் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எவ்.கொண்டுள்ள நிலைப்பாட்டை கடுமையாக எதிர்கின்றோம். எமது மக்கள் மீது தீர்வுகள் திணிக்கப்படும் எந்தவொரு நிலையையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

27-04-2007

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité