Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
2 mai 2007

1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர்

sabalingam

1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர் சபாலிங்கம் அவர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலந்துரையாடலும் பிரான்சில் நடைபெற்றது. இந்நிகழ்வானது பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டது. பிரான்சின் நண்பர்கள் வட்டமானது ஜனநாயகப் பாதுகாப்பிற்காகவும், அனைத்துப் படுகொலைகளைக் கண்டிக்கும் வகையிலும் தொடர்ச்சியான பல கலந்துரையாடல்களை பிரான்சில் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த வகையிலேயே 29-04-2007 அன்று சபாலிங்கத்தின் 13 ஆவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. பிரான்சின் நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் நிகளும் கலந்துரையாடல்களுக்கு தொடர்ச்சியாக கலந்து கொள்ளும் எண்ணிக்கைகளுக்கும் அதிகமான அளவில் இந்நிகழ்வில் மக்கள்  கலந்து கொண்டது ஆச்சரியமான விடயமாகவே இருந்தது. இது புலிகளின் அராஜகப் போக்கிற்கு எதிராக அணிதிரளும் மக்களின் மன உறுதியின் வெளிப்பாடெனவும் கருத இடமுண்டு.

நண்பர் சபாலிங்கம் பிரான்சில் வாழும் காலத்தில் வரலாற்று ஆவணங்கள் சேகரிப்பதிலும், பல தமிழ் இலக்கியப் படைப்புகளை மறு பிரசுரிப்பதிலும் அக்கறையுடன் செயல்பட்டு வந்தவர். அந்தவகையில் ஆசியா வெளயீட்டு நிறுவணத்தின் ஆசிரியராகவும் செயல்பட்டவர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால வளர்ச்சிகளின் சாதக, பாதக நிலைமைகளை நன்கறிந்தவரும் கூட. இவ்வுண்மைகள் சம்மந்தமான ஓர் வரலாற்று நூலை எழுத முற்பட்ட வேளையில்தான் அவரின் படு கொலையும் நிகழ்ந்தது. சபாலிங்கத்தின் நினைவு அஞ்சலியில் அவரின் சமூகப் பணிகள் பற்றிப்பேசுவதோடு, பொதுவாக எமது  அரசியலின் குறைபாடுகள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியவர்களின் பெயர்களும், அவர்கள் ஆற்றிய உரைகளின் முக்கிய அம்சங்களும் சுருக்கமாக கீழ் வரும் செய்திகளில் காணலாம்.

இந்நிகழ்வின் தலைமை உரையாளராகவும், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நெறிப்படுத்தியவராகவும் லண்டனிலிருந்து வருகைதந்திருந்த ராகவன் அவர்கள் செயல்பட்டார். இவர் தனது தலைமையுரையில் குறிப்பிடும்போது சபாலிங்கத்துடன் தான் கொண்ட நட்பு பற்றியும் அவர் மேற்கொண்ட ஆவணப் பேணுதல் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் ராகவன் பேசும்போது வரலாறுகள் எவ்வாறு புனையப்படுகிறதென்பதற்கு; ‘’ சிங்கம் தனது வரலாற்றைக் கூறும் மட்டும் வேட்டைக்காரனின் வரலாறே வரலாறாக மேலோங்கி நிற்கும்’’ எனும் வரலாற்றுப் புனைவின் முடிச்சைக் குலைத்துக் காட்டினார்.

யோகரட்ணம்:-   இவர் இலங்கையின் சாதிய போராட்ட வரலாற்றிலும், இடது சாரி அரசியலிலும் அனுபவமிக்கவர்.

சபாலிங்கத்தின் கொலைக்கு எதிராக துணிவுடன் அன்றே நாம் எமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருப்போமாயின் இன்று பல கொலைகள் நடப்பதை தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். அத்துடன் கோவில்களில் வேள்விகள் எனும் பெயரில் மிருகங்களை கொலை செய்து வந்ததை கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்த நாம்; இன்று மனிதர்களை தலை வேறாகவும் உடல் வேறாகவும் கொலை செய்யும் காட்சிகளைக் கண்டும் அமைதிகாக்கிறோம். என எமது தமிழ் ‘அகச்’ சூழலை கேள்விக்குள்ளாக்கினார்.

தபேசன்:- அன்றைய காலகட்டத்தில் எமது பிரதேசம் விவசாயத்தில் வளம் மிக்கதாகவும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் எமது வாழ்வும் இருந்தபோது எம்முன் வைக்கப்பட்ட கேள்வி சோறா, சுதந்திரமா என்பதே. நாமும் சுதந்திரம் தேவையென்றோம். ஆனால் இன்றைய எமது நிலையோ  சோறும் இல்லை சுதந்திரமும் இல்லை என்பதாகக் குறிப்பிட்டார்.

தேவதாசன்:- இவர் பிரான்சின் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவராகவும், இலங்கைத் தலித் சமூகங்களுக்கென பிரத்தியேகமான அரசியல் உத்தரவாதங்கள்  பேணப்பட வேண்டும் என்பதையும்
வலியுறுத்தி வருபவர்.

இவர் உரையாற்றுகின்றபோது 1994 ஆம் ஆண்டிலிருந்து சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டின் மே மாத முதலாம் திகதியும் எமக்குள் அச்சத்தை நினைவுறுத்தும் நாட்களாகவே தொடர்ந்து வந்தது. அதற்குக் காரணம் 1994 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சபாலிங்கம் கொலை செய்யப்பட்டார். அடுத்து வருட மே மாத முதலாம் திகதி பிரேமதாசா கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாகவே ஒவ்வொரு மே மாத முதலாம் திகதியும் எமக்கு அச்சமூட்டும் நாளாக இருந்து வந்துள்ளது. மேலும் சபாலிங்கம் பற்றி கூறும்போது புலிகளின் பாசிச எதிர்ப்பை வெளிப்படுத்துவது மட்டுமன்றி பிற இயக்கங்களின் மனித விரோத நடவடிக்கைகளையும் சபாலிங்கம் கண்டித்து வந்தவர் என்பதையம் சுட்டிக்காட்டிப் பேசினார்.

உதயகுமார்:- இவர் பிரான்சின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதியாகவும் செயல்படுபவர்.அத்துடன் ரி.ஆர்.ரி எனும் வானொலியில்; ஞாயிறு தோறும் நடைபெறும் அரசியல் அரங்கம் எனும் நிகழ்வை நெறிப்படுத்துபவராகவும் பணி புரிந்து வருபவர்.

இவர் பேசுகின்றபோது வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதில் மிக ஆர்வம் உள்ளவர்களில் சபாலிங்கம் அவர்கள் அதில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டவர். ‘ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சிம்’ எனும் நூலை எழுதிய வகையில் எமது ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்று உண்மைகளை கணிசமான அளவு பதிவு செய்தவர் தோழர் புஸ்பராஜா அவர்கள். ‘முறிந்த பனை’ எனும் நூலும் ஒரு பக்கத்தை ஆவணப்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுப்பேசினார்.
சபாலிங்கத்தின் ஆவணப்படுத்தும் பணியை நாம் தொடர்வதன் மூலமாகவே சபாலிங்கத்திற்கு நாம் செய்யும் நிறைவான அஞ்சலியாகக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

ஜென்னி:- இவர் ஈ.என்.டி.எல்.எவ் எனும் கட்சியின் ஐரோப்பிய பிரதிநிதியாக செயல்பட்டு வருபவர்.பிரான்சின் நண்பர்கள் வட்ட நிகழ்வுகள் அனைத்திலும் தொடர்ச்சியாக பங்குபற்றி வருபவர்.

இவர் பாசிசப் புலிகளின் கொலைகளைக் கண்டித்துப் பேசியதுடன் எமது இவ்வாறான ஒன்று கூடலானது வெறும் அஞ்சலிக்காக மட்டுமல்லாது பொது வேலைத்திட்டங்களிலும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனும் அவசியம் குறித்தும் பேசினார்.

மோகன்:-   இவர் தமிழ் இயக்கங்களின் செயல்பாடுகள் பற்றிய நேரடி அனுபவங்களைக் கொண்டவர். பிரான்சின் நண்பர்கள் வட்டடத்தின் பணிகளில் நெருங்கிய தொடர்புள்ளவர். 

இவர் உரையாற்றும்போது இன்று படுகொலைகளுக்கு எதிராக இவ்வளவு அதிகமானோர் கூடியிருப்பது நம்பிக்கையளிப்பதாகக் கூறினார். இலங்கையில் நடைபெறும் கொலைகள் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் நலனுக்கானதெனும் கருத்துப் பதிவுடனேயே நிகழ்ந்து வருகிறது. இதில்  உள்ள மாயத்தோற்றங்களை நாம் இனம் காண வேண்டும். புலிகளின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் அனைவரும் துரோகிகள் எனும் முத்திரை குத்தப்படுவதை நாம் காண்கிறோம். மனித வாழ்வின் மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் கட்சிப் பாகுபாடுகளுக்கும் அப்பால் வெளிவர வேண்டியதற்கான வேலையை நாம் மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுப் பேசினார்.

அழகிரி:-   இவர் ஈழப் புரட்சி அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். தற்போதைய ஈழப்புரட்சி அமைப்பின் ஐரோப்பிய பிரதிநிதியாகவும் செயல்பட்டுவருபவர்.

இவர் உரையாற்றும்போது சபாலிங்கத்தை முதல் முதலாக 1971 இல் இலங்கையில் சந்தித்ததாகவும். அப்போது சத்தியசீலனும் உடன் இருந்ததைக் குறிப்பிட்டார். பிரான்சிலும் சபாலிங்கத்துடனான தொடர்புகள் மிக நெருக்கமாகவே இருந்தது எனக்குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடும்போது ‘’சபாலிங்கம் அவர்கள் மேற்கொண்ட பணிகளை நாம் தொடரமுடியாமல் போனதென்பது மிகப்பெரிய எமது குறைபாடுதான் என நான் கருதுகிறேன். மேலும் எமது அரசியல் சமூகப் பணியானது மக்கள் மத்தியில் பெரும்பான்மையாக செல்வாக்குச் செலுத்தும் வகையில் அமைய வேண்டும்’’ எனவும்; வலியுறித்திப்பேசினார்.

ராம்ராஜ்:-  இவர் ரி.பி.சி வானொலியின் ஸ்தாபகரும், ஈ.என்.டி.எல்.எவ். எனும் கட்சியின் அங்கத்தவரும் ஆவார். சபாலிங்கத்தின் 13 ஆவது வருட நினைவஞ்சலியில் கலந்து கொள்ளுமுகமாகவே லண்டனிலிருந்து வருகைதந்திருந்தார்.

இவர் பேசுகின்றபோது புலிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக ஒரு பொது நாளொன்றை தேர்வு செய்து அதை கொலை செய்யப்பட்ட அனைத்து மக்களுக்குமான ஓர் தினமாக நாம் பிரகடனப்படுத்த வேண்டும் எனும் அபிப்பிராயத்தை தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வை தான் ரி.பி.சி வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யும் திட்டத்தை மேற்கொண்டதாகவும் அது சில இடையூறுகள் நிமித்தம் தடைப்பட்டுவிட்டதெனும் ஆதங்கத்தையும் தெரிவித்தார்.

பாலா:-   இவரும் லண்டனிலிருந்து வருகைதந்திருந்தார்.

இவர் பேசுகின்றபோத சபாலிங்கம் கொலை சம்மந்தமாக நிதர்சனம் எனும் இணையத்தளம் தவறான செய்திகளைப் புனைந்து எழுதியதையும் கண்டித்துப் பேசினார். இன்று தான் இங்கு பேசும்போது எழுபதுனாயிரம் மக்களின் கல்லறைகளிலின் மீது நின்று பேசும் உணர்வு தனக்கு இருப்பதாகக் கூறினார். எமது தேசிய வாதம் என்பது பாசிச வாத தேசியமாகவே உள்ளது என்பதையும் குறிப்பிட்டார். அத்துடன் தனது உரையாடலுக்கு துணையாக பாரதியின் கவிதைகள் சிலவற்றை மேற்கோளாகக் கொண்டு உரையாற்றினார்.

எம்.ஆர்.ஸ்டாலின்:- இவர் பிரான்சிலிருந்து வெளிவந்த எக்ஸில் எனும் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவர். கிழக்கின் சுயநிர்ணயத்தின் அவசியம் குறித்து பேசியும், எழுதியும் வருபவர்.

சபாலிங்கம் அவர்கள் புகலிடத்தில்  ‘யாழ்ப்பாண வைபவமாலை’ எனும் வரலாற்று நூலை தனது ஆசியா வெளியீட்டு நிறுவனத்தால் மறு பதிப்புச் செய்தவர். அவரின் இம் முயற்சியே தாம் மட்டடக்களப்புத் தமிழகம் எனும் வரலாற்று நூலை மறு பதிப்பு செய்வதற்கான தூண்டுதலாக அமைந்தது எனவும் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் இன்றைய எமது சூழலில் துரோகிகள், மாவீரர்கள் எனும் பாகுபாட்டை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதை நாம் கவனித்தோமாயின் ஆயுத அதிகாரமும், பாசிச நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் புலிகளே அவற்றை தீர்மானிக்கிறார்கள் என்பதை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. அகவே இதற்கப்பாலான உண்மை வரலாறுகளை நாம் தேட முற்பட வேண்டும் எனவும் இறுதியில் மக்களே வெல்வர் எனவும்; கூறிச் சென்றார்.

குகநாதன்:- இவர் பிரான்சிலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர். புகலிடத்தில் முதல் முதலாக தொலைக்காட்சிச் சேவையை ஆரம்பித்தவரும் இவரே. அதுமட்டுமல்லாது ரி.ஆர்.ரி எனும் வானொலியின் ஸ்தாபகராகவும் செயல்பட்டுவருகிறார்.

sabalingam

இவர் உரையாற்றுகின்றபோது தான் தேசத்துரோகிகள் எனும் அடையாளத்தை கடந்த காலங்களில் தனது பத்திரிகையில் பதிவு செய்ததற்காக வருந்துவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறான ஒரு சுயவிமர்சனப் பாங்கை பார்வையாளர்கள் கரகோசித்துப் பாராட்டினார்கள்.மேலும் அவரின் தொடருரையில் சபாலிங்கம் புலிகளால் கொலை செய்யப்பட்டு 13 ஆவது வருட நினைவு நாள் எனும் விளம்பரச் செய்தியை தனது பத்திரிகையில் பிரசுரித்ததற்காக பிரான்சின் லாச்சப்பல் (லிற்றில் ஜவ்னா) எனும் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர்கள் தனது பத்திரிகையை விற்க மறுத்து விட்டதாகவும் கூறினார். புலிகளின் பல உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் எனும் குற்றச்சாட்டில் பிரான்சில் கைது செய்யப்பட்ட சூழலில்  சபாலிங்கத்தை கொலை செய்தது புலிகள்தான் எனும் விளம்பரத்தை தனது பத்திரிகையில் பிரசுரித்ததே வர்த்தகர்கள் தனது பத்திரிகையை விற்பதை மறுத்ததற்கான காரணமெனவும் குறிப்பிட்டார். அத்துடன் சபாலிங்கம் கொலை செய்யப்பட்டது அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மையான வரலாற்று நூலொன்றை  எழுதுவதற்கு முயற்சித்ததற்காகத்தானெனில் அவரது அம்முயற்சியை மேற்கொள்ளாது வெறுமனே அவருக்கு வருடா வருடம் அஞ்சலி செலுத்துவதில் என்ன மாற்றத்தை நீங்கள் நிகழ்த்தி விடப்போகிறீர்கள் எனும் நியாயமான குற்றச்சாட்டையும் பார்வையாளர்கள் முன்வைத்துப் பேசினார்.

ஜெயா பத்மநாதன்:- இவர் ஓர் பெண் கவிஞர் பல சமூக கலாச்சார நிகழ்வுகளில் தொடர்ச்சியாக பங்குபற்றி வருபவர்.

இவர் சபாலிங்கம் பற்றிக் குறிப்பிடுகையில் சபாலிங்கம் அவர்கள் பல படைப்புக்களை மறு பிரசும் செய்வதில் முனைப்புடன செயல் பட்டவர் அந்தவகையில் அவருக்கான அஞ்சலியை நாம்  உண்மையாக செய்வதாயின் அவர் மேற்கொண்ட பணிகளை நாம் பொறுப்பேற்று நடாத்துவதில்தான் அடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இரயாகரன்:- இவர் மார்க்சிய இடது சாரிக் கோட்பாட்டின் நம்பிக்கையில் பல கட்டுரைகளையும் எழுதிவருபவர் அத்துடன் பல நூல்களையும் எழுதியுள்ளார். மற்றும் தமிழ் சேர்க்கில் எனும் இணையத்தளத்தின் ஆசிரியராகவும் செயல்பட்டுவருகிறார்.

இவர் தொடர்ந்து உரையாற்றும்போது இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளெல்லாம் ஒரு சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகளாகத்தான் இருந்து வருகிறது. தமிழ்த் தேசியம் என்பதை மக்களின் அடிப்படை உரிமைகளிலிருந்து நோக்கவேண்டிய ஓர் விடயமாகும். இங்கு புலிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தை எதிர்க்கும் போக்கே நிகழ்கிறது. மக்களின் ஒவ்வொரு பிரச்சனைகளையும் நாம் இனம் காண முனைகிறோமோ அதிலிருந்துதான் நாம் ஒற்றுமை நோக்கிச் செல்ல முடியும். மக்களின் பிரச்சனைகளின் அடிப்படையில் இருந்து நாம் முடிவுகளை எடுக்காமல் மேற்கொள்ளப்படும் பிற நடவடிக்கைகள் யாவும் பிற்போக்கானவையாகவே அமையும். மக்களின் தேவைகளிலிருந்து சிந்திப்பதன் ஊடாகவே மாற்றங்களும் நிகழ முடியுமெனவும் வலியுறுத்திப் பேசினார்.

அசோக்:- இவர் ஈழ விடுதலைப்போராட்டத்திலும் மிக அனுபவமிக்கவர். சிறுவயதிலிருந்தே காந்தியம் போன்ற சமூக மேம்பாட்டு இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டவர். ‘அசை’ எனும் சஞ்சிகையின் தொகுப்பாசிரியரும், பிரான்சின் நண்பர்கள் வட்டத்தின் செயல்பாட்டாளர்களிலும் ஒருவராக இருந்து வருகிறார்.

சபாலிங்கம்பற்றி கூறும்போது தான் முதல் முதலாக சபாலிங்கத்தை சந்தித்த காலத்தை நினைவு படுத்தினார். பிற்பாடு சபாலிங்கத்துடனும் வேறு சிலருடனும் இணைந்து  மாற்றுச் சஞ்ஙசிகை ஒன்று வெளியிடுவது என முடிவெடுத்ததையும், அதில் சிலர் புலிகளின் அராஜகப் போக்கிற்கு மட்டுமே எதிர்ப்புத் தெரிவிப்பதையும் பிற இயக்கங்களின் அராஜகப் போக்குகளை அலட்சியப்படுத்தும் நிலை காணப்பட்டடதாகவும் எனவே தொடர்ந்து அவர்களுடன் தன்னால் இணைந்து வேலை செய்யமுடியாது போனதை நினைவுபடுத்திக் கூறினார். மேலும் தெரிவிக்கையில் பிரான்ஸ் நண்பர்கள் வட்டத்தைப் பொறுத்தவரை புலிகள் மட்டுமல்லாது எவர் தரப்பிலிருந்தும் ஜனநாயக மறுப்பும் அராஜகப் போக்குகள் நிகழும்பட்சத்தில் நாம் அவற்றை வன்மையாக கண்டிப்போம் என தனதுரையில் குறிப்பிட்டார்.;

sabalingam

லக்சுமி:- இவர் பெண்ணியவாதக் கருத்துக்களில் தீவிர ஈடுபாடுள்ளவர். மறைந்த கலைச்செல்வனுடன் இணைந்து உயிர்நிழல் எனும் சஞிசிகையை வெளியிட்டவர். தற்போதும் உயிர்நிழல் சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயல்பட்டுவருகிறார். அத்துடன் பிரான்ஸ் நண்பர்கள் வட்டத்தினரின் செயல்பாடுகளில் ஒருவராகவும் இருந்துவருகிறார்.

1992 இல் பிரான்சில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பின் ஊடாகவே சபாலிங்கத்துடனான தொடர்பும், நெருக்கமும் ஏற்பட்டதை நினைவு கூர்ந்தார். அக்கால கட்டத்தில் பிரான்சில் புலிகளின் அராஜகப்போக்கு மிக உச்சத்தில் இருந்ததையும் நினைவுபடுத்தினார். இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்வுகளை நாம் பொது விடயங்களில் கவனம் கொள்ளும் நிகழ்வுகளாக பயன்படுத்தவேண்டும் எனவும் வலியுறத்தினார்.

விஜி:- இவர் பிரான்சிலிருந்து வெளிவந்த எக்ஸில் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராகவும் புகலிட பெண்கள் சந்திப்பு செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் பணிபுரிந்து வருகிறார். பெண்ணியவாதக் கருத்துகளிலும் ஆவலுடன் செயல்பட்டு வருபவர்.

இவர் தனது பேச்சில், நடைபெறும் போர்க்காலச் சூழலில் பாதிக்கப்பட்டவர்களில்  பெண்களின் பங்கு மிகவும் கணிசமானது. அவர்கள் இயக்கங்களில் இருந்தாலும், குடும்பப் பெண்களாக இருந்தாலும் இந்தப் போர்க்காலப் பாதிப்புகள் பெண்களுக்கே அதிகமாக நிகழ்ந்துள்ளது. எனவே இலங்கை அரசியல் தீர்வுத்திட்டத்திலும் பெண்களின் பாதிப்புக்கான நிவாரணம்பற்றிய அம்சமும் சேர்த்துக்கொள்ளும் வகையில் நாம் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

மனோ:- பிரான்சிலிருந்து வெளிவந்த ஓசை, அம்மா போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராக செயல்பட்டவர். நாடகத்துறையிலும் மிக ஆர்வமாக இயங்கிவருபவர். 

இவர் பேசுகின்றபோது இவ்வாறான சந்திப்புக்களை நாம் பலப்படுத்த வேண்டும். அது விடயமான அறிக்கைகளையும் நாம் தயாரிக்கவேண்டும். தொடரும் சந்திப்புக்களினூடாக நாம் என்ன முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம் என்பதையும் அவதானித்துச் செயல்படும் போக்கை வழக்கப்படுத்திக் கொள்ளவெண்டும் எனவும் தனது அபிப்பிராயமாகத் தெரிவித்தார்.

இவ்வாறான கலந்துரையாடலின் பிற்பாடு, நடந்த நிகழ்வுகள் பற்றிய ஓர் அறிக்கை தாயாரிக்கப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் பெண்கள் பிரச்சனை, தலித்மக்கள் பிரச்சனைகள்  யாவும்  இலங்கை அரசியல் தீர்வுத்திட்டத்தில் கவனம் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கட்சிகளுக்கு  நாம் தெரியப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலந்துரையாடல் நிகழ்வு நிறைவடைந்தது.


இதன் பிற்பாடு ரி.பி.சி வானொலியின் ஸ்தாபகரான ராம்ராஜ் அவர்கள் ரி.பி.சி வானொலி பற்றிய விமர்சனத்தை தான் எதிர்பார்ப்பதாகவும் அதில் அக்கறையும் விருப்பமும் உள்ளவர்கள் ரி.பி.சி இன் குறை, நிறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்தார். அக்கலந்துரையாடலிலும் பலர் பங்குபற்றினர். அதில் பல குறை, நிறைகள் பேசப்பட்டன அனைத்தையும் உள்வாங்கிய ராம்ராஜ் அவர்கள் ரி.பி.சி வானொலியானது எந்த கொள்கை கோட்பாடும் முன் வைக்காமல் செயல்படும் நோக்கதிலேயே தொடங்கப்பட்டதெனவும் யார் எவ்வாறான நிகழ்ச்சிகள் செய்ய முன்வந்தாலும் அதற்கான நேரம் கொடுக்கப்படும் எனவும் கூறினார். பிற்பாடு வானொலிக்கான நிதிச் சேகரிப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டு கலந்துரையாடல் நிறைவுபெற்றது.


Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité