Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
20 mars 2007

வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பிரான்சில்

mosaique2_1_

வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது ஜனநாயகப் பண்பின் வளர்ச்சி நிலைப் பரிமாணத்தைக் கொண்டதாகவுள்ளது. காரணம் கடந்த காலங்களில் பிரான்சில் நடைபெற்ற தேர்ல்களில், மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே இருந்த தொடர்புகளில் இருந்து, இம்முறை பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. வரும் தேர்தலில் போட்டியிடுபவர்களை மக்கள் நேருக்கு நேர் சந்தித்து தமது கேள்விகளை, வேடபாளர்களின் கருத்துகக்கள் மீதான சந்தேகங்களை , அவர்கள் மீதான குற்றச் சாட்டுகளை, அவர்கள் வாக்குறுதிகள் மீதான ஐயப்பாடுகள் என அனைத்தையும் கேட்கவும், அவர்களுடன் கலந்துரையாடும் தன்மையையும்  பிரான்சிலுள்ள ஊடகங்களால் ஒழுங்கு படுத்திய செயலே ஜனநாயகத்தின் பண்பு வளர்ச்சியென நாம் கருதுவது. இவ்வாறான விவாதங்களும் கலந்துரையாடல்களும் பல் வேறு தளங்களில் நடைபெற்றும் வருகிறது. இதனூடாக வேட்பாளர்களின் ஆற்றலையும், அவர்களின் விவாதத்தினூடான மொழி விளையாட்டுக்களையும்,  சிலகேள்விகளுக்கு முட்டாள் தனமான (வலதுசாரிக் கட்சி வேட்பாளரான நிக்கோலா சார்க்கோசியின் தேசியமும்- தேசிய அடையாளத்திற்குமான பதில்களை கீழே குறிப்பிடப்படும் போது நுட்பமாக கவனிக்கவும்.) பதில்களையும் நாம் பார்த்து ரசித்து அனுபவிக்கக் கூடியதாகவும் உள்ளது.

பிரான்சில் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிட விரும்பியவர்களாக தம்மை அறிவித்துக் கொண்டவர்கள். 33பேர். இவர்களில் போட்டியிடும் தகுதியுடையவர்கள் 500 சிபாரிக் கையொப்பம் பெற வேண்டும் (மாகாண, மாவட்ட, நகரரட்சிமன்ற,  பாராளமன்ற, செனெட் சபை போன்ற அரசியல் பிரமுகர்களிடமிருந்து பெற வேண்டிய சிபாரிசுக் கையொப்பங்கள்) என்பது பிரான்சின் அரசியல் சட்ட அமுலாக்க சபையின் கொள்கையாகும். இதற்கான கால அவகாசம் கடந்த 16-03-2007 உடன் முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 33 நபர்களில் 12 வேட்பாளர்களால் மட்டுமே 500 கையொப்பம்  பெறப்பட்டு   தேர்தலில் போட்டியிடும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதில் யோசே போவே எனும் வேட்பாளரின் (இவர் விவசாயத் திணைக்களத் தலைவரும், உலகமயமாதலுக்கு எதிராக செயல்படுபவர்) மனுத் தாக்கலில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், வரும் திங்கட் கிழமையன்று  12 பேரா 11 பேரா போட்டியிடுவர் என உறுதிசெய்யப்படும் என கூறப்படுகிறது.

இத் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களாக நிக்கோலா சார்க்கோசி (யு.எம்.பி எனும் வலதுசாரிக்கட்சி), செகொலன் றோயல் (பி.எஸ் எனும் சோசலிசக்கட்சி), பிரான்சுவா பயரோ (யு.டி.எவ் எனும் ஐக்கிய ஜனநாயகக் கட்சி) எனும் மூவரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்படுகிறது. இதில் பிரான்சுவா பயரோ என்பவர் பிரான்சின் தீவிர வலது சாரிக் கட்சியைச் சேர்ந்த லூ பென் என்பவரின் செல்வாக்கையும் தாண்டி 20 வீதமான ஆதரவை இத் தேர்தலில் பெறுவார் எனவும் கருத்து நிலவுகிறது. இரண்டாவது சுற்று நடைபெறுமாயின் இவரே இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவர்களை தீர்மானிக்கும் சக்தியுடையவராக இருப்பார் எனவும் கருதப்படுகிறது.

இம் முன்னணி வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளும், சில கேள்விகளுக்கு இவர்கள் முன்வைத்த பதில்களும், கொள்கைகளும்... பற்றிய சுருக்கம்.

பிரான்சுவா பயரோ என்பவர் மாணவர்கள் மத்தியில் மதிப்பைப் பெற்றுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கிறது.  மாணவர் சபைக் கூடத்தில் இவர் பங்கு பற்றி அவர்கள் கேள்விகளை எதிர் கொண்டு பதிலளித்துள்ளார். கல்வி வளர்ச்சியில் குறைபாடு, சர்வகலாசாலையில் மாணவர்கள் பயில்வதற்கான உபகரணங்கள் பற்றாக்குறை அது மட்டுமல்லாது பல காலமாகவே பாடசாலை உபகரணங்கள் நவீனப் படுத்தப் படாதுள்ளது என்றும், இதற்கு பிரான்சின் ஆட்சியானது  தொடர்ந்து வலது சாரிக் கட்சியினதும், இடது சாரிக் கட்சியினதும்  ஆட்சியிலேயே     இருந்து   வந்துள்ளது. எனவே பிரான்சின் வளர்ச்சிக்கு பிராதனாமாக மாற்று அரசியல் உருவாக வேண்டும் என்பதாகவும் கூறி வருகிறார். இவர் பிரான்சின் 26 மாகாணங்களில் வெளி மாகாணங்களான  guadeloup, martinique, guyane , reunion, போன்ற மாகாணங்களிலும்  தனது பிரச்சாரத்தை சாதகமாக பயன் படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரான்சை ஐக்கிய தேசிய  கட்சிகளின் ஆட்சியாக மாற்றப்போவதாகவும் கூறுகிறார். அதிக பட்சமாக இருபது பேர் கொண்டதாகவே மந்திரிசபையை அமைப்பதாகவும் கூறிவருகிறார்.

நிக்கோலா சாக்கோசி யிடம் பிரான்சுவா பயரோவின் ஆட்சி மாற்றங் குறித்து கேட்ட கேள்விக்கு ‘’ பிரான்சுவா பயரோவுடன் ஒன்றாக அரசியல் பணி புரிந்தவன் நான். அவருடைய யு.டி.எவ் கட்சி எமது ஆழும் கட்சியுடன் இணைந்தும் செயல் படுகிறது. இருப்பினும் அவருக்கும் எனக்கும் கருத்தியல் முரண்பாடுகள் நிறையவே உள்ளது. அவரது இடது, சாரி வலது சாரி என்ற கேள்வி அர்த்தமற்றது. பெரும்பான்மைக் கட்சி, எதிர்க்கட்சி என்பதே உண்மையாக இருக்கிறது. பெரும்பான்மைக் கட்சியானது அரசாங்கத்தை ஒழுங்குடன் நடத்திச் செல்லும் பணியைக் கொண்டது. எதிர்க்கட்சியின் பணியானது மாற்றங்களை ஏற்படுத்தும் முறைமை கொண்டது.இதில் பிரான்ஸ் மக்கள் எதைத் தேர்ந்தெடுப்பது. நீங்கள் பெரும்பான்மை -அற்றும், எதிர்க்கட்சி பலமும் -அற்று இருந்தால் பிரான்ஸ் மக்களின் தேர்வு என்ன? பிரான்சுவா பயரோ மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறுகிறார். இவருடைய அரசியல் சிந்தனையானது இற்றாலி நாட்டின் நிரந்தரமற்ற அரசியில் சூழலை நினைவு படுத்துகிறது. அங்கு பெரும்பான்மை பலமும், எதிர்க்கட்சி பலமும் இல்லாத சூழலில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இராஜினாமா நிகழ்கிறது.’’  பிரான்சுவா பயரோ கட்சி பலம் அற்றவர் என்பதை நினைவுறுத்து வதற்காகவே இவ்வாறு கூறியுள்ளார். நிக்கோலா சார்க்கோசியின் தேர்தல் அறிக்கையின் விவாதப் பொருளாக இருப்பது வெளிநாட்டவர்களுக்கும், தேசிய அடையாளத்திற்குமான பணி கொண்ட ஒரு மந்திரியை நியமிப்பது பற்றியதாகவே உள்ளது. இதுபற்றிய அவரது குழப்பமான பதில்கள் கீழ்காணும் முறையில் அமைந்துள்ளது.

‘’ நான் வெளிநாட்டவர்களைப்பற்றி பேசுவதை விரும்புகிறேன் ஆனால் இனவாதம் என்னிடம் இல்லை. நான் தேசிய அடையாளம் பற்றி பேச விரும்புகிறேன்  ஆனால் என்னிடம் தேசிய வாதம் இல்லை.’’ இவருடைய திட்டத்தினால் இவர் கட்சி சார்ந்த சிமொன் வெய் எனும் பெண்மணியின்  அதிருப்தி பற்றி கேட்டதற்கு (இப் பெண்மணி 1944 இல் நாசிகளின் உத்தரவிற்குப் பணிந்து பிரான்சால் நாடுகடத்தப்பட்ட யூத இனத்தைச் சேர்ந்தவர். இவர் தனது குடும்பத்துடன் நாடுகடத்தப்பட்டு தனது பெற்றோர்கள் கொலை செய்யப்பட்டதையும் நேரில் கண்டவர். 1945 இல் இவரும் ஒரு சகோதரியும் மட்டுமே விடுதலை யானவர்கள். வலது சாரிக்கட்சியில்  மந்திரிப் பதவிகளில் இருந்தவர் ) ‘’ மாடம் சிமோன் வெய் அவ மிக மிருதுவான மனப்போக்குடையவர், அது அவரது உரிமை (…) நான் மன சுத்தியுடன் கூறுகிறேன்  பிரான்சின் அடையாளம் என்று கூறுவது குற்றமா? இது வந்து தகைமை சம்பந்தமானது. வெளிநாட்டவர்கள் எம்முடன் இணையும் போது அவர்கள் புதிய பிரான்சுப் பிரஜைகள் ஆகிறார்கள். (…) நாம் அவர்களுக்கு பிரான்ஸ் அடையாளம் பற்றி புரிய வைக்க முடியாது போனால் தகைமைகள் எதுவோ அதுபற்றி  நாம் பேசிக்கொள்ள முடியாது. (…)  இணைப் பென்பது எப்படி சாத்தியமாகும்? (…) ஒன்றிணைப்பு என்பது என்ன, இது வந்து ஒரு அடையாளம் இல்லையா?’’  (18-03-2007 அன்று பிரான்ஸ் 3 எனும் தொலைக்காட்சியில் நிகழ்ந்த உரையாடலில் நிக்கோலா சார்க்கோசி உரைத்த பதில்.)

செகொலன் றோயல் இவர் பிரான்சின் அடிப்படை அரசியல் அமுலாக்கத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கூறி வருகிறார். அதாவது பிரான்ஸ் தற்போது ஐந்தாவது குடியரசு முறைமையைக் கொண்டுள்ளது. பிரான்ஸ் புரட்சிக்குப் பிற்பாடான் அரசியல் மாற்றங்களின்போது முதலாவது குடியரசு, இரண்டாவது குடியரசு எனும் இலக்கமிட்டே குடியரசின் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து அதன் தொடர்ச்சியாக தற்போது பிரான்ஸ் ஐந்தாவது குடியரசு சட்டத்தை பின்பற்றி வருகிறது. இதை ஆறாவது குடியரசாக மாற்றுவதென்பதே செகொலன் றோயலின் பிரச்சாரமாக உள்ளது. இதில் பிரான்சுவா பயரோவும் உடன் பாடுள்ளவராக பேசப்படுகிறது. செகொலன் றோயலின்  சமூக பொருளாதார சீரமைப்புகளின் தீவிரமான மாற்றங்கள் பற்றிய கொள்கையில் குறிப்பாக பொருளாதாரமட்டத்தில் பல சிக்கல் உள்ளதாக கருதுகிறார்கள். ஐரோப்பாவிலுள்ள சோசலிச கட்சி அரசுகள் உலகமயமாதலை எப்படி எதிர் கொள்வதென்று ஆலோசிக்கின்ற சூழலில் நீங்கள் எப்படி அதை முற்றாக இல்லாமல் செய்யப் போகிறீர்கள் எனும் கேள்விக்கு பிரான்சில் அது முடியும் என்றே கூறுகிறார். அது பற்றிய தர்க்கபூர்வமான பதில்கள் அவரிடம் இல்லை. பிரான்சிலிருந்து தொழிற்சாலைகள் வெளியேறுவதை தான் தடுக்கப்போவதாக பேசுகிறார். மற்றும் உடனடிச் சம்பள உயர்வுகள் பற்றிப் பேசிவருகிறார்.  நாடு  நிதிப பற்றாக் குறையில் திண்டாடும் சூழலில் எங்கிருந்து நிதி எடுக்கப் போகிறார் என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் இவர் மீது கேள்விகளை முன்வைக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் பற்றிய கேள்விக்கு நாம் யார்... யார் எங்கிருந்து வந்தவர்கள் என்பது முக்கியத்துவம் அல்ல, நாம் எங்கே இருக்கிறோம் என்பதுதான் முக்கியத்துவம்  பிரான்சின் சனத்தொகையில் மூன்றில் ஒரு குடம்பத்தினர் வெளிநாட்டவர்களாகவே உள்ளனர். வெளிநாட்டவர் என்பதே அந்நிய வாதம் இது பிரான்சின் வளர்ச்சிக்கு இடையூறாகவே இருக்கும். பிரான்சின் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே இவரின் பிரதானமான பிரச்சாரமாக உள்ளது.

இத் தேர்தலில் பிரான்ஸ் வாழும் தமிழர்களில்  வாக்குரிமை பெற்றவர்களின் பணியென்ன என்பதற்கு தீவிர இடது சாரி வேட்பாளரான லூ பென் தமிழர்களுக்கு மறைமுகமாக ஓர் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதையே எமது பிரான்ஸ் வாழ் தமித் தேசிய வாதிகளான  வாக்குரிமை பெற்றவர்கள் பின்பற்றுவார்கள் எனக் கருதுகிறோம்.

வேட்பாளர்களிடம் கேள்விகள் கேட்பதற்கென  பொது மக்களில் 100 பேர்கள்வரை அனுமதிக்கப்படும் ஒர் நிகழ்ச்சியை பிரான்ஸ் தொலைக் காட்சிகள் தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகிறது.  இதில் தீவிர வலதுசாரிக் கட்சியின் வேட்பாளரான லூ பென் கலந்து கொண்ட ஓர் நிகழ்ச்சியில் அவரது தேசிய வாதம் பற்றி பலர் பல விதமாக கேள்விக் கணைகளைத் தொடுத்து வரும் வேளையில், ஓர் பெண்மணி வீட்டு வசிதிகள் பற்றி லூ பென்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்பு, தனது தேசிய வாதத்தை நியாயப் படுத்துவதற்காக கொசவோ நாட்டைப்பற்றியும், இலங்கைத் தமிழர்கள் பற்றிய செய்தி ஒன்றையும் தனது நியாயத்திற்காக எடுத்துக் கொண்டார். லூ பென் அவர்கள் தனது பிரதான பணியாக மேற்கொள்வது. கேட்கும் கேள்விக்கு பதில் கொடுக்காது போனாலும் தான் நினைக்கும் ஓர் கருத்தை சொருகுவது அவரது பாணி. இவ்வாறே ஓர் பெண்மணி வீட்டு வசதி பற்றிக்கேட்ட கேள்விக்கு கொசவோ மக்கள் பற்றியும்  இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேசியதும். அந்த முறை தவறென்பதல்ல எமது நியாயம். அவர் என்ன பேசினார் என்பதே எமது நியாயம். கொசவோ நாட்டு அல்பேனியர்களும், இலங்கைத் தமிழர்களும் இங்கு வாழ்கிறார்கள். இருப்பினும் குறிப்பாக தமிழர்கள் குட்டித் தீவாக இருக்கும் தங்கள் நாட்டில் தங்களுக்கென்று ஓர் ஆட்சியும், அதிகாரமும் வேண்டும் என்று இங்கிருந்து கொண்டு அதற்கான போராட்டங்களை செய்து வருகிறார்கள். இத்துடன் அவரது பேச்சு நின்றுவிட்டது. இதனூடாக அவர் சொல்லாமல் சொன்ன சேதி என்ன என்பதே.. இங்கு வாழும் வெளி நாட்டவர்கள் இங்கிருந்து கொண்டு  தமது தேசியம் பற்றி வலியுறுத்தி வரும்போது இந்த நாட்டில் பிறந்த நான் எனது தேசம் பற்றிப் பேசுவது ஏன் உங்களுக்கு குற்றமாகத் தெரிகிறதென்பதே. இதனால் எமது தேசியப் பற்றுக் கொண்ட வாக்குரிமை பெற்றவர்கள் தமது தேசியத்தில உண்மையான பற்று இருந்தால் தமது வாக்குகளை லூ பென்னுக்கு வழங்குவதே நியாயமாது.

அரசியல் வாதிகளின் நோக்கங்கள் எப்படியுள்ளதென்பது தீர்மானிக்க முடியாதென்றபோதிலும்.பன்முக சிந்தனைக்கு மதிப்புள்ள சூழலை இத்தேர்தல் மூலமாக நாம் காணக்கூடியதாக உள்ளதே இத்தேர்தலின்   சிறப்பாக் கருதலாம்.

கடந்த கால -பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்றிய வேடபாளர்களின் எண்ணிக்கை

1974    12
1981    10
1988     9
1995     9
2002    16

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité