Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
1 février 2007

''எமதுசமூகத் தற்கொலையை நிறுத்தவேண்டும்.... யாழ்பாண மேட்டுக்குடி மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தினஜீவன் கூல்

20070124_1234_colour_small.png”சோதனையே எழுதாமல் பட்டத்தினை பெற்ற பலரும், தமது பட்டங்களை நான் திரும்பி தருமாறு கேட்டு விடுவேன் என்று என்னை எதிர்திருக்கலாம்.”
-ரத்தினஜீவன் கூல்

கடந்த ஆறுமாத காலமாக மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்.பல்கலைகழம் எதிர்வரும் 22.ம் திகதி முதல் மீண்டும் செய்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்குப் பல்கலைகழக துணைவேந்தர் ரவீந்திர நாத், இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு இது வரை என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு பல்கலைகழக தமிழ்துறைத் தலைவர் பாலசுகுமார் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். கடந்த மாதம் வவுனியா விவசாயகல்லூரியில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் மூன்று மாணவர்கள் பலியாகியிருந்தனர். இச் சம்பவங்கள் எல்லாம் வடக்கு கிழக்கில் தமிழ் மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு தடையாக உள்ள விடயங்களாகும்.

இந்நிலையில், யாழ்.பல்கலைகழக உபவேந்தராக நியமிக்கப்பட்டு, சர்சைகளுக்கு உள்ளாகி, இன்றும் உத்தியோகபூர்வமாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தராக இருக்கும் திரு. இரத்தினஜீவன் ஹல் அவர்கள் சமீபத்தில் கனடா வந்திருந்தார். இலங்கையின் வடகிழக்கில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலை, முன்னேற்றம், அவற்றுக்கான தடைகள் மற்றும் சர்சைகுரியதாக மாற்றப்பட்ட அவரது துணைவேந்தர் நியமனம் போன்ற விபரங்களை வைகறை வாசகர்களுக்கு அறியத் தரும் நோக்கத்தில் அவரை வைகறை பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் பேட்டி கண்டனர். எமது சில கேள்விகள் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தின. இருந்தும் எமது கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதிலளித்தார். அவற்றை அவருடைய வார்த்தைகளில் அப்படியே வைகறை வாசகர்களுக்குத் தருகின்றோம். இப்பேட்டி தொடர்பாக எவராவது தமது கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால், அவற்றை எழுதி அனுப்பினீர்களேயானால் தொடர்ந்து வரும் வெளியீடுகளில் அவற்றை பிரசுரிப்போம்.

- ஆசிரியர் குழு

பேராசிரியர் ரத்தினஜீவன் ஹல் 1975 ல் இலங்கை பல்கலைகழகத்தின் கட்டுப் பத்தை வளாகத்தில் மின் பொறியியல் கலைமாணிப் பட்டத்தையும், 1977ல் மிகச்சிறந்த சித்தி என்ற குறிப்புடன் முதுமானி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்தும், 1982.ல் கானகி மெலன் பல்கலைகழகத்தில் இருந்து கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். இவர் மின் கருவிகளின் ஆக்கத்தை கணக்கிடும் முறையை கண்டுபிடித்தமைக்காக, இவருக்கு லண்டன் பல்கலைகழகம் 1995.ம் ஆண்டு உயர் கலாநிதி பட்டத்தையும் ((D.Sc) சர்வதேச மின்பொறியியளார்கள் சங்கம் (IEEE) Fellow பட்டத்தையும் கொடுத்தன. இவர் நைஜீரியாவில் விரிவுரையாளராக இருந்த போது (1977- 1980) பல நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு ஆசிரியர் உத்தியோகத்தை பெறுவதற்கான வழிவகைகளை திறப்பதற்கான, நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பலருக்கு இல வசமாக எடுத்தும் கொடுத்திருக்கிறார். இவர்களில் பலர் யாழ்.பல்கலைகழகத்தின் புதிய பட்டதாரிகள் ஆவர். பலர் இன்று கனடாவில் உள்ளனர். அமெரிக்காவில் பொறியியலாளராய் இரு வருடங்கள் கடமையாற்றிய பின்னர் பல்கலைகழகத்தில் பதவியில் அமர்ந்து, 12 வருடங்களாக க்லேயார்மொன்ட் கலாசாலைகளைச் சேர்ந்த ஃகாவிமட் கலாசாலையில் வேலை செய்து,பின்னர் நிரந்தர பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்து விட்டு,இலங்கை மாணவர்களுக்கு தான் பெற்ற கல்வியை, கற்றுக்கொடுப்பதற்காக இலங்கைதிரும்பினார்.

இலங்கையில் சிங்கள இனவாதிகளுடன் மோதி, வழக்காடி, நீதிமன்றம்மூலமாக பேராதனை பல்கலைகழகத்தில், சிரேஷ்ட பேராசிரியர் பதவியையும், நிரந்தரநிலையையும் பெற்றார். அங்கிருந்து பதவி நீக்கப்பட்ட அவரது மனைவியும், மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் வெற்றியும், நஷ்டஈடும் பெற்று, தீர்ப்பு நடைமுறைக்கு வரும் முன், தமிழ் பேரினவாதிகளின் மிரட்டல்களால், இருவரும், 2006.ம் ஆண்டு சித்திரை மாதம் அமெரிக்கா சென்றனர். தற்போது அவர்கள் இருவரும், முன்பு வேலை செய்த ட்ரெக்தெல் பல்கலைகழகத்தில் தற்காலிகமாக கடமையாற்றுகின்றனர். மனைவி துஷியந்தி, தென்கலிபோர்னியா பல்கலைகழகத்தில், நோபெல் பரிசு பெற்ற ஜோஜ் ஓலாவின் கீழ் இரசாயன கலாநிதி பட்டம் பெற்றவர். இவர்களுக்கு மூன்று பெண்குழந்தைகளும், ஒர் ஆண் குழந்தையும் உண்டு.

• நீங்கள் யாழ் பல்கலைக்கழக உப வேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பின்னர், உங்களால் அப்பதவியினை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவானது. அதற்கான காரணங்கள் என்ன? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் கேள்வியே தவறானது. நான் பதவியை ஏற்றேன். துணைவேந்தராக இயங்கினேன். தீர்மானங்களை எடுத்தேன்.ஆனால் சில சமூகவிரோதிகளின் நடவடிக்கைகளால், அங்கு என் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு எனக்கு விஷேட விடுதலை தந்ததை அடுத்து நான் நாட்டுக்கு வெளியே வந்தேன். நான் துணைவேந்தர் என்பதனாலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த உத்தரவை தந்தது குறிப்பிடத்தக்கது. இல்லையேல் பேராதனை பல்கலைகழகத்திடமிருந்தே இதை நான் பெற்றிருக்க நேர்திருக்கும். தற்போதும் நான் துணைவேந்தராகவே இருக் கின்றேன். என்னை ஜனாதிபதி விலக்கும்வரை நானே யாழ்.பல்கலைகழக துணை வேந்தர். இந்த நிலைமைக்கு காரணங்களானவை: துணைவேந்தர் பதவியில் கண் வைத்த சிலரின் எரிச்சல். அவர்களின் மாணவர்கள் சிலர், மாணவர் சங்கத்தில் தலைவர்களாக இருப்பது. தமிழர் மத்தியில் தலைநிமிர்ந்திருக்கும் கலாச்சார, மதவெறி, மற்றும் யாழ்.மேட்டுக்குடியினரின் மேலாதிக்கம் ஆகியவையே.

• கேள்வி: யாழ். பல்கலைகழக பேரவை, யாழ் பல்கலைக்கழக உபவேந்தருக்காக மூன்று பெயர்களை பிரேரித்திருந்தது. அந்த மூவரில்,ஜனாதிபதி உங்களை தெரிவு செய்
வதற்கு ஏதாவது பிரத்தியேக காரணங்கள் இருந்தனவா?

யாழ். பல்கலைகழக பேரவை, நான் பேரவைக்கு வெளியில் இருந்தும், என்னை தேர்ந்தெடுத்தது நூதனமானதல்ல. விண்ணப்பதாரிகளில் எனக்கு மட்டும் Ph.dக்கு
மேலாக உயர் கலாநிதிப்பட்டம், DSc இருந்தது. எனக்கு மட்டுமே பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழவின் கீழ் இயங்கும் 15 பல்கலைகழகங்களை நிர்வகித்த அனுபவமும், கல்வி பற்றிய பரந்த பாண்டித்தியமும், வெளியீடுகளும். இருந்தன. குறுகிய பாடச்சித்திகளுக்கு அப்பால், நிர்வாகத்தில் பரந்த ஈடுபாடும் எனக்கு இருந்தது. யாழ்.பல்கலைகழக பேரவை என்னை தேர்ந்தெடுத்த பின்னர், ஜனாதிபதிக்கு ஏதேனும் பிரத்தியேக காரணம் இருந்ததா என்று கேட்பது குழப்பமானது. ஏன் பேரவைக்கு பிரத்தியேக காரணம் இருந்ததா என்று கேட்கவில்லை? இது குழந்தை
யையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் இருக்கிறது. என்னை விட்டு மற்ற இருவரில் ஒருவரை ஜனாதிபதி நியமித்திருந்தால் யாழ்பாணத்துக்கு ஒரு உயர் பட்டதாரி இருக்க சில்லறை ஆளை நியமித்து இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருப்பார்கள். யாழ்.பல்கலைகழக பேரவையினரையே, இப்படியான தேசத் துரோகிகள் நிதர்சனம்.கொம் போன்ற இணையத்தளங்களில், வெருட்டியிருக்கின்றனர்.

பல்கலைகழக பேரவையை சேர்ந்த இந்த பெரியோருக்கே இந்த அச்சுறுத்தல் என்றால், இப்படிப்பட்டவர்கள் எவ்வளவுக்கு தமிழ்மக்களை அடக்குகின்றார்கள் என்று நீங்கள் சிந்தியுங்கள்.

20070124_1234_bw.png
• உங்களுடைய நியமனம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வகையான பிரதிபலிப்பை வெளியிட்டார்கள்?

பாராளுமன்றத்தில் வெறும் தூஷணம்பேசி தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் கஜேந்திரனும், மேலும் ஈழவேந்தனும்,தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னை எதிர்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் அப்படி ஒரு தீர்மானமும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் எடுக்கப்படவில்லை என்று கனேடிய தமிழ் வானெலியில் ((CTR ) ஓர்நேர்காணலில் கடந்த பங்குனி 12.ம் திகதி கூறியிருந்தார். இவ் ஒலிப்பதிவு ‘தமிழ்நாதம். கொம்’ல் சில மாதங்களாக இருந்தது. தலைவர் சம்பந்தர் அவர்களும் இதை எனக்கு தன் சொந்த வாக்கின் கீழ் ஏற்கு மாறு கூறினார். பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள்- தமிழ்தே சிய கூட்டமைப்பினரிடையேயான ஓர் கூட்டத்தில், சு.ப.தமிழ்செல்வனிடம், விடுதலைப் புலிகள் ஏன் என்னைப் போல் தகுதியான ஒருவரை எதிர்க்கிறார்கள் என்று காரணம் கேட்டபோது, தமிழ்செல்வன் அவர்கள், தங்களுக்கு ஒரு எதிர்ப்பும் இல்லை, ஆனால் மாணவர்களை அடக்க முடியவில்லை என்றும், இம்முறை விலத்தி நின்றால், அடுத்தமுறை தாமே என்னை துணை வேந்தர் ஆக்குவார்கள் என்றும் கூறினார். உண்மையில் அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு வழியில்லை.

• உங்கள் நியமனத்துக்கு யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரின் ஒருபகுதியினரால் காட்டப்பட்ட எதிர்ப்பானது, பல்கலைக் கழகத்தினுள் வெளிசக்திகளினால் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் கருதுகிறீர்களா? எப்படி?

யார் இந்த பல்கலைகழக சமூகத்தினர்? இப்படி பல பெயர்களின் கீழ் என்னை எதிர்த்து பல பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளிவந்தன. அவர்கள் யார் என்று ஒருத் தருக்கும் தெரியாது. நான் துணைவேந்தர் ஆனால், பல்கலைக் கழகத்தை, தினம் தோறும், தனக்கு சொந்தமான, இலவசமாகபடுத்துறங்கும் விடுதியை போல் கஜேந்திரன் உபயோகிப்பதை நான் தடுப்பேன் என்ற பயத்தில் அவர் என்னை எதிர்திருக்கலாம். சோதனையே எழுதாமல் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டத்தினை பெற்ற பலரும், தமது பட்டங்களை நான் திரும்பிதருமாறு கேட்டு விடுவேன் என்று என்னை
எதிர்திருக்கலாம். துணைவேந்தராக நியமிக்கப்படாத பேராசிரியர்களும், அவர்களது மாணவர்களான மாணவர் சங்கத் தலைவரும், விடுதலைப்புலிகளின் பல்கலைகழக பொறுப்பாளரும் என்னை எதிர்த்திருக்கலாம். ஆனால் இவர்கள் தமது எதிர்ப்பை அங்கீகரிக்கும்படி யாழ் பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கத்தை கேட்டபோது, 2006ம் ஆண்டு பங்குனி மாதம் 5ம் திகதி கூடிய யாழ்.பல்கழைக்கழக ஆசிரியர் சங்கம் (UTA) நான் சரியான முறையில் நியமிக்கப்பட்டேன் என்றும், ஆகவே என்னை துணைவேந்தராக வரவேற்கவேண்டும் என்றும் தீர்மானித்து. அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. அன்று இரவே, (UTA)கூட்டத்தில் பேசிய பேராசிரியர் சித்தம்பலத்தின் வீட்டிற்கு கல்லெறி விழுந்தது. அவரின் அலுவலக பெயர் பலகை உடைக்கப்பட்டது. இவற்றை கண்டிப்பதற்காக (UTA)மீண்டும் கூட இருந்த போது விடுதலைப் புலிகளின் பொறுப்பாளரும், கஜேந்திரனும் அப்படி கூட வேண்டாம், தாம் அதனைபார்த்துக் கொள்வார்கள் என்று கட்டளை இட்டனர். இதுவே எமது தமிழ்மக்களின் சுதந்திரம்.

இதே போல் வவுனியா வளாகசமூகத்தினர் 2006.ம் ஆண்டு பங்குனி 22.ம் திகதி கூட இருந்த போது விடுதலைப்புலிகளின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் ஞானம் அப்படி கூட தேவையில்லை என்று கட்டளை இட்டார். எனக்கு எதிரானவர்கள் எதுவும் பேசலாம் ஆனால் எனக்கு சார்பானவர்கள் வாயை மூடவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்?

இவற்றை ஊடகங்கள் ஒன்றும் பெரிதாக வெளியிடவில்லை. குறிப்பாக எனக்கு வாக்களித்த யாழ்.பல்கலைகழக பேரவையினருக்கு கிடைத்த மிரட்டல்கள் இலங்கையில் எந்த ஊடகங்களிலும் வரவில்லை. இந்த நேர்காணலால் உங்களுக்கும் பாதிப்பு ஏதும் வரலாம் என்று நான் பயப்படுகின்றேன்.

• இந்த விடயம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு என்ன? அவர்களுடன் நீங்கள் தொடர்புகொண்டீர்களா? அல்லது உங்கள் சார்பாக வேறு யாராவது தொடர்பினை மேற்கொண்டார்களா?

பலர் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. பேராயர்கள் வண.தோமஸ் சவுந்தரநாயகம், ராயப்பு ஜோசேப்பு, சு.ஜெபநேசன் போன்றோர் வெவ்வேறு கடிதங்களை விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களுக்கு எழுதியிருந்தார்கள். ஆனால் பதில் எதுவும் கிடைத்ததாக எனக்கு தெரியாது.

• இந்த விடயம் தொடர்பாக சிங்கள சமூக கல்விமான்கள் அரசியல்வாதிகள் மத்தியில் எவ்வகையானபிரதிபலிப்பு இருந்தது ?

வியப்பு! தமிழரே தமது முன்னேற்றத்தை ஏன் எதிர்கிறார்கள் என்ற கேள்வி. சிங்கள இனவாதிகளுக்கு சந்தோஷம்.

• UTHR/J க்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டு ஒன்று உங்கள் மீது வைக்கப்படுகின்றது. அவ்வாறு உங்களுக்கு ஏதாவது தொடர்பு இருந்ததா?அவர்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

UTHR/J என்ற நிறுவனம் காலம்சென்ற துணைவேந்தர் கலாநிதி. துரைராஜா அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம். அதில் யாழ்பல்கலைகழக ஆசிரியர்கள் மட்டுமே அங்கம் வகிக்க முடியும்.துனைவேந்தராக பதவி ஏற்றதன் பின்னர், 2006 பங்குனியிலிருந்து தான் நான் அதில் அங்கம் வகிக்க தகுதியுடையவன் ஆனேன். ஆனால் நான் அதில் அங்கத்தவராக சேரவில்லை. அங்கத்தவர்கள் அனைவரும் பல்கலைகழக ஆசிரியர்கள். அங்கத்தவர்களில் முக்கிய ஒருவர் எனது சொந்த அண்ணர். ஓரு கட்டத்தில் தம்பி என்றமுறையில் அவர்கள் பதிப்பித்த “முறிந்த
பனை” என்ற புத்தகத்தை வெளியிட சிறிய உதவி செய்திருந்தேன். அவர்களின் வெளியீடுகளில் ஒரு பங்கு கூட நான் எழுதவில்லை. அவர்கள் தொடர்பாக அப்படி ஒரு குறையையும் நான் காணவில்லை. WWW.uthr.com என்ற இணையத்தள முகவரியில் அவர்கள் வெளியீடுகளை காணலாம். அவற்றை கவனமாக வாசித்தால் இலங்கை அரசாங்கத்தின் அட்டூழியங்கள் பலவற்றை அவர்கள் பட்டியலிட்டு அம்பலப் படுத்தியிருக்கிறார்கள் என்பதை காணலாம். உதாரணம்: சத்துருக்கொண்டான் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவம்செய்த கொலைகள், நவாலி தேவாலயபடுகொலைகள் போன்றவை இவர்களே வெளியிட்டு, இலங்கை அரசாங்கத்தின் மனிதஉரிமை மீறல்களை சர்வதேச அரங்கில் அப்பலப்படுத்தியுள்ளார்கள்.

இவர்களின் நேர்மையான செயற்பாடு காரணமாக,இவர்கள் எழுதுவது மேற்கத்தைய நாடுகளால் உடனடியாக ஏற்கப்படுகின்றது. ஆனால் எப்போதும் பொய்யையும், அரசாங்க எதிர்ப்புடன் மட்டும் எழுதும் ஊடகங்கள், நாங்களே வாசித்து கைதட்டுவதற்கு சரியே ஒழிய, வேறு ஒன்றுக்கும் உதவாது. தமிழர்களின் விடுதலைக்கு UTHR/Jபெரிய அளவில் பங்களித்திருக்கின்றது என வெளியில் கருதப்படுகின்றது.

• நீங்கள் ஒரு கிறிஸ்தவர். அதனால்,உங்களுடைய எழுத்துகளில் இந்துமதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் நீங்கள் எழுதிவருவதாக, மிகவும் கவனமாக கிறிஸ்தவ மதம் பற்றிய உயர்ந்த விம்பத்தை தி;ட்டமிட்டு நீங்கள் உங்கள் பதிவுகளில் எழுதியிருப்பதாகவும் உங்கள் எதிர்ப்பாளர்கள் கூறுவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

உங்கள் கேள்வி தமிழ் மேலாதிக்க தேசிய வாதத்தின் வெறியை காட்டுவது போலாகும் (மன்னிக்கவும்) நாம் ஆண்டதமிழர்கள், எங்கள் கலாச்சாரமே மிகச் சிறந்தது, எங்கள் சாதியே மிக உயர்ந்தது, எங்கள் சமயமே உண்மையானது இவையே இந்த மேலாதிக்க தமிழ் தேசியவாதத்தின் அறிகுறிகள். இவர்களுக்கு, எங்கள் தரப்பின் குற்றங்கள் பற்றி பேசுவதே மகா குற்றமானது. இதனால்தான் 1948ல் தோட்டத் தமிழர்களை நாம் கழற்றிவிட்டோம். பின்பு முஸ்லிம்களை துரத்தி விட்டோம். இப்போது மட்டக்களப்பில் பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான தமிழ்மேலாதிக்க வாதிகளின் பிரச்சினைக்குரிய சில செயற்பாடுகளை குறிப்பிடுகின்றேன். நான் யாழ்.பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டபோது போது “ஒரு பேப்பர்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் சித்திரை 7ம் திகதி இதழில், பின்வரும் சாரப்பட எழுதுகின்றார், அதாவது கிறிஸ்தவர்கள் முன்பு சைவர்களாக இருந்து மதம் மாறியவர்கள், இது துரோகத்தனமானது, இவ்வாறு மதம் மாறிய ஜீவன் ஹலையாழ்பாணத்தில் சைவக்கோவில் ஒன்றை தன்னகத்தே கொண்ட யாழ்.பல்கழைகழகத்தின் துணைவேந்தராக நடமாடவிடக்கூடாது” என்று அவர் எனக்கு பயங்கரவாத எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த கார்த்திகை மாதத்தில் விடுதலைப்புலிகளின் மறைந்த மாவீரர்களை கும்பிடும்படி பல தமிழ் ஊடகங்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இது இறந்த வர்களின் ஆவிகளை வேண்டுவது அல்லது கும்பிடுவது போலாகும். கிறிஸ்தவர்கள் தமது மத அனுஷ்டானப்படி ஆவிகளைகும்பிடுவது தவறானது. மாவீரர்களை நினைவு கூருவது என்பது வேறு கும்பிடுவது என்பது வேறு. மாவீரர்களை கும்பிடுமாறு கிறிஸ்தவர்களை வற்புறுத்துவது அல்லது கட்டாயப்படுத்துவது அவர்களை இவற்றிலிருந்து, போராட்டத்தில் இருந்து அன்னியப்படவே வழிசமைக்கும். தமிழ்
கிறிஸ்தவர்கள் தூரவிலகிச் செல்வார்கள்.மேலும் புலிகளின் ஆலோசகர்களில் ஒருவரான திரு. சந்தியேந்திரா நடேசன்,தமிழரின் மதம் சைவசமயமே என்பதை கிறிஸ்தவர் ஏற்கவேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் வழங்கிய விரிவுரை ஒன்றில் கூறியிருக்கின்றார்.

தமிழர்கள் ஆகிய நாம் பல கலாச்சார,மதங்கள், பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதை ஏற்கும் அளவுக்கு எமது விடுதலை போராட்டம், முன்செல்லாத நிலையில், இதை சொல்வது துரோகம் என்றால், அதை சொல்வது எமது இனத்தின் விடுதலைக்கு எனது பங்களிப்பு என்றேநான் கருதுகின்றேன். நீங்கள் குறிக்கும் என் எழுத்துக்கள் ஆராய்ச்சி அடிப்படையில் எழுதப்பட்டவை.இதனை பல்கழைக்கழக வட்டாரங்களிலேயே விவாதிக்க வேண்டும். பத்திரிகைகளிலோ, சுவரொட்டிகளிலோ, அல்லது ஒருதரப்பாய் விவாதிக்கபட கூடிய விடயங்கள் அல்ல இவை. ஆனால் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். நான் எனது பாரம்பரியம் என்ன என்று ஆராய்ந்த போதுசைவசமயத்தை எனது பாரம்பரியமாககருதியே ஆராய்ந்தேன். அப்படி செய்யும் போது 19ம் நூற்றாண்டில் சிறுபிள்ளை பலிமற்றும் நல்லூர் கந்தசாமி கோவில் முத்தத்தில் வேசி வியாபாராம் நடந்ததென்று ஆவனங்களை கண்டபோது அவற்றை உள்ளபடி எழுதுவது எனது கடமை ஆகியது. மறைப்பது கல்விக்குத் துரோகம். சைவமதத்தை இறுக்க பிடிப்பவர்களுக்கு இது நோவை உண்டாக்கி இருக்கலாம். கிறிஸ்தவர்களுக்கு இது முசுப்பாத்தியாக இருந்திருக்கலாம். இதே போல்தான் அதே புத்தகத்தில் கிறிஸ்தவ குருமாரின் திருவிளையாடல்களையும், சாதி வேற்றுமைகள் எம்முள் இல்லை என்று சொன்னபடி அதன் பேணல்களையும், கௌதம புத்தர் திருச்சபையில் எப்படி புனித ஜெகோசாஃபட்(Jehosaphat) ஆக மாறி, அவர்தான் புத்தர் என்று அறியாமல் கும்பிடப்படுகிறார் என்றும் எழுதிய போது, அதை சைவமக்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம் அல்லதுமுசுப்பாத்தியாய் எடுத்திருக்கலாம். ஆனால் கிறிஸ்தவர் பலர், நான் என் மதத்தை தூஷிப்பதாக கருதுகிறார்கள். ஆழ்ந்த பல்கலைகழக ஆராய்ச்சிப் பாரம்பரியத்தை அறியாமல் இப்படி மனக்குளப்பம் அடைபவர் களுக்கு நான் சொல்வது இதுவே…நீங்கள் கல்கியையும், ஆனந்த விகடனையும், குமுதத்தையும் மட்டும் வாசித்துக்கொண்டு ஆழ்ந்த புத்தகங்களை, ஆராச்சிகளை அறிஞர்களுக்கு தயவு செய்து விட்டுவிடுங்கள். இருதயசுத்தியும், கபடமற்ற நாவுமே கல்விக்கு அத்திவாரக்கல்.

• பொதுவாக உங்களைப் பற்றி சிங்கள சமூகத்தினரிடையே, நீங்கள் ஒரு குறும் தமிழ் தேசியவாதி என்ற கருத்து பரவலாக அறியப்படும் அதே நேரம், தமிழர் தரப்பினரிடையே நீங்கள், தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக உங்கள் கருத்து?

தேசிய வெறி கொண்டவர்கள் என்னில் குறை கூறினால் அது நான் என்னவோ சரியாக செய்கின்றேன் என்று எனக்கு காட்டுகிறது. களனி பல்கலைகழகத்தின்
அப்போதைய துணைவேந்தர், மானியங்கள் ஆணைக்குழுவில் “ஒரு புலி கொழும்புக்கு வந்து இங்கே புகுந்திருக்கிறது அதை அடித்து துரத்த வேண்டும்” என்று கத்திய
போது, அதை நான் எனக்கு வழங்கிய ஒருநல்ல சான்றிதழாகவே எடுத்தேன். அதே போலவே மேற்கத்தைய நாட்டுச் சுதந்திரம்,தஞ்சம் ஆகியவற்றை ரசித்துக் கொண்டும், ருசித்துக் கொண்டும் இலங்கையில் உள்ளவர்கள் யுத்தம் செய்யவேண்டும், பல்கலைகழகம்செல்லாது வகுப்புக்களை பகிஸ்கரிக்க வேண்டும் என்பவர்கள் என்மேல் குறை சொன்னால் அதுவும் அப்படியே ஆகும்.

• ஆரம்பகாலங்களில் தமிழ் விடுதலை அமைப்புகள் ஏதாவற்றுடன் உங்களுக்கு தொடர்பு அல்லது பங்களிப்பு இருந்ததா?

தமிழரசுக்கட்சி, தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போன்றவற்றுடன் குடும்பமாகவும், மற்றும் அதன் தலைவர்களுடன் தனிப்பட்ட, குடு
ம்பச் சொந்த தொடர்புகள் பல இருந்தது. நான் என் தாயாருடன் பல சத்தியா கிரகங்களில் பங்குபற்றியிருக்கிறேன். 1970—72 காலப்பகுதிகளில், எனது தகப்பனார் மற்றும் பெரிய தகப்பனார் கு.நேசையா ஆகியோர் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்ககுவதில் காத்திரமான பங்களிப்பை செய்திருக்கிறார்கள் நான் 1976இல் இலங்கையை விட்டு வெளியேறியதில் இருந்து வெளிநாடுகளில் இருந்த இலங்கை தமிழர்களுடன் (உதாரனம்: குமார் தம்பித்துரை, லோஜன் கனகரட்ணம்) போன்றவர்களுடன் சேர்ந்து தமிழர்களின் உரிமை போராட்டம் தொடார்பாக சில பங்களிப்புகளை செய்துள்ளேன். ஆனால் நாம் எல்லோரும் ஒர் அளவுக்கு இப்போது, வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு, அமைப்புக்களுக்கு புளித்துப்போனவர்கள் ஆகி விட்
டோம் போல் தெரிகிறது. அதுவும், தாமும்தமது பிள்ளைகளும் வெளிநாடுகளில் சுகமாக வாழ்ந்து கொண்டு, இலங்கையில் அப்பாவி மக்கள் பலியாகுவதை கைதட்டி வரவேற்கின்ற தமிழர்கள் பெரும் போலிகளாய் இருப்பது தான் பெரும் துயரம்.

• பல்கலைழக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் உறுப்பினராக கடமையாற்றியவர் என்ற வகையில்,இன்றைய நிலையில் வட-கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கள், வளாகங்களின் நிலை, ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது எவ்வாறு உள்ளது?

நிலமை உதவாது. ஆசிரியர்கள் பாடசாலைகளிலோ, பல்கலைக் கழகத்திலோ இல்லை. யாழ் பல்கலைக்கழகத்த்தில்,வேலைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டில்
படித்த கொஞ்சப் பேரையும் ஏதும் பொய்ச்சாட்டுச் சொல்லி எடுக்கமாட்டார்கள். இய க்கங்கள் பல 1970 தரப்படுத்தலை எதிர்த்து தொடங்கியவை. ஆனால் இன்று தரப்
படுத்தல் இருந்தாலே யாழ்பாண மாணவன் ஒருவனுக்கு பல்கலைகழக அனுமதி கிடை க்கும் என்ற நிலையாகிவிட்டது. யாழ்பாண மாணவன் பொறியிற் பீடம் உட்பட பல்
கழைக்கழகத்துக்கு செல்வதற்கு எடுக்கவேண்டிய புள்ளி வரம்பு, 2004ல் 1.8648. அதேவேளை ஒரு வவுனியா மாணவன் எடுக்க வேண்டியது 1.9288. அதாவது வவு
னியா மாவட்ட மாணவனை விட யாழ்பாண மாணவனுக்கு குறைந்த புள்ளிகள் போதும் இதே போலவே மருத்துவபீட அனுமதி புள்ளி வரம்பு யாழ்ப்பாணத்துக்கும், வவுனியாவுக்கும் எறத்தாழ சமன். யாழ்ப்பாணம் இன்று பிற்படுத்தப்பட்ட ((Backword பிராந்தியம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கான ஒதுக்கீடு , 1980ம் ஆண்டு ஜனத்தொகை கணக்கீ;ட்டின் அடிப்படையிலேயே தற்போதும் கணிக்கப்படுகின்றது. தற்போது யாழ்.குடா நாட்டில் குறைவாக உள்ள ஜனத்ொகையை அடிப்படையாக கொண்டு சரியாக செய்யப்படின், தற்போது கிடைக்கும் அனுமதி எண்ணிக்கையும் கிடைக்காது. இதே வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்,பொறியியல் பீட அனுமதிக்கு 1.459 புள்ளி
களை ஒரு மாணவன் பெறவேண்டும். இது அம்மாவட்ட மாணவர்கள் நன்றாக சோதனை செய்கிறார்கள் இல்லை என்பதைகாட்டுகிறது. இதேவேளை யாழ்பாணத்திற்கு கிடைத்த பிற்படுத்தப்பட்ட பிராந்தியவரையறை மட்டக்களப்புக்கு கொடுக்கப்படவில்லை என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனுவில் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தனர். பல்கலைகழக மானியங்கள் ஆணைகுழு அதை 2005ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. (இது 2007ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.) தரப்படுத்தல் வேண்டாம் என்று தொடங்கி, இன்று அதற்காக நாம் கெஞ்சவேண்டிய நிலையே தற்போதைய எமது நிலையாகும்.

• அண்மைக்காலத்தில், கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் ரவீதிரநாத் கடத்தப்பட்டுள்ளார், தமிழ்துறை பேராசியர் பாலசுகுமாரின்வெளியேற்றம் மற்றும் உங்களதுநியமனத்தில் எதிர்ப்பு போன்றவை,தமிழ் மாணவ சமூகத்தின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்துகின்றது. இது தொடர்பாக உங்கள்கருத்தென்ன?

இது கிழக்கில் நிறைய காலமாகவே நடக்கிறது. தமிழ் ஊடகங்கள் பல யாழ். குடாநாட்டினராகிய எம்மாலும், எமது யாழ்பாண மேலாதிக்க மனப்பான்மையுடனும் நடத்தப்படுகின்றன. ஆகையால் கடந்தகாலங்களில் கிழக்கில் நடந்த சம்பவங்கள் பலவற்றை தமிழ் ஊடகங்கள் கவனிக்கவில்லை. முன்னாள் இடைக்கால துணைவேந்தர் யுவி தங்கராஜா காருடன் கடத்தப்பட்டார். பின்னர் அவரின் மைத்துனர் தராக்கி சிவராம் கெஞ்சி கேட்டதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். அவரது மடி-கணனி (Laptop) திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதற்கு அவர் இன்றும் அதன் பெறுமதியான 1,85,000 ரூபாவுக்காக மாதம் 15,000 ரூபா வீதம்,பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுககு; செலுத்தி வருகின்றார். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்தவர் என்பதால் அப்போது அவருக்காக கண்ணீர் விட எந்த ஊடகங்களும் இருக்கவில்லை. பின்னர் துணைவேந்தர் மூக்கையா புலிகளின் மாணவர் சங்கத்தினால் முற்றுகையிடப்பட்டு பதவி விலகச் சொல்லி கட்டளையிடப்பட்ட நிலையில், போட்டிருந்த உடுப்புடன் மட்டும் பேரூந்தில் ஏறி கொழும்பு வந்து பல்கலைகழகமானியங்கள் ஆணைக்குழு மூலமாக
பதவி விலகினார். அப்போதும் யாரும் அழவில்லை. ஏனென்றால் அவர் இந்தியவம் சாவளியை சேர்ந்தவர் என்பதால் ஆகும் தற்போது எனக்கும் நடந்துள்ளது. மௌனமாகப் விடுதலைப் புலிகளிடம் எனக்காக வேண்டிய ஒருசிலரை தவிர்த்து யாரும் அழவில்லை.

இன்று ரவீந்திரநாத்திற்கு நடந்தது மட்டும் ஏன் Committee on public enterprices இல் இருந்து எல்லா ஊடகங்கள் மூலமாகவும் பரவலாக அறியப்படுகின்றது. ஏன் இந்த பாரபட்சம்?

அவருக்கு நடந்ததெல்லாம் அநியாயம் தான். இச் செயற்பாடுகள் தயவு தாட்சன்யம் இன்று கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் மறுகருத்து இருக்கமுடியாது. ஆனால் சைவ யாழ்பாணத்தார்மட்டும்தான் தமிழரா? இது தமிழ் துரோகம் ஆகாதோ? மாணவர்கள் தமிழர்களுக்கு செய்யக்கூடிய உதவி படித்து அறிவார்ந்தமனிதராவது. அதற்கு தடையாக உள்ள எந்த இடையூறும் நிறுத்தப்பட வேண்டும். அவர்களது படிப்பை நிறுத்தி ஆயுதப்பயிற்சிக்கு வன்னிக்கு வரச்சொல்வதையும், வராதோரை துரோகி என முத்திரை குத்துவதையும் நிறுத்த வேண்டும். இலங்கைகயில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கு தடையாக விளங்கும் இவ் நடவடிக்கைகளை ஆதரித்து கைதட்டி வரவேற்றுக் கொண்டு வெளிநாட்டில் தம்பிள்ளைகளை ஹாவேட், பிரின்ஸ்டன், டொரன்டோ ஆகிய பல்கலைகழகங்களுக்கு அனுப்பப் முயற்சிப்போரின் வேஷம் கலைக்கப்பட வேண்டும்.

பிரபாகரன் - கருணா மோதலுடன் மட்டக்களப்பு மாவட்ட பல்கலைக்கழக அனுமதிப் புள்ளிகள் வீழ்ந்துள்ளன. அதாவது அதே தொகை மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு அனுப்புவதற்கான அனுமதி வரம்புப்புள்ளி குறைக்கப்பட வேண்டியிருக்கிறது. மேலும் தமிழர் மத்தியில் உண்மையாகவே சமத்துவம் இருப்பதாயின், ஏன் யாழ்.மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்ட பிராந்திய வரையறை எடுத்துக் கொடுக்கப்பட்ட போது, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எடுத்துக் கொடுக்கப்படவில்லை? மேலும், பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக வளாகங்கள் அளிக்கப்பட்டன, அவற்றை எதிர்காலத்தில் தனிப் பல்கலைகழகங்களாக்கும் நோக்கத்துடனேயே இவ்வாறு மேலதிக வளாகங்கள் கொடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில், யாழ்பல்கலைக் கழகத்துக்கு வவுனியா வளாகமும், கிழக்கு பல்கலைகழகத்துக்கு திருகோணமலை வளாகமும் வளங்கப்பட்டது.ஆனால் இத்திட்டத்தின் கீழ் ரஜரட்ட, சபரகமுவ, வயம்பா போன்றவையே வளாகங்களாய் இருந்து பல்கலைக்கழகங்களாய் தரமுயர்ந்திருக்கின்றன. ஆனால், வவுனியாவும், திருகோணமலையும் இன்னும் வளாகங்களாகவே பின்நிற்கின்றன. யாழ்பாண மேலாதிக்க தமிழ்தேசியவாதிகள் இதற்கு இலங்கை அரசில் பழியை போடுவர். அது ஒரளவுக்கு உண்மையும் கூட. ஆனால் வவுனியா வளாக மாணவர்கள் தமக்கு யாழ். பல்கலைகழகம் நிதி ஒதுக்காதமைக்கு கொந்தளித்தனர். இதன் தொடர்சியாக, வவுனியா வாளாகத்துக்கு நிதி ஒதுக்குமாறு பாராளுமன்றத்தின் Committee on public enterprice யாழ்.பல்கலைக்கழகத்துக்கு கட்டளைகளிட்டும் அது நடக்கவில்லை. இதனால் ஆணைக்குழுவினராகிய நாம் நிதியை தனித்தனியா யாழ்.பல்கலைகழகத்துக்கும் வவுனியா வளாகத்திற்கும் ஒதுக்க நேரிட்டது வவுனியா வளாகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று தெரிவித்தனர். நான் இப்பிரச்சனையை பல்கலைகழகமானியங்கள் ஆணைக்குழவில் எழுப்பிஆசிரியர்களை நியமிப்பதற்கான சம்பள நிதியை ஒதுக்கப்பண்ணினேன். நான் செய்த அந்த நல்ல காரியத்தை, எனக்கு வேலைஎடுப்பதற்காக செய்த திட்டம் என்றனர் யாழ்.பல்கலைகழகத்தில் உள்ள சிலஅறிவுஜீவிகள்.

அமெரிக்காவில் நிரந்தரபேராசிரியர் பதவியில் இருந்த, நான் அதனை துச்சம் எனக் கருதி விட்டு விட்டு எமது மக்களுக்காக சேவை செய்ய வந்தவன் என்பதை தெரிந்திருந்தபோதும், சில்லறைதனமான செயற்பட்டனர் அந்த அறிவுஜீவிகள். பின்பும், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், வவுனியாவிலே 4 வெற்றிடங்களுக்கு 4 சித்தியுள்ளவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் வாளாகபீடாதிபதியும், துறைத் தலைவரும் யாழ்.பல்கலைகழக தெரிவுக்குழவை கெஞ்சிக்கேட்டும் இருவருக்கே வேலை கொடுக்கப்பட்டது. இதே தெற்கில் என்றால் நான்கு வெற்றிடங்களையும், நிரப்பி, இன்னும் ஆசிரியர்கள் வேண்டுமென்று பல்கலைகழகமானியங்கள் ஆணைக்குழவிடம் சொல்லி; மேலும் எடுத்திருப்பார்கள். ஆனால் நாம் இப் பதவி வெற்றிடங்களை நிரப்பாத நிலையில், மேலதிக ஆசிரியர்களுக்கான அனுமதியை கேட்டால், முதலில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பிய பின்னர் அது பற்றிப்பேசுவோம் என்றே கூறுவார்கள். நாம்
அதை குறை சொல்ல முடியாது. நாம் காலம் காலமாக திறமையான விண்ணப்பதாரிகள் வரக்காத்திருப்போம் போலும்! ஒருதகுதியான விண்ணப்பதாரி இருக்கும்போது வெற்றிடத்தை நிரப்பாதது சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது. வவுனியா வளாகத்தை பல்கலைக் கழகமாக்குவதற்கு அவ் வளாக மாணவர்களும், அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவநாதன கிஷோர், சதாசிவம் கனகரட்ணம், வினோ சுப்பிரமணியம் நோகாதரலிங்கம் ஆகியோர் என்னுடன் சேர்ந்து செயற்பட முற்பட்டனர். நான்
பிரதேச வாதத்தை கிளப்புகின்றேன் என்றனர் சிலர். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ் முயற்சியை கைவிடச்சொல்லி கட்டளையிட்டப்பட்டனர். 2005ம் ஆண்டு மார்கழி; குழப்பத்துடன் இதைநிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற வலுவும் இல்லாமல் போயிற்று.

• நீங்கள் பல்கலைக்கழக மானியக்குழுவில் அங்கம் வகித்தபோது, தமிழ்பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பினைக் கூறமுடியுமா?

நான் ஆணைக்குழவில் சேர்ந்த ஆரம்பத்தில், யாழ்பாண பல்கலைகழகத்துக்குவருடத்துக்கு சுமார் ரூ.45,00 ஒரு மாணவனுக்கு என்னும் விகிதத்தில் வருடம் என்ற வகையிலேயே பணம் ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் தெற்கு பல்கலைகழகங்களுக்கு சுமார் ரூ80,000 ஒரு மாணவனுக்கு வருடம் ஒதுக்கப்பட்டது. இதைபல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழவில் நான் சுட்டிக்காட்டிய போது, ஏனையோர் இது பிழையானது என்று ஏற்று யாழ்.பல்கலைகழகத்துக்கு ரூ90,000 என்ற அடிப்படையில் மாணவன் ஒருவருக்கு வருடம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மருத்துவபீடமும்,வவுனியா தொழில் நுட்ப பீடம் ஆகியவை நான் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழவில் பதவியில் இருந்த காலத்தில் என் முயற்சியினாலேயே ஸ்தாபிக்கப்பட்டன.இவற்றின் வளர்ச்சி தொடரும் யுத்தத்தால் பின்தங்குகின்றன. திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சம்மந்தருடன் சேர்ந்து திருகோணமலை வளாகத்தை கோணேசபுரியில் பெரியதாய் கட்ட நிதி ஒதுக்கி வேலையும் தொடங்கினோம். இதுவும் தொடரும் யுத்தத்தினால் இன்னும் சரியாக விஸ்தரிக்கப்படவில்லை. 2005ல் பல்கலைகழக அனுமதி வழங்கப்பட்ட பின் ஒருபரீட்சை திணைக்கழக இயந்திரப் பிழையால் விளைவுகள் மாறின. இதனால் இருக்கும் இடத்தை விட பலரை மருத்துவ,பொறியில் பீடங்களுக்கு அனுமதி கொடு
க்க வேண்டியிருந்தது. நான் யாழ். பல்கலைகழக துணைவேந்தராகிய நிலையில், இச் சந்தர்பத்தை பயன்படுத்தி, எனது கடைசிஆணைக்குழு கூட்டத்தில், யாழ்பாணத்துக்குப் பொறியியல் பீடத்தை அளிக்குமாறும், மருத்துவபீட வெற்றிடங்களை நிரப்புமாறும் என் சொந்த வேண்டுகோளாக கேட்டேன். இது அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் வந்த குளப்பங்களால் அந்த நிதி இன்று றுகுணை, ரஜரட்ட பல்கலைகழகங்களுக்கு சென்றுள்ளது.

நாமே எமது அழிவு. வேறும் பலதும் சொல்லலாம்.எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.

• இறுதியாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தினருக்கு நீங்கள் என்ன சொல்ல விருப்புகிறீர்கள்?

அங்குள்ள தமிழரை வாழவிடுங்கள்.உங்கள் தேவைகளும் அவர்களுடையதேவைகளும் பல விதங்களில் முரண்பட்டவை. 1948 இல் இலங்கைத் தமிழராகிய நாம் 11வீதமாகவும் மலையகத் தமிழர் 11வீதமாகவும் முஸ்லிம்கள் 7வீதமாகவும் இருந்தனர் இன்று இலங்கைத் தமிழர்கள் 4வீதமென பாடப்புத்தகங்கள் சொல்கின்றன. கிழக்கில் நாம் பலனற்றுப் போனோம். முஸ்லிம்களை (இன்று சுமார் 90 வீதம்)பகைத்து விட்டோம். மலையகத் தமிழர்(சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின் 7 வீதமாக்கப்பட்டுவிட்டார்கள்) எம்மை ஒருபோதும் நம்பமாட்டார்கள். எமதுசமூகத் தற்கொலையை நிறுத்தவேண்டும். யாழ்பாண மேட்டுக்குடி மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் இல ங்கையில் எமக்கு வருங்காலம் இல்லை.ஆனால் லண்டன், ஒஸ்லோ, பாரீஸ், நியூயோர்க் டொரொன்டோவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழராகிய உங்களுக்கு இதனால் என்ன ?பாஸிஸப் புலிகளே பதிலென்ன அதன் அடிவருடிகளே தாயகத் தமிழர்களை வாழவிடுங்கள்

20070124_1234_colour.png

Source: Vaikarai

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité