Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
30 décembre 2006

...???

exil

  லங்கை எங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குகிறது. ஏறக்குறைய கிழக்கு மாகாணத்தில் சனத்தொகைப் பரம்பலில் மூன்றில் ஒரு பகுதியை முஸ்லிம் மக்கள் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் பரஸ்பர கொடுக்கல் வாங்கல்களுடனும் அடுத்தடுத்த கிராமிய சூழல்களுடனும் நெருக்கமானதொரு பிணைப்பை கிழக்கில் கொண்டிருப்பது இலங்கையில் வேறு எங்கும் தரிசிக்க முடியாத ஒரு அற்புத பாரம்பரியமாகும்.

  இந்தப் பிணைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது வடக்கிலிருந்து உருவாகி கிழக்கில் காலூன்றிய தமிழ்த்தேசியவாத இயக்கங்களேயாகும். ஆயிரமாண்டு கால கிழக்கினது இந்த தமிழ்-முஸ்லிம் உறவு ஒரு துளி இரத்தத்தினாலேனும் கறைபடியாத புனித பக்கங்களால் நிறைக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் தமிழ் மேலாதிக்க மனநிலையுடன் செயற்பட்டதனால் தமிழ்- முஸ்லிம் நல்லுறவு சீர்குலைக்கப்பட்டது. மறக்க முடியாத படுகொலை சம்பவங்கள் காத்தான்குடி, ஏறாவூர், வீரமுனை, அழிஞ்சப்பொத்தானை...என்று தொடர்ந்தது. கிழக்கு மாகாண மக்கள் தமது வாழ்வியலை தத்தமது இனங்களுக்குள் குறுக்கிக்கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் காரணமாக இரு இனங்களும் ஒன்றின் மீது மற்றொன்று அவநம்பிக்கையும், விரக்தியும் கொண்டு வாழுகின்ற இளைய பரம்பரை ஒன்று கிழக்கில் உருவாகியது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக 2004 மார்ச்சில் ஏற்பட்ட கிழக்குப்பிரிவானது தமிழ்த்தேசியவாத போக்கை விடுத்து கிழக்கு மாகாண இனங்களிடையே புதியதொரு சிந்தனைக்கு வித்திட்டது. தமிழ்த் தேசியவாத இயக்கங்களினால், குறிப்பாக புலிகளினால் கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட இனங்களிற் கிடையிலான இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டிய பாரிய பொறுப்பு கடந்த சில ஆண்டுகளாக கிழக்கில் உருவாகி வருகின்ற முற்போக்கு சக்திகளால் உணரப்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிளவுபட்ட அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கமானது தமிழ்-முஸ்லிம் என்ற அடையாளங்களினூடு அரசியலில் ஈடுபடுவதை நிராகரித்து கிழக்கு மாகாண மத்தியில் ஒரு இன ஒற்றுமைக்கு அடித்தளமிட்டு செயற்பட்டு வருகிறது. அதேவேளை 2004இற்குப் பின் உருவாகிய கருணா தலைமையிலான ரி.எம். வி.பி யும் தாம் இழந்துவிட்ட உன்னத கிழக்கை மீட்டெடுத்து இன நல்லுறவை மீண்டும் நிலை நாட்ட பல அற்பணிப்புகளுடன் களமிறங்கியுள்ளது.

  தேசிய காங்கிரஸ் அதன் ஸ்தாபகரான அதவுல்லாவின் கோட்டையான அக்கரப்பற்று பிரதேசத்தையும் தாண்டி, காத்தான்குடி, ஏறாவூர் போன்ற முஸ்லிம்கள் அதிகமா வாழும் இடங்களிலும் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு அங்கும் சில உறுப்பினர்களை வென்றுள்ளது. அதேவேளை அக்கரைப்பற்று பிரதேச சபைத் தலைவராக தேசியகாங்கிரசின் சார்பில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கரைப்பற்றில் முஸ்லிம்- தமிழர் உறவு வளர்ந்து வருவதற்கான முக்கிய அறிகுறியாகும். இந்த மாற்றங்கள் வெற்று இன வெறியினூடாக மட்டுமே வயிறுவளர்க்கும் வன்னிப் புலிகளுக்கு ஏற்படுத்திவரும் இழப்புகள் அரசியல் ரீதியில் அதிகமானதாகும். இதன் காரணமே 2005 நவம்பர் 18இல் அக்கரைப்பற்று பள்ளிவாசல் மீது புலிகள் நடாத்திய தாக்குதல் ஆகும். ஆனால் புலிகள் எதிர்பார்த்தபடி அங்கு ஒரு கலவரத்தினை ஏற்படுத்த முடியவில்லை. யாழ்மேலாதிக்க புலிகளின் சதி அக்கரைப்பற்றில் தோல்வி கண்டது.

  இதே போன்றுதான் கடந்த மாதம் முதல் வாகரையிலிருந்து வெளியேறும் அகதிகளின் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டதினை அடிப்படையாக வைத்து வன்னிப் புலிகள் ஒரு சதி முயற்சியை கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்கள்.அதாவது வாகரையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து சேரும் அகதிகள் 70 000 த்தை தாண்டிய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பலதரப்பட்ட கிராமங்களிலும் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தற்காலிக ஏற்பாடுகளில் ஒன்றாக காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசங்களை ஒட்டிய ‘ஹர்;பலா’ கிராமத்திலும் இந்த தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டன. கடந்த இருபது வருட காலமாக தத்தமது கிராமங்களில் மட்டும் முடக்கப்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தமக்குரியதாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற கிராமங்களில் வெளியார் யாரும் குடியேறுவதை அனுமதிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. அந்தவகையில் ஹர்பலா கிராமத்தில் வாகரை தமிழ் அகதிகளைக் குடியேற்றுவது பற்றி ஹர்பலா மற்றும் காத்தான்குடி வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கொரு முறுகல்நிலை ஏற்பட்டு இறுதியில் 11-01-2007 அன்று மட்டக்களப்பு அரச அதிபர் முன்நிலையில் இவ்விவகாரம் பற்றி அலசப்பட்டு பதட்டநிலை தணிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது ரி.எம்.வி.பி. இன் மீனகம் செயலகப் பொறுப்பாளர்களும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஹிஸ்புல்லா அவர்களும் காத்தான்குடி பள்ளிவாசல் தலைவர்களும் மட்டக்களப்பு கச்சேரியில் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய செய்திகளை லண்டன் பி.பி.சி. தமிழோசையும் பதிவுசெய்திருந்தது.

  இந்நிலையில்தான் கிழக்கில் அரசியல் ரீதியில் மட்டும் அல்ல இராணுவரீதியில் பலம் இழந்துவரும் வன்னிப்புலிகள் நிலமைகளை தமக்கு சாதகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழ்-முஸ்லிம் இருதரப்பிலும் ஏற்பட்ட இந்த முறுகல் நிலைகளை பிளவுகளாக்கி ஒரு கலவரத்தினை நோக்கித் தள்ளுவது அவர்களின் நோக்கமாகும். அதனூடாக கிழக்கு தமிழ் மக்களிடையே தாம் இழந்துபோன ஆதரவுத்ததளத்தை மீளப்பெற்றுக்கொள்வதே புலிகளது உள்நோக்கமாகும். இதற்காக தமிழ் முஸ்லிம் இருதரப்பிலும் இருக்கக்கூடிய தீவிரவாத எண்ணமும் இனக்குரோதமும் கொண்ட இளைஞர்களை தமது சதி வலைக்குள் வீழ்த்தியுள்ளனர். தாம் எதிர்பார்த்தபடி இனக்கலவரம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் கடந்த சில வருடங்களாக கிழக்கில் உதயமாகிவருகின்ற பிரதேச ரீதியான விளிப்புணர்வுகளை மீண்டும் சிதைத்து தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தை இல்லாதொழிக்கமுடியும். ஏனெனில் ரி.எம்.வி.பி.யின் வருகையின் பின்னர் முஸ்லிம்கள் இடத்தில்கூட ஒருவித பாதுகாப்புணர்வு மேலோங்கி இருந்தது. கடந்த காலங்களைப் போல வன்னிப்புலிகளால் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை கிழக்கில் இனி நிகழ்த்த முடியாது எனும் நம்பிக்கை மட்டக்களப்பு அம்பாறை முஸ்லிம்களிடையே வளரத்தொடங்கியது. அந்தவகையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒருவித உள்ளார்ந்த ஆதரவுடனான பார்வை ரி.எம்.வி.பி.யை நோக்கி எழுவது இயல்பே. இத்தகைய நிலைமைகளின் வளர்ச்சியை வன்னிப்புலிகள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அது வன்னிப்புலிகளைப் பொறுத்தவரையில் மீளமுடியாத ஒரு தோல்விக்கு அவர்களை இட்டுச்செல்லும். எனவே மக்களை வென்றெடுக்க தமது வங்குறோத்து அரசியில் இருந்து சிறியதொரு துரும்பையும்கூட புலிகளால் கண்டடைய முடியவில்லை. இந்நிலையில்தான் மக்கள் விரோத வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து கலவரங்களை ஏற்படுத்தி பிளவுகளில் பிழைப்பு நடத்த புலிகள் முனைகிறார்கள்.

'ஹர்பலா' கிராம சர்ச்சையை புலிகள் இவ்விதமாகத்தான் பயன்படுத்த முனைந்தனர். முஸ்லிம்கள் மீது ரி.எம்.வி.பி.யின் பேரிலும் தமிழ் பகுதிகள் மீது முஸ்லிம்களின் பெயரிலும் மேற்கொள்ளப்பட்ட சில அசம்பாவிதங்களுக்கு பின்னால் வன்னிப்புலிகளின் கரமே இருந்துள்ளது. ஆனாலும் நிலைமையை ஒரு கலவர சூழலாக மாற்றிவிட முடியாமல் புலிகள் தோல்வி கண்டுள்ளார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல் பிரதிநிதிகளும் ஊர்ப்பெரியவர்களும் இணைந்து மேற்கொண்ட அயராத முயற்சிகளினால் முஸ்லிம்கள் பொறுமை காக்கும் வண்ணம் வழிநடத்தப்பட்டனர். அதேபோன்ற ஆரையம்பதி தமிழ் கிராமவாசிகளிடையே ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை ரி.எம்.வி.பி. யின் அரசியல் pரிவினர் மிகக் கவனமாக கையாண்டிருக்கின்றனர். இருதரப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற தொடர்ச்சியான உரையாடல்கள் வன்னிப்புலிகளின் பாரிய சதிமுயற்சி ஒன்றை கிழக்கில் தோற்கடித்திருக்pன்றது. இன்று தோன்றியுள்ள அமைதியானது தற்காலிகமானதே யாழ்மேலாதிக்க சக்திகள் தொடர்ந்தும் வன்னிப்புலிகள் வடிவில் மட்டும் அல்ல வேறுபல வடிவவங்கிலும் கிழக்கு மாகாணத்தின் ஐக்கியத்தை சீர்குலைக்க தொடர்ச்சியான சதிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும் ஆகவேதான் கிழக்குவாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் மென்மேலும் ஐக்கியப்படுவதன் ஊடாக மட்டும் அல்ல விழிப்பாக செயற்படுவதன் மூலமுமே கிழக்கை கிழக்காக காப்பாற்ற முடியும்..

16-01-07

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité