Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
3 octobre 2006

'மண்' எனும் திரைப்படம் பற்றிய அறிமுகமும், விமர்சனமும்.

  புதியவனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'மண்' எனும் திரைப்படம் பற்றிய அறிமுகமும், விமர்சனமும்.

  ஆர். புதியவன் 'மண்' எனும் திரைப்படத்திற்கு முன்பாகவே இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவை 'மாற்று' 'கனவுகள் நிஜமானால்' எனும் திரைப்படங்களாகும். ஆர். புதியவனின் திரைப்பட இயக்கத்தின் மீதான ஆர்வமும், முயற்சியும் மிகவும் பாராட்டக்கூடியனவே. அவரது முதற்திரைப்படமான 'மாற்று' புகலிடத்திலுள்ள ஒரு மன நோயாளிக்கு அவரின் உண்மை நிலையை தெரிவிக்காது திருமணம் நிச்சயிக்கப்பட்டு இலங்கையிலிருந்து ஒரு பெண் இறக்குமதி செய்யப்படுகிறாள். திருமணத்தின் பிற்பாடு அவர் குணமடய வாய்ப்புள்ளதாகக் கருதியே பெண்ணிடம் உண்மை நிலை தெரிவிக்கப்படவில்லை என்பதாக அம்மன நோளியின் உறவினர்களின் நியாயமாக கருதப்படுகிறது. அந்த மன நோயாளியுடன் அப்பெண் வாழும் அவல நிலையையும், அதன் விளைவுகளால் அப்பெண்ணின் வாழ்வியல் மாற்றங்கள் பற்றிய காட்சிகளை நகர்த்துவதாக அப்படத்தை இயக்கியுள்ளார்.;. இரண்டாவதான 'கனவுகள் நிஜமானால்' எனும் திரைப்படத்தின் மையக் கருவானது புகலிட பெற்றோர்களின் அற்பத்தனமான சமூக அபிலாசைகளுக்காக தமது பிள்ளைகளை நிற்பந்திப்பதும், அதன் விளைவுகளால் வெளிநாடுகளில் பிறக்கும் பிள்ளைகளின் மனப் பிறழ்வுகளையும் சித்தரிக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டது.

   புதியவனின் கதைத்தேர்வுகளானது எமது சமூகத்தின் பண்பாட்டுக் கலாச்சாரம் எனும் பெயரில் நடைபெறும்  மானிடக் கொடூரங்கள் எனக் கொள்ளலாம். அவரது மூன்றாவது திரைப்படமான 'மண்' எமது 'தூ' சஞ்சிகையின் அரசியலை சார்ந்து  உருவாக்கப்பட்டிருப்பதாலும் எமக்கு அத்திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாயுமுள்ளது. அவரது மூன்று திரைப்படங்களின் முடிவுகளும் நியாயமானதாக அமைந்து விடவில்லை என்பதும் உண்மை .இவரது 'மண்' திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக அவரது முன்னைய இரு திரைப்படங்களைப் பார்ப்பதனூடகவே அவரது முயற்சியையும், ஆர்வத்தையும் அதனூடாக திரைப்பட இயக்கு துறையில் அவரது வளர்ச்சியையும் நாம் காண முடியும்.

  'மண்' திரைப்படத்தின் மூலக்கதையானது இலங்கையிலுள்ள வன்னி மாவட்டத்திலுள்ள கனகராஜன் குளம் எனும் கிராமத்தில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. அக்கிராமத்தில் இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்று கனகராஜன் குளக் கிராமத்திலுள்ள இரண்டு  மேட்டுக்குடிச் சாதி நிலவுடமையாளர்களின் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  அந்த இந்திய வம்சாவளிக் குடும்பமானது  உயர் சாதித் தோட்ட உடமையாளர்களால் இழிவு படுத்தப்படுவதும்  ( வடக்கத்தையான்)  அதன் நிமித்தம் அக்குடும்பம் படும் துயரங்களாகவும் அமைந்துள்ளது. எமது சமூகத்தின் மேட்டுக்குடிச் சாதி மன நிலையை  அம்பலப்படுத்துவதில் புதியவனின் முயற்சியில் பெரும்பகுதிக் காட்சிகள் மிகத் தத்துரூபமாகவும், ஜதார்த்தமாகவும் அமைந்திருக்கிறது. ஆனால் இப்படத்தின் கிளைமாக்சை சிருஸ்டித்த விதமானது!!! நாம் எமது தூ... சஞசிகையின் அறிமுகத்தில் சுட்டிக் காட்டியதுபோல் ( ...பாசிசத்தின் ஆணிவேர் ஆழ ஓடி எல்லோர் மனங்களையும் சிதைக்கும்..) புதியவனின் மன ஆழத்திலும் பாசிசம் வேர் கொண்டுள்ளதென்பதை 'மண்' திரைப்படத்தின் முடிவின் மூலமாக எமக்கு நரூபித்து நிக்கிறார்.

  கிளைமாக்ஸ் சுருக்கம்.  இந்திய வம்சாவளிக் குடும்பத்தின் மகளும் உயர் சாதித் தோட்ட உரிமையாளரின் மகனும் கல்லூரியில் ஒன்றாகவே படித்து வருகிறார்கள். அவர்களுக்குள் காதல் அரும்பி, உடல் உறவிலும் கலந்து விடுகிறார்கள். விளைவு பெண் தாய்மையடைகிறாள்.  தோட்ட உரிமையாளரிடம்  பெண்ணின் தகப்பன் நியாயம் வேண்டி நிற்க... உயர் சாதித்திமிருக்கே உரித்தான திமிரில் அப்பெண்ணின் தகப்பன்  நியாயம் கிடைக்காது விரட்டப்படுகிறார். பொலிஸ் தலையிடும் சூழல் நிகளும்போது தோட்ட உரிமையாளர் மகனை வெளி நாடு அனுப்பிவிடுகிறார். 18 வருடங்கள் கழித்து லண்டனிலிருந்து  தோட்ட உரிமையாளரின் மகன் தனது கிராமத்திற்கு வருகிறார்.  யுத்த நிகழ்வை பதிவு செய்வதற்காக மட்டுமே அவர் கிராமத்திற்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் மூலமாக  தாய்மையடைந்த பெண்ணின் மகன் தனது தாய்க்கு செய்த துரோகத்திற்காக அடித்துக் காயப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து சுட்டுக் கொன்றும் விடுகிறார். அத்துடன் திரையரங்கம் இருள் கவிய  ''உங்களை கும்பிடுவதற்காக உயர்ந்த கரங்களில் துப்பாக்கி ஏந்த நிர்ப்பந்திக்கிறீர்க்ள்'' எனும் வாசகம் திரையில் பொறிக்கப்படுகிறது. எமது  சமூகப் புற நிலைகளில் நிகழும் சம்பவங்களில் மட்டும் தனது மனதை நெகிழ்த்தியவராகவே புதியவனை நாம் அடையாளம் காண்கிறோம். எமது சமூகத்தின் அகம் சார்ந்த உளவியலை கேள்விக்குட்படுத்தாததன் விளைவும், எமது ஆயுதக் கலாச்சாரப் பின்னணியின் விளைவும் சேர்ந்தே இப்படியொரு தீர்வை முன்வைக்க புதியவனை நிர்ப்பந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.

   ஒரு அப்பாவி இளைஞன் ஏன் கொலை செய்யப்பட்டான்?  நாம் இங்கு அப்பாவி எனக் சுட்டுவது அவனது வாலிப, விடலைப்பருவத்தை மட்டுமே. அவன் பெரியவனானதன் பிற்பாடோ, குடும்பஸ்தன் ஆனதன் பிற்பாடோ அவன் கொண்ட மன நிலையைக் குறித்தல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். இந்திய வம்சாவளிக் குடும்பத்தின் மகளும், உயர் சாதித் தோட்ட உரிமையாளரின் மகனுக்கும் இடையில் ஏற்படும் காதலில் தோடட்ட உரிமையாளரின் மகன் ஏமாற்றும் நோக்கத்துடன் அப்பெண்ணை திட்டமிட்டுக் காதலிப்பதாகவோ அப்பெண்ணை உடல் உறவுக்காக மட்டுமே காதலிப்பதாக திட்டமிடுவதாகவோ எங்கும் காட்சிப்படுத்தப்படவில்லை. போதாதற்கு அவனது காதலின் நம்பகத்தன்மைக்காக தனது நண்பன்  தனது காதலியை குறைகூறியபோது கைகலப்பில் ஈடுபட்டுள்ளான். மேலும் ஒரு பாத்திரம் தனது காதலியை காதலிப்பதைக் கண்டு அவனுடனும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளான். இவைகளினூடாகப் பார்க்கும்போது. அந்த  இளைஞனுக்கு தனது குடும்ப சாதியப் பின்புலத்தில் சிந்திக்கும் மன நிலைக்குரிய வயதும்  போதாமையாகவே இருக்கும். மானுட விடலைப் பருவ உந்துதல்களின் இயல்பிற்குள்ளானவர்கள்தான் அப்பெண்ணும், அந்த 'அப்பாவி" இளைஞனும்.  இயல்பான உடல் மொழிகளுக்கு (உடல் உறவு) இரையாகிறார்கள் இதில் அவன் மட்டுமென்ன இருவருமே குற்றமற்றவர்கள். இதற்கு ஏன் அந்த  இளைஞன் கொலை செய்யப்பட வேண்டும்?  உயிரியல் வேற்றுமை காரணமாக பெண்ணுக்கு குழந்தை உருவாகி விடுகிறது. சமூகக் காரணமாக பெண்தான் அவமானப்பட வேண்டி வருகிறது. உயர் சாதித் திமிர் காரணமாகவே மகனின் செயலால் குடம்பம் இழிவுபடுத்தப்படும் எனக் கருதப்படுகிறது. இதற்குள் அந்த 'அப்பாவி' ஏன் கொலை செய்யப்பட வேண்டும்.

  இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் புதியவன் அந்த  இளைஞனை கொலை செய்வதற்காக ஒரு காட்சியைக் கட்டமைத்துமுள்ளார். தனது மகனை வெளிநாடு அனுப்புவதற்காக உயர்சாதி தோட்ட உரிமையாளர் தனது உறவினரொருவடன் பஸ்ஸில் அழைத்துச் செல்லும்போது. தகப்பனும், உறவினரும் அருகில் இருக்க அந்த 'அப்பாவி' இளைஞன் கொச்சைத்தனமாக வாய்விட்டு உரக்கப் பேசுகிறார் அப்பெண்ணை தான் ஏமாற்றி விட்டேன் என்பதாக.. அக்காட்சி யதார்த்தமற்றதும், அந்த 'அப்பாவி' இளைஞனுக்கு அவனது மனவுணர்வுகளுக்கு மாறான கருத்துக்களை, அவனை கொலை செய்வதற்குரிய காரணியாக  புதியவன் அப்பாத்திரத்திற்குள் திணித்துள்ளார்.

ஒரு படைப்பாக்கத்தின் மூலமாக நாம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என உந்துவதை விட எது நியாயமானது என சிந்திக்க முனையவேண்டும். இதற்கு நமது அரசியல், நமது மதம், நமது பண்பாடு, நமது ஒழுக்க நெறிகள், நமது மரபு வழிப்பட்ட நடைமுறைகள் ஆகிய அனைத்தையும்  திறனாய்வு முறையினூடாக மேற்கொள்ள வேண்டும் அதன் அவசியத்தை புதியவன் நிராகரித்துள்ளார்.  அப்பாத்திரத்தை புதியவன் கொலை செய்த பாணியில் எந்த வித்தியாசமும் இல்லை!! புலிப்பாணியிலிருந்து. ஆனால் ஒரு குறை சமூகத் துரோகி, தேசத் துரோகி என பட்டியல் ஒன்று கழுத்தில் தொங்க விடப்படவில்லை.

  கொலை செய்வதாகவே முடிவு அமைந்;திருந்தாலும் இறுதி வாக்கியங்கள் திரையில் பொறிக்கப் படாதிருப்பின், நாம் 'மண்' திரைப்படத்தை நியாயப்படுத்த இலகுவாகவே ஒரு வழி திறந்திருந்தது.. இன்றைய எமது சமூகத்தின் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் துப்பாக்கி மூலமாக வைக்கப்படும் சூழலில் வளரும் புதிய தலைமுறைகள்  இவ்வாறுதான் பிரச்சனைகளை அணுகுவார்கள். எமது சாதியச் சமூக விடுதலைக்கு துப்பாக்கி தீர்வாக முடியாது. முடியில் நாம் கை வைக்க வேண்டும்.. ஆம்!! மதம்!! இந்து மதம் இங்கிருந்தே சாதி விடுதலையை தொடங்கவேண்டும். துப்பாக்கியிலிருந்து அல்ல என்பதாக நாம் 'மண்' தரைப்படத்தை தோளில் காவித் திரிந்திருப்போம்.
புதியவனின் திறமையையும், முயற்சியையும் பாராட்டுவதோடு. அவர் முன்வைத்த தீர்விற்காக  காறித் தூ... என்கிறோம்.

எம்மிடையேயுள்ள ஆய்வுச் சாதனம் பகுத்தறிவே
மண் திரைப்படத்தைப் பார்த்த தூ..சஞ்சிகை ஆலோசகர்கள்
· தேவதாசன்
· அருந்ததி
· அசுரா
· விஜி (எக்ஸில்)
· சுந்தரலிங்கம்

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité