ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?
ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? எனும் தலைப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் அவர்கள் 2002 ஆம் அண்டில் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். ரவிக்குமார் அவர்கள் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர். அவரையும், அவரது எழுத்துக்களையும் ‘நிறப்பிரிகை’ எனும் சஞ்சிகையினூடாகவே என்னைப்போல் இலங்கை வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர் எனக் கருதலாம். ரவிக்குமார் அவர்கள் தற்போது ’காலச்சுவட்டு’ முகாமுக்குள்ளும், ‘விடுதலைச்சிறுத்தைக்’ கூட்டுக்குள்ளும் அடைபட்டு தனது தனித்துவத்தை இழந்த நிலையில் செயல்படும் ஒருவராக தோற்றமளிப்பதையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
அவரது தனித்துவமிழந்த செயலுக்கான ஓர் உதாரணத்தை மட்டும் இங்கே கூறலாம். ‘2007 இல் ஓர் அலசல், நீயா...நானா’ எனும் தலைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று பார்க்கக நேர்ந்தது. அந்நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், திரப்பட இயக்குனர்கள் பங்குகொண்டிருந்தார்கள். அதில் எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகளின் சட்ட மன்ற உறுப்பினருமான ரவிக்குமார் அவர்களும், எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களும் கலந்து கொண்டார்கள். ஒரு சம்பவத்தில் உங்களுக்குப் பிடித்ததும்,பிடிக்காததுமான திரப்படங்கள் எவை என நிகழ்ச்சித் தொகுப்பாளரால் கேட்கப்பட்டது. அதற்கு சாருநிவேதிதா தனக்குப் பிடித்த திரைப்படம் பரித்திவீரன், பிடிக்காத படம் சிவாஜி எனக் கூறினார். இதே கேள்வியை ரவிக்குமார் அவர்களிடம் கேட்கப்பட்டபோது. தனக்குப்பிடித்த படம் சிவாஜி என்றும் பிடிக்காத திரைப்படம் பரித்திவீரன் எனவும் பதிலளித்தார். இவரது பதில் தனித்துவமானதாக இருந்ததா அல்லது சாருநிவேதிதாவுக்கு எதிராக பதிலளித்துள்ளாரா என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் புரிந்து கொள்ளலாம். சாருநிவேதிதா ‘காலச்சுவட்டை’ப் பார்த்து சீறுபவர். அதுதான் ரவிக்குமார் சாருநிவேதிதாவைப் புரட்டியிருக்கிறார். திரைப்படம் சம்பந்தமாக நியாயமான அபிப்பிராயத்தை ரவிக்குமார் வழங்கவில்லை எனத் தோன்றுகிறது.
மேற்குறிப்பிட்ட தலைப்பில் 2002 இல் ரவிக்குமார் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட கேள்விகளானது இன்று முன்வைக்கப்படும் இலங்கைத் தமிழருக்குரிய அரசியல் உரிமைகளுக்கான இடைக்காலத் தீர்வு எனும் அம்சத்துக்குள்ளும் கேட்கப்பட வேண்டிய கேள்விகளாகவே தேங்கிக்கிடக்கிறது. அந்தவகையில் ரவிக்குமார் அவர்கள் எழுதிய கட்டுரையில் பல அம்சங்கள் விரிவாக பேசப்பட்டிருப்பினும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் மக்கள், இந்திய வம்சாவளி மக்கள், பற்றியெல்லாம் அக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் இலங்கைத் தலித் சமூகம் பற்றிய அவரின் பார்வை மட்டும் இங்கு மீள் பிரசுரமாகிறது.
2002 இல் ரவிக்குமார் அவர்கள் எழுதிய கீழ்வரும் கட்டுரையானது இன்றைய அவரது நிலைப்பாட்டிலும் அக்கருத்துக்களில் அவர் உறுதியாக இருப்பாரா என்பது எமக்கு சந்தேகமே. காரணம் அவர் புலிகளின் தீவிர பிரச்சாரக் கட்சியான திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகளின் ‘மதியுரைஞராகவும்’ முகம்காட்டும் சூழலில்….!!!
ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?
(ரவிக்குமார்)
இலங்கையில் அமைதி திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளில் பிரபாகரனின் செய்தியாளர் சந்திப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என பேசப்படுகிறது. ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பினை சன் டி வி முழுமையாக ஒளி பரப்பியது.
செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குள் முஸ்லீம்களது பிரச்சனை குறித்தும், மலையக தமிழர் பிரச்சனை குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகள் முக்கியமானவை. அவற்றுக்குப் பதிலளித்த பிரபாகரன்/பாலசிங்கம் அந்தத் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்காக அழைத்திருப்பதாகவும் அதன் பின்னர் அவை குறித்து முடிவு செய்யப்படுமெனவும் தெரிவித்தனர். அதுபோலவே இப்போது அவர்களோடு உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது.
இரண்டரை மணி நேரம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்ததும் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அங்கு கேட்கப்படாத கேள்வியைக் குறித்தும் சொல்லப்படாத பதிலைக் குறித்தும் நான் கவலை கொண்டேன். ஈழத் தமிhகளில் சுமார் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையைப் பற்றி ஒருத்தரும் கேள்வி எழுப்பவுமில்லை, எனவே பதில் சொல்லப்படவுமில்லை. அதுதான் என் மன உளைச்சலுக்குக் காரணம்.
ஏன் இந்த நிலை? அங்கு தாழ்தப்பட்டோர் பிரச்சனை தீர்ந்து போய்விட்டதா? நிச்சயமாக இல்லை. ஈழத்து எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் தனது கந்தன் கருணை நாடக நு}லின் முன்னுரையில் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளதுபோல (11-12-1999) ‘’துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன, மரித்து விடவில்லை ‘’. அப்படியானால் ஏன் அது பற்றி எவரும் கேள்வி எழுப்பவில்லை.அதற்கான சமூக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடிய தாழ்த்தப்பட்டோர் அரசில் இயக்கம் தற்போது இல்லாததே அதற்கான முக்கியமான காரணமாகும். ஆனால் இலங்கையின் வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு அரசில் இயக்கங்களை உருவாக்கிஆற்றல் மிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தீண்டாமை ஒழிப்புக்காக ஆயுதம் ஏந்திப் போராடியதன் மூலம் தமிழ் நாட்டைக்காட்டிலும் முன்னே நின்றவர்கள் அவர்கள். இப்போதோ அவர்களுக்கென தனி இயக்கம் இல்லாததால், அவர்களது பிரச்சனை அங்கு எழுப்பப்படவில்லை. எனவே இன்று அங்கே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையைப் பற்றிப் பேசி அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய கடமை தமிழ் நாட்டிலுள்ள தலித் இயக்கங்களுக்கும் தலித் சிந்தனையாளர்களுக்கும் உள்ளது.
ஈழத்துச் தமிழ்ச் சமூகம் இன்று தமிழ் நாட்டுக்கு முன்னோடியாகக் காட்டப்படுகிறது.. ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘’சாதனையை‘’ இங்கே இருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் முன்னுதாரணமாகக் காட்டுகின்றனர். அதைவிடவும் வேறுசில ‘’சிறப்புகளும்‘’ ஈழத்துக்கு உண்டு. அந்த சமூகம்தான் ஆறுமுக நாவலரைத் தந்தது. ‘’பறையும், பெண்ணும், பஞ்சமரும் அடிவாங்கப் பிறந்தவை‘’ என்ற அரிய கருத்தைச் சொன்னவர் ஆறுமுகநாவலர். இன்றளவும் அங்கே வேர் கொண்டிருக்கிற சாதி வெறியை நீரூற்றி வளர்த்தவர் அவர்...
….அங்கிருக்கும் பிரச்சைனைக்கு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு எப்படி கேள்வி எழுப்பலாம் என்று யாரேனும் கேட்கலாம் ‘’இந்தியா எங்களது தந்தை நாடு‘’ எனவும் ‘’தமிழர்களோடு எங்களுக்கிருப்பது தொப்புள்கொடி உறவு‘’ எனவும் புலிகள் மீண்டும் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் நினவுபடுத்தும் உறவோ ஆதிக்கத்தின் அடிப்படையிலானது. ஆனால் இலங்கையில்தீண்டாமை என்னும் கொடுமைக்கு ஆளாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களோடு தம்மை இணைப்பதோ பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலான தோழ-மையாகும். பறையும், பெண்ணும், பஞ்சமனும் அடிபடப் பிறந்தவை என்று சாதித் திமிரோடு சொன்ன ஆறுமுகநாவலரைச் சொந்தம் பாராட்ட இங்குள்ள சாதித் தமிழர் முன்வரும்போது அதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கும்போது நாம் படுவதுபோன்ற கொடுமையை எதிர்கொண்டு அல்லல்படும் ஒருத்தனின் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள நமக்கெப்படி உரிமையில்லாமல் போய்விடும்.
அதுமட்டுமல்ல இன்று சிங்கள அரசை சமாதான மேசைக்கு இழுத்து வந்துள்ள தீரமிக்க போராட்டத்தை நடத்தியதில் தாழ்த்தப்பட்டவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். யுத்தம் அவர்களுக்கு ஒரு மதிப்பை, தேவையை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசுக் கட்சியினர் எத்தகைய நிர்ப்பந்தத்தில் அன்று தாழ்த்தப்பட்டோர் பிரச்சனையைப் பேசினார்களோ அதேவிதமான நிர்ப்பந்தத்தினால்தான் இன்று புலிகள் தாழ்த்தப்பட்டோரை இயக்கத்தில் வைத்துள்ளனர். ஆனால் தமிழரசுக் கட்சி எப்படி அவர்களை கைவிட்டதோ அப்படி புலிகளும் தாழ்த்தப்பட்டோரை கைவிடுகிற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.
;இந்த அச்சம் தேவையற்றது என சாதித் தமிழர்களால் சொல்லப்படலாம். ஆனால் இந்தியாவின் வரலாறு இந்த அச்சத்தை நியாயப் படுததுகிறது.
1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது பம்பாய் மற்றும் சென்னையிலிருந்து படைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டிருந்தன பம்பாய் ராணுவம் மகர்களையும், சென்னை ராணுவப் பிரிவு பறையர்களையும் கொண்டிருந்தது. ஆனால் 1890 ல் இந்திய ராணுவத்தில் தீண்டாதார் சேர்வதற்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது.
ஆங்கிலேய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இந்துக்கள் பெருமளவில் ராணுவத்தில் சேரவில்லை அப்போது தீண்டாதாரே பிரிட்டிஷ் ஆட்சிக்கு உற்ற துணையாய் ராணுவத்தில் இருந்துள்ளனர். இந்திய ஆட்சி அதிகாரம்; அரசர்களது கைகளிலிருந்து பிரிட்டிஷார் கைக்கு மாறி, அரசர்கள் செல்வாக்கிழந்தபோது இந்துக்கள் பிரிட்டிஷ் படைகளில் சேர வந்தனர். ஏற்கனவே படைகளில் இருக்கும் தீண்டாதாரை விரட்டினாலன்றி தங்களுக்கு இடம் கிடைக்காது என்பதால் இந்துக்கள் தீண்டாதாரைப் படைகளில் சேர்க்கக் கூடாது என நிர்ப்ந்திக்க ஆரம்பித்தனர். இந்துக்களின் நெருக்குதலுக்குப் பணிந்து பிரிட்டிஷ் அரசும் தடைவித்தது. தங்களுக்கு நெருக்கடியான காலத்தில் கைகொடுத்த தாழ்த்தப்பட்டோருக்கு பிரிட்டிஷ் அரசு துரோகமிழைத்தது.
அதேபோன்றதொரு நிலை இப்போது இலங்கையில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. யுத்தம் ஏற்படுத்திய ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தை சமாதானம் வந்து பறித்துக் கொண்டுவிடக்கூடாது ஏனென்றால் சமாதானம் எட்டப்பட்டு ஒரு இடைக்கால அரசு அமைந்தால் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சாதித் தமிழர்கள் மீண்டும் இலங்கைகை;குத் திரும்புவார்கள் அந்த நாடுகளில் ஊட்டி வளாத்த சாதியுணர்வையும் அவர்கள் தம்மோடு அழைத்து வருவார்கள். மீண்டும் யாழ்ப்பாண சமூகம் ஆறுமுக நாவலரின் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்பட வேண்டிய நிலை வரும் இப்போது உயிர் அச்சத்தால் தீண்டாதாரின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்கும் சாதித் தமிழர்கள் அந்த அச்சம் விலகிவிட்டால் மீண்டும் தம் மண்டைக்குள்ளிலிருந்து சாதிய நசச்சரவுகளை எடுத்து தெருவில் விடுவார்கள். இந்த நிலை ஏற்படாமலிருக்க சில உத்தரவாதங்களைத் தாழ்த்தப்பட்டோர் பெறவேண்டும். தற்போது மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்களோடு என்னவிதமான ஒப்பந்தம் போடப்பட்டதென்கின்ற முழுமையான விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் நீண்ட நெடுங்காலமாகத் தாழ்த்துப்பட்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் இப்போதும் நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. இந்தியாவில் இருப்பதுபோன்ற இட ஒதுக்கீடோ அரசியல் அமைப்புச் சட்டபாதுகாப்போ அல்லது அமெரிக்காவில் உள்ளது போன்ற ஒத்தாசை நடவடிக்கைகளோ ( Affirmative Actions) இலங்கையில் நடைமுறையில் இல்லை. அங்கு இருப்பது எதற்கும் பிரயோசனப்படாத 1957 ஆம் வருடத்திய சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் மட்டும்தான்.
ஆகவே தாழ்த்தப்பட்ட மக்களது பிரச்சனையென்பது முஸ்லிம்களது பிரச்சனைபோல, மலையகத் தமிழர் பிரச்சனை போல தனிக் கவனம் செலுத்தி அணுகப்பட வேண்டிய தனித்துவமான பிரச்சனையாகும்.
‘கடக்க முடியாத நிழல்‘ எனும் ரவிக்குமாரின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒருபகுதி