Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
MENU
thuuuu
Publicité
12 août 2007

‘தீண்டத்தகாதவன்’

theendaththagathavan

   தலித் சமூக வாழ்வியல்  அனுபவங்களைப் பேசுபவைகளாகவும், யாழ் சமூக மேலாதிக்க கருத்தியல்களை அம்பலப்படுத்துபவைகளாகவும் கொண்ட படைப்பிலக்கியத் தொகுப்பாக ’தீண்டத்தகாதவன்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் ஏற்கனவே பலதரப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகளிலிருந்தும் வெளிவந்த 14  தலித் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பு நிச்சாமம் வெளியீட்டினரால்  வெளியிடப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா!! எமக்கு சமத்துவத்தை வழங்கிவட்டார் ‘வே.பி.’ எனும் தமிழ்த் தேசியப் பரணி பாடும் பாட்டுக்காரர்களுக்கே இத் தொகுப்பை காணிக்கை ஆக்கலாம் என இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய  நாம் கருதுகிறோம்.

நிச்சாம வெளியீட்டினரின் உரிமையிலும், அவர்கள் சுதந்திரத்திலும் நாம் தலையிட முடியாது என்ற போதிலும். பேரா.அ.மார்க்ஸ் முன்னுரையுடன் (!!!) எனும் முன்பக்கப் பதிவானது இத்தொகுப்பிலுள்ள படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்குமான கருத்தியல் இடையூறாக நாம் அடையாளம் காண்பதால் எமது தளத்தில் அதை தணிக்கை செய்துள்ளோம். அதற்காக நண்பர் அ.மார்க்ஸிடம் மட்டுமே மன்னிப்பும் கேட்கின்றோம்.

‘தூ’ வாசகர்களுக்கு வாசிப்பின் ஆவலைத்   தூண்டலாம் எனும் நம்பிக்கையில் இத்தொகுப்பில் உள்ள சில படைப்பாளிகளின் ஆக்கங்களின் சுருக்கத்தை கீழே பதிவு செய்கிறோம்.

இத்தொகுப்பில்:

தெணியான்
என்.கே. ரகுநாதன்
கே. டானியல்
எஸ்.பொ
டொமினிக் ஜீவா
யோ. பெனடிக்ற் பாலன்
மா.பாலசிங்கம்
அருந்ததி
தேவா ஹெரோல்ட்
நந்தினி சேவையர்
அ.தேவதாசன் ஆகியோரின் படைப்புக்களே வெளிவந்துள்ளது.

….தன் சாதியில் மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் காலமெல்லாம் பொறுத்திருந்தால் என்ன? தலையா போய்விடும்?.....’’தேநீர் கடையளுக்கை போகவேணும் எண்டினம். கோயிலைத்திறந்து விடுங்கோ எண்டினம். பாரளுமன்றத்தில இடம் வேணுமெண்டினம். இப்ப பார்த்தியளோ எங்கடை வீட்டுக்கை பொம்புளை எடுக்க வந்திட்டாங்கள்.  அப்பவே சொன்னம் எங்கட மூதேசியளும் கேட்டுதுகளோ….. ஒரு நாள் நடுச்சாமம் அந்தச் சாய்மனைச் கட்டிலுக்கு முன்னால் வீட்டு வளவில் மகாலிங்கச் சிவத்தார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு ‘கவரிமான்கள்’ எனும் தலைப்பில் யோ. பெனடிக்ற் பாலனின் சிறுகதை அமைந்துள்ளது.

’….எல்லாம் பொன்னையன் விட்ட இடம். அவன் தன்ரை கடையைத் திறந்துவிடத் தயார் எண்டு பப்பிளிக்காச் சொன்னதாலதானே அவங்கள் துணிஞ்சு நிக்கிறாங்கள்? எங்களுக்குள்ள ஒத்துமை இருந்தால் அல்லோ?’’  சமயம் பார்த்து மயிலர் அள்ளி வைச்சார். ‘’ஓமோம் இப்ப கடையைத் துறந்து விடுவான். பேந்து தன்ரை பெண்டிலின்ரை பணியாரத்தையும் துறந்து காட்டுவான்...தூ! இவன் ஒழுங்கான அப்பனுக்குப் பிறந்தால் இப்படிச் செய்வானே?.....நம் மத்தியிலே வாழும் தமிழர்களிலே ஒரு பகுதியினரை உரிமை அற்றவர்களாகவும், அடிமைகளாகவும் வைத்துக் கொண்டு தமிழ் தேசிய இனத்திற்கான உரிமைகள் என்று முழங்குவது மகாமோசமானது...என்பதாக தலித் மக்களின் நிச்சாமம் தேநீர்கடைப் பிரவேசப் போராட்டத்தையும் அதன்  விளைவால் நிகழ்த்தப்பட்ட சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறைகளையும்  பின்புலமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்ட ‘களம்’ எனும் சிறுகதையை எஸ்.பொ அவர்கள் எழுதியுள்ளார்.

அம்மாள் வேலனின் முதுகில் குத்துவாள்.

சின்னக் கமக்காரன் வேலனின் பிடரியில் அடிப்பான்.

சின்னக் கமக்காரிச்சி வேலனின் செவிகளைப் பிடித்துத் திருகுவாள்…..

...டேய் நீ ஆர்?

ஒருவன் அதட்டினான்.

‘’நான் ...தான்...நான் வேலன்’’ பயந்து போய் வேலன் பதில் சொன்னான்.

‘’டேய், நீ சின்னாச்சிப் பிள்ளையின்ரை மேன்? என்னடா? வேலனால் பதில் கூற முடியவில்லை
‘’கீழ் சாதிப் பயலே கழட்டடா சட்டையை’’ என்று அதட்டிக்கொண்டே ஒருவன் சட்டையைக் கிழித்தான்… என்பதாக கமக்காரர் வீட்டில் அடிமையாக வாழ்ந்த வேலனின் சோகத்தைச் சொல்லும் ‘ஆற்றல் மிகு கரத்தில்’ எனும கே. டானியலின் சிறுகதை.

‘’அதொன்றும் வேண்டாம் மதுவினால் நன்மையோ தீமையோ நமது சாதி கொஞ்சம் முன்னேறி வருகிறது. அது உங்களுக்கு பிடிக்கவில்லை ஆனபடியாற்தான் மது விலக்கு வேண்டுமென்கிறீர்கள். நீங்கள் ஒழியுங்கள் காந்தி மகாத்மாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே எங்கள் வாழ்வைப் பறியுங்கள். நாங்கள் பசி கிடந்து சாகிறோம். தீண்டாமை ஒழிய வேண்டுமென்று மகாத்மா காந்தி சொன்னாரல்லவா? நாம் ஒழிந்து விட்டால் தீண்டாமையும் கொஞ்சம் ஒழிந்துவிடும். உங்களுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். எனும் மது விலக்குப் பேசுவதால் தலித் சமூகத்தின் பொருளாதார வாழ்வு பாதிக்கும் நிலையைக் கூறும் ‘நிலவிலே பேசுவோம்’   எனும் என்.கே ரகுநாதனின் சிறுகதை.

….சிந்தாமணி அவ்விடத்திலேயே ஒரு ஒப்புச் சொல்லி மெதுவாய்ப் பாடினாள். பின் எழுந்து பிள்ளை ஒரு குடம் தண்ணி அள்ளிக் கொள்ளுறன்’ என்றவாறு கிணற்றை நெருங்கினாள். விலாசத்தின் மகள் இன்னும் அழுது முடியவில்லை. கண்ணைக் கசக்கிக் கொண்டே வேகமாக ஓடி வந்து பொறு சிந்தமணி என்று சொல்லிவிட்டு தண்ணீர் அள்ளி சிந்தாமணியின் பானையிலோ சிந்தாமணியிலோ தண்ணி வாளி படாதவாறு மிகக் கவனமாக நுட்பமாக தட்டாமல் முட்டாமல் ஊற்றினாள்.. மனிதாபிமானம் மிகுந்த உயர்சாதி  பெண்ணொருத்தியன் உணர்விலும் மூச்சிலும்  படிந்துள்ள சாதியமானது அவளையும் அறியாமல் எப்படி கசிகிறதென்பதை சித்தரிக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது தேவதாசனின் ‘கண்ணி’ எனும் சிறுகதை.

சந்: அடுப்புக்கு முன்னால் நான் நின்றிருந்தபோது திடீரென அங்கு வந்து சிவசோதி என்னைக் கேட்டார். அடேய் நளவா யார் உன்னை இங்கே சமைக்கவிட்டது?

(இவ்விடத்தில் நளவாவுக்கு சந்திரன் விளக்கம் சொல்ல ஆரம்பிக்க)

நீதி: உங்கள் கூப்பிடுபெயர் சந்திரனல்லவா?

சந்: இங்குதான் நான் விளங்கப்படுத்த வேண்டும் எங்கள் நாட்டில்…

( நீதிபதி பக்கத்திலிருக்கும் எழுத்தரைப் பார்த்து தலையை பக்கவாட்டில் அசைத்தபடியே அரசதரப்பு வழக்கறிஞரை கேள்விக் குறியோடு பார்க்கிறார்.

நீதி: இப்படியும் இருக்கிறதா. எனக்கு புரியவில்லை.

சந்: எங்கள் மதத்தில் இப்படி இருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கும்தான் புரியவில்லை. பாருங்கள் இது மாதிரியேதான் இந்த நாட்டில் வெளிநாட்டவர்களை இந்நாட்டு மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்று எனக்கும் விளங்குறதில்லை… ஜேர்மனியில் சாதிய மேலாதிக்க உணர்வால் பாதிக்கப்படடு உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட ஒருவரின் வழக்குப்பதிவு ஜேர்மன் நீதி மன்றத்தில் நிகழ்ந் ததை பின்னணியாகக் கொண்டு, ‘ஊசி இருக்கும் இடங்கூட…’ என்ற தலைப்பில் தேவா அவர்களின் கதை அமைந்துள்ளது.

‘’…இல்லை…..’ எண்டு இழுத்தவர் ‘தம்பி யாழ்ப்பாணத்திலை எவடம்’ எண்டு கேட்டார் நான் சிரிச்சன்.

‘எல்லாத்துக்கும் உமக்குச் சிரிப்புத்தான். எவடம் எண்டு சொல்லுமென்’ எண்டார்.

‘நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன்தெனெண்டு எப்படி நினைச்சீங்கள். மட்டக்கிளப்போ, திருகோணமலையோ இல்லை மன்னாராகவோ இருக்கலாம் தானே? எண்டன்.

‘கதைக்கிற கதையை வைச்சே ஒருத்தர் எந்த இடம் எண்டதைக் கண்டுபிடிக்கேலாதே’ எண்டார்….இஞ்ச வந்து இப்ப எல்லோரும் ஒரே மாதிரி தான் இருக்கினம். இந்த யூரோப்பியன் செய்த விசர் வேலை இது. வந்தவைக்கெல்லாம் காட்டையும் குடுத்து வேலையும் குடுக்க எல்லோரும் தாங்கள் ஒண்டெண்ட நினைப்பு’’

சாதி அடையாளம் காண்பதற்காக ஊர் இடம் குறிச்சி வளவு விசாரிக்கும சாதியக் கேள்வியை படம்பிடித்துக்காட்டும் பாணியில் சித்தரிக்கப்பட்ட அருந்ததியின் ‘கேள்வி’ எனும் சிறுகதை.

…’சரி...சரி… வீட்டுக்குப் பொய் யோசிச்சுக் கொண்டு வாருங்கோ! எல்லாம் பேசலாம்’ முடிவாக அவர் சொல்லிக் கொண்டு அந்தச் சங்கடப் படலையைப் பிடித்திழுத்து உள்ளே புகப் போனவர். திடீரென்று அது நினைவுக்கு வர. படலையைக் கைவிட்டு விட்டு மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பி ‘நீங்கள் வந்து படலையிலே நிண்டு கூப்பிடுங்கோ நான் வருவன்’. எனக் கண்டிப்பாகச் சொல்லி வைத்துவிட்டு அந்தப் படலையைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்து திறந்து கொண்டு உள்ளே போகின்றார்.

அவர்கள் இருவர் பாதங்களுக்கு கீழுள்ள நிலம் மெல்ல மெல்ல நழுவிப் போய்க் கொண்டிருப்பது போல் அவர்கள் இருவரும் உணருகின்றார்கள். 2005 ஆண்டளவில் சுவிசிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தலித் பிரஜை ஒருவர் பட்ட சாதிய அவமானத்தை தெணியான் அவர்கள் ‘வெளியில் எல்லாம் பேசலாம்’ என்கின்ற கதையினூடாக சாட்சியமாக்கியுள்ளார்.

இவ்வாறாக தலித் மக்களின் சமூக வாழ்வியல் இருப்பின் மறுத்தல்களையும், அவற்றை தலித் சமூகம் நேர் கொண்ட சம்பவங்களையும் உள்ளடக்கிய படைப்பிலக்கிய தொகுப்பாக ‘தீண்டத்தகாதவன்’  வெளிவந்துள்ளது.

;

Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité
Publicité