Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
26 janvier 2008

தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் எறிகணை இணையத்திற்காக வழங்கிய செவ்வி….

எறிகணைகள்…

உங்களால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகள் தொடர்பாக புலம் பெயர்நாடுகளில் 1989ம் அண்டு முதலே தனது செயல்பாடுகளிலும் படைப்புகளிலும் தலித்திய கருத்துக்களையே வலியுறுத்திவரும் கவிஞர் சுகன் தெரிவித்திருக்கும் விமர்சனம் அல்லது விசனம் தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்…?

தேவதாசன்…

நண்பன் சுகன் தனது பேட்டியில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்ளையே தெரிவித்துள்ளார்.அது அவருக்குள்ளான முரண்பாடாகவே தெரிகிறது. உதாரணமாக தலித் அரசியலை துரோக அரசியலாக முட்டாள்தனமாக அறிமுகப்படுத்தியதாக தெரிவிக்கிறார். துரோக அரசியல் எனக்குறிப்பிடும் கருத்து நிலையை வைத்தருப்பவர்கள் தமிழ்தேசிய வெறியர்களைத்தவிர வேறு யாரும் இல்லையென்றே சொல்லலாம்.

இவர் எந்த அரசியலுக்குள் தன்னை இனம் காட்டியுள்ளார் என்பது தெளிவாகிறது. வெள்ளாளர் புலிகளுக்கு தண்ணிகாட்டுகின்றனர் எனக்குறிப்பிட்ட அதேவேளை பிரபாகரன் சாதி காப்பாற்றும் புள்ளி எனவும் குறிப்பிடுகிறார். அறுபது வருடத்திற்கு முன்னர் சிறுபான்மைத்தமிழர் மகாசபையால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் தேவை இன்னமும் உள்ளது,இப்போது இயலாத காரியம், எனவும் தலித்துகள் அதிகாரத்தை கைப்பற்றுவது இனிய கனவு, இப்படி எல்லாம் சம்பந்தம் சமபந்தம இல்லாமல் உளறியிருக்கிறார். அவர் கூறிய கருத்துக்கள் மீது அவருக்கே நம்பிக்கை இருப்பதுபோல் தெரியவில்லை.

ஜேர்மன் சுட்காட்டில (stutgart) நடைபெற்ற அரசியல் தீர்வு மாநாட்டில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் ஓர் அறிக்கை சமர்பிக்கப்பட்டு சில தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன. அம்மாநாட்டில் சுகனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.(அது வெள்ளாளத் தலைமைக்கூட்டமாக படவில்லையா.?) எனினும் எமது தீர்மானம் தொடர்பாக எக்கருத்தையும் வெளிக்காட்டவில்லை. மேலும் எம்மால் நடாத்தப்பட்ட முதலாவது தலித்மாநாடு அவர் இருக்கும் வீட்டிற்கு 500 மீற்றர் தொலைவில்தான் நடைபெற்றது. அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது,ஆனால் கலந்து கொள்ளாமல் ஒழிந்து கொண்டார்.

மூன்று வெள்ளாளத் தலைமைகள் மாநாட்டிற்கு வாழ்த்து அனுப்பியதாகவும் அது மாநாட்டில் பெருமையாக பேசப்பட்டதாகவும் விசனம் தெரிவித்துள்ளார். ஒரு வானொலியில் எமது மாநாட்டு வாழ்த்து நிகழ்ச்சியிலேயே அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதை மாநாட்டில் யாரும் பெருமையாகப் பேசவில்லை.

ஜனநாயக ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளில் ஜனநாயகம் அவசியம் எனக்கருதுபவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பது தலித் சமூக மேம்பாட்டுக்கு விரோதமானது அல்ல. ஒன்றிற்கு ஒன்று முரணாக கூறி மொத்தத்தில் தனது காழ்ப்புணர்சியை வெளிக்காட்டியுள்ளார்.

தலித் சமூகமேம்பாட்டு முன்னணி சாதனை நிகழ்த்துவோமென யாருக்கும் சவால்விடவுமில்லை, சபதமெடுக்கவும் இல்லை.சாதிய ஒடுக்குமுறை பற்றி பேசுவது தேசியத் துரோகமாகவும், இதை மூடி மறைப்பதன் மூலம் சாதிப்பிரச்சினையை தீர்த்து விடலாமெனவும் செய்யப்பட்டு வருகின்ற பொய்யான பிரச்சாரத்தினை உடைத்து இது பேசப்படவேண்டும், தீர்க்கப்படவேண்டும் அதற்கு நாம் ஒரு உந்து சக்தியாக செயல்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.

எறிகணைகள்…

உங்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டு 1வருடத்திற்க்கு மேலாகிறதென்று நினைக்கிறேன். இதுவரை இலங்கையில் இன்றும் தலித்துக்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் இடர்களுக்கு தீர்வாக அல்லது அந்த தீர்வின் அடிப்படையிலான அந்த மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வளிவகுக்கும் வகையில் எப்படியான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறீர்கள்……? இது தொடர்பாக உங்கள் முன்னணியால் முன்வைக்கப்படும் அல்லது செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் என்ன….?

தேவதாசன்…

நான் முன்னர் கூறியது போன்று தமிழ்மக்களுக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு நிர்வாக பரவலாக்கல் செய்யப்படும் போது ஆண்டாண்டு காலமாக கல்வி,பொருளாதார,வேலைவாய்பு மற்றும் பலவகையிலும் பின்தள்ளப்பட்டிருக்கும் மக்கள் மேம்படும் முகமாக இணைக்கப்பட வேண்டிய திட்டாய்வுகளை அரசியல் தலைமைகளுக்கும், தீர்வுபற்றி பேசுபவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். அந்த அறிக்கையை “தூ” இணையத்தளத்தில் நீங்கள் இப்போதும் பார்வையிடலாம்.

இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழும் தலித் மக்களுக்கு விழிப்புணர்சியை ஏற்படுத்தும் வகையிலும்,முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்கும் வகையிலும் தொடர்ந்து மாநாடுகள்,கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறோம். எமது கருத்துகளை கூறுவதற்காக “வடு” என்னும் பத்திரிகையை மாதம் ஒரு முறை வெளிக்கொண்டு வருகின்றோம். முதலாவது மாநாட்டின் தொடர்சியாக லண்டனில் இரண்டாவது மாநாடு நடைபெற இருக்கிறது. எங்களது சக்திக்கு உட்பட்ட வகையிலான வேலைத் திட்டங்தளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

எறிகணைகள்…

அண்மையில் பிரான்சில் உங்கள் அமைப்பால் நடாத்தப்பட்ட மாநாடு மிகவும் வெற்றியளித்திருப்பதாக மாநாட்டின் இறுதியில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள் எந்த வகையில் மாநாடு வெற்றியளித்துள்ளதாக கருதுகின்றீர்கள்….?

இரண்டாவது மாநாடு லண்டனில் நடாத்துவதற்காக பல நண்பர்கள் முன் வந்திருப்பதே முதலாவது மாநாட்டின் வெற்றிதானே.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கொடி பிடித்து கோசம் போடும் ரசிகர்கள் அல்ல. மாறாக மாற்றுக் கருத்துகொண்டவர்கள்,சாதிமுறை அழிவின்மீது ஆர்வம் கொண்டவர்கள், முற்போக்கு சக்திகள்,பத்திரிகையாளர்கள், இடதுசாரிகள் என பலதரப்பட்ட பல திறமைவாய்ந்த சக்திகளின் சந்திப்பாக இருந்தது. பல விடயங்கள் பேசப்பட்டன. முதலாவது மாநாடுபற்றிய தொகுப்பு புத்தக வடிவில் விரைவில் வரவிருக்கிறது.

மாநாட்டிற்கு முன்னர் இலக்கியச் சந்திப்புகளிலும், சிறு கலந்துரையாடல்களிலும் பேசப்ட்டவிடயம் இன்று தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் பேசப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் பலவிதமான எமக்கு சார்பாகவும் எம்மை விமர்சித்தும் கருத்துக்கள் வெளிவருகிறது. இவைகள் யாவும் மிகப்பெரும் வெற்றியாகவே நாம் கருதுகிறோம். தலித் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளாத பலர் இன்று ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்..

எறிகணைகள்…

மிகப்பாரம்பரிய இடதுசாரிய சிந்தனையாளர்களினாலும்,அந்த மக்களுடன் மக்களாகவே வாழ்ந்து, தலித்திய ஒடுக்கு முறைகளை சந்தித்து, அவற்றிற்கு எதிராக களத்தில் நின்று குரல்கொடுத்து போராடிய அன்றைய அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும்,போராட்டங்களுக்கும் ஈடாக அந்த மக்களிடமிருந்து அன்னியப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களால் இங்கிருந்து கொண்டு எதனைத்தான் செய்துவிட முடியும் என எண்ணுகின்றீர்கள்…?

தேவதாசன்…

தலித்துகள் தங்கள் உரிமைக்காக போராடி வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருக்கையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஈழப போராட்டம் பின்னர், ஆயுதப்பேராட்டம் எனத்தொடர்ந்து இப்போது முப்பது வருடங்கள் முடிவுற்றுப் போய்விட்டது. ஆனால் சாதிய அமைப்பு வடிவம் அப்படியே இருக்கிறது. இன்று இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசத்தில்,குறிப்பாக சாதிய ஒடுக்குமுறை பெருமளவில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் வாய்திறந்து உண்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக இருக்கும் பட்சத்தில், எப்படி சாதிய விடுதலை பற்றிப் பேசவது. சாதியம் ஆயுதத்தால் ஒடுக்கப்பட்டுள்தே தவிர அழிக்கப் படவில்லை.

சாதியம் ஒழிக்கப்பட வேண்டுமானால் சாதியினால் ஒடுக்கப்பட்டவர்களே அப்பேராட்டத்திற்கு தலைமை ஏற்கவேண்டும். அவர்களுடன் முற்போக்கு சக்திகள் கரம் சேற்கவேண்டும். ஆனால் இலங்கையில் இப்போது இது சாத்தியம இல்லை.இருப்பினும் புலம்பெயர் நாடுகளில் ஜனநாயக சூழலில் கற்கவும்,தேடவும்,விவாதிக்கவும் வாய்புகள் இருக்கிறது. அந்த வாய்புகளுள் நாம் எமது சமூகத்தின் புற்று நோயான சாதியம் பற்றியும் பேச வேண்டியது அவசியம்.

இங்கிருந்து பேசப்படும் கருத்துகள் விவாதங்கள் இலங்கையில் தமிழர் வாழும் மூலை முடுக்குகளுக்கும் போய்சேரக்கூடிய தொழில் நுட்ப வளங்கள் பரவிக்கிடக்கின்றன. அதனூடாக மக்களுக்கு செல்லக்கூடிய வாய்புகன் இருக்கின்றன.அதன் மூலம அவர்கள் கருத்துக்களை உள்வாங்குவார்கள், பரிசீலிப்பர்கள்,முடிவெடுப்பார்கள்,செயல்படுவார்கள்.

எறிகணைகள்…

இலங்கையில் தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சிப்போக்கின் ஊடான ஆளுமையின் மத்தியில் அங்கு வாழும் தமிழ் மக்களில் கூடுதலான விகிதாசாரத்தினர் இன்று தலித் மக்களாகவே இருக்ககிறார்கள். ஆயுத விதைப்பு மிகவும் தாராளமாகவே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மனித உரிமை மீறல்கள் தேசியமயமாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த ஒரு தேசிய அமைப்பின் பின்னணியும் இல்லாமல் தலித்மக்களின் பெயரிலான இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்க மாட்டாது என ஆய்வாளர்களினால் நியாயமாகவே சந்தேகம் எழுப்பப்படுகிறது. இந்த நோக்கு தவறாயின் தமிழ்மக்களின் உரிமைப்போராட்டம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் போது அந்தப்பேராட்டம் தொடர்பான எந்த முன்வரைவுகளும் இல்லாமல் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்டுவதற்கும்,அதன் தொடற்சியாக புலம் பொயர்நாடுகளில் மட்டும் மாநாடுகள் நாடாத்தப்படுவதற்குமான அவசரத்தேவை தற்போது ஏன் ஏற்பட்டது…?

தேவதாசன்…

உங்களது கேள்வி அநியாயமான சந்தேகம் தலித்சமூகம் தனது விடுதலைக்காக எப்போதெல்லாம் பேராடமுற்பட்டதோ, தமிழர் உரிமைக்கு இடையூறாக வந்துவிடும் என ஜீ.ஜீ.பொன்னம்பலம் காலத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. பாடசாலைகளில் படிப்பதற்கு அனுமதியற்ற காலத்தில் அதற்கெதிராக போராட முற்பட்டபோது வெள்ளைக்கார ஆளுநர்களுக்கு சாதிப்பிரச்சினையே கிடையாது எனக்கூறி சாதியை வளர்த்த நிலை இன்றுவரை தொடர்கிறது.

இன்று இருக்கிற எந்தத் தேசிய அமைப்பும் தலித்துகளுக்கென ஒரு அமைப்பு உருவாவதை உள்ளத்தளவில் விரும்பமாட்டாது. நான் முன்னர் கூறியது போல முப்பது வருடகாலம் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது ஒருவித நம்பிக்கையும், இன்னொருவித ஆயுதபயமும் இருந்தது. ஆனால் இந்த முப்பது வருட காலத்தில் சாதிய அமைப்பு வடிவத்தை அசைக்க எவரும் முயற்சிக்கவில்லை என்பதுதான் நிஜம்.அதனால்தான் எந்த அரசியல் இயக்கத்தையும் சாராத ஒரு சமூகவிடுதலை இயக்கமாக, பெரியாரின் கருத்துக்களை உள்ளடக்கி நாம் தனித்துவமாக செயல்படுகிறோம்.

சாதிய அமைப்புக்கு அனைத்து வெள்ளாளர்களும் எதிரிகள் அல்ல.சிலர் தாம வெள்ளாளர் என்க்கூறவே கூச்சப்படுகின்றனர். ஏன்தான் இந்தச்சாதியில் பிறந்தோம் என வெட்கப்படுகின்றனர். மாறாக பலர் ஒரு கையிலே சாதியையும் இன்னொரு கையிலே தமிழர் விடுதலையையும் தாங்கிப்பிடித்து வருகின்றனர். இதுதான் இன்றுவரையும் தமிழர்களின் அழிவிற்கு முதற் காரணமாய் இருக்கிறது.

எறிகணைகள்…

ஒரு தலித்மகனின்/மகளின் உணர்வுகளை,அவர்கள் மனதில் ஏற்படுத்தப்பட்ட வடுக்களை அவர்களாலேயே உணர்ந்து கொள்ள முடியும். “அந்தமக்களின் போர்க்குரல் அந்த மக்களிடமிருந்தே ஒலிக்கவேண்டும”. பல தலித்திய சிந்தனையாழர்களினாலும் தெரிவிக்கப்பட்ட இந்தக்கருத்தை நீங்களும் முன்னர் பலதடவைகள் வலியுறுத்தியிருந்தீர்கள். ஆனால் தற்போது உங்களால் ஆரம்பிக்கப்ப்டடுள்ள அமைப்பில் தலித்துகள் அல்லாத பலர் முன்னணி செயல்பாட்டாளர்களாக இருப்பதும்,அண்மையில் உங்களால் நடாத்தப்பட்ட பிரான்ஸ் தலித் மாநாட்டில் கூட கூடுதலான வெள்ளாளர்களே கலந்து கொண்டதும்,தொடர்ந்து லண்டனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் மாநாட்டின் ஏற்ப்பாட்டாளர்களும் கூட யாழ்ப்பாண மேலாதிக்க சிந்தனையின் வழிவந்த வெள்ளாளர்களாகவே இருப்பதும் கண்கூடு. ஏன் இந்த நிலைமை…? அல்லது இதில் தவறெதுவும் இல்லையா…? தமிழ் மக்களின் பிரச்சினையில் பலர் குளிர்காய்வது போல இடதுசாரிய தலித்திய கருத்தாழம் மிக்க தலித்துக்களான உங்களைப் போன்ற ஒரு சிலரை முன்னிலைப்படுத்தி இந்த நெருக்கடியிலும், காய்தல் நாடகம் தொடராக்கப்படுவதாக நீங்கள் உணரவில்லையா…?

தேவதாசன்…

தலித்மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்டுவரும் வலிகளை அவர்களால்தான் உணர்ந்து கொள்ளமுடியும் என்பது மிக மிக உண்மையானது. பத்து மாதம் கருவை வயிற்றிலே சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கு இருக்கும் வலி தந்தைக்கு இருக்காது என்பது உண்மைதான்.அதேவேளை பெண்ணின் வலியை புரிந்துகொண்டு அவளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் மனிதம் உள்ள ஆணைப்போலத்தான்,தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கு ஆதரவு தருவதற்கு பலர் முன்வருகிறார்கள்.

சாதி வடிவத்தை அதனூடான சாதிய ஒடுக்கு முறையை கண்டு பிடித்தவர்களோ வளர்த்தவர்களோ தலித்துக்கள் இல்லை. இலங்கை ஆறுமுகநாவலர் தொட்டு தொடர்சியாக வந்த தமிழ்த் தலைவர்கள் உரம் போட்டு வளர்த்த சாதிப்படிமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் அழிப்பது ஒவ்வொரு மனிதாபிமானமுள்ள மனிதனதும் கடமையாகும். அந்த வகையில் வெள்ளாளர்கள் மத்தியில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் எமது முயற்சிக்கு முழு ஆதரவைத் தருகின்றனர். இது அவசியமானதென்றே நாங்கள் கருதுகின்றோம்.

தலித் சமூகமேம்பாட்டு முன்னணி என்பது தலித்துக்களுக்காக தலித்துக்ளால் அமைக்கப்பட்ட முன்னணியாகும்.ஒரு காலத்தில் இலங்கையில இடதுசாரிகள் மிகப்பெரும் பலத்துடன் அரசியல் இயக்கம் நடத்தியவர்கள். சோவியத் யூனியன் உடைவு,சீனப் பொருளாதார மாற்றம், ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி என்பன சிறிய நாடான இலங்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியதென்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதன்பின்னர் உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்காளர்கள்,புரட்சியாளர்கள் பலவகையான சிந்தனைப் போக்குடன் உலகமாற்றங்களை ஆய்வுசெய்ய ஆரம்பித்தனர். இந்த அடிப்படையில்தான் பின் நவீனத்துவம்,தலித்தியம் என்பன உருப்பெற்று வளர்கிறது. இச்சிந்தனை மாற்றங்கள் இலங்கைத்தமிழர்களை பொறுத்த வரையில் ஒருசில புத்தி ஜீவிகள் மட்டத்தில் மட்டுமே ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கிறது.

இது இன்னமும் பல மட்டங்களில் பேசப்படவேண்டும், விவாதிக்கப்படவேண்டும்,பரிசீலிக்கப்படவேண்டும் இதுவும் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினர் நடாத்தும் மாநாடுகளின் நோக்கமாக இருக்கிறது. அந்த வகையில் பங்கு கொள்பவர்கள் யார்…? என்ன சாதி…? என்பது முட்டாள்தனமான பார்வையாக இருக்கும்.தலித்திய கருத்துக்களைப்பற்றி பேச முற்படுபவர்களை அதுபற்றி தேட முனைபவர்களை குளிர்காய்தலுக்குள் உள்ளடக்கி கொச்சைப்படுத்துவது விசமத்தனமானதும் சாதி அமைப்பை தொடர்ச்சியாக கட்டிக்காக்கும் முயற்சியுமாகும்.

நன்றி

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité