Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
29 juillet 2007

"ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை''

சி. ஜெய்சங்கர் - மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ‘மூன்றாவது கண்' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். ‘மூன்றாவது கண்' என தமிழிலும், ‘தேர்ட் அய்' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.

1965 டிசம்பரில் யாழ்ப்பாணம் மற்றும் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம் - யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.

குழந்தை மா. சண்முகலிங்கம் அவர்களைத் தனது முதன்மை ஆசானாகக் கருதும் இவர், யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் ‘தலித் முரசு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி.(யின் சிறுபகுதி)
சந்திப்பு : ரா. முருகப்பன்

போர்ச் சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது; மறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாகக் கூறினால், ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால், மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர் பிழைக்க ஓடி கோயிலில் தஞ்சம் புகும்போதுகூட, சாதிப்படி நிலை வெளிப்படும். ஓடி தஞ்சமடையும்போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்தப் பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும் உத்தரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கவுரவமான கட்டியக் காரன் போல, அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கவுரவமாகவே பணியாற்றுவது எதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கவுரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினையில்லை. அது நல்லதுதான். ஆனால், அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்க மாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.

(நன்றி தலித்முரசு)

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité