Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
20 juillet 2007

கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை

stuttgard1

கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை ஜேர்மனியிலுள்ள சுருட்காட் எனும் நகரில்   ஐக்கிய ஜனநாயக முன்னணியினரால் ஓர் கலந்துரையாடல் மகாநாடு ஒழுங்கு படுத்தப்பட்டது. இச்செய்தியானது    எமது இணையத் தளத்தினூடாகவும்  அறிமுகப்படுத்தப் பட்டிருந்ததை எமது வாசகர்களாகி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஐக்கிய ஜனநாயக முன்னணித் தோழர்களும் நண்பர்களும் இவ்வாறான மகாநாடொன்றை  ஏற்கனவே  நடாத்தி முடித்தவர்கள். கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மகாநாட்டின் பிரதான நோக்கமும், ஏற்கனவே இவர்களால் நடாத்தப்பட்ட மகாநாட்டிற்கான நோக்கமும் ஓன்றாகவே இருந்தது.

Composition1

அதாவது முதலாவது மகாநாடும் இலங்கை இனப்பிரச்னையின் தீர்வு சம்பந்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டம் பற்றிய ஆலோசனைகளும் அதற்கான ஆதரவைப் பெறும் நோக்கமாகவும் இருந்தது. இரண்டாவது முறையாக நடைபெற்ற மகாநாட்டின் நோக்கமும் தீர்வுத்திட்டம் பற்றியதாகவே இருந்தது. ஆனால் இம்முறை இலங்கையிலிருந்து மூன்று கட்சியின் பிரதி நிதிகளாக, தலைவர் திரு. சித்தார்தன் (புளொட்) தோழர் சுகு (ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியினரின் செயலாளர் நாயகம்) திரு.ஆனந்தசங்கரி (த.வி.கூ தலைவர்) போன்ற கட்சியினர்  சமூகமளித்திருந்தனர். மேற்படி கட்சியினர் தாம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தின்  ஆதரவைப் பெறுவதற்காக ஐக்கியப்பட்டு செயல்படுவதாகவும், அத்தீர்வித்திட்டம் பற்றி பிறகட்சிகளுடனும் பேசி அவர்களும் அதற்கு ஆதரவு தரும்பட்சத்தில் அவர்களுடனும் இணைந்து தற்போதைய தமது ஐக்கியமுன்னணியை பலப்படுத்தவும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இம் மகாநாட்டிற்காக கலந்து கொள்வதற்கென கனடா, லண்டன், சுவிஸ், நோர்வே, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.  இலங்கை ஐனநாயக முன்னணியினர் பிரான்சிலுள்ள இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய எம்மை இரண்டாவது முறையாகவும் மகாநாட்டில் கலந்து கொண்டு தீர்வித்திட்டம் பற்றிய எமது அபிப்பிராயங்களையும் எமது தலித் சமூகம் பற்றிய பிரச்சனை பற்றியும் விவாதிக்கும் சந்தர்ப்பத்தைத் தந்து, அம் மகாநாட்டிற்கு இரண்டாவது முறையாகவும் அழைப்பு விடுத்தனர்.

அந்த வகையில் இலங்கை ஜனநாக முன்னணியின் உறுப்பினர்களுக்கு எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் சார்பில் இரண்டாவது முறையாகவும் நன்றியைத் தெரிவிக்க கடைமைப் பட்டுள்ளோம். எமது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் சார்பில் தேவதாசன், சுந்தரலிங்கம், எம்.ஆர் ஸ்டாலின், அசுரா போன்றோர் கலந்து கொண்டோம்.

கூட்டம் லோகநாதன் மாஸ்டரின்  தொடக்கவுரையுடனும் தோழர் அலெக்ஸ் அவர்களின் நெறிப்படுத்தலூடாகவும் ஆரம்பிக்கப்பட்டது. வரவேற்புரை இ.ஜ.முன்னணியின் தலைவர் ஜெயக்குமாரால் ஆற்றப்பட்டு அதைத் தெடர்ந்து மகாநாடு பிறபேச்சாளர்களுக்காகவும்  நகர்த்தப்பட்டது.
P1010078

தோழர் ஜெகநாதன் கட்சிப் பிரதிநிதிளுக்கு முன்பாக உரையாற்றினார். அவர் வழமைபோல் அனைத்து ஒடுக்குமுறைக்குள்ளான சமூகங்களின் நியாயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதாகக் கூறினார்.

இக்கலந்துரையாடலானது இலங்கையிலிருந்து வருகைதந்த கட்சிப்பிரதிநிதிகளின் பேச்சுக்களின் சாராம்சத்திலிருந்தும், பார்வையாளர்களிடம் இலங்கை இனப்பிரச்னை சம்பந்தமான அய்யப்பாடுகள் இருப்பின் அதுபற்றிப் பேசினாலும் அதற்கான பதில்களை கட்சிப்பிரதிநிதிகள் தருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

முதலில்  த.வி. கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் உரையாற்றினார். அவரின் உரை எமக்கு ஏற்கனவே பனப்பாடம் செய்யப்பட்ட ஒன்று. இம்முறை புதிய செய்தியாக  தான் பிரபாகரனுக்கு எழுதுகின்ற கடிதங்கள் பற்றியும் அக் கடிதக் குவியல்களில் இரண்டை இலங்கை அரசாங்கம் நூல் வடிவில் வெளியிட்டிருப்பதையும் புளகாங்கிதத்துடன் தெரியப் படுத்தினார். தனது அக்கடிதங்களில் தான் இலங்கை அரசாங்கத்தையே பெரிதும் விமர்சித்திருந்தும் அவர்கள் தனது கடிதத்தை பிரசுரித்திருக்கிறார்களெனில் அது எவ்வளவு முக்கியமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.
P1010066

இரண்டாவதாக உரையாற்றிய சித்தார்த்தன் அவர்கள் இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இலங்கை அரச தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தங்கள் பற்றியும், இலங்கை அரசானது ஒரு பேரினவாத அரசு எனவும். அவ்வரசானது நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதாகவும் பேசினார்.

P1010070

தோழர் சுகு பேசுகின்றபோது  தனது பேச்சின் தொடக்கத்திலேயே இங்கு தேசிய ஒடுக்குமுறை தொடர்பாக அக்கறையுள்ளவர்கள், சமூக மாற்றம் வேண்டி அக்கறையுள்ளவர்கள், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர்கள் ,பெண்கள் தொடர்பாக அக்கறையுள்ளவர்கள், பிரதேச பாரபட்சம் தொடர்பாக அக்கறையுள்ளவர்கள்….. எனத் தொடங்கி, பயங்கரவாதச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இலங்கை அரசபடையால் இன்பம், செல்வம் சுட்டுக் கொன்று வீசி எறியப்பட்டதற்கு எதிராக நாம் குரல் கொடுத்த காலகட்டத்திலேதான் புன்னாலைக்கட்டுவன் எனும் ஊரில் சி.ரி.பி. றைவரான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அண்ணாச்சாமி எனும் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு அவரது இரத்தத்தை அவருக்கே பருக்கிய சம்பவம் நடைபெற்றது. அதை நாம் எப்படி கண்டித்தோம்!!! எனக் கூறியதோடு இன்றைய சிந்தனையின் பன்மைத்துவங்கள் பற்றியும் அது மதிக்கப்பட வேண்டும் என்பதாகவும் பேசியதோட, யாழ்ப்பாண மேலாதிக்கமானது   கிழக்கு மாகாண மக்களை , முஸ்லிம் மக்களை , மலையக மக்களை பிரதேச ஒடுக்குமுறைக் குள்ளாக்கியதென்பதையம் விபரித்தார். இறுதியில்   இலங்கைப் பேரிவாத அரசானது தமிழ் மக்களின் கல்வி மொழி வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டியதன் விளைவே எமது போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் கூறினார். பிராந்திய மக்களின் தனித்துவம் பற்றிப்பேசிய தோழர் சுகு இறுதியில் இணைந்த வட-கிழக்கைத்தான் நாம் விரும்புகின்றோம் என முடிவுரையாகவும் அழுத்திச் சொன்னார்.

கட்சிப் பிரதிநிதிகளின் பேச்சுக்களுக்குப் பிற்பாடு கலந்துரையாடலில் கீழ்காணப்படுவோர் உரையாற்றிய போதும் எமது தலித் சமூகத்தின் அக்கறையுள்ளவர்களின் உரையாடல்களையே நாம் இங்கு முக்கியத்துவப் படுத்தியுள்ளோமே தவிர பிறர் பேச்சுக்கள் பயனற்றதென்பதன் நோக்கமல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டுகின்றோம்.  எமது உரையாடல்களையும் எமது கேளவிகளையும் பிற ஊடகங்கள் கவனம் கொண்டிருப்பின் எமக்கு இதை எழுதும் தேவை கூட நிகழ்ந்திருக்காது. புளொட் தலைவர் சித்தார்த்தன் மீதான கேள்விகள் முன்வைக்கப்பட்டபோதும் அவர் அதற்கான பதில்களை அளிக்காத பட்சத்தில் புளொட் அமைப்பின் சவிஸ் பொறுப்பாளர் தோழர் ரஞ்சன் அவர்களே பதிலளித்மையால் அவரது கருத்தையும் நாம் பதிவு செய்துள்ளோம்.

உரையாடலில் பங்கு கொண்டோர்.

சிவகுருநாதன்
பீட்டர் குலம்

ஜெயா
சோலையூரான்
அசுரா
ஜெமினி
தேவதாசன்
குமார்
டொக்டர் பாலா
திருமதி சறீகாந்தா
திருமதி லோகநதன்
இராகவன்
ரஞ்சன்
புதுவை லோலன்
கீரன்   

தேவதாசன் பேசுகின்ற போது இக்கலந்துரையாடலின் நோக்கம் போன்றே கடந்த முறை நடைபெற்ற கலந்துரையாடலின் நோக்கமும் இருந்தது. நாம் கடந்த கலந்துரையாடலில் எமது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் அவர்கள் பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையும் அக்கலந்துரையாடலில் வெளிப்படுத்தியிருந்தோம். அதன் அவசியத்தையே நாம் இங்கும் வலியுறுத்துகின்றோம். எமது மக்களின் பிரச்சனை கவனத்தில் கொள்ளப்படாது எடுக்கும் எம் முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை என்பதாகவும் உரையாற்றினார்.

இதற்கு பதிலளித்த தோழர் சுகு அவர்கள் தாம் எமது அறிக்கையை வாசித்ததாகவும் அதிலுள்ள நியாயங் கவனிக்கப்பட வேண்டியவை எனக் கூறியதுடன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை அப்போது சாதி குறைந்தவர்கள் எனும் அடையாளத்துடனேயே பார்க்கப்பட்டதாகவும். தாம் தலித் மக்கள் பிரச்சனை சம்பந்தமாக பல போராட்டங்கள் செய்ததையும் விபரித்தார்.

அசுரா பேசுகின்றபோது. இச் சந்திப்பிலே முதலிலே உரையாற்றிய லோகநாதன் மாஸ்டர் அவர்கள் இந்து மதமானது ஐக்கியத்தை வலியுறுத்தும் மாதமக உள்ளது என்றும் இங்கு வந்துள்ள கட்சி உறுப்பினர்களின் ஐக்கியமும்  அதே போல் ஐக்கியத்துடன் செயல் படுமென்றும் கூறினார். அதற்கு விடையாக அசுரா லோகநாதன் மாஸ்டரின் இந்து மதத்தின் மீதான அவரது நம்பிக்கையை மதிப்பதாகவும் தாம் தமது ‘வடு’ பத்திரிகையில் இந்து மதத்தின் சமூக வஞ்சனைகளை தொடர்ந்து எழுதி வருவதாகவும் அதன் மீதான விமர்சனங்களை எவர் முன்வைப்பினும் அதைத் தாம் ஓர் ஆரோக்கியமான விவாதமாக   மேற்கொள்ள முடியுமெனவும் கூறினார். கட்சி அங்கத்தவர்களின் உரையின் முரண்பாடுகளை பற்றிக் கூறும்போது, ஆனந்த சங்கரி அவர்கள் எப்போதும் படிக்காதவர்களை கிண்டல் செய்வதும் ஜி.ஜி. பொன்னம்பலம், சேர் பொன் இராமநாதன் போன்றவர்கள் பெரிய அறிவாளிகள்; அவர்கள் மகாராணியே போற்றும் அறிவாற்றல் பெற்றவர்கள் எனபதாக சென்ற இடங்களிலெல்லாம் அவர்களின் புகழ் பாடுவதுபோல், இக் கூட்டத்திலும் அவர்கள் மேன்மை கூறிப் புளகாங்கிதம் அடைந்தார். அதற்காக அசுரா இவ்வாறான பேச்சானது எமது சமூகத்தை இழிவு படுத்துவதாகவும் ஆனந்த சங்கரி அவர்கள் கூறிப் பெருமைப்பட்ட அறிவாளிகளான ஜி.ஜி பொன்னம்பலமும் , இராமநாதனுமே தலித் மக்களுக்கான கல்வி மறுப்புக்கும், அவர்களது சமூகப் புறக்கணிப்புக்கும் அரசியல் காரணிகளாக செயல்பட்டவர்கள். எனவே இவரது பேச்சானது எமது மக்களை அவமானப் படுத்தும் செயல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.

சித்தார்தன் அவர்களின் உரையின் முரண்பாடு பற்றி அசுரா கூறும்போது. சித்தார்த்தன் அவர்கள் புலி மக்கள் விரோதிகள் என ஒரு பக்கமாகவும, புலிகள் கிழக்கில் தோற்கடிக்கப்பட்டது போல் வடக்கிலும் தோற்கடிக்கப்பட்டால் எமது நிலை என்னவாகும் என்றும் பேசியதோடு  முதன்மை எதிரியாக சிங்கள அரசே இருக்கிறதெனும் போக்கில் பேசியதை சுட்டிக் காட்டினார்.

தோழர் சுகுவின் உரையிலும் பல முரண்பாடுகள் அசுராவால் சுட்டிக்காட்டப்பட்டது. தலித் சமூகங்களின் நிலைமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும், தனித்துவங்கங் பேணப்பட வேண்டும் பிராதேச பாகுபாடுகள் மிக மோசமான செயல் என்பதாகக் கூறியபோதும். இறுதியில் கல்வி, வேலைவாய்ப்பு, மொழித் திணிப்புகளே தமிழர்களின் போராட்டத்திற்கு காரணமாக இருந்தது. என்ற அவரது பேச்சுக்கு அசுரா அவ்வாறான தேவைகள் எந்த சமூகத்திற்கு அவசியமானதாக இருந்தது எம் மக்களுக்கு சிங்கள அரசு வெகு தூரத்திலேயே இருக்கிறது. எமது « பேரினவாதிகள் » பக்கத்து வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். எல்லாத் தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம் என்பது  தவறானதும் அது ஆதிக்க சமூகத்திற்கு மட்டுமே தேவையான ஒன்றாக இருந்ததென்றும் கூறியதோடு. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும், கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் மனித மேன்மை பற்றியெல்லாம் பேசுகிற நாம் சமூக ரீதியாக புறக்கணிக்கப்படும் நிகழ்வுகள் எப்படி கவனம் கொள்ளாது போகும் எனவும் கேள்வி எழுப்பினார். தனிமனித நேர்மையான போக்கை தோழர் சுகுவிடம் காணப்படுகின்றபோதும் அவரது முரண்பாட்டிற்கான காரணமாக அவர் ஓர் கட்சி சார்ந்து செயல்படுவதும் கட்சியைக் காப்பாற்றும் தேவையே அவரது முரண்பாட்டிற்கான காரணமா இருப்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஈ.பிஆர்.எல். எவ் (ப.நா) கட்சியானது எமது தலித் சமூக மேம்பாட்டு அமைப்பு சார்ந்தவர்களை சந்தித்து எமது பிரச்சனை பற்றி பேசியபோது எமது பிரச்சனை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று எனக் கூறியதோடு நாம் கேட்டுக் கொண்டபடி அதனது கட்சிப் பத்திரிகையான ‘கண்ணோட்டத்தில்’ எமது நிலைப்பாடுகள் பற்றி எழுதுவதாகவும் கூறியதை செயல் படுத்தப்பட வில்லை என்பதையும் அசுரா சட்டிக் காட்டினார்.

அதற்கு பதிலளித்த தோழர் சுகு அவர்கள் நாம் எதிர்காலத்தில் இதைக் கவனத்தில் கொள்வோம் எனக் கூறினார். இருப்பினும் தோழர் சுகு அவர்கள் சுவிசில் நடைபெற்ற சந்திப்பில் தீண்டாமை பற்றியோ தலித் சமூகங்கள் பற்றியோ எவ்வித உரையாடலையும் மேற்கொள்ளாது. நாம் கலந்து கொண்ட ஜேர்மன் மகாநாட்டில் மட்டும் இது பற்றிப் பேசியதானது கட்சிகள் மீதான நடவடிக்கைகளை மீண்டும் நாம் ஆழமாக பரிசீலிக்கும் தேவையையே உணர்த்துகின்றது.

அடுத்ததாகப் பேசிய எம்.ஆர் ஸ்டாலின்  இலங்கையிலிருந்து வந்திருக்கின்ற மூன்று அமைப்புக்களின் நிலைப்பாட்டில் இருந்துதான் இதுவரையான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கிறததே தவிர தமிழ் மக்கள் பற்றிய கவனம் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த மூன்று அமைப்புக்கள் சார்ந்த விடயத்துடன் தான் காலையிலிருந்து உரையாடப்படுகிறது. தமிழ் மக்களின் அரசியல் நிலை என்ன என்பதும் அவ்வரசியலை எந்த ஆதிக்க சக்திகள் முன்னெடுத்துச் செல்கின்றன என்பது பற்றியம் காலையில் சுகுத் தோழரும் விளக்கமாகக் கூறினார். அதாவது தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற ஆதிக்க சக்திகள் தான்  அவ்வரசியலையும் தீர்மானிக்கிறவர்களாக இருந்து வந்துள்ளனர்.

இதுவரையான இருபத்து ஐந்து வருடகால ஆயுதப்போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்களை ஒரு பாசிசச் சூழலுக்குள் இட்டுச் சென்றிருக்கிறது. அதனால் அந்தப் பாசிசச் சக்திகளை வழி நடத்திய சக்திகள் யார் என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும்.  இவ்வாறான ஆதிக்க சக்திகளை அடையாளம் காண்பதன் ஊடாகத்தான்   உண்மையான  தமிழ் மக்களின் பிரச்சனை என்னவென்பதை ஆராய முடியும். அந்த வகையில் இங்கு அவ்வாறான நிலைமைகளை ஆராயும் நோக்கம் எதுவும் பேசப்படவில்லை. தமிழரசுக் கட்சியாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் பரப்பப்பட்ட பொய்யுரைகளான, சிங்களச் சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டம், கல்லோயா குடியேற்றச் சட்டங்கள் என்கின்ற மெருகூட்டப்பட்ட விடயங்கள் தவிர தமிழ் மக்களுக்கான ஏனைய பிரச்சனைகள் அதிகமாக இருந்தன. இவர்களால் கூறப்பட்ட விடயமெல்லாம் யாழ்ப்பாணத்திலேயுள்ள மத்தியதர மேட்டுக் குடியினரின்  நலன்கள் சார்ந்த விடயமாகவே இருந்தன.

பக்கத்திலுள்ளவரை பள்ளிக்கூடம் செல்ல மறுத்துக் கொண்டு இருந்த ஓர் உயர் சாதி ஆதிக்கச் சமூகமானது பல்கலைக் கழக வாய்ப்பு மறுக்கப்பட்ட செயலை தமிழ் மக்கள் எல்லோருக்குமான பிரச்சனையாக பரப்பப்பட்டது.  உயர் கல்வி மறுக்கப்பட்டாதாகப் பிரிவினை கோரிய நீங்கள் ஆரம்பக் கல்வியே மறுக்கப்பட்ட தலித்துக்களுக்கு நீங்கள் என்ன  பிரித்துக் கொடுக்கப் போகிறீர்கள்? கிழக்கு மக்கள் பிரச்சனை, முஸ்லிம் மக்கள் பிரச்சனை, தலித் மக்கள் பிரச்சனைகள் என தற்போது வெளி வரும சூழலுக்கு அடிப்படைக் காரணம் என்ன? தமிழ் மக்களுக்குள்ளேயே தனித்துவமான மேற்படி இனங்களின் சமூக, அரசியல் பிரச்சனைகளை மறைத்துக் கொண்டு எழுப்பப்பட்ட தமிழீழக் கொள்கை பேசியவர்கள் எல்லோருமே வெளிநாடுகளுக்கு ஒடித் தப்பிவிட தற்போது மூன்றில் ஒரு வீதமான மக்களே போராட்டம் எனும் பெயரில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அம் மக்களும் ஆதிக்க சாதியனிரின் ஒடுக்குமறைக்கு பலியாகிய மக்களாகவே இருக்கிறார்கள்.  மேற் கூறிய தனித்துவமான இனங்களின் அரசியல் சமூக விவகாரங்கள் கவனத்தில் கொண்டு அவர்களுக்குரிய அரசியல், சமூக உத்தரவாதங்களை நீங்கள் முன்வைக்கும் பட்சத்திலேயேதான்  உண்மையான சமூக அமைதியை நோக்கி நாம் நகர முடியும் என்பதாக ஸ்டாலின் அவர்கள் தனது கருத்தை முன்வைத்தார்.

இதற்கு முதலில் பதிலளித்த சுகுத்தோழர். அவர்கள் தனது பதிலில் நாங்கள் வைத்த தீர்வித்திட்டமானது மாற்றப்பட முடியாத வேதமோ, பைபிளோ அல்ல ஜனநாயக முறைப்படி அதில் மாற்றங்கள் செய்யய நாம் தடையாக இருக்கப்போவதில்லை. மற்றது கருணாவினதும் புலிகளினதும் பிரச்சனையாக மட்டும் கிழக்குப் பிரச்சனையை பார்க்கமுடிதென்றுதான் நான் நினைக்கிறேன். காரணம் என்னவெனில் பலதரப்பட்ட கட்சியிலும் கிழக்கு மாகணத் தோழர்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். மற்றும் வந்து கிழக்கின் குரலின் செய்தியை நான் பல தடவை படித்துப்பார்த்தேன்.    அதில வந்து ஈ.பி.ஆர்.எல.எவ் இல் இருக்கும் கிழக்கு மாகாண மக்கள் தமது பிரதேச மக்களுக்கு துரோகமிழைக்கக் கூடாது எனக் கூறப்பட்டதை நான் ஒரு  கருத்து வன்முறையாகவே பார்க்றேன்.   என தனது பதிலில் கூறினார்.

பிற்பாடு ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த ஐயா ஆனந்த சங்கரி அவர்கள் கொஞசம் கடுப்பாகிப் பேசினார். அதாவது நீங்கள் பேசியமாதிரி நாம் பேச வெளிக்கிட்டால்… உங்களை விட நான் பத்து மடங்கு பாய்வன். ஆனால் நான் பேசவில்லை. நீங்கள் பேசுற மாதிரி நாங்கள் பேசமுடியாது. நாங்கள் முள்ளில விழுந்த சீலையை மெதுவாகத்தான் எடுக்கவேண்டும். நீங்கள் சொல்லுகிற பிரச்சனை எதுவும் வட-கிழக்கு மாகாணத்தில இல்லை. எனது முக்கிய பணியாக நான் கருதுவது இந்தப் பாசிசக் கும்பலான புலிகளிடமிருந்து எமது மக்களை காப்பாற்றவேண்டும். நீங்கள் கூறுகிற மாதிரி தலித்துக்கள்தான் அங்கு இறந்து கொண்டு இருக்கிறார்கள் என்றில்லை. எல்லாரும்தான்      அங்கு இறந்து கொண்டு இருக்கிறார்கள். என மீண்டும் ஒரு நீண்ட புராணம் பாடி முடித்தார்.

நண்பர் கீரன் தனதுரையில்  என்னைப் பாதித்த விடயம் என்னவென்றால் ஐயா (ஆ.ச) கூறிய விடயம் பற்றியே.. அதாவது ‘நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் நாங்கள் ஒரு பூர்வீகக் குடிகளெண்டு’  அந்த பூவீகக் குடிகள் பற்றி எனக்கு விளங்கவில்லை. என்னை நான் ஒரு பூர்வீகக் குடியாக கருதவில்லை. வேணுமெண்டால் என்னை நான் ஒரு ‘பெரும் குடி’ என்று சொல்லலாமே தவிர பூர்வீகக் குடியென்று சொல்ல முடியாது.

இந்துத்துவம் பற்றியும் நாம் பரவலாக பல பரிமாணங்களில் பேச வெண்டும். நாம் 60 ஆம் ஆண்டு கால கட்டத்தைப் பார்த்தோமாயின் இந்துத்துவமானது அது எல்லா அரசியல் பேசியவர்களிடமும் ஆழமாக இருந்துள்ளது. அதாவது முற்போக்கு, பிற்போக்கு என பேசியவர்களிடத்திலும் ஆழமாக வேரூன்றி இருந்துள்ளது. அதற்கு நான் ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் தோழர் சண்முகதாசன் (சீனக் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்) அவர்கள் ஒரு கூட்டத்தில் ஆயுதப் போராட்டத்திற்கான் விளக்கம் ஒன்றைச் சொல்வதற்காக சூரன் போரிலிருந்து ஒரு எட்டு அடி கொண்ட பாடலை உதாரணத்திற்கு படித்துக்காட்டினார். அந்த எட்டு அடிப்பாடலிலும் ஆறு அடிகள் யுத்தத்தைப் பற்றியதாகவே இருந்தது, மிகுதி இரண்டடி மட்டுமே முருகனைப் பாடும் வரிகளாக இருந்துது. ஆகவே இந்து மதத்தின் சமூகப் போக்கை நாம் விரிவான பார்வைக்குட்படுத்த முனைய வெண்டும். மற்றது கிழக்குமாகணம் பற்றியது  கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்க இருப்பது பற்றி இங்கு யாரும் பேசவில்லலை. கிழக்கில் நடை பெறப் போகும் தேர்தலூடாக கட்சிகளாகிய நீங்கள் ஓர் முன்மாதிரியாக நடப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் இது. அங்கு வாழ்கின்ற சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் அந்த ஒற்றுமையூடாக நடைபெறும் தேர்தலில் புலிகள் தோற்கடிக்ப்பட வெண்டும். இவ்வாறான ஜனநாயக செயல் பாட்டின் வெற்றிதான் வடக்கிலும் நாம் மேற்கொள்ள முன்மாதிரியாக இருக்கும் . ஆகவே இது உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி இதை நீங்கள் செயல் படுத்துவதுதான் நியாயமாக இருக்கும் என நான் கருதுகிறேன். என கீரன் அவர்கள் குறிப்பிட்டார்.

மற்றது புளொட் அமைப்பின் தலைவர் பற்றிய விமர்சனங்களுக்கு அக் கட்சியின் சுவிஸ் பொறுப்பாளர். ரஞ்சன் அவர்கள் பதிலளிக்கும்போது. சித்தார்த்தன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக செயல் பட்டார் என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதற்கு நான் அக்கட்சியின் உறுப்பினன் என்ற வகையில் பதிலளிக்க விரும்புகிறேன் அதாவது அக்காலகட்டமானது ஒரு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலகட்டமாகும். அது வந் து அப்பேச்சுவார்த்தைக் காலட்டத்தினூடாக மக்களுக்கு ஓர் தீர் எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சில நடவடிக்கைக்காக செயல் பட்ட ஒன்றே தவிர புலிகளை ஆதரிக்கவேண்டும் என்ற நிலையிலிருந்து அவர் அப்படி செயல் படவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மற்றுது கிழக்கு மாகாணத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டது போல் வடக்கிலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டால் எமது மக்கள் நிலை என்னவென்று யோசிக்க வேண்டும் என்று அவர் கூறியதன் அர்த்தம் வந்து புலிகள் இல்லாவிட்டால் மக்களை யாரும் காப்பாற்ற முடியாதென்ற அர்த்தத்தில் அல்ல. (!!!!) இந்த விடயம் பற்றி தலைவர் எமக்கு பல முறை தெளிவு படுத்தியுள்ளார். அதாவது அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஓர் தீர்வை  வைத்தால்தான்  பிரச்சனை தீரும் என்பதே தவிர வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதால் தீர்வு ஏற்பட்டுவிடாது என்பதுதான் அதன் அர்த்தம் (!!!!)

அடுத்ததாக எனது நண்பர் சுந்தரமூர்த்தி ஒரு கருத்தை தெரிவித்தார் கிழக்குமாகாணம் குறித்து அவர் நல்ல கருத்தை தெரிவித்திருக்கிறார். உண்மையில் நாம் கிழக்கு மாகாணம் குறித்து பல வேலைகள் செய்யவேண்டும். தோழர் சுந்தரமூர்த்தி குறிப்பிட்டபடி இந்த மூன்று கட்சியினரும் கொழும்பில் ஒழிந்து கொண்டே மக்களுக்கு வேலை செய்யும் நிலை இருப்பதாகவும். கிழக்கில் நேரடியாக மக்கள் மத்தியில் வேலை செய்யும் சூழல் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறதென்றும் தெரிவித்தார்.  ஆனால் நாங்களும் வவுனியா, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலும் மக்கள் மத்தில் வேலை செய்து வருகிறோம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரம்புகிறேன் என தனது உரையில் குறிப்பிட்டார்


Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité