thuuuu

கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...

30 janvier 2008

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? எனும் தலைப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் அவர்கள் 2002 ஆம் அண்டில் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். ரவிக்குமார் அவர்கள் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர்.  அவரையும், அவரது எழுத்துக்களையும் ‘நிறப்பிரிகை’ எனும் சஞ்சிகையினூடாகவே என்னைப்போல் இலங்கை வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர் எனக் கருதலாம். ரவிக்குமார் அவர்கள் தற்போது ’காலச்சுவட்டு’ முகாமுக்குள்ளும், ‘விடுதலைச்சிறுத்தைக்’ கூட்டுக்குள்ளும் அடைபட்டு தனது தனித்துவத்தை இழந்த நிலையில் செயல்படும் ஒருவராக தோற்றமளிப்பதையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அவரது தனித்துவமிழந்த செயலுக்கான ஓர் உதாரணத்தை மட்டும் இங்கே கூறலாம். ‘2007 இல் ஓர் அலசல், நீயா...நானா’ எனும் தலைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று பார்க்கக நேர்ந்தது. அந்நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், திரப்பட இயக்குனர்கள் பங்குகொண்டிருந்தார்கள். அதில் எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகளின் சட்ட மன்ற உறுப்பினருமான ரவிக்குமார் அவர்களும், எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களும் கலந்து கொண்டார்கள். ஒரு சம்பவத்தில் உங்களுக்குப் பிடித்ததும்,பிடிக்காததுமான திரப்படங்கள் எவை என நிகழ்ச்சித் தொகுப்பாளரால் கேட்கப்பட்டது. அதற்கு சாருநிவேதிதா தனக்குப் பிடித்த திரைப்படம் பரித்திவீரன், பிடிக்காத படம் சிவாஜி எனக் கூறினார். இதே கேள்வியை ரவிக்குமார் அவர்களிடம் கேட்கப்பட்டபோது. தனக்குப்பிடித்த படம் சிவாஜி என்றும் பிடிக்காத திரைப்படம் பரித்திவீரன் எனவும் பதிலளித்தார். இவரது பதில் தனித்துவமானதாக இருந்ததா அல்லது சாருநிவேதிதாவுக்கு எதிராக பதிலளித்துள்ளாரா என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் புரிந்து கொள்ளலாம். சாருநிவேதிதா ‘காலச்சுவட்டை’ப் பார்த்து சீறுபவர். அதுதான் ரவிக்குமார் சாருநிவேதிதாவைப் புரட்டியிருக்கிறார். திரைப்படம் சம்பந்தமாக நியாயமான அபிப்பிராயத்தை ரவிக்குமார் வழங்கவில்லை எனத் தோன்றுகிறது.

மேற்குறிப்பிட்ட தலைப்பில் 2002 இல் ரவிக்குமார் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட கேள்விகளானது இன்று முன்வைக்கப்படும் இலங்கைத் தமிழருக்குரிய அரசியல் உரிமைகளுக்கான இடைக்காலத் தீர்வு எனும் அம்சத்துக்குள்ளும் கேட்கப்பட வேண்டிய கேள்விகளாகவே தேங்கிக்கிடக்கிறது. அந்தவகையில் ரவிக்குமார் அவர்கள் எழுதிய கட்டுரையில் பல அம்சங்கள் விரிவாக பேசப்பட்டிருப்பினும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் மக்கள், இந்திய வம்சாவளி மக்கள், பற்றியெல்லாம் அக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் இலங்கைத் தலித் சமூகம் பற்றிய அவரின் பார்வை மட்டும் இங்கு மீள் பிரசுரமாகிறது.

2002 இல் ரவிக்குமார் அவர்கள் எழுதிய கீழ்வரும் கட்டுரையானது இன்றைய அவரது நிலைப்பாட்டிலும் அக்கருத்துக்களில் அவர் உறுதியாக இருப்பாரா என்பது எமக்கு சந்தேகமே. காரணம் அவர் புலிகளின் தீவிர பிரச்சாரக் கட்சியான திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகளின் ‘மதியுரைஞராகவும்’ முகம்காட்டும் சூழலில்….!!!


ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

(ரவிக்குமார்)

இலங்கையில் அமைதி திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளில் பிரபாகரனின் செய்தியாளர் சந்திப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என பேசப்படுகிறது. ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பினை சன் டி வி முழுமையாக ஒளி பரப்பியது.

செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குள் முஸ்லீம்களது பிரச்சனை குறித்தும், மலையக தமிழர் பிரச்சனை குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகள் முக்கியமானவை. அவற்றுக்குப் பதிலளித்த பிரபாகரன்/பாலசிங்கம் அந்தத் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்காக அழைத்திருப்பதாகவும் அதன் பின்னர் அவை குறித்து முடிவு செய்யப்படுமெனவும் தெரிவித்தனர். அதுபோலவே இப்போது அவர்களோடு உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது.

இரண்டரை மணி நேரம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்ததும் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அங்கு கேட்கப்படாத கேள்வியைக் குறித்தும் சொல்லப்படாத பதிலைக் குறித்தும் நான் கவலை கொண்டேன். ஈழத் தமிhகளில் சுமார் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையைப் பற்றி ஒருத்தரும் கேள்வி எழுப்பவுமில்லை, எனவே பதில் சொல்லப்படவுமில்லை. அதுதான் என் மன உளைச்சலுக்குக் காரணம்.

ஏன் இந்த நிலை? அங்கு தாழ்தப்பட்டோர் பிரச்சனை தீர்ந்து போய்விட்டதா? நிச்சயமாக இல்லை. ஈழத்து எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் தனது கந்தன் கருணை நாடக நு}லின் முன்னுரையில் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளதுபோல (11-12-1999) ‘’துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன, மரித்து விடவில்லை ‘’. அப்படியானால் ஏன் அது பற்றி எவரும் கேள்வி எழுப்பவில்லை.அதற்கான சமூக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடிய தாழ்த்தப்பட்டோர் அரசில் இயக்கம் தற்போது இல்லாததே அதற்கான முக்கியமான காரணமாகும். ஆனால் இலங்கையின் வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு அரசில் இயக்கங்களை உருவாக்கிஆற்றல் மிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தீண்டாமை ஒழிப்புக்காக ஆயுதம் ஏந்திப் போராடியதன் மூலம் தமிழ் நாட்டைக்காட்டிலும் முன்னே நின்றவர்கள் அவர்கள். இப்போதோ அவர்களுக்கென தனி இயக்கம் இல்லாததால், அவர்களது பிரச்சனை அங்கு எழுப்பப்படவில்லை. எனவே இன்று அங்கே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையைப் பற்றிப் பேசி அவர்களது உரிமைகள்  நிலைநாட்டப்பட ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய கடமை தமிழ் நாட்டிலுள்ள தலித் இயக்கங்களுக்கும் தலித் சிந்தனையாளர்களுக்கும் உள்ளது.

ஈழத்துச் தமிழ்ச் சமூகம் இன்று தமிழ் நாட்டுக்கு முன்னோடியாகக் காட்டப்படுகிறது.. ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘’சாதனையை‘’ இங்கே இருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் முன்னுதாரணமாகக் காட்டுகின்றனர். அதைவிடவும் வேறுசில ‘’சிறப்புகளும்‘’ ஈழத்துக்கு உண்டு. அந்த சமூகம்தான் ஆறுமுக நாவலரைத் தந்தது. ‘’பறையும், பெண்ணும், பஞ்சமரும் அடிவாங்கப் பிறந்தவை‘’ என்ற அரிய கருத்தைச் சொன்னவர் ஆறுமுகநாவலர். இன்றளவும் அங்கே வேர் கொண்டிருக்கிற சாதி வெறியை நீரூற்றி வளர்த்தவர் அவர்...

….அங்கிருக்கும் பிரச்சைனைக்கு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு எப்படி கேள்வி எழுப்பலாம் என்று யாரேனும் கேட்கலாம் ‘’இந்தியா எங்களது தந்தை நாடு‘’ எனவும் ‘’தமிழர்களோடு எங்களுக்கிருப்பது தொப்புள்கொடி உறவு‘’ எனவும் புலிகள் மீண்டும் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் நினவுபடுத்தும் உறவோ ஆதிக்கத்தின் அடிப்படையிலானது. ஆனால் இலங்கையில்தீண்டாமை என்னும் கொடுமைக்கு ஆளாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களோடு தம்மை இணைப்பதோ பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலான தோழ-மையாகும். பறையும், பெண்ணும், பஞ்சமனும் அடிபடப் பிறந்தவை என்று சாதித் திமிரோடு சொன்ன ஆறுமுகநாவலரைச் சொந்தம் பாராட்ட இங்குள்ள சாதித் தமிழர் முன்வரும்போது அதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கும்போது நாம் படுவதுபோன்ற கொடுமையை எதிர்கொண்டு அல்லல்படும் ஒருத்தனின் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள நமக்கெப்படி உரிமையில்லாமல் போய்விடும்.

அதுமட்டுமல்ல இன்று சிங்கள அரசை சமாதான மேசைக்கு இழுத்து வந்துள்ள தீரமிக்க போராட்டத்தை நடத்தியதில் தாழ்த்தப்பட்டவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். யுத்தம் அவர்களுக்கு ஒரு மதிப்பை, தேவையை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசுக் கட்சியினர் எத்தகைய நிர்ப்பந்தத்தில் அன்று தாழ்த்தப்பட்டோர் பிரச்சனையைப் பேசினார்களோ அதேவிதமான நிர்ப்பந்தத்தினால்தான் இன்று புலிகள் தாழ்த்தப்பட்டோரை இயக்கத்தில் வைத்துள்ளனர். ஆனால் தமிழரசுக் கட்சி எப்படி அவர்களை கைவிட்டதோ அப்படி புலிகளும் தாழ்த்தப்பட்டோரை கைவிடுகிற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.

;இந்த அச்சம் தேவையற்றது என சாதித் தமிழர்களால் சொல்லப்படலாம். ஆனால் இந்தியாவின் வரலாறு இந்த அச்சத்தை நியாயப் படுததுகிறது.

1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது பம்பாய் மற்றும் சென்னையிலிருந்து படைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டிருந்தன பம்பாய் ராணுவம் மகர்களையும், சென்னை ராணுவப் பிரிவு பறையர்களையும் கொண்டிருந்தது. ஆனால் 1890 ல் இந்திய ராணுவத்தில் தீண்டாதார் சேர்வதற்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது.

ஆங்கிலேய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இந்துக்கள் பெருமளவில் ராணுவத்தில் சேரவில்லை அப்போது தீண்டாதாரே பிரிட்டிஷ் ஆட்சிக்கு உற்ற துணையாய்  ராணுவத்தில் இருந்துள்ளனர். இந்திய ஆட்சி அதிகாரம்; அரசர்களது கைகளிலிருந்து பிரிட்டிஷார் கைக்கு மாறி, அரசர்கள் செல்வாக்கிழந்தபோது இந்துக்கள் பிரிட்டிஷ் படைகளில் சேர வந்தனர். ஏற்கனவே படைகளில் இருக்கும் தீண்டாதாரை விரட்டினாலன்றி தங்களுக்கு இடம் கிடைக்காது என்பதால் இந்துக்கள்  தீண்டாதாரைப் படைகளில் சேர்க்கக் கூடாது என நிர்ப்ந்திக்க ஆரம்பித்தனர். இந்துக்களின் நெருக்குதலுக்குப் பணிந்து பிரிட்டிஷ் அரசும் தடைவித்தது. தங்களுக்கு நெருக்கடியான காலத்தில் கைகொடுத்த தாழ்த்தப்பட்டோருக்கு பிரிட்டிஷ் அரசு துரோகமிழைத்தது.

அதேபோன்றதொரு நிலை இப்போது இலங்கையில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. யுத்தம் ஏற்படுத்திய ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தை சமாதானம் வந்து பறித்துக் கொண்டுவிடக்கூடாது ஏனென்றால் சமாதானம் எட்டப்பட்டு ஒரு இடைக்கால அரசு அமைந்தால் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சாதித் தமிழர்கள் மீண்டும் இலங்கைகை;குத் திரும்புவார்கள் அந்த நாடுகளில் ஊட்டி வளாத்த சாதியுணர்வையும் அவர்கள் தம்மோடு அழைத்து வருவார்கள். மீண்டும் யாழ்ப்பாண சமூகம் ஆறுமுக நாவலரின் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு  செயல்பட வேண்டிய நிலை வரும் இப்போது உயிர் அச்சத்தால் தீண்டாதாரின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்கும் சாதித் தமிழர்கள் அந்த அச்சம்  விலகிவிட்டால் மீண்டும் தம் மண்டைக்குள்ளிலிருந்து சாதிய நசச்சரவுகளை எடுத்து தெருவில் விடுவார்கள். இந்த நிலை ஏற்படாமலிருக்க சில உத்தரவாதங்களைத் தாழ்த்தப்பட்டோர் பெறவேண்டும். தற்போது மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்களோடு என்னவிதமான ஒப்பந்தம் போடப்பட்டதென்கின்ற முழுமையான விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் நீண்ட நெடுங்காலமாகத் தாழ்த்துப்பட்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் இப்போதும் நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. இந்தியாவில் இருப்பதுபோன்ற இட ஒதுக்கீடோ அரசியல் அமைப்புச் சட்டபாதுகாப்போ அல்லது அமெரிக்காவில் உள்ளது போன்ற ஒத்தாசை நடவடிக்கைகளோ ( Affirmative Actions) இலங்கையில் நடைமுறையில் இல்லை. அங்கு இருப்பது எதற்கும் பிரயோசனப்படாத 1957 ஆம் வருடத்திய சமூக குறைபாடுகள் ஒழிப்புச்  சட்டம் மட்டும்தான்.

ஆகவே தாழ்த்தப்பட்ட மக்களது பிரச்சனையென்பது முஸ்லிம்களது பிரச்சனைபோல, மலையகத் தமிழர் பிரச்சனை போல தனிக் கவனம் செலுத்தி அணுகப்பட வேண்டிய தனித்துவமான பிரச்சனையாகும்.

‘கடக்க முடியாத நிழல்‘ எனும் ரவிக்குமாரின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து  எடுக்கப்பட்ட ஒருபகுதி

Posté par assura à 19:28 - Permalien [#]


26 janvier 2008

தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் எறிகணை இணையத்திற்காக வழங்கிய செவ்வி….

எறிகணைகள்…

உங்களால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகள் தொடர்பாக புலம் பெயர்நாடுகளில் 1989ம் அண்டு முதலே தனது செயல்பாடுகளிலும் படைப்புகளிலும் தலித்திய கருத்துக்களையே வலியுறுத்திவரும் கவிஞர் சுகன் தெரிவித்திருக்கும் விமர்சனம் அல்லது விசனம் தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்…?

தேவதாசன்…

நண்பன் சுகன் தனது பேட்டியில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்ளையே தெரிவித்துள்ளார்.அது அவருக்குள்ளான முரண்பாடாகவே தெரிகிறது. உதாரணமாக தலித் அரசியலை துரோக அரசியலாக முட்டாள்தனமாக அறிமுகப்படுத்தியதாக தெரிவிக்கிறார். துரோக அரசியல் எனக்குறிப்பிடும் கருத்து நிலையை வைத்தருப்பவர்கள் தமிழ்தேசிய வெறியர்களைத்தவிர வேறு யாரும் இல்லையென்றே சொல்லலாம்.

இவர் எந்த அரசியலுக்குள் தன்னை இனம் காட்டியுள்ளார் என்பது தெளிவாகிறது. வெள்ளாளர் புலிகளுக்கு தண்ணிகாட்டுகின்றனர் எனக்குறிப்பிட்ட அதேவேளை பிரபாகரன் சாதி காப்பாற்றும் புள்ளி எனவும் குறிப்பிடுகிறார். அறுபது வருடத்திற்கு முன்னர் சிறுபான்மைத்தமிழர் மகாசபையால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் தேவை இன்னமும் உள்ளது,இப்போது இயலாத காரியம், எனவும் தலித்துகள் அதிகாரத்தை கைப்பற்றுவது இனிய கனவு, இப்படி எல்லாம் சம்பந்தம் சமபந்தம இல்லாமல் உளறியிருக்கிறார். அவர் கூறிய கருத்துக்கள் மீது அவருக்கே நம்பிக்கை இருப்பதுபோல் தெரியவில்லை.

ஜேர்மன் சுட்காட்டில (stutgart) நடைபெற்ற அரசியல் தீர்வு மாநாட்டில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் ஓர் அறிக்கை சமர்பிக்கப்பட்டு சில தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன. அம்மாநாட்டில் சுகனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.(அது வெள்ளாளத் தலைமைக்கூட்டமாக படவில்லையா.?) எனினும் எமது தீர்மானம் தொடர்பாக எக்கருத்தையும் வெளிக்காட்டவில்லை. மேலும் எம்மால் நடாத்தப்பட்ட முதலாவது தலித்மாநாடு அவர் இருக்கும் வீட்டிற்கு 500 மீற்றர் தொலைவில்தான் நடைபெற்றது. அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது,ஆனால் கலந்து கொள்ளாமல் ஒழிந்து கொண்டார்.

மூன்று வெள்ளாளத் தலைமைகள் மாநாட்டிற்கு வாழ்த்து அனுப்பியதாகவும் அது மாநாட்டில் பெருமையாக பேசப்பட்டதாகவும் விசனம் தெரிவித்துள்ளார். ஒரு வானொலியில் எமது மாநாட்டு வாழ்த்து நிகழ்ச்சியிலேயே அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதை மாநாட்டில் யாரும் பெருமையாகப் பேசவில்லை.

ஜனநாயக ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளில் ஜனநாயகம் அவசியம் எனக்கருதுபவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பது தலித் சமூக மேம்பாட்டுக்கு விரோதமானது அல்ல. ஒன்றிற்கு ஒன்று முரணாக கூறி மொத்தத்தில் தனது காழ்ப்புணர்சியை வெளிக்காட்டியுள்ளார்.

தலித் சமூகமேம்பாட்டு முன்னணி சாதனை நிகழ்த்துவோமென யாருக்கும் சவால்விடவுமில்லை, சபதமெடுக்கவும் இல்லை.சாதிய ஒடுக்குமுறை பற்றி பேசுவது தேசியத் துரோகமாகவும், இதை மூடி மறைப்பதன் மூலம் சாதிப்பிரச்சினையை தீர்த்து விடலாமெனவும் செய்யப்பட்டு வருகின்ற பொய்யான பிரச்சாரத்தினை உடைத்து இது பேசப்படவேண்டும், தீர்க்கப்படவேண்டும் அதற்கு நாம் ஒரு உந்து சக்தியாக செயல்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.

எறிகணைகள்…

உங்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டு 1வருடத்திற்க்கு மேலாகிறதென்று நினைக்கிறேன். இதுவரை இலங்கையில் இன்றும் தலித்துக்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் இடர்களுக்கு தீர்வாக அல்லது அந்த தீர்வின் அடிப்படையிலான அந்த மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வளிவகுக்கும் வகையில் எப்படியான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறீர்கள்……? இது தொடர்பாக உங்கள் முன்னணியால் முன்வைக்கப்படும் அல்லது செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் என்ன….?

தேவதாசன்…

நான் முன்னர் கூறியது போன்று தமிழ்மக்களுக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு நிர்வாக பரவலாக்கல் செய்யப்படும் போது ஆண்டாண்டு காலமாக கல்வி,பொருளாதார,வேலைவாய்பு மற்றும் பலவகையிலும் பின்தள்ளப்பட்டிருக்கும் மக்கள் மேம்படும் முகமாக இணைக்கப்பட வேண்டிய திட்டாய்வுகளை அரசியல் தலைமைகளுக்கும், தீர்வுபற்றி பேசுபவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். அந்த அறிக்கையை “தூ” இணையத்தளத்தில் நீங்கள் இப்போதும் பார்வையிடலாம்.

இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழும் தலித் மக்களுக்கு விழிப்புணர்சியை ஏற்படுத்தும் வகையிலும்,முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்கும் வகையிலும் தொடர்ந்து மாநாடுகள்,கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறோம். எமது கருத்துகளை கூறுவதற்காக “வடு” என்னும் பத்திரிகையை மாதம் ஒரு முறை வெளிக்கொண்டு வருகின்றோம். முதலாவது மாநாட்டின் தொடர்சியாக லண்டனில் இரண்டாவது மாநாடு நடைபெற இருக்கிறது. எங்களது சக்திக்கு உட்பட்ட வகையிலான வேலைத் திட்டங்தளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

எறிகணைகள்…

அண்மையில் பிரான்சில் உங்கள் அமைப்பால் நடாத்தப்பட்ட மாநாடு மிகவும் வெற்றியளித்திருப்பதாக மாநாட்டின் இறுதியில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள் எந்த வகையில் மாநாடு வெற்றியளித்துள்ளதாக கருதுகின்றீர்கள்….?

இரண்டாவது மாநாடு லண்டனில் நடாத்துவதற்காக பல நண்பர்கள் முன் வந்திருப்பதே முதலாவது மாநாட்டின் வெற்றிதானே.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கொடி பிடித்து கோசம் போடும் ரசிகர்கள் அல்ல. மாறாக மாற்றுக் கருத்துகொண்டவர்கள்,சாதிமுறை அழிவின்மீது ஆர்வம் கொண்டவர்கள், முற்போக்கு சக்திகள்,பத்திரிகையாளர்கள், இடதுசாரிகள் என பலதரப்பட்ட பல திறமைவாய்ந்த சக்திகளின் சந்திப்பாக இருந்தது. பல விடயங்கள் பேசப்பட்டன. முதலாவது மாநாடுபற்றிய தொகுப்பு புத்தக வடிவில் விரைவில் வரவிருக்கிறது.

மாநாட்டிற்கு முன்னர் இலக்கியச் சந்திப்புகளிலும், சிறு கலந்துரையாடல்களிலும் பேசப்ட்டவிடயம் இன்று தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் பேசப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் பலவிதமான எமக்கு சார்பாகவும் எம்மை விமர்சித்தும் கருத்துக்கள் வெளிவருகிறது. இவைகள் யாவும் மிகப்பெரும் வெற்றியாகவே நாம் கருதுகிறோம். தலித் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளாத பலர் இன்று ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்..

எறிகணைகள்…

மிகப்பாரம்பரிய இடதுசாரிய சிந்தனையாளர்களினாலும்,அந்த மக்களுடன் மக்களாகவே வாழ்ந்து, தலித்திய ஒடுக்கு முறைகளை சந்தித்து, அவற்றிற்கு எதிராக களத்தில் நின்று குரல்கொடுத்து போராடிய அன்றைய அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும்,போராட்டங்களுக்கும் ஈடாக அந்த மக்களிடமிருந்து அன்னியப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களால் இங்கிருந்து கொண்டு எதனைத்தான் செய்துவிட முடியும் என எண்ணுகின்றீர்கள்…?

தேவதாசன்…

தலித்துகள் தங்கள் உரிமைக்காக போராடி வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருக்கையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஈழப போராட்டம் பின்னர், ஆயுதப்பேராட்டம் எனத்தொடர்ந்து இப்போது முப்பது வருடங்கள் முடிவுற்றுப் போய்விட்டது. ஆனால் சாதிய அமைப்பு வடிவம் அப்படியே இருக்கிறது. இன்று இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசத்தில்,குறிப்பாக சாதிய ஒடுக்குமுறை பெருமளவில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் வாய்திறந்து உண்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக இருக்கும் பட்சத்தில், எப்படி சாதிய விடுதலை பற்றிப் பேசவது. சாதியம் ஆயுதத்தால் ஒடுக்கப்பட்டுள்தே தவிர அழிக்கப் படவில்லை.

சாதியம் ஒழிக்கப்பட வேண்டுமானால் சாதியினால் ஒடுக்கப்பட்டவர்களே அப்பேராட்டத்திற்கு தலைமை ஏற்கவேண்டும். அவர்களுடன் முற்போக்கு சக்திகள் கரம் சேற்கவேண்டும். ஆனால் இலங்கையில் இப்போது இது சாத்தியம இல்லை.இருப்பினும் புலம்பெயர் நாடுகளில் ஜனநாயக சூழலில் கற்கவும்,தேடவும்,விவாதிக்கவும் வாய்புகள் இருக்கிறது. அந்த வாய்புகளுள் நாம் எமது சமூகத்தின் புற்று நோயான சாதியம் பற்றியும் பேச வேண்டியது அவசியம்.

இங்கிருந்து பேசப்படும் கருத்துகள் விவாதங்கள் இலங்கையில் தமிழர் வாழும் மூலை முடுக்குகளுக்கும் போய்சேரக்கூடிய தொழில் நுட்ப வளங்கள் பரவிக்கிடக்கின்றன. அதனூடாக மக்களுக்கு செல்லக்கூடிய வாய்புகன் இருக்கின்றன.அதன் மூலம அவர்கள் கருத்துக்களை உள்வாங்குவார்கள், பரிசீலிப்பர்கள்,முடிவெடுப்பார்கள்,செயல்படுவார்கள்.

எறிகணைகள்…

இலங்கையில் தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சிப்போக்கின் ஊடான ஆளுமையின் மத்தியில் அங்கு வாழும் தமிழ் மக்களில் கூடுதலான விகிதாசாரத்தினர் இன்று தலித் மக்களாகவே இருக்ககிறார்கள். ஆயுத விதைப்பு மிகவும் தாராளமாகவே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மனித உரிமை மீறல்கள் தேசியமயமாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த ஒரு தேசிய அமைப்பின் பின்னணியும் இல்லாமல் தலித்மக்களின் பெயரிலான இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்க மாட்டாது என ஆய்வாளர்களினால் நியாயமாகவே சந்தேகம் எழுப்பப்படுகிறது. இந்த நோக்கு தவறாயின் தமிழ்மக்களின் உரிமைப்போராட்டம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் போது அந்தப்பேராட்டம் தொடர்பான எந்த முன்வரைவுகளும் இல்லாமல் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்டுவதற்கும்,அதன் தொடற்சியாக புலம் பொயர்நாடுகளில் மட்டும் மாநாடுகள் நாடாத்தப்படுவதற்குமான அவசரத்தேவை தற்போது ஏன் ஏற்பட்டது…?

தேவதாசன்…

உங்களது கேள்வி அநியாயமான சந்தேகம் தலித்சமூகம் தனது விடுதலைக்காக எப்போதெல்லாம் பேராடமுற்பட்டதோ, தமிழர் உரிமைக்கு இடையூறாக வந்துவிடும் என ஜீ.ஜீ.பொன்னம்பலம் காலத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. பாடசாலைகளில் படிப்பதற்கு அனுமதியற்ற காலத்தில் அதற்கெதிராக போராட முற்பட்டபோது வெள்ளைக்கார ஆளுநர்களுக்கு சாதிப்பிரச்சினையே கிடையாது எனக்கூறி சாதியை வளர்த்த நிலை இன்றுவரை தொடர்கிறது.

இன்று இருக்கிற எந்தத் தேசிய அமைப்பும் தலித்துகளுக்கென ஒரு அமைப்பு உருவாவதை உள்ளத்தளவில் விரும்பமாட்டாது. நான் முன்னர் கூறியது போல முப்பது வருடகாலம் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது ஒருவித நம்பிக்கையும், இன்னொருவித ஆயுதபயமும் இருந்தது. ஆனால் இந்த முப்பது வருட காலத்தில் சாதிய அமைப்பு வடிவத்தை அசைக்க எவரும் முயற்சிக்கவில்லை என்பதுதான் நிஜம்.அதனால்தான் எந்த அரசியல் இயக்கத்தையும் சாராத ஒரு சமூகவிடுதலை இயக்கமாக, பெரியாரின் கருத்துக்களை உள்ளடக்கி நாம் தனித்துவமாக செயல்படுகிறோம்.

சாதிய அமைப்புக்கு அனைத்து வெள்ளாளர்களும் எதிரிகள் அல்ல.சிலர் தாம வெள்ளாளர் என்க்கூறவே கூச்சப்படுகின்றனர். ஏன்தான் இந்தச்சாதியில் பிறந்தோம் என வெட்கப்படுகின்றனர். மாறாக பலர் ஒரு கையிலே சாதியையும் இன்னொரு கையிலே தமிழர் விடுதலையையும் தாங்கிப்பிடித்து வருகின்றனர். இதுதான் இன்றுவரையும் தமிழர்களின் அழிவிற்கு முதற் காரணமாய் இருக்கிறது.

எறிகணைகள்…

ஒரு தலித்மகனின்/மகளின் உணர்வுகளை,அவர்கள் மனதில் ஏற்படுத்தப்பட்ட வடுக்களை அவர்களாலேயே உணர்ந்து கொள்ள முடியும். “அந்தமக்களின் போர்க்குரல் அந்த மக்களிடமிருந்தே ஒலிக்கவேண்டும”. பல தலித்திய சிந்தனையாழர்களினாலும் தெரிவிக்கப்பட்ட இந்தக்கருத்தை நீங்களும் முன்னர் பலதடவைகள் வலியுறுத்தியிருந்தீர்கள். ஆனால் தற்போது உங்களால் ஆரம்பிக்கப்ப்டடுள்ள அமைப்பில் தலித்துகள் அல்லாத பலர் முன்னணி செயல்பாட்டாளர்களாக இருப்பதும்,அண்மையில் உங்களால் நடாத்தப்பட்ட பிரான்ஸ் தலித் மாநாட்டில் கூட கூடுதலான வெள்ளாளர்களே கலந்து கொண்டதும்,தொடர்ந்து லண்டனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் மாநாட்டின் ஏற்ப்பாட்டாளர்களும் கூட யாழ்ப்பாண மேலாதிக்க சிந்தனையின் வழிவந்த வெள்ளாளர்களாகவே இருப்பதும் கண்கூடு. ஏன் இந்த நிலைமை…? அல்லது இதில் தவறெதுவும் இல்லையா…? தமிழ் மக்களின் பிரச்சினையில் பலர் குளிர்காய்வது போல இடதுசாரிய தலித்திய கருத்தாழம் மிக்க தலித்துக்களான உங்களைப் போன்ற ஒரு சிலரை முன்னிலைப்படுத்தி இந்த நெருக்கடியிலும், காய்தல் நாடகம் தொடராக்கப்படுவதாக நீங்கள் உணரவில்லையா…?

தேவதாசன்…

தலித்மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்டுவரும் வலிகளை அவர்களால்தான் உணர்ந்து கொள்ளமுடியும் என்பது மிக மிக உண்மையானது. பத்து மாதம் கருவை வயிற்றிலே சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கு இருக்கும் வலி தந்தைக்கு இருக்காது என்பது உண்மைதான்.அதேவேளை பெண்ணின் வலியை புரிந்துகொண்டு அவளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் மனிதம் உள்ள ஆணைப்போலத்தான்,தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கு ஆதரவு தருவதற்கு பலர் முன்வருகிறார்கள்.

சாதி வடிவத்தை அதனூடான சாதிய ஒடுக்கு முறையை கண்டு பிடித்தவர்களோ வளர்த்தவர்களோ தலித்துக்கள் இல்லை. இலங்கை ஆறுமுகநாவலர் தொட்டு தொடர்சியாக வந்த தமிழ்த் தலைவர்கள் உரம் போட்டு வளர்த்த சாதிப்படிமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் அழிப்பது ஒவ்வொரு மனிதாபிமானமுள்ள மனிதனதும் கடமையாகும். அந்த வகையில் வெள்ளாளர்கள் மத்தியில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் எமது முயற்சிக்கு முழு ஆதரவைத் தருகின்றனர். இது அவசியமானதென்றே நாங்கள் கருதுகின்றோம்.

தலித் சமூகமேம்பாட்டு முன்னணி என்பது தலித்துக்களுக்காக தலித்துக்ளால் அமைக்கப்பட்ட முன்னணியாகும்.ஒரு காலத்தில் இலங்கையில இடதுசாரிகள் மிகப்பெரும் பலத்துடன் அரசியல் இயக்கம் நடத்தியவர்கள். சோவியத் யூனியன் உடைவு,சீனப் பொருளாதார மாற்றம், ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி என்பன சிறிய நாடான இலங்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியதென்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதன்பின்னர் உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்காளர்கள்,புரட்சியாளர்கள் பலவகையான சிந்தனைப் போக்குடன் உலகமாற்றங்களை ஆய்வுசெய்ய ஆரம்பித்தனர். இந்த அடிப்படையில்தான் பின் நவீனத்துவம்,தலித்தியம் என்பன உருப்பெற்று வளர்கிறது. இச்சிந்தனை மாற்றங்கள் இலங்கைத்தமிழர்களை பொறுத்த வரையில் ஒருசில புத்தி ஜீவிகள் மட்டத்தில் மட்டுமே ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கிறது.

இது இன்னமும் பல மட்டங்களில் பேசப்படவேண்டும், விவாதிக்கப்படவேண்டும்,பரிசீலிக்கப்படவேண்டும் இதுவும் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினர் நடாத்தும் மாநாடுகளின் நோக்கமாக இருக்கிறது. அந்த வகையில் பங்கு கொள்பவர்கள் யார்…? என்ன சாதி…? என்பது முட்டாள்தனமான பார்வையாக இருக்கும்.தலித்திய கருத்துக்களைப்பற்றி பேச முற்படுபவர்களை அதுபற்றி தேட முனைபவர்களை குளிர்காய்தலுக்குள் உள்ளடக்கி கொச்சைப்படுத்துவது விசமத்தனமானதும் சாதி அமைப்பை தொடர்ச்சியாக கட்டிக்காக்கும் முயற்சியுமாகும்.

நன்றி

Posté par assura à 17:01 - Permalien [#]

01 janvier 2008

2008 புதுவருட வாழ்த்துக்கள் யாருக்கு?
சமாதானம் என்ற மெழுகுதிரி ஏன் உருகி எரியுது?

தத்துரூபமான கற்பனைகளையும்

கற்பனைக்கெட்டாத கனவுகளையும்

சுமந்துகொண்டு இன்னும் இன்னும்

கழியும் ஆண்டுகளை

கடந்து போக வேண்டியிருக்கிறது.

உணவு உண்டுகொண்டு

இருப்பதால் மட்டும்

ஜீவன் இருக்கிறது

என்பதற்கப்பால்

நாம் எல்லோரும் கோமா நிலையிலேயே

வாழ்ந்து வருகிறோம்.

இதிலென்ன

நாள் மாறி 

வருடம் மாறி...! என்று 2007ம் ஆண்டின் பிறப்பிற்காக அனைவரும் காத்திருந்த போது எழுதினோம். அதையே திரும்பி எழுதவேண்டிய தேவையை உணருவதில் என்ன வெட்கம் என்றால் நமது வாழ்நிலைக்கு எதையும் புதிதாக எழுதிவிடத்தேவையில்லை என்றதுதான். இந்தக் கோமா நிலை கவலையளிப்பதாகத்தானே இருக்கிறது. இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கொலையில் தொடங்குகின்றதாக அனைவரும் கவலைகொண்டுள்ளோம்.

இன்று காலை மகேஸ்வரன் எம்.பி. பொன்னம்பலவாணேஸ்வரத்திற்கு வழிபாட்டுக்குப் போனபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென்பற்றிக் தேவாலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். (இதுபற்றி அந்த நேரத்தில் கிழக்கில் நடந்த எந்தக் கொலைக்கும் வாய்திறக்காத சுகனே கவலைப்பட்டு எழுதியிருந்தது நீங்கள் அறிவீர்கள்.) இப்படிஒவ்வொருவருடத் தொடக்கத்திலும் யாரையாவது இழந்து விடுகிறோம். நாம் இன்னும் இன்னுமாய் இழப்பதற்கு தயாராய் இருக்கிறோம்.ஒவ்வொரு வருடத் தொடக்கம் என்பதைவிட ஒவ்வொரு விடியலிலும் யாரையாவது தொலைத்துவிட மனம் தயாராய் இருக்கிறது. இதற்கு அப்பால் நமக்குத் தெரியாத ஒரு சமாதானம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பாசிசம் பூசிய அந்தச் சொல் குறித்த அனைத்துப் பரிமாணங்களையும் தவிர்த்து விட்டு ஒன்றும் அறியாத குழந்தையைப்போல் சமாதானம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

புதுவருடப்பிறப்பில் சமாதானம் ஏற்படவேண்டும் என்று பேசிக் கொள்ளும் அனைவரும் அது குறித்து ஒரு விசாரணயற்ற, உரையாடலற்ற தன்மையிலிருந்து வானத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமாதானம் என்ற நகைப்பிற்குரிய அந்தச்சொல் எம்மிடம் எதாவது ஒரு இடத்தில் குடிகாண்டுள்ளது என்று யாராவது அடையாளம் காட்ட முடியுமா? ஒவ்வொரு சமாதானத்திற்கு முன்னும் பின்னும் தொடர் யுத்தத்தைத்தானே கடந்திருக்கிறோம். யுத்தத்தில் நடந்த கொலைகளை விட சமாதான காலத்தில் நடந்த கொலைகளின் பட்டியல்தானே நம்மிடம் அதிகமாகவுள்ளது. அதைவிட சமாதானம் என்று இதுவரை பேசிய காலங்களில் யார் யாருடன் எல்லாம் பேசியிருக்கிறோம்? ஏன் அவை எல்லாம் சாத்தியப்படாமற் போயிற்று? முதலில் சமாதானம் யாருக்கும் யாருக்குமானது? யார் யாருக்கிடையில் சமாதானம் தேவை? யார் யார் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? சண்டையிடாதவர்கள் யார்? சண்டையிடாதவர்களுக்கு ஏன் சமாதானம்? கடந்த சமாதான காலங்களில் நாம் கண்ட படுகொலைகளின் வீரியம் என்ன? வங்காலைப ;படுகொலை, அல்லப்பிட்டிப் படுகொலை, எல்லாம் நம்மை எவ்வளவு பாசிசவாதிகளாக்கி விட்டிருக்கிறது? இதற்கப்புறம் இன்னொரு சமாதானத்தில் நாம் எவ்வளவு படுகொலைகளைச் சந்திக்கப்போகிறோம்? என்று நாம் யோசிக்காத வரையில் சமாதானம் என்ற பாசிசச் சொல் நமக்கு தேவையற்றது. புதுவருடம் என்று ஒவ்வொரு ஜனவரி 1ம் திகதியைக் கொண்டாடுவதும் தேவையற்றது.

கற்சுறா
01.01.2008

Posté par assura à 21:08 - Permalien [#]

30 décembre 2007

கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்

 




               " ஆதவன் தீட்சண்ய "

    

  க்காநாட்டின் இந்த ஜனாதிபதியும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே பதவி விலகிவிட்டார். இது எதிர் பார்க்கப்பட்டதுதான். அண்டையிலிருக்கும் உச்சாநாட்டிலும் கலீஜ்பாளையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் முழுமையாக தங்கள் பதவிக்காலத்தில் நீடிக்கிறார்கள். இங்கு அப்படியா... கடந்த பத்துவருடங்களில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தலை அறிவிப்பது, நடத்துவது, பதவியேற்கிறவர் ஜனாதிபதியாகி விட்டதன் அடையாளமாக தனது மாளிகையில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பியதும் அவர் ராஜினாமா செய்துவிடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. பக்கத்துநாடான இந்தியாவில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் நடந்ததைப்போல கக்காநாட்டு ஜனாதி பதியை யாரும் வற்புறுத்தியோ மிரட்டியோ பதவி விலகச் சொல்வதில்லை. இவர்கள் தாங்களாகவே முன்வந்து விலகிவிடுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக இங்கு தொடர்ந்து ஜனாதிபதியே இல்லாததால், இந்நாட்டிற்கு வருகிற வெளிநாட்டு அதிபர்களுக்கும் அரசர்களுக்கும் அவர்களோடு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வருகிற குட்டைக்கவுன் மொழி பெயர்ப்பாளினிகளுக்கும் வரவேற்பளித்து தேநீர் விருந்து கொடுக்கிற மிக முக்கியமான பணி முடங்கிவிட்டது. எனவே ஜனாதிபதி மாளிகையில் வாங்கி அம்பாரமாய் குமிக்கப்பட்டிருந்த டீத்தூள் பயனின்றி மக்கிக் கொண்டிருந்தது.

பழக்கதோஷத்தில் பால்காரன் தினமும் போட்டுவிட்டுப் போகும் பால் பாக்கெட்டுகள் கேட்பாரற்று வாசலில் கிடந்தன. பால் திரிந்து எழும் துர்நாற்றம் அப்பகுதியை எல்லைதாண்டிய-தாண்டாத பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதாயிருந்தது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் முக்யஸ்தர்கள், தம்மை வரவேற்று உபசரிக்க யாருமில்லையே என்ற துக்கத்தோடு அவர்களாகவே ரோட்டோர கடைகளில் வண்டியை நிறுத்தி டீ குடித்து விட்டுப் போகவேண்டியிருந்தது. தங்களுக்கிணையான அந்தஸ்தில் யாருமேயில்லாத ஒரு நாட்டிற்கு செல்லும்போது இத்தகைய அவமானங்களை சந்திக்க நேர்வது குறித்து உளைச்ச லடைந்த அவர்கள் கக்காநாட்டுடனான ராஜீய உறவுகளை துண்டித்துக் கொண்டனர். அங்கெல்லாமிருந்த கக்காநாட்டுத் தூதரகங்கள் மூடப்பட்டன.

இதற்குமுன் பதவி விலகியவர்களைப் போலவே இந்த ஜனாதிபதியும், எதற்கும் உதவாத வெறும் அலங்காரப் பதவியில் நீடித்திருப்பதைவிட ஒரு தூய்மைப் பணியாளராகி மக்களின் செப்டிங் டேங்க் சுத்தம் செய்வது, கக்கூஸ் கழுவுவது, தெருக்கூட்டுவது போன்ற வேலை களில் ஈடுபட வேண்டுமென்பதே தன் வாழ்நாள் லட்சிய மென்றும் ஆகவே தான் பதவி விலகுவதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். தான் நினைத்ததை துணிந்து பேசிட ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதினம் வரைக்கும் காத்திருக்க வேண்டிய இந்த அடிமைப் பிழைப்பை சுதந்திர வேட்கையும் மானவுணர்வுமுள்ள எந்தவொரு பிரஜையும் ஏற்கமாட்டான் என்பதை உலகறியவே அவர் இம்முடிவை எடுத்திருப்பதாய் அறிக்கை மேலும் தெரிவித்தது.

''ஆட்டுக்கு தாடியும் பூட்டுக்கு சாவியும் தேவையில்லாததைப் போலவே நாட்டுக்கு ஜனாதிபதியும் தேவையில்லை என்று எங்கள் தலைவர் அன்றே சொன்னார்'' என்று சுவரொட்டி மூலமாக ஒரு கட்சி இந்த ராஜினாமாவை வரவேற்றிருந்தது.

வீதிகளையும் கழிவறைகளையும் துப்புரவாய் சுத்தப் படுத்தி சுகாதாரத்தைப் பாதுகாத்து மக்கள் ஆரோக்கிய மாய் வாழ சேவையாற்றும் தூய்மைப் பணியாளரைவிட, நாடுநாடாய் சுற்றிக்கொண்டும்- எதுவும் புரியாத பள்ளிச் சிறார்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்போல் கண்டதையும் பேசிக்கொண்டும் இறக்குமதித் துணியாலான தேசியக்கொடியை ஏற்றிட கோடிக்கணக்கில் செலவழித்தும் திரிகிற இந்தப் பதவி நாட்டுக்கு முக்கியமல்ல என்று ஒரு ஜனாதிபதி உணர்ச்சிவயப்பட்டு பேசியதில் ஆரம்பித்ததுதான் இந்த வினை.

அப்படியானால் உபயோகமற்ற ஜனாதிபதிக்கு வழங்குவதைவிட நாட்டுக்கு மிகவும் அவசியமான தூய்மைப்பணியாளருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வழங்கத் தயாரா என்ற கேள்வி எழப் போய் கடைசியில் மலம் அள்ளும் தொழிலைச் செய்கிறவர்களுக்கு ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேல் ஒரு ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என்று அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டியதாகிவிட்டது. அது வெறும் சம்பளத்துடன் முடியவில்லை. ஜனாதிபதி மாளிகையில் 300அறைகள் உள்ளதெனில் 301 அறைகளைக் கொண்ட தாய் இருந்தது தூய்மைப் பணியாளர் குடியிருப்பு.

அதற்கு வாடகை, மின் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் எதுவும் கிடையாது. நகரின் வெளியே மாசற்ற காற்றும் குளிர்ந்த நன்னீரும் கிடைக்கும் நிலப்பரப்பில் அடர்ந்த மரங்களுக்கிடையில் மறைந்து எப்போதும் பறவைகளின் வினோத ஒலிகளில் கிறக்கமுற்று இருப்பதாய் அமைந்திருந்தன அந்த குடியிருப்புகள். குடியிருப்பில் இம்மென்றால் ஏனென்று கேட்கவும் நிறைவேற்றவும் திரும்பிய பக்கமெல்லாம் உதவியாட்கள்.

அதிகாலையில் இருசொட்டு ஒடிகோலன் விடப்பட்ட இதமான வெந்நீரில் கமகம வென குளித்து காக்கிச்சட்டை, காக்கி அரைக்கால் டிரவுசர் (பெண்களுக்கு காக்கி புடவை, ரவிக்கை) உடுத்தி கனகம்பீரமாக தூய்மைப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது அவரவர் வாசலில் சைரனும், சிவப்பு சுழல்விளக்கும் பொருத்திய கார் தயராய் நிற்கும். அவர்களது கார்களுக்கு பதிவெண்கள் கிடையாது. விஐபி அந்தஸ்தைக் குறிக்கும் 3 அல்லது 5 நட்சத்திரங்களும் அரசு இலச்சினையும் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். முகப்பில் தேசியக்கொடி. டிக்கியைத் திறந்து பணியிட உபகரணங்களாகிய துடைப்பம், தொரட்டி, ஏந்துகரண்டி, பினாயில் பாட்டில், குளோரின் பவுடர் பாக்கெட், கையுறைகள், மாஸ்க் ஆகியவை உள்ளனவா என ஒருமுறை சோதிக்கப்படும். பின் வண்டி கிளம்ப வேண்டியதுதான்.

நகரின் பிரதான சதுக்கம்வரை அணிவகுத்துச் செல்லும் அவ்வண்டிகள் அங்கிருந்து பல்வேறு பாகங்களுக்கும் பிரிந்து செல்லும் அழகே தனிதான். வழிநெடுக குழந்தைகளும் பள்ளிச்சிறாரும் பூங்கொத்துகளை ஆட்டி தெரிவிக்கும் காலை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களை ஆங்காங்கே இறக்கிவிட்டு சாலை யோரப் பூங்காக்களின் நிழலில் வண்டிகள் காத்திருக்கும். எட்டு மணியளவில் பிரபல உணவுவிடுதி ஏதாவதொன்றிலிருந்து மெய்க்காப்பாளரால் பரிசோதித்து வாங்கி வரப்படும் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொள்ள அரை மணிப்பொழுது ஓய்வு. ஓய்வின்போது புகைக்க கியூப சுருட்டு வழங்கப்படும். (பிடல் காஸ்ட்ரோவை கொல்ல சுருட்டில் மெதுநஞ்சு கலந்த சிஐஏ சதி அம்பலமான பிறகு தடயவியல் நிபுணர்களால் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே சுருட்டு வழங்கப்படுகிறது) இந்த சிற்றுண்டிக்கும் பணிநேரத்திலான மதிய உணவு, தேநீர், லாகிரி வஸ்துக்கள் போன்றவற்றுக்குமான அலவன்சுகள் ஊதியத்தை விடவும் கூடுதலாக இருந்தன. மிலிட்டரி சரக்கைப் போலவே ஸ்கேவன்ஜர் சரக்கு (கேஎம்எப்எல்) என்பதும் சமீபத்தில் புகழடைந்த ஒன்று.

ஊராரின் அசுத்தங்களை சுத்தப்படுத்தும்போது ஏற்படும் துர்நாற்றம், அசூயை, அருவருப்பு, மனசஞ்சலத்தை உணராதிருக்க குடித்த மறுநொடியிலேயே போதையின் உச்சத்தை அடைய வைக்கிற அளவுக்கு அந்த சரக்குகள் வீர்யமுள்ளவையாய் இருந்தன. இவற்றை தூய்மைப் பணியாளருக்கு வழங்குவதற்கென்றே வட்டத் தலை நகரங்களில் தனியாக கேன்டீன்களும்கூட உருவாக்கப் பட்டுள்ளன. ஆண் பெண் இருபாலருக்குமே குழந்தைகளுக்கும் இங்கு தனித்தனியாக கோட்டா உண்டு.

இருவருமே தூய்மைப் பணியாளராகவே இருக்க வேண்டியுள்ளதால் இந்த ஏற்பாடு. இவ்வகையான மது வகைகளை உலகின் பிறநாடுகளில் உயரதிகாரிகள், ராஜ வம்சத்தார் மட்டுமே உபயோகிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கக்காநாட்டு தூய்மைப் பணியாளர்கள் அவற்றை சர்வசாதாரணமாக குடித்து வந்தனர். அரிதாக குடிப்பழக்கம் இல்லாத ஒருசில பணியாளர்களின் டோக்கனைப் பயன்படுத்தி நாட்டின் உயர்குடியினர் சிலர் கள்ளத்தனமாக கோட்டாவை வாங்கிக் கொள்வது முண்டு. கண்டவர்களின் அசுத்தத்திலும் புழங்கி அலுப்பும் அயர்ச்சியும் கண்டுவிடுகிற தூய்மைப்பணியாளர்கள் மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கொள்ளும் வகையில் அவர்கள் குடும்பத்தோடு வருடத்தில் இரண்டுமுறை உலகத்தின் எப்பகுதிக்கும் சென்று உல்லாசமாய் சுற்றி ஓய்வெடுத்துத் திரும்ப இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குகிற ஏற்பாடும் நடப்பிலிருக்கிறது.

இதில்லாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்குதல் அல்லது பணியிடத்தில் வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமானால் நாட்டின் தலைமையகத்திலுள்ள ஏகேஐஎம்எஸ் (ஆல் கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆ•ப் மெடிக்கல் சயின்சஸ்) மருத்துவ மனைக்கு உடனடியாக தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். ஒருவேளை உயிரிழப்பு நேர்ந்துவிடுமெனில் அப்பணியாளரின் குடி யிருப்பும் அவர் உபயோகித்த காரும் அவரது குடும்பத்தா ருக்கே சொந்தமாக்கப்படுவதோடு இழப்பீடாக பெருந்தொகையும் மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. வாரீசுதாரருக்கு வேலையும் உண்டு. டேங்கில் இறங்கி மீண்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதின விழாவில் வீரதீர செயலுக்குரிய நாட்டின் மிகவுயரிய விருதும் பணமுடிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நட்சத்திர உணவுவிடுதியையோ நகைக்கடையையோ திறந்துவைக்கவும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்குமாறும் சுகாதார அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைக்குமாறும் புதுப்பட ப்ரிவியூ காட்சிக்கு வரவேண்டு மென்றும் தூய்மைப் பணியாளர்களை தொல்லைப் படுத்தும் போக்கு கக்காதேசத்தில் அதிகரித்து வந்தது. பேட்டிக்கான டி.வி.களின் தொல்லையும் கூடிவிட்டது. கல்லூரி மாணவர்கள், இளைய தலைமுறையினரிடயே காக்கிசட்டையும் காக்கி டிரவுசரும் பிரபலமடைந்து வந்தன. வைபவங்களிலும் கொண்டாட்டத்திற்குரிய தருணங்களிலும் ஸ்கேவஞ்சர்ஃஸ்வீப்பரைப் போல உடுத்திக்கொள்வதை மிகுந்த பெருமைக்குரியதாய் கருதும் போக்கு அவர்களிடையே பரவிவந்தது.

தூய்மைப் பணியாளருக்கு கிடைக்கிற வருமானமும் சலுகைகளும் ஊரையே சுத்தம் செய்கிறவர் என்ற மரியாதையும் இத்தொழிலுக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆசையை யாவருள்ளும் கிளறிவிட்டது. நாட்டின் மாவட்ட, மாநில, தலைமை நீதியமைப்பு களாயிருந்த எச்ச, சொச்ச, மிச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்கு தூய்மைப் பணியாளருக்கு இணையான சம்பளம் சலுகை வழங்குமாறு அரசிடம் போர்க் கொடி உயர்த்தினர். ஐ.டி படித்து முடித்ததும் டாலர் பிச்சையெடுக்க பறந்தோடி வருவோரது எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது கண்டு பதற்றமடைந்த யு.எஸ். புதிய குடியுரிமைச் சலுகைகளை அறிவித்தது. எப்போதும் திருவிழாக் கூட்டம்போல் நிரம்பி வழியும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் வெறிச்சோடத் தொடங்கின.

பாஸ்போர்ட்டை வாயில் கவ்விக்கொண்டு பிறந்தவர்கள் இப்போது ஏன் ஸ்டேட்சுக்கு செல்வதில் ஆர்வம் காட்டாமல் இப்படி தூய்மைப் பணியாளர் வேலைக்குப் பறக்கிறீர்கள் என்று கேட்டால் ‘வெளியூர் லாபமும் சரி உள்ளூர் நஷ்டமும் சரி’ என்று இளைஞர்கள் தங்கள் முடிவை நியாயப்படுத்தினர். பன்னாட்டு நிறுவனங் களை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட சிஇஓக்களை விடவும் அந்நிறுவனங்களின் ஸ்கேவஞ்சருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வாய்த்ததும் இக்காலத்தில் தான்.எனவே அவர்கள் மாதக்கடைசியில் கேளிக்கை விடுதி செலவுகளுக்கு ஸ்கேவஞ்சர்களிடம் கைமாற்று வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஸ்கேவஞ் சர்களை பசப்பி ஏமாற்றி 'சிஇஓவாக' சிக்கவைத்துவிட்டு அவர்களது துடைப்பத்தையும் மலக்கரண்டியையும் கைப்பற்றும் ரகசியமோசடியில் ஈடுபட்டனர். டாக்டர் வக்கீல் கலெக்டர்கூட இத்தகைய ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதாய் தகவலுண்டு. இதைவிட பெரிய கூத்து என்னவென்றால்இ ஜனாதிபதிகள் ராஜினாமா கொடுத்து விட்டு எஸ்எஸ்சி தேர்வெழுதி தூய்மைப் பணியாளராக ஆசைப்பட்டதுதான். (வீடுவீடாக கெஞ்சியும் ஜனாதி பதியாவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. மிஞ்சி வந்தா லும் நாமினேஷன் தாக்கலிடும் நேரத்தில் ஒன்னுக்கு வருவதாய் ஒருவிரலைக் காட்டிவிட்டு ஓடி தலைமறை வாகிவிடுகிறார்கள். கடைசியில் பக்கத்து நாடுகளி லிருந்து ஆள்பிடித்து ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு).

'ஆசையிருக்கு மலமள்ள அம்சமிருக்கு கலெக்டராக' என்பதுபோல எல்லோருக்கும் ஆசையிருந்தாலும் ஒரு தூய்மைப் பணியாளராய் சேர்வது அப்படியொன்றும் எளியக் காரியமாயிருக்கவில்லை. அதற்கான எஸ்எஸ்சி (ஸ்கேவஞ்சர்ஃ ஸ்வீப்பர் செலக்ஷன் கமிஷன்) தேர்வில் வெற்றி பெற்றாகவேண்டும். அதைக்கூட மனப்பாடம் செய்து ஒருவர் எழுதிவிட முடியும். ஆனால் செய்முறைத் தேர்வு? மகா கடினம். அதில் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்தே ஒருவரின் வேலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த செய்முறைத் தேர்வு முடிந்தபின் நேர்முகத்தேர்வு. நேர்முகத்தேர்வில் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப் படுவதாயும்இ பிரதமர் உள்ளிட்ட எவரின் சிபாரிசும் அங்கு செல்லுபடியாகாதென்றும் கருத்துள்ளது. தகுதியும் திறமையுமுள்ள விண்ணப்பதாரரை பகிரங்கப் போட்டியின் மூலமே தேர்வு செய்யவேண்டும், அல்லாவிடில் பணியின் தரம் குறைந்துவிடும் என்பதால் இத்தனை கெடுபிடிகள் நிறைந்ததாய் இருந்தது தேர்வுமுறை.

இத்தேர்வுக்கு தயார்படுத்திட நாடெங்கும் பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. செழித்த அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த, ஓய்வு பெற்ற தூய்மைப் பணி யாளர்களால் இம்மையங்கள் நிர்வகிக்கப்பட்டன. லட்ச லட்சமாய் காசுபணம் கொட்டி இடம் பிடித்து சேர்ந்து விடினும் பாடத்திட்டம் மிகக்கடுமையாகவே இருந்தது. எல்லாமே செய்முறைப் பயிற்சிதான். முதற்பாடம் தொடங்கும் முன் கேன்டீனிலிருந்து சலுகைவிலையில் பெறப்பட்ட மதுவகைகளை மூக்குமுட்ட குடித்தாக வேண்டும்.

அரைமயக்க நிலைக்காட்பட்டு மலத்தையும் சந்தனத்தையும் ஒன்றென பாவிக்கும் மனோநிலையை எய்துவதற்கே இந்த ஏற்பாடு. இருமருங்கும் பலவண் ணங்களிலும் தினுசுகளிலும் மலம் நிறைந்துள்ள தெரு வோரத்தில் அமர்ந்து மாணாக்கர்கள் தங்கள் காலை ஆகாரத்தை உண்ணவேண்டும் என்பதே முதல்பாடம். துளியும் முகச்சுளிப்பின்றி குமட்டி குடல்புரட்டி வாந்தி யெடுக்காமல் உண்போர் மட்டுமே அடுத்த பாடத்திற்கு செல்லமுடியும். இச்சோதனையில் தேறியோர் தெருவில் குமிந்துள்ள மலக்குவியல்கள்மீது சாம்பல் தூவி ஏந்து கரண்டியால் துப்புரவாக சுரண்டியள்ள வேண்டும்.

பின் தெருவை சுத்தமாகக் கூட்டி பவுடர் தெளிக்கவேண்டும். இவ்வேலைகளை செய்யும்போது டுர்டுர்ரென உலும்பிக் கொண்டு வரக்கூடிய பன்றிகளை செல்லமாக விரட்டத் தெரிந்திருக்கிறதா என்பதும் பயிற்றுநர்களால் கவனிக்கப் படும். பன்றிகள் விட்டை போடுமானால் அவற்றையும் முகங்கோணாமல் அள்ளியாக வேண்டும். தெருவிலிருந்து கிளம்பும் முன் சமுதாயக் கழிப்பிடம்ஃ கட்டணக் கழிப்பறை இருக்குமானால் அதை சுத்தப்படுத்துவதும் மாணாக்கர்களின் பாடத்திட்டத்திற்குள் வருவதுதான். இதற்குள் நடுப்பகலாகிவிடுமாதலால் அந்த கழிப்பறைத் தண்ணீரிலேயே கைகால் முகம் அலம்பி வாய் கொப்ப ளித்து அங்கேயே மதியஉணவை முடித்துக் கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகுஇ காலியாக இருக்கிற கழிப் பறையில் சற்றே ஓய்வெடுக்க அனுமதியுண்டு. கலை இலக்கிய தாகம் கொண்ட மாணவர்கள் கழிவறை சுவர்களிலும் கதவிலும் காணப்படும் ஓவியங்களையும் காவியங்களையும் இப்போது படித்துக் கொள்ளலாம்.

தமது படைப்பையும் பொறித்து வைக்கலாம். பின் கிளம்பி ஆங்காங்கே அடைத்தும் தேங்கியுமுள்ள சாக்கடைகளை சுத்தம் செய்யவேண்டும். இவ்வேலைகளின் போது வெண்ணிறச்சீருடை அணிந்திருக்க வேண்டும். காலணிக்கு அனுமதியில்லை. மனோதிடத்தை குலைய வைக்கும் இந்த ஆரம்பப் பயிற்சிகளுக்கு தாக்கு பிடித்து நிற்பவர்களே அடுத்தக் கட்டத்திற்கு உயர முடியும்.

பயிற்சி தொடங்கிய ஆறாம் மாதத்திலிருந்து செப்டிக் டேங்கில் இறங்கி அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பயிற்சி தொடங்கும். இத்தருணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு பயிற்சிமையம் பொறுப்பல்ல என்று உறுதி எழுதிக் கொடுத்தப் பின்தான் மாணவர்கள் அனுமதிக்கப் படுவர். இறங்கும்போது வாய்க்குள் புகுந்துவிடும் கழிவு நீருக்குப் பழகவேண்டி தெருவோர சாக்கடையிலிருந்து ஒரு மடக்கு குடிப்பதும், தலை மற்றும் உடலின் பல பாகங்களிலும் கழிவுகளை பூசிக்கொள்வதும், குப்பைத் தொட்டியிலிருந்து சானிடரி நாப்கின்களை எடுத்து வீசுவதும் இந்தப் பயிற்சிக்கான முன்தயாரிப்புகள். தொட்டிக்குள் இறங்கும்முன் மீண்டும் மது அருந்தி முக்கால் மயக்க நிலைக்குச் சென்றுவிட வேண்டும்.

ஒருவேளை இதுவே கூட கடைசியாய் குடிப்பதாக இருக்கக் கூடுமாதலால் தொட்டிக்குள் இறங்குபவர் எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துக்கொள்ளலாம் என்பது பொதுவாக பின் பற்றப்படும் மரபு. போதையின் உச்சத்தில் பிரக்ஞையும் மனித சுபாவங்களும் தப்பியதொரு கணத்தில் உள்ளே இறக்கிவிடப்படுவர். மீண்டு மேலேறி வருகிறவருக்கு குளிப்பதற்காக ஒருகுடம் நன்னீரும் சந்தன சோப்பும் பயிற்சிமையத்தால் வழங்கப்படுகிறது. எமன் வாயிலிருந்து மீண்டு புதுப்பிறப்பு எடுத்ததாய்க் கருதி வீடு திரும்பும் ஆண்களை குலவையிட்டு பெண்கள் வரவேற்கும் காட்சி மிகவும் நெகிழ்ச்சியானதாயிருக்கும். இச்சடங்கு கல்லூரியில் பயிலும் மாணவியருக்கானதாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடினமான இப்பயிற்சிகளை முடித்தப்பின் எஞ்சியிருப்பவை சற்றே லகுவானவைதான். அழுகியப் பிணங்களை அப்புறப்படுத்துவதுஇ செத்தமாட்டை புதைப்பது, பன்றி வளர்ப்பது, பன்றிக் கொட்டிலை சுத்தப்படுத்துவது என்ப தெல்லாம் அடுத்தடுத்து பயிற்றுவிக்கப்பட்டு வருட முடிவில் சான்றிதழ் தரப்படும். இதற்குள் எப்படியும் செலவு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் வரையாகிவிடும். பயிற்சி முடிய இரண்டுமாதம் இருக்கும்போதே பல முன்னணி தொழிற்சாலைகளும் அரசு நிறுவனங்களும் முனிசிபாலிடிகளும் மருத்துவமனைகளும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி பணிநியமன உத்தரவுகளை வழங்கி விடுவார்கள்.

எனவே பயிற்சி முடித்து வெட்டியாய் காலங்கழிக்கும் இக்கட்டான நிலை ஒருவருக்கும் நேர்வதில்லை. பயிற்சி முடித்தக் கையோடு வேலைக்கு எடுக்காவிடில் அவர்களுக்கு நறுமணங்களை நுகரக்கூடிய உணர்ச்சி கிளர்ந்து துர்நாற்றங்களுக்கு முகம் சுளிக்கும் கெடுமதி வந்து சேர்ந்துவிடுமானால் பின் அவர்களது பணித்திறன் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சி இந்த கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன.

பெண்களும் இக்கல்லூரிகளில் ஆர்வமாக சேரத் தொடங்கினர். அவர்களுக்கு இதே பாடத்திட்டத்துடன் தனித்துவமான வேறுசில பயிற்சிகளும் தரப்பட்டன. உதாரணத்திற்கு, போக்கிரிகள் வம்புதும்பு செய்தால் எதிர்த்துக் கேட்காதிருக்குமாறு குடும்பத்தில் சொல்லித்தரப்பட்டிருந்த அடக்க ஒடுக்கத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டியிருந்தது. யார் சீண்டினாலும் அந்நேரத்திற்கு கையிலுள்ள துடைப்பக்கட்டையாலோ மலக்கரண்டியாலோ பிய்த்தெறிந்துவிட வேண்டும் என்பதும், வேற்றார் தம்மை அண்டாமலிருக்குமளவுக்கு தம்மீது எப்போதும் தூர்நாற்றம் கமழுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களுக்கு உடனடி பாடமாயிருந்தது. வெற்றிலை போடுவது, புகையிலை அதக்குவது, கேன்டீனிலிருந்து வரும் மதுவகைகளை நிதானம் தப்புமளவுக்கு குடிக்கப் பழகுவதும் பாடமாயிருந்தன.

இன்னும் முதுகலைப்பட்டம் பயில விரும்புவோர் செத்த மிருகங்களின் தோல் உரித்து பதனப்படுத்துவது (ரோட்டோரம் செத்து நாறிக்கிடந்த மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்த ஐவரை கல்லால் அடித்துக் கொன்ற இந்தியக் கொடூரம் கக்காநாட்டில் நிகழாதிருக்க இப்பிரிவு மாணவர்களுக்கு 'கறுப்பு சொரிநாய்ப்படை' பாதுகாப்பு தரப்படுகிறது), தோல் தொழிற்சாலைகளில் பிராஜெக்ட் டிரெய்னியாக மூன்றுமாதம் பணியாற்றுவது, நொதித்து நாறும் தோல் கழிவுகளின் நாற்றத்திற்குப் பழகும் பொருட்டு மூக்கின் நுகரும் திறனை செயலிழக்கச் செய்யும் யோகா பயில்வது, செருப்பு தைக்கப் பழகியபின் பொது இடங்களில் வாடிக்கையாளரை ஈர்த்து அறுந்த செறுப்புகளைத் தைத்து பாலிஷ் போட்டு பளபளப்பாக்குவது ஆகிய பாடங்களை கூடுதலாய் கற்க வேண்டியிருந்தது. இதிலும் தேறிவிட்டால் பிறகென்ன.. ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேல் ஒருரூபாய் கூடுதலாகவும் முன்சொன்ன இதர சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கண்ணியமாக வாழ வேண்டியது அவரவர் பொறுப்பாகி விடுகிறது.

மிகப்பெரும் வேலைவாய்ப்புச் சந்தையாக திடீரென மவுசு கண்டுவிட்ட இத்துறையில் மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்ட பிறகுதான் இத்தொழிலில் நிபுணர்களையும் 'ஆய்' வாளர்களையும் உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் கே.ஐ.டி (கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்கள் நீண்டகாலமாக செயல்பட்டுவருவதும் அங்கு மேற்சொன்ன பாடங்களில் பட்ட மேற்படிப்புகள் இருப்பதும் தெரியவந்தது. ஒரு ரகசிய அல்லது தலைமறைவு ஸ்தாபனம்போல் செயல்பட்டு வந்த இந்த 17 கேஐடிகளுக்கும் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துவரும் அதிர்ச்சியான தகவலும் சமீபத்தில் தான் அம்பலமானது.

சங்கேதக்குறிகளைக் கொண்டு வெளியாகும் இந்நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விளம்பரங்களை மாயமந்திரங்கள் தொடர்பானது என்றஞ்சி கருத்தூன்றி கவனியாது விட்டதன் விளைவாக கக்காநாட்டு பெரும்பான்மை சாதியரில் ஒருவரும் கேஐடிக்குள் நுழையவேயில்லை. இங்கே யார் படிக்கிறார்கள், அவர்கள் எங்கே பணியாற்றுகின்றனர் என்பதும் எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இத்தனைக்காலமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கிருந்ததிய சேரிக்குள் நுழைந்தால் தீட்டு எனக்கூறி அந்தப் பக்கம் யாருமே எட்டிப்பார்க்காததால் அங்கிருந்த மாணவர்கள்தான் கேஐடிக்களை ஆக்கிரமித்திருக்கிற விசயமே வெளியில் தெரியாமல் போய்விட்டது.

மலமள்ளவும் தெருக்கூட்டவும் ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தவிர மற்றப் பொழுதுகளில் கிருந்ததியர்கள் யாரும் ஊருக்குள் நுழையக் கூடாது என்ற தடையுத்தரவு அமலில் இருந்ததால் இவ்வளவு காலமும் அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாமல் போனது குறித்து பலபட்டறை சாதிகளும் தங்களுக்குள் கூடி பேசிப்பேசி மாய்ந்தனர். கேஐடியில் படித்த கிருந்ததியர்களை தூக்கிப்போக கேஐடி வளாகத்திற்குள்ளேயே பல விமானங்கள் காத்திருக்கும் விசயம் கூட எப்படி தங்களது சாதிச்சங்கத் தலைவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது என்று அவர்கள் அங்கலாய்த்துக் கிடந்தனர்.

பலபட்டறை சாதியாரும் கேஐடிக்கள் மீது கவனங் கொள்ளத் தொடங்கியதையடுத்து இவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின: இங்கு சேர்ந்து படிப்பவர்களை மிகுந்த கௌரவத்திற்குரியவர்களாய் மதிக்கும் பண்பு மேலைநாடுகளில் வளர்ந்துவிட்டிருந்தது. இங்கே படிப்போருக்கு வெளிநாடுகளில் பல கக்கூசுகள் எப்போதும் திறந்தேயிருக்கின்றன. கீழ்நிலை படிப்பாளிகளைப் போல அவர்கள் தெருக்கூட்டுவதோ சாதாரண கக்கூசு கழுவுவதோ கிடையாது. பெரிய அரண்மனைகளின் அந்தபுரம், பிரபஞ்ச, உலக அழகிகள் மற்றும் நடிகைகளின் கிறக்கமூட்டும் கழிப்பறைகள்இ ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் போன்றோரின் அதிகாரம் பொங்கும் கழிப்பிடங்கள், போப்பாண்டவர் உள்ளிட்ட மதகுரு மார்களின் புனிதமலம் போன்றவற்றை மட்டுமே அவர்கள் கையாளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

மடஃமத குரு ஒருவர் வாழையிலையில் வெளிக்கியிருந்த விசயம் (இச்சம்பவம்ஃ அசம்பாவிதத்திற்குப் பிறகு வாழையிலையில் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. தலைவாழை இலையை விரித்து பரிமாறப்படும் பதார்த்தம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளின் மலம்போல வெவ்வேறு நிறத்தோடும் மணத்தோடும் தென்படத் தொடங்கி பின் குமட்டலெடுத்து இலையிலேயே வாந்தியெடுக்கும் வரை பலரது நிலையும் சிக்க லாகிவிட்டதையடுத்து கல்யாணம் காதுகுத்து எதுவாயினும் அங்கு முற்றாக வாழையிலை தடை செய்யப்பட்டு விட்டது.

வேண்டாத விருந்தாளிகளுக்கு வாழையிலையில் உணவளித்து அவமதிக்கும் குரூரம் சமூகத்தில் தலை தூக்கி வருகிறது) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டப் பிறகுதான் மேற்சொன்ன அழகிகள், தலைவர்கள், புனிதர்களுக்கும் ஆசனவாய் இருக்கிற தென்பதையே பலரும் அறிந்துகொண்டனர். ‘எங்களுக்குத் தெரியும் தேவதைகளுக்கும் குசு வருமென்று’ என சனதருமபோதினியில் சுகன் கவிதை எழுதியபோது நம்மைப்போலவே அவர்களுக்கும் இருக்குமானால் அவர்கள் எப்படி தேவதையாக இருக்கமுடியுமென வாதிட்டு மறுத்தவர்கள் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

இதே காலகட்டத்தில் மேலை மதத் தலைவர் ஒருவர் சிறுநீர் பிரியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதை ஆன்மீகத்தில் சொஸ்தப் படுத்த முடியாதென்பதால் ஆபரேசன் செய்யப்போவதாகவும் செய்தி வெளியானது. ஆக யாராயிருந்தாலும் மலஜலம் கழித்தாக வேண்டியவர்களே என்பது உலகத்துக்கே ஊர்ஜிதமானது. அதற்கப்புறமே இங்கெல்லாம் ஸ்கேவஞ்சர்களாக இருப்பவர்கள் கேஐடியில் படித்த கிருந்ததியர்கள் என்பதும் தெரியவந்தது. உலகத்தின் கழிப்பறைகளில் கணிசமானவை மக்கள் தொகையில் மிகக்குறைவேயான கிருந்ததியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்ற விவரத்தைக் கேட்டவுடனேயே பலருக்கும் வயிற்றைக் கலக்கியது.

காலங்காலமாய் இத் தொழில்களில் ஈடுபட்டு பல தலைமுறைகளாக பயிற்சி பெற்று வந்திருக்கும் கிருந்ததியர்களே கேஐடியின் பெரும்பாலான இடங்களை ஆக்ரமித்திருந்தனர். எனவே புதிதாக இத்துறைக்கு படிக்கவிரும்பும் இதர சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாகவும் எறும்பின் மூத்திரமாகவும் அரிதாகியிருந்தது. கிருந்ததியர் ஏகபோகத்துக்கு எப்படியாவது முடிவு கட்டவேண்டுமெனப் பலபட்டறையினரும் கூடிப் பேசி கிருந்ததியரல்லாதார் கூட்டமைப்பை (•போரம் எகென்ஸ்ட் இன்ஈக்வாலிட்டி) நிறுவினர்.

கூட்டமைப்பு பலமுறை கூடிக் கலைந்தும்இ கலைந்து கூடியும் வெளியிட்ட கோரிக்கை சாசனம் கக்காநாட்டில் பெரும் பரபரப்பாகிவிட்டது. கிருந்ததியர் கட்டுப்பாட்டில் உலகத்தின் கழிப்பறைகள் இருப்பது நல்லதல்ல என்றும் அவர்கள் தயவில் தான் உலகத்தார் ஒன்னுக்கு கூட போகமுடியும் என்ற நிலை நீடிக்குமானால் அது கடும் அடக்குமுறைக்கு வழிவகுக்குமென்றும் அவ்வாறு அடக்கப்படும்போது மூத்திரப்பைகள் வலுவிழந்து உயிரிழப்பும்கூட ஏற்படுமெனவும் எடுத்தயெடுப்பில் எச்சரிக்கப்பட்டது.

மனிதனாய்ப் பிறந்த யாவருக்குமே எல்லா வகையான தகுதியும் திறமையும் இருக்கவே செய்கின்றன. ஒரு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கிருந்ததியரல்லாதாரும் மலமள்ளுவது தொடர்பான வேலைகள்இ தோலுடன் தொடர்புடையப் பணிகள்இ பிணத்தோடு தொடர்புள்ளக் காரியங்கள் யாவிலும் தமது தகுதி திறமையை வெளிப்படுத்திக் காட்டுவர். ஆனால் இத்தகுதியும் திறமையும் கிருந்ததியர்களுக்கு மட்டுமே கருவிலே திருவுடையதாய் பீற்றிக் கொள்வதைக் கேட்கவே அருவருப்பாய் இருக்கிறது. முடக்கப்பட்டுள்ள எமது அறிவும் ஆற்றலும் நாட்டின் கக்கூஸ்களுக்கு பயன்படும் வகையில் திருப்பி விடப்பட வேண்டுமானால் அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கிருந்ததியரல்லாதார் அனைவருக்கும் அவரவர் சாதிக்கேற்ப பிரதிநிதித்துவம் தரவேண்டும்.

நாட்டின் மிகவுயரிய அதிகாரமும் வருமானமும் உள்ள ஸ்கேவஞ்சர் பதவிகளை தமது சாதிபலத்திற்கும் மேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற கிருந்ததியர்கள்இ சாதி வாரி பிரதிநிதித்துவம் என்று நாங்கள் கேட்கும்போதுஇ தமது சேரிக்குள் சாதி வேற்றுமையே கிடையாதென்றும் ஊருக்குள் என்ன நிலவரமிருந்தாலும் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் மழுப்பலாக பதிலளிக்கின்றனர். இது முழு பூசணிக்காயை துளி பீயில் மறைக்கிற வேலை. இந்நாடு சாதியாகத்தான் இருக்கிறது என்பது உண்மையிலேயே கிருந்ததியருக்குத் தெரியாதா? சாதியின் காரணமாகத்தான் இவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தோம் என்பதைக்கூட மறந்துவிட்டனரா? முன்பு முத்தல நக்கம்பட்டியிலும் மருதங்குளத்திலும் ஊராட்சித் தலை வராக இருந்த இவங்காள்களை எங்காள்கள் கொன்றது கூட சாதிவித்தியாசம் இருப்பதைத்தானே காட்டியது? ஏதோ இன்றைக்கு ஸ்கேவஞ்சர் வேலைக்கு ஒரு மரியாதை வந்துவிட்டதால் தாம் ஆதியிலிருந்தே இப்படி பெருவாழ்வு வாழ்வதாய் நினைத்துக்கொள்வதா?

சாதிவாரியாக ஸ்கேவஞ்சர் பதவி நிரப்படுமானால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று கிருந்ததியர் வாதிடுகின்றனர். எமக்கும் மலத்துக்கும் எந்தத் தொடர்பு மேயில்லையா? தினமும் குறைந்தது மூன்றுவேளையாவது எங்களது இடக்கை மலத்தைத் தொடத்தானே செய்கிறது? எங்களுடையது மட்டுமின்றி எமது குழந்தைகள்இ படுத்தப் படுக்கையாகிவிடும் எம்வீட்டு கிழடுகள் ஆகியோரின் மலஜலத்தையும் சுத்தம் செய்த அனுபவம் எங்களுக்குமிருப்பதை யாராவது மறுக்கமுடியுமா? முண்ணியத்தில் ஒருவன் வாயில் திணிக்க நாங்கள் கையால் மலத்தை எடுக்கவில்லையா?

இதையெல்லாம் தொட்டக்கையால் யாருடையதை வேண்டுமானாலும் தொட்டு அள்ள முடியும்தானே...? இது என்ன பெரிய கம்பசூத்திரமா...? வீட்டுக்குள்ளேயே கக்கூசுகள் வந்த பிறகு உள்ளே வந்து கிருந்ததியர் கழுவும்பட்சம் வீடு தீட்டாகிவிடும் என்பதால் நாங்களே ஹார்பிக் மாதிரி ஏதாவதொரு கரைசலைப் பயன்படுத்தி எங்கள் வீடு களுக்குள் கழுவி சுத்தம் செய்வதில்லையா...? கறையும் அழுக்கும் இல்லாதபடி சுத்தமாக்க இந்த பிராண்ட் லிக்விட்டை பயன்படுத்துங்கள் என்று கிருந்ததியரல்லாத எத்தனையோ நடிகர்கள் கழிப்பறைத் தொட்டியை கழுவுவதைப்போல விளம்பரங்கள் வருகின்றனதானே.. என்னதான் மிக்ஸி வந்துவிட்டாலும் அம்மியில் சம்பாரம் அரைத்து குழம்புவைத்தால்தான் சுவையாக இருக்கிறது என்பதுபோல, இப்போதெல்லாம் டாய்லெட்டுகளில் ஹெல்த் வாஷ் பைப்புகள் வந்துவிட்டாலும் கையால் கழுவும் போதுதானே சுத்தமானதுபோல ஒரு திருப்தி ஏற்படுகிறது...? எனவே ஒரு கிருந்ததியனுக்கும் மலத்துக்கும் எந்தளவுக்கு தொடர்பிருக்கிறதோ அதேயளவு எங்களுக்குமுண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

சமையலறையும் பூஜையறையும் இருப்பது போலவே எங்கள் வீடுகளில் கழிப்பறையும் இருக்கிறது என்பதி லிருந்தே நாங்கள் மலத்தை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா? அந்த நேசிப்பின் வெளிப்பாட்டால்தானே நாங்கள் கக்கூசுடன் கூடிய பெட்ரூம்களை கட்டிக்கொள்கிறோம்...? அதேபோல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த செப்டிக் டேங்கில் இறங்கி ஏறும் சாமர்த்தியம் எங்களுக்கு மட்டுமே உண்டு என்று கிருந்ததியர்கள் வாதாடிக் கொண்டிருப்பார்களோ தெரியாது. நாட்டிலிருக்கிற எல்லாநதிகளும் குளங்களும் சற்றேறக்குறைய மலக்குழிகளுக்கு நிகரான அளவுக்கு மாசடைந்து சாக்கடைகளாகத்தானே தேங்கிக் கிடக்கின்றன... அவற்றில் குளித்தால் தோஷம் நீங்கும் புண்ணியம் பெருகுமென்று கிருந்ததியரல்லாத பெரும் பான்மை மக்கள் தினமும் அவற்றில் முங்கிக் குளித்து பெற்றிருக்கும் அனுபவத்தின் காரணமாக எவ்வளவு துர்நாற்றமுள்ள செப்டிக் டேங்கிற்குள்ளும் அவர்களால் பணியாற்ற முடியும் என்று கூட்டமைப்பு சவால்விட்டு அறிவிக்கிறது. இதுவன்றி ஒவ்வொரு மனிதனும் நடமாடுமொரு செப்டிக் டேங்க்தான் என்று நம்முடைய பித்தர் மரபில் சொல்லப்பட்டுள்ள தத்துவத்தையும் இவ்விடம் நினைவுகூர்தல் வேண்டும்.

உணவுப் பழக்கத்திற்கு வந்தோமென்றால் ஆடாயிருந்தாலும் கோழியாயிருந்தாலும் அதை உயிருடனேயே துள்ளத்துடிக்க சிங்கம் புலிபோல கடித்தா தின்கிறோம்... இல்லையே. செத்தபின்தானே நாங்களும் அறுத்துத்தின்கிறோம்... எனவே செத்ததைத் தின்கிறவர்கள் தாங்கள் மட்டுமே என்று கிருந்ததியர் பீற்றிக்கொள்வதில் எந்த நேர்மையும் இல்லை. அதிலும் புல் பூண்டு போன்ற தாவரவகைகளை மட்டுமே மேய்கிற சுத்த சைவப் பிராணியான மாட்டைத் தின்கிற கிருந்ததியர்களே தாழ்த்தப்பட்டவரெனில், குப்பையையும் ஏன் மலத்தையும்கூட கிளறித் தின்கிற கோழியை கபாப் என்றும் சிக்கன் 65 என்றும் வகைவகையாய் வறுத்துத் தின்கிற எங்களை மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக ஏன் கருதக்கூடாது என்பதற்கு தக்க விளக்கத்தைத் தருமாறு கிருந்ததியரையும் அரசையும் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. எங்களிடம் வாலாட்டிய எத்தனையோ கிருந்ததியரை பட்டப்பகலில் வெட்டிப் புதைத்தவர்கள் நாங்கள் என்பதை தெரிந்திருந்தும் எங்களுக்கு பிணத்தை அப்புறப்படுத்தவோ புதைக்கவோ தெரியாது என்று வாதிடுவதில் கிருந்ததியர்களின் அறிவீனம்தான் வெளிப்படுகிறது.

சுடுகாட்டில் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு பிணங்களை எரிக்கிற இவர்கள் ஒரேநேரத்தில் விண்மணியில் 44 பேரை எரித்த செழித்த அனுபவம் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து பிணம் எரிக்கத் தெரியுமா உங்களுக்கு என்று கேட்கிறார்கள். இப்படி வேண்டு மென்றே எங்களை ஆத்திரமூட்டி, எரிப்பதிலும் புதைப்பதிலும் எமக்கு நீண்டகாலமாக இருக்கும் அனுபவத்தை யெல்லாம் எங்கள் வாயாலேயே சொல்லவைத்து, பின் அதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி கொலைக்கேசில் சிக்கவைக்கப் பார்க்கும் கிருந்ததியரின் பாசிச சூழ்ச்சியை முறியடிக்க கூட்டமைப்பு உறுதி கொண்டுள்ளது.

மணியாட்டும் கைக்கு மலக்கரண்டி பிடிக்கத் தெரியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள். கண் பார்த்தால் கை செய்யும் என்பது முன்னோர் வாக்கு. அப்படியிருக்கும் போது கிருந்ததியருக்கு ஆதரவான பத்திரிகையொன்று, உச்சந்தலையில் டும்மியும் தார்ப் பாய்ச்சி வேட்டியும் கட்டிக்கொண்டு கோயிலில் மணி யாட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை, ‘அந்த மணியை கர்ப்பஸ்தானத்தில் வீசியெறிந்துவிட்டு இங்கே வாரும், உமக்கு கேஐடியில் இடம் கிடைச்சிருக்கு’ என்று கூட்ட மைப்பினர் கூப்பிடுவதைப்போல கேலிச்சித்திரம் வெளியிட்டிருப்பதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக் கிறது.

அதேபோல தப்பித்தவறி கிருந்ததியரல்லாத மாணவருக்கு கேஐடியில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டால் அவர்கள் மிகுந்த இளக்காரமாக நடத்தப்படுகின்றனர். சிறுசிறு தவறுகளுக்கும்கூட பொறுமையிழக்கும் பேராசிரியர்கள்இ ‘மக்கு.. மக்கு... நீயெல்லாம் மலமள்ள வரலேன்னு எவன் அழுதான்... உனக்கு சுட்டுப் போட்டாலும் பிணம் எரிக்க வராது. நீயெல்லாம் உன் குலத்தொழிலுக்குத்தான் லாயக்கு... இங்க வந்து ஏன் எங்க உயிரை எடுக்கிறே...’ என்று திட்டுவது வாடிக்கை யாக உள்ளது. இந்த அவமானம் தாங்காத கிருந்ததியரல் லாத குடும்பப் பிள்ளைகள் கேஐடியிலிருந்து தப்பித்து கள்ளத்தனமாய் ரயிலேறி பட்டணம் போய் இன்றைக்கு அமைச்சர்களாகவும் வியாபாரிகளாகவும் கோயில் குருக் களாகவும் வெறும் ஐநூறு ஏக்கர் கொண்ட பண்ணையாராகவும் காலந்தள்ள வேண்டிய இழி நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதெற்கெல்லாம் காரணம், கேஐடி பேராசிரியர்களில் பெரும்பாலோர் கிருந்ததிய ராய் இருப்பதே. எனவே பேராசிரியர் பதவியிலும் எமக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம்.

ஸ்கேவஞ்சர் படிப்பு மற்றும் வேலை மட்டுமல்லாது பறையடிப்பதிலும் எமக்கு இடஒதுக்கீடு தேவை என்று இப்போதே வலியுறுத்துகிறோம். தோலாலான பறையை நீங்கள் தொடக்கூடாது, தீட்டாகிவிடுவீர்கள் என்று எம்மை மிரட்டி தடுக்கப் பார்க்கின்றனர். தீட்டுப்படாத சாதி என்ற வெற்று கௌரவத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன விரல் சூப்புவதா அல்லது வேறேதையாவது சூப்புவதா? எமக்கும் ஆடுமாடுகளின் தோல்களுக்கும் எந்தத் தொடர்புமே இல்லையா? காலணிகள், இடுப்பு பெல்ட், கடிகார வார், பிரயாணப் பை என்று எங்களிடம் இல்லாத தோல் பொருட்களா? அவற்றையெல்லாம் நாங்கள் தொட்டு பயன்படுத்தவில்லையா....?

அவ்வளவு ஏன்? எமது கடவுள்களும் முனிபுங்கவர்களும் ரிஷிகளும்கூட மான்தோலின் மீதமர்ந்து தவம் செய்வதை காலண்டர்களில் கண்டதில்லையா...? நாங்கள் மிகவும் விரும்பி வாசிக்கும் மிருதங்கத்திலும் தவிலிலும்கூட தோல் இருக்கிறதே? அதையெல்லாம் நாங்கள் தொட்டு அடித்ததால் இசை எழும்பாமல் போய்விட்டதா என்ன? மிருதங்கத்தை இப்படி வாசிக்க வேண்டுமானால் பறையை அப்படி வாசிக்கவேண்டும். வேண்டுமானால் யார் வீட்டு சாவிலும் நாங்கள் அடித்து ஆடி எங்கள் தகுதி, திறமையை நிரூபிக்கத் தயாராயிருக்கிறோம்.

ஆக எப்படிப் பார்த்தாலும் கிருந்ததியருக்கும் அவரொத்த சாதியனருக்கும் மேலாக நாங்கள் யாரும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் செய்கிற எல்லாத் தொழில்களிலும் அதற்கான படிப்புகளிலும் எமக்கு இடஒதுக்கீடு தேவையென அரசையும் சொச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்துகிறோம். ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்திலிருக்கும் கட்சியினர் இவ்விசயத்தில் பாராமுகமாய் இருக்கக் கூடும் என்பதால் நாங்கள் சொச்சநீதிமன்றத்தையே பெரிதும் நம்பியிருக்கிறோம். தாங்கள் வகிக்கும் பதவி, அதற்குரிய மாண்புகள் என்றெல்லாம் மயங்கி ஒருபால் கோடாமையோடு நீதிவழங்கவேண்டும் என்று அவர்கள் துணிந்துவிடக்கூடாது. துலாக்கோலை சற்றே தாழ்த்திப் பிடித்து சுயசாதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவேண்டும் என்று பணிந்து வேண்டுகிறோம்....

‘நீதிமன்றம் திடீரென பிரம்மாண்டமான கழிப்பறையாகி விடுகிறது. ஆர்டர் ஆர்டர் என்று மேசையைத் தட்டும் சுத்தி ஒரு மலக்கரண்டியாக மாறிவிடுகிறது. தனக்குத் தானே துக்கம் அனுஷ்டிப்பதுபோல இவ்வளவுகாலமும் உடுத்தியிருந்த கருப்பு அங்கியை உதறிவிட்டு காக்கி யுடுப்பு அணிந்து கனகம்பீரமாக நீதிபதி மலமள்ளும் அழகை நீதிதேவதையானவள் கண்ணைக் கட்டியுள்ள கறுந்துணியவிழ்த்து பொறாமையோடு ரசிக்கிறாள். பின் தன் கையிலிருக்கும் தராசுத்தட்டை வாகாகப் பிடித்து அதில் அவளும் மலமள்ளத் தொடங்குகிறாள்’ - இப்படி தகுதிக்கு மீறி கனவுகண்ட குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த பதினாறு நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்திலிருந்தனர் நீதிபதிகள்.

கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஒரு ஸ்கேவஞ்சர் வரும்போது டவாலி ஒருத்தன் சைலன்ஸ் என்று அறிவித்தவுடன் யாராயிருந்தாலும் எழுந்துநின்று முகமன் கூறி ஸ்கேவஞ் சரை வரவேற்பதைப் போலவே நீதிமன்றத்துக்குள் நுழையும்போது தங்களையும் அவ்வாறு வரவேற்க வேண்டும் என்று கடந்தமாதம் அவர்கள் நடத்தியப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. ‘நீங்க என்ன ஸ்கேவஞ்சரோ, இல்ல ஸ்வீப்பரா... ஆ•ப்டர் ஆல் ஒரு ஜட்ஜ்தானே... உங்களுக்கு எதுக்கு மரியாதை தரணும்?’ என்று அரசு மறுத்துவிட்டது. ஸ்கேவஞ்சர்கள்மீது காழ்ப்பிலும் பொறாமையிலும் மேலங்கி இன்னும் கருக்குமளவுக்கு பொங்கிக்கொண்டிருந்த நீதிபதிகள் ஸ்கேவஞ்சருக்கு இணையான சம்பளம் சலுகைகள்இ மரியாதை மானம் ரோஷம், கோடைவிடுமுறை, மூன்று தலைமுறையாக நீதிபதியாக இருந்தவரின் குடும்பத்தை கண்ணியமான மாற்றுத்தொழிலில் ஈடுபடுத்தும் வகையில் அவரது வாரீசுகளில் ஒருவருக்கு ஸ்கேவஞ்சர் வேலை, நீதிபதிகளுக்கும் காக்கிச் சீருடை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.

தம் வாரீசுகளுக்காவது காக்கியுடை அணியும் கௌரவம் கிடைக்குமா அல்லது அவர்களும் தங்களைப்போலவே காலகாலத்துக்கும் நீதிபதிகளாகவே இருந்து இப்படி கருப்பு உடைக்குள் புழுங்கிச் சாக நேரிடுமோ என்ற கவலையும் அவர்களை பீடித்துக்கொண்டது. எனவே போராட்டத்தை அவசரஅவசரமாக முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பினர். கூட்டமைப்பிலிருந்த தமது சொந்தபந்தம் சிலரைத் தூண்டிவிட்டு பொதுநல வழக்கு தொடுக்கவைத்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால் கட்டிங்இ குவார்ட்டர், ஆ•ப், •புல் என்று எந்த சைஸ் பெஞ்சில் ஏறி நின்று விவாதித்தாலும் தூய்மைப் பணியாளர் நியமனத் திட்டத்தில் நீதிமன்றம் கை வைக்கவே முடியாதபடி அது அரசியல் சட்டத்தால் காப்பு செய்யப்பட்டிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.

வெறுமனே கக்காநாட்டு சட்டப் புத்தகங்களுக்குள் உலும்பிக் கொண்டிருக்காமல் இதுபோன்ற பிரச்னைகளுக்கு பல்வேறு உலகநாடுகளின் நீதிமன்றங்களும் எவ்வாறு தீர்வுகண்டன என்பதை ஆராய்வதன் மூலம் கக்காநாட்டில் கிருந்ததியர் ஏகபோகத்திற்கு முடிவுகட்டி யாவரும் ஸ்கேவஞ்சராகவும் ஸ்வீப்பராகவும் மேன்மை யடையும் வழியை கண்டடைய முடியும் என்ற நம்பினர். இவர்கள் பெரிதும் நம்பியிருந்த- இடஒதுக்கீடு விசயத்தால் பரபரப்புக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் பிரசித்திப் பெற்ற-அண்டைநாடான லிபரல் பாளையத்திலிருந்து அவர்களுக்கு விரும்பத்தக்க தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடங்கிய காலந்தொட்டு தொடர்ந்து இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இயங்கி வரும் லிபரல்பாளைய நீதிமன்றங்களை இவ்விசயத்தில் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

கருப்பு அங்கி அணிந்திருந்ததால் பெரியாரின் சீடர்களாயிருக்கக்கூடும் என்று நம்பி இந்த நீதிபதிகளிடம் ஆலோசனை கேட்க கள்ளத்தோணி ஏறி வந்த தமது மதியீனத்தை எண்ணி வெட்கப்பட்டனர் கக்காநாட்டு நீதிபதிகளும் •போரம் எகைன்ஸ்ட் இன்ஈக் வாலிட்டி அமைப்பினரும். ஆனால் இதனாலெல்லாம் அவர்கள் சோர்வடைந்து விடவில்லை. இறுதியில் தமக் கான நற்செய்தியை அவர்கள் இந்தியாவுக்குள்ளிருந்து கண்டெடுத்தனர்.

Marcel Thekaekara எழுதிய  Endless Filth என்ற புத்தகம், பலபட்டறை சாதி யினருக்கு போட்டியில்லாத ஒரு புதிய வேலைவாய்ப்புச் சந்தையை திறந்துகாட்டியது: பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது அறிமுகமாகி நடைமுறையிலிருந்து பின் கைவிடப்பட்டத் தொழில் ஒன்றைப் பற்றிய குறிப்பு அப் புத்தகத்திலிருந்தது- மலம் கழித்தப்பின் கழுவிக் கொள்வதற்கு பதிலாக டிஷ்யூ காகிதத்தால் துடைத்துக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள்இ அந்த காகிதத்தை இங்கிலாந்திலிருந்து பெருஞ்செலவில் இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததாம்.

கொள்ளையடிக்கும் காசில் பெரும்பகுதியை இப்படி குண்டி துடைக்கவே செல விட்டால் கஜானா திவாலாகிவிடும் என்ற கவலை பீடித்ததாம் பிரிட்டிஷ் விசுவாசிகளுக்கு. பிரபுஇ இனி மேல் நீங்கள் பேப்பர் வாங்க வேண்டாம்... அதற்கு பதிலாக துண்டுத்துண்டாக கிழிக்கப்பட்டிருக்கும் இந்தத் துணியிலேயே துடைத்துக் கொள்ளுங்கள். தினமும் துணியை சுத்தமாகத் துவைத்து டெட்டாலில் அலசி காய வைத்து பக்குவப்படுத்தித் தர ஆட்களை நியமித்துவிட்டால் செலவு குறையும் என்று ஆலோசனை கூறினராம். மலம் துடைத்தத் துணியை யாராவது துவைப்பார்களா என்று பிரிட்டிஷ்காரர்கள் ஆச்சர்யமாய் கேட்கஇ இந்த மாதிரியான வேலைகளைச் செய்வதற்காகத்தான் எங்கள் நாட்டில் ஒரு சாதியையே வைத்திருக்கிறோம் என்று கூறி அருந்ததியர்களை மிரட்டி துவைக்கவைத்தனராம்.

இந்தியாவில் வழக்கொழிந்துவிட்ட ‘துணியால் துடைத்துக்கொள்ளும்’ அந்த தொழில்நுட்பம் ‘துதுது- துணியால் துடைத்து தூய்மைப்படுத்திக் கொள்ளும் திட்டம்’ என்ற புதுப்பெயரில் கிருந்ததியரல்லாதாரால் கக்காநாட்டில் பிரபல்யமாக்கப்பட்டது. என்ட்லெஸ் •பில்த் புத்தகத்தைப் படித்து ரகசியமாக இதற்கென பயிற்சி எடுத்திருந்ததால் அத்துணிகளை வெளுக்கும் புதிய வேலைவாய்ப்பு முழுவதையும் கிருந்ததியரல்லா தாரே கைப்பற்றிக் கொண்டனர்.

மலம் துடைத்தத் துணியை கையால் துப்புரவாக கசக்கித் துவைக்கும் அவர்களிடமே தமது கக்கூசை கழுவும் பணியையும் ஒப்படைக்கும் வாடிக்கையாளர்கள் பெருகத் தொடங்கினர். கிருந்ததியர்களைப் பார்த்து பொறாமையில் வெந்துகொண்டிருந்த பல்வேறு தரப்பினரும் புதிதாக களமிறங்கியுள்ள கிருந்ததியரல்லாதாருக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷாருக்குப் போலவே கக்காநாட்டு மேட்டுக்குடியினருக்காக டிஷ்யூ தாள் இறக்குமதி செய்துவந்த வகையில் இதுகாறும் விரயமாகிக் கொண்டிருந்த அன்னியச் செலாவணி இனி மிச்சமாகப் போவதனாலும், மலம் துடைப்பதற்கென்று ஒவ்வொருவரும் துணி வாங்கியாக வேண்டிய நிலை உருவாகியுள்ளதால்இ நலிவடைந்து கிடக்கும் ஜவுளித் தொழில் புத்துணர்ச்சி பெறும் என்பதாலும் கக்காநாட்டு அரசாங்கமும் இந்த ‘துதுது’ தொழில்நுட்பத்திற்கு சாதகமாக நடந்துகொள்ளத் தொடங்கியது. நீராதாரம் சேதார மாவது தடுக்கப்படுவதாலும் டிஷ்யூ பேப்பர் பயன்பாடு முற்றாக ஒழிக்கப்படுவதால் காகிதக்கூழ் தயாரிக்க மரங்கள் வெட்டப்படுவது குறையுமென்பதாலும் இத்திட்டத் திற்கு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.7பில்லியன் டாலர் அளவுக்கு கழிவறைத்தாளுக்காக அமெரிக்கா செலவழிக்கிறது என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியுடன் யுஎஸ் அதிபரை கிருந்ததியரல்லாதார் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இத் தொகையில் பாதியளவுக்கு கொடுத்தாலும்கூட தங்களது சாதிகளைச் சார்ந்த இளைஞர்கள் 'துதுது' தொழில்நுட்பத் தோடு அமெரிக்கா வந்து பணியாற்றத் தயாராயிருப்ப தாக தெரிவித்தனர். தங்கள் சேவையால் மிச்சமாகும் காசைக் கொண்டு இன்னும் நாலு குண்டு செய்து ஈராக்மீது வீசலாமே என்று அவர்கள் கொடுத்த ஐடியாவால் குஷி கண்டுவிட்ட புஷ் உடனடியாக 'துதுது'வுக்கு ஒப்புதல் அளித்தார்.

அதன்படி கக்காநாட்டு கிருந்ததியரல்லாதார் அமெரிக்க கக்கூசுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். வாடிக்கையாளரை கவர்வதற்காகஇ மலம் கழிக்கும் வரை கக்கூசுக்கு வெளியே காத்திருந்து மணிச்சத்தம் கேட்டதும் உள்ளேபோய் ஆசனவாயை இவர்களே துடைத்து விடுவது, மலம் கழிக்கிறவருக்கு போரடிக்காமலிருக்க செய்தித்தாள் வாசித்துக் காட்டுவது போன்ற புதிய உத்திகளைக் கையாண்டனர். சுத்தம் செய்கிற சாக்கில் அமெரிக்கர்களின் விதவிதமான பிருஷ்டங்களையும் குறிகளையும் காணும் வாய்ப்பினைப் பெற்ற இந்த பலபட்டறைச் சாதி இளைஞர்கள் எப்போதும் கிளுகிளுப் பான மனநிலையுடன் பணியாற்றிய விதம் அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

‘கையால் தொட்டுத் துடைக்கும் இன்பத்தை அனுபவியுங்கள்...’,‘ கிருந்ததியரல்லதார் கக்கூசுகளைக் கழுவும் உரிமை கிருந்ததியரல்லாதாருக்கே’இ ‘மரபுக்குத் திரும்பு வோம்... துதுது- வை விரும்புவோம்’இ ‘தண்ணீர் மிச்சம்... தாளும் மிச்சம்’இ ‘காலமெல்லாம் கிருந்தியர் கழுவிய உங்கள் கழிப்பறைகளைக் காண அலுப்பாயிருக்கிறதா...? நீங்கள் அணுகவேண்டிய முகவரி- கிருந்ததி யரல்லாதார் கூட்டமைப்பு’ என்பது போன்ற விளம்பரங் களால் கிருந்ததியர் நிலைகுலைந்துப் போயினர். உள் நாட்டில் எழுந்தப் போட்டியை சமாளிக்கமுடியாத அவர்கள் தமது பாரம்பர்யத் தொழில்களில் நீடிக்க முடியாமல் வேறுவேலைகளைத் தேடி அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளுக்கு செல்லத்தொடங்கினர். மலத்துணி கசக்கும் நுணுக்கமறிந்த கிருந்ததியரல்லாதார் தலைமுறை தலை முறையாக செய்துவந்த அர்ச்சகர், நீதிபதி, மருத்துவர், அரசு ஊழியர் போன்ற இழிதொழில்களிலிருந்து விடுபட்டு படிப்படியாக கக்காநாட்டிலும் அமெரிக்காவிலும் ஸ்கேவஞ்சர்களாகவும் ஸ்வீப்பர்களாகவும் மேன்மை அடையும் காலம் கனிந்துவிட்டது.

சுபம்.

நன்றி 'புதிய விசை'

Posté par assura à 11:55 - Permalien [#]

20 décembre 2007

para

Posté par assura à 19:39 - Permalien [#]

17 décembre 2007

துயரச் செய்தி

manaadu

பராமாஸ்டர் என அழைக்கப்படும் பரராஜசிங்கம் அவர்கள் நேற்று இரவு தனது 72 ஆவது வயதில் காலமானார். இவர் ஜேர்மனியிலுள்ள பேர்லின் நகரில் தனது புகலிட வாழ்வை மேற்கொண்டு வந்தவர். புகலிட இலக்கியச்சந்திப்பின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் 'சிந்தனை' எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் இடது சாதரிச் சிந்தனை கொண்டவராகவும் இலங்கையில் பல தொழிற் கட்சிகளின் வேலைத்திட்டங்களிலும் , அதன் போராட்டங்களிலும் பங்குபற்றியவர்.

பராமாஸ்டர் அவர்கள் தலித் சமூகங்களின் துயரங்களில் அக்கறை கொண்டவராகவும்  , சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராடிவந்தவர். கடந்த ஒக்டோபர் மாதம் பிரான்சில் நடைபெற்ற தலித் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகவும் பங்குபற்றியவர். தனது உடல் இயலா நிலைமையிலும் மிகச் சிரமத்துடனேயே தலித் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்.

இவரின் தீடீர் மரணம் பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி உறுப்பினர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக தகவல் பெற விரும்புவோர் கீழ் காணும் இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்

Sivarajan: + 49 711 441 17 69 - Suseendran: + 49 178 938 18 11 - Mahadeva Vasudevan Tel. +49 421 849 80 80 - Mobile: +49 172 430 52 24

Posté par assura à 16:04 - Permalien [#]

14 décembre 2007

இரண்டாவது தலித் மாநாடு

லண்டனிலுள்ள இலங்கைத் தலித் சமூக அக்கறையாளர்களின் ஆதரவுடன் நடைபெற இருக்கும் இரண்டாவது தலித் மாநாடு 2008 பெப்ரவரி 16-17 ஆம் திகதிகளில் நடைபெற  உள்ளது .

விபரங்களுக்கு......_

Posté par assura à 18:51 - Permalien [#]

17 novembre 2007

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளிடப்பட்டு வரும் 'வடு' சஞ்சிகையின் ஒக்டோபர் மாதப் பிரதி வெளிவரத் தாமதமாகியதால் நவம்பர் மாதப் பிரதியுடன் சேர்த்து  ஒன்றாக வெளிவருகிறது. 

வரும் பிரதியில் மாநாட்டு விபரங்களும் வெளிவருவதுடன் மாநாட்டு வரவு செலவுகளையும் எமது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றனர். மேலும் 'வடு' சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதற்கான சகல ஒத்துழைப்புகளையும் (குறிப்பாக நிதி) நல்குமாறும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியனர் வேண்டிக் கொள்கின்றனர்.

அத்துடன் மாநாட்டுச் செலவிற்காக மண்டபத்தில் நிதி உதவி செய்தவர்களுக்கும் மற்றும் பிற உதவிகள் செய்த அன்பர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு  vaduworld@hotmail.fr

conf_rance


Posté par assura à 20:17 - Permalien [#]

09 novembre 2007

karunaithasan

சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...
இது எமது தலித் சமூகங்களுக்கு வரலாற்று ரீதியாக தொடரும் மரபாகவே நீடிக்கின்றது.

சாதியத்தின் கொடுமையும் அதன் தீண்டாமை உணர்வும் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பரிமாணங்களில் தனது கோரமுகத்தைக் காட்டவே செய்கின்றது. அதன் வரலாற்றுத் தொடர்ச்சியின் மற்றோர் வடிவம்தான் அண்மையில் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கு எதிராக புகலிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்களாகும்.

ஆம்… பார்க்காமலும்... கேட்காமலும்...பேசாமலும் குந்தியிருக்கும் குரங்கு நிலைச் சமூகமென எம்மை நிரூபிக்க எத்தனிக்கும் செயல்தான் புகலிடத்தில் நிகழ்ந்து வருகிறது.

1970 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தொடர்ச்சியான தலித் சமூக விடுதலைப் போராட்டமானது தமிழ்த் தேசிய விடுதலை எனும் பெயரால் திசைமாற்றப்பட்டது.  ஆனால் தலித் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையானது தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலிலிருந்து உரித்தெடுக்க முடியாது ஊனிலும், உணர்விலும் உறைந்து நிற்கிறதே.. ஏன்..!

எமது சமூகம், எம் மத்தியில் நிலவும் சாதியம், எமது அரசியல், எமது ஆயுதப்போராட்டம், அதை முன்னெடுத்த இயக்கங்கள், சர்வதேசியக் கோட்பாடுகள் என அனைத்திலும் எமக்குள்ள அதிகபட்ச அனுபவமும்  தேர்ச்சியுமே எமது  தற்போதைய இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி எனும் வளர்ச்சி நிலை. தொடரும் யாழ்ப்பாணிய மேலாதிக்கத்தின் தொடர்ச்சிதான் எம்மை  பரந்துபட்ட சிந்தனைக்கான களம் நோக்கியும் நகர்த்தியது.

எமது முன்னெடுப்புக்களில் பல்வேறு தரப்பினர் மத்தியில் மாறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். இப்பினும். அதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் ஏற்பாடு செய்த தலித் மாநாட்டிற்கு பல்வேறு தரப்பினருடைய  ஒத்துழைப்பும, உதவிகளும, ஆலோசனைகளும் கிடைத்ததானது எம்மை உச்சாகப்படுத்தியதென்னவோ உண்மைதான்!

மாற்றுக்    கருத்தியலாளர்கள்,  ஜனநாயக முற்போக்கு சக்திகள், பல்வேறுபட்ட தமிழ் அரசியல் கட்சிகள், பல்வேறு ஊடகங்களான, இணையத் தளங்கள், வானொலிகள், பத்திரிகைகள், என நீங்கள் அனைவரும் எமக்கு பக்கபலமாக இருப்பதாகவே நாம் கருதுகிறோம். ஆனால் உங்கள் ஆதரவும், எங்களது நியாயமான கோரிக்கைகளையும் பொறுக்காத ஒரு சிலரின் நயவஞ்சக, அயோக்கியத்தனமான நடவடிக்கைகளானது எமக்கும் உங்களுக்குமிடையிலான உறவுகளையும்; எமது தலித் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளையும் சிதைக்கும் பாசிசப் போக்காக முகம் காட்டுகிறதே... ஏன்..!

தலித் மாநாடு ஆரம்பமாவதற்கு சில நாட்கள் முன்பாகவே எமது முன்னணியில் வன்முறையையும் கொலைகளையும் ஆதரிக்கும் அங்கத்தவர்கள் இருப்பதாக கேள்வி பரப்பப்பட்டது. பிற்பாடு அசோக் யோகன் கண்ணமுத்து அவர்கள் தலித் மாநாட்டிலும் இக்குற்றச்சாட்டை எம்மீது சுமத்தினார்.

கொல்லப்படுவதற்கும்... கொல்லக் கொடுப்பதற்கும் உகந்த ஒரு சமூகமாகவே எமது தலித் சமூகம் கருதப்பட்டு வருவதை எமது சமூகம் சார்ந்து சிந்திப்பவர்கள் அறிவீர்கள். இது வரலாற்று உண்மையல்லவா? ஆனால் எம்மத்தியில் கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆதரவுளிப்பவர்கள் இருப்பதாகப் புனையப்படுகிறதே ஏன்?

எம்மிடம் கொலையைத் தூண்டுபவர்களும், வன்முறை ஆதரவாளர்களும் இருப்பதாக மறைமுகமாகக் கூறி ஒற்றைக்கால் தவம் புரிகிறார்கள் இந்தத் ‘தவசிகள’. இவர்கள் வேறு யாரும் அல்ல ‘அனைத்து அராஜகங்களுக்கும’ எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகவும். மிகப் பென்னாம்பெரிய ஜனநாயகவாதிகளாகவும்  தம்மை இனம் காட்டிக் கொள்கின்ற நிழல் மனிதனான ‘கருணைதாசன்’ எனும் ‘நபரும்.’ தீப்பொறி எனும் இணையத்தளமுமே ஆகும். இவர்களையே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியை ஒழித்துக்கட்ட முனையும் நயவஞ்சகத்தனம் கொண்ட அயோக்கியத்தனமான சக்திகளாக நாம் இனம் காண்கின்றோம்.

மாநாடு முடிந்து அதனது சுமைகளை நாம் இறக்கும் முன்பாகவே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அங்கத்தவரான எம்.ஆர். ஸ்டாலின் (ஞானம்) மீதான அவுதூறுகளை மேற்படி இரு அயோக்கிய நயவஞ்சக சக்திகள் மொட்டைக் கடிதங்களாகவும், ஆதரமற்ற செய்திகளாகவும்  பரப்பிவருகிறார்கள். இதற்கான பிரதம சூத்திரதாரியாக இருப்பது நிழல் மனிதனான ‘கருணைதாசன’ என்பது எம்மைப்போலவே அம் மர்ம ‘நபரை’ நீங்களும் இனம் காண்பதொன்றும் கடினமானதல்லவே!!

இவர்களின் திட்டமும்...நயவஞ்சக நோக்கமும்.

கடந்த காலத்தில் தலித் சமூக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இடது சாரிச் சிந்தனையாளர்கள் இடையில் மௌவனமாகி அடங்கிப்போனது எதனால்? அதை நாம் அதிகம் விளக்கத்தேவையில்லை. தமிழ்த் தேசிய விடுதலை என்பதற்குள் எமது தலித் சமூகத்தையும் உள் இழுத்து.. ஆயுதம் முகம் காட்டிப் பல்லிளித்துச் சன்னதமாட...; அடங்கிப்போனது தலித் சமூகத்திற்கான கேள்விகள்.

அன்று நேராக ஆயுதம் எம்முன் நீண்டது... நாம் மௌனமானோம். அது அன்றைய வைதீக பாசிசம். இன்று எம்மீது  ஆயுதம் நீட்டத் தூண்டுகிற செயலானது நவீன பாசிசம்.

எமது அங்கத்தவர் ஞானம் கருணாவுடன் தொடர்பு கொண்டவர்.  கருணாவிடம் பணம்வாங்கி வீடுகள் சொத்துகள் வாங்கிக் குவிப்பவர். அவரின் சொந்தப் பெயர் இது. அவர் இன்ன விலாசத்தில் இருக்கிறார். இப்படி அனைத்துத் தகவல்களும் கொடுத்து... புலிகளே உங்கட எதிரிகளை நாம் காட்டியுள்ளோம் உங்களுக்கு தில் இருந்தால் போய் சுடுங்கள்....!!!  இதுதான் நவீன பாசிசம்.

இவர்கள் அனைத்து அராஜகங்களுக்கும் எதிரானவர்களாம், மிகப்பென்னாம் பெரிய ஜனநாயகவாதிகளாம். இவர்கள் தாம் ஜனநாயகத்தை நேசிப்பதாகவும், அனைத்து அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் புரட்டுகள் புனைந்து கொண்டு தமது பாசத்திற்கும்  நேசத்திற்குமான புலிகளுக்கு ஆதரவான நிதர்சனம் எனும் இணையத்திலும் எமக்கான அவதூறுகளையும் பிரசுரித்து மகிழ்கின்றார்களே . இதன் மர்மம்தான் என்ன…!!!

நிதர்சனத்தின் புனைவுகளுக்கும், தீப்பொறி, கருணைதாசன் போன்றவர்களின் புரட்டுகளுக்கும் புனைவுகளுக்கும் என்ன வேறுபாடு…! என்ன உறவு…!!!

மேலும் இந்தக் கருணைதாசன் எனும் ‘நிழல் மனிதன்’ பல மறுப்புக் கருத்துக்களெனும் தனது நிலைப்பாடுகளை புலிகளின் ஈழமுரசு பத்திரிகையின் ஊடாக பிரசுரித்தும் வருகிறார் எனும் செய்தியும் உலாவுகிறதே!! இதனதும் மர்மம்தான் என்ன…!!!

இவர்களது சதித்திட்டமானது தலித் சமூக மேம்மாட்டு முன்னணிக்கும் சேர்த்தே நிகழ்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஞானத்துடன் இருந்த தனிப்பட்ட பிரச்சனையும் தீரும். தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகளும் முடங்கிவிடும். கருணாவின் ஆள், கருணாவின் செல்வாக்கு, கருணாவின் பணம் இதெல்லாம் தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கும் சொரிகிறது. என யாழ்ப்பாணிய பொதுப் புத்தி இலகுவாகவே சாட்சியம் சொல்லும் எனும் நம்பிக்கையிலல்லவா இவர்கள் செயல்படுகிறார்கள். பாசிசத்திலே பால்குடித்து  (!!!)  வளர்ந்த ‘நபர்களாக’ அல்லவா இனம் காட்டிக் கொள்கிறார்கள் கருணைதாசனும், தீப்பொறி இணையத்தளமும்.

எமது வேலைத்திட்டத்தின் முன் நிபந்தனையாக இருப்பது கலாச்சாரப் பண்பண்பாட்டுத் தளத்திலான    சமூக    விடுதலை என்பது.    அதை   நாம்   தலித் மாநாட்டிலும் வலியுறு த்தியுள்ளோம். எமது முன்னணியின் செயற்கபட்டாளர்களில் ஒருவரான ஸ்ராலின் ஒரு தலித்தாகவும், பிராந்திய ரீதியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகவும் உள்ளார். ஒடுக்கப்படும் இப்பிரிவினர்மீது சமூக அரசியல் தளங்களில் மேலாதிகம் செலுத்துவது ‘யாழ்மையவாத’ கருத்தியலே என்பதை அடையாளம் கண்டு அவற்றை கணக்கில் எடுத்துச் செயல்படுபவர். அந்தவகையில் தான் யாழ்மேலாதிக்க அரசியல் செயல்பாடுகளுக்கு எதிராகவும், இராணுவ சக்திகளால் நிர்மூலமாக்கப்பட்ட முஸ்லிம்களுக்காகவும் அவரது குரல் கடந்த காலங்களில் பலமாக ஒலித்து வந்தது. இலக்கிய சந்திப்புகளிலும், மாற்று சஞ்சிகைகள், மற்றும் வெளியீடுகள் போன்றவற்றிலும் இருந்துவரும் அவரது பங்களிப்புகள் இவற்றை உறுதிப்படுத்தியே வந்திருக்கின்றன. புகலிட இலக்கியம் கொண்டிருக்கும் பாசிச எதிர்ப்புக் கூறுகளுக்கு எம்.ஆர்.ஸ்ராலினது பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியன அல்ல. அவர் புலியிலிருந்து கருணா பிரிந்ததன் பிற்பாடுதான் இதைப் பேசத் தொடங்கியவரல்ல என்பதையும் பலர் அறிவர். ஆகவே சமூகம் சார்ந்த சாதியப் பிரச்சனைகளையும், பிராந்தியம் சார்ந்த அரசியலிலும் ஞானம் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர். 

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் சாதியம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டுமாகவே அவரது பங்களிப்பும் நிகழ்ந்து வருகிறது. அவரது நேர்மையிலும் அவரது செயல் பாடுகளிலும்; தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய நாம் மிகுந்த நம்பிக்கையுடனேயே செயல்பட்டு வருகின்றோம். அவர் தொடர்பாக ‘குறைந்த பட்ச நேர்மையும் அற்று’ நிழல் ’நபரான’ கருணைதாசன் எழுதும்  முட்டாள்தனமான மொட்டைக்கடிதத்தையும், தீப்பொறியின் ஆதாரம் அற்ற செய்திகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு  ஈ.பி.டி இயக்கத்தின் பொருளாதார உதவியுடனேயே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணி செயல்படுகிறது எனும் குற்றச்சாட்டும் தலித் மாநாடு தொடங்கவதற்கு முன்பாகவே பரப்பப்பட்டது. இவையாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்படி நயவஞ்சக அயோக்கியத்தன முடையோரின் செயல் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

எமது த.ச.மே. முன்னணிக்கு ஆதரவு வழங்குபவர்களான ஜனநாயக முற்போக்கு சக்திகளே நீங்கள்தான் இதை பரிசீலிக்கவேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கிறீர்கள் என நாம் கருது-கின்றோம். தலித் சமூகத்தின்  கடந்த காலப் போராட்டங்கள் திசைதிருப்பப்பட்டதன் ஓர் தொடர்ச்சியாகவே நாம் இதையும் அடையாளம் காண்கின்றோம்.

அப்படி நாம் கருதுவதில் தவறுகள் இருப்பின் அதைக்களைந்து எமது சமூகத்தின் நம்பிக்கைக்கு உதவுமாறும் உங்ளைக் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது தலித் சமூகத்தின் துன்பங்களும், துயரங்களும் செவிகளில் நுழையாது வெறுமனே காற்றில் மட்டுமே கரைந்து கொண்டிருப்பதா?

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)

Posté par assura à 18:00 - Permalien [#]

02 novembre 2007

26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு

றஞ்சி

17 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் புகலிடப் பெண்கள் சந்திப்பின் 26 வது தொடர் மூன்றாவது முறையாக பிரான்சில் ஒக்ரோபர் 13, 14 ம் திகதிகளில் நடைபெற்றது.   இச் சந்திப்பை மூன்றாவது முறையாகவும் பொறுப்பெடுத்து நடத்தும் விஜியுடன்  இணைந்து சீலா, பரிமளா ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர்.  இச் சந்திப்புக்கு பிரான்ஸ், சுவிஸ் ஜேர்மன், லண்டன், அவுஸ்ரேலியா இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 40க்கு மேற்பட்ட  பெண்கள் கலந்து கொண்டதுடன்  அவுஸ்ரேலியாவிலிருந்து கவிஞர் ஆழியாளும் இந்தியாவிலிருந்து எழுத்தாளர், கவிஞர் புதியமாதவியும் இலங்கையிலிருந்து எழுத்தாளர் (விழுது அமைப்பைச்சேர்ந்த) சாந்தி சச்சிதானந்தமும்   கலந்து  சிறப்பித்திருந்தனர்.

புரிந்துணர்வுக்கான சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

முதல் நிகழ்வாக பெண்கள் சந்திப்பு பற்றிய மீளாய்வை நான் செய்தேன்.. பெண்கள் சந்திப்பினாது பெண்விடுதலை நோக்கிலான பெண்ணிய சிந்தனை கருத்தாடல்களுக்கும், அனுபவப்    பரிமாற்றங்களுக்கும் உரமேற்றும் ஒருகளமாகவே இப் பெண்கள் சந்திப்பு  இயங்கிவருகிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும், தோரணையும் இல்லாமல் பெண்ணிய நிலைப்பாட்டை முன்னெடுப்பதற்கு இத்தொடர் கூடல்கள் புகலிடப் பெண்களுக்கு பெரும் வாய்ப்பளித்திருக்கின்றது. மேலும் இங்கே பல்வேறுபட்ட கருத்;துக்களுக்கும், கொள்கைகளுக்கும் இடமளிக்கப்பட்டு பங்குபெறும் ஒவ்வொருவரும் சுதந்திரமாக தம் எண்ணங்களை வெளியிடவும் முடிகிறது. ஏதாவது ஒரு செயற்பாட்டின் ஊடாகவே நாம் எம்மிடையே அதாவது பெண்களிடையே  புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்றும்  பெண்கள் சந்திப்பு எங்கு யாரால் தொடங்கப்பட்டது, எந்தெந்த நாடுகளில் யாரால் பொறுப்பேற்கப்பட்டு பெண்கள் சந்திப்பு நடைபெற்றது பற்றியும் எடுத்துரைத்தேன்.  அத்துடன்   பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்பவர்களினால் குழு அமைக்கப்பட்டு பெண்கள் சந்திப்பு மலர் வெளிவருவதையும் சுட்டிக்காட்டியதோடு, ஆரம்பத்தில் 200, 300 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட  பெண்கள் சந்திப்பு மலர் தற்போது 1000 பிரதிகள் வரை அச்சடிக்கப்படுகின்றதையும்;, இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு இலவசமாகவும் அனுப்பி வைக்கப்படுவதையும்  சுட்டிக்காட்டி  இவை பெண்கள் சந்திப்புக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்றும் கூறினேன். பெண்கள் சந்திப்பு   பற்றிய விரிவான விவரணப்படம் ஒன்றை சென்ற ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் உமா செய்திருந்ததையும் சுட்டிக்காட்டினேன். பெண்கள் சந்திப்பின் வரலாற்றை சிலர் திசைதிருப்ப முயலுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டி  எனது நிகழ்வை   முடித்துக்கொண்டேன்.

அடுத்த நிகழ்வாக சிறுகதை எழுத்தாளர், ஊடறு ஆசிரியர்களில் ஒருவரான தேவா (ஜேர்மனி)  குடும்ப வன்முறை பற்றி எடுத்துக் கூறினார். குடும்பத்துள்ளே நடைபெறும் இத் தனிமனித போராட்டங்கள் வன்முறைகளின் உச்சகட்டத்தை தொடுகிறன. புகலிடத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான பெண்கள் தனிமை, மொழிபுரியாமை போன்றவற்றினால் தமக்கு ஏற்படும் வன்முறைகளை மூடிமறைக்க முயலுகின்றனர் இதனால் விரக்தி நிலை ஏற்பட்டு தற்கொலை செய்யக்கூடத் தயங்குவதில்லை. சிலர் தாம் வன்முறைக்கு ஆளாவது சரியானதே என நினைக்கும் மனநிலைக்கு சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு முறை சாதமாகிவிடுகிறது. இலங்கைத் தமிழர் மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு இனமக்களிடையேயும் இவ்வன்முறை கூடிக்கொண்டு வருவதாகவும், தனிப்பட்ட வாழ்க்கைமுறை, சொந்தங்கள் உறவுகள் அற்ற நிலை, பொருளாதாரச் சூழ்நிலை, ஆண் உயர்ந்தவன் என்ற கலாசாரக் கோட்பாடு போன்ற பல காரணிகள் குடும்ப வன்முறைக்கு உந்துகோல்களாக இருக்கின்றன என குறிப்பிட்டார். பாதுபாப்புத் தேடி இன்னொரு தேசத்தில் வாழுவதை மட்டுமே நிம்மதியான வாழ்வு என கருதிக்கொள்கின்றனர். அமைதியான வாழ்வு இடப்பெயர்வில் மட்டும் தங்கியில்லை. மனங்களின் அடிப்படையில் தங்கியுள்ளது. வெளிநாடுளுக்கு வந்தபின் எல்லோரும் மாறிவிடுகின்றார்கள் என்பது பெண்ணை நோக்கியே குறிவைக்கப்படும் ஆயுதம். இது சரியென ஒத்துக்கொண்டால் தாய்நாட்டில் வாழும் பெண்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாதிருக்கவேண்டுமே. மீடியாக்களில் வெளிவரும் விடயங்கள் எல்லாம் பொய்யானதாய் இருக்கவேண்டும். அகதிமுகாம்களிலும் கூட வன்முறை இருக்கிறது என்பது நாம் அறிந்ததே என குடும்பவன்முறை பற்றிய பல கருத்துக்களை தகவல்களுடன் கூறினார்.

அடுத்து ஊடறு வெளியீடாக வெளிவந்திருக்கும் மலையகப் பெண்களின் கவிதைத் தொகுதியான இசைபிழியப்பட்ட வீணையை கவிஞை ஆழியாள் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகத்தின்போது மலையகப் பெண்களின் எழுத்துக்களை அன்ரனிஜீவா போன்றோர் செய்திருந்தனர். தற்போது ஊடறுவின் முயற்சியினால் மலையகப் பெண்களின் கவிதைத்தொகுதி வெளிவருகின்றது என்றும் குறிப்பிட்டார். 1935 களில் மீனாட்சியம்மை அவர்கள் மலையக மக்களுக்காக போராடியதை 'இசைபிழியப்பட்ட வீணையில்' நினைவு கூர்ந்துள்ளார்கள் என்றும் இப் புத்தகத்தில் வெளிவந்துள்ள பல கவிதைகள் அவர்களின் வாழ்நிலையையும் அவலங்களையும் சித்தரிக்கின்றன என்றும் கூறி சில கவிதைகளைச் சுட்டிக்காட்டினார்.

புத்தகம் பற்றிய அவரின் அறிமுகத்தைத் தொடர்ந்து  பிராந்திய, சமூக பாரம்பரிய மொழி பற்றிய விவாதம்  தொடர்ந்தது. அத்துடன் 'இசைபிழியப்பட்ட வீணை' என்ற தலைப்பு மலையகப் பெண்களின் வாழ்வியலை பிதிபலிப்பதற்கான சரியான பதமா என்ற கேள்வியை புதியமாதவி தொடுத்தார்.  இசை பிழியப்பட்ட வீணை என்பதன் பொருளை மட்டும் நாம் பார்த்திருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு படைப்பு அச் சமூக, பிராந்திய மொழியினூடாக வெளிவரும்போதுதான் அதற்குரிய உண்மையான உயிர்ப்பு இருக்கும், வீணை என்ற இசைக்கருவியை எவ்வாறு மலையகத்துடன் தொடர்புபடுத்துவது என்ற கருத்துக்கள் ஆரோக்கியமான  விவாதத்தை உருவாக்கி வைத்தது.  கவிதைத் தொகுதியை கவிஞர் ஆழியாள் வெளியிட இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட கவிஞர் புதியமாதவி பெற்றுக்கொண்டார்.

உறவுச்சிக்கல்கள் என்ற தலைப்பின் கீழ் புதியமாதவியின் நிகழ்ச்சி ஆரம்பமானது அவரது ஆழமான உரை எல்லோரையும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் இழுத்து வைத்திருந்தது. புதியமாதவி  தொடர்ந்து பேசுகையில் பல போராட்டங்களுக்குப் பிறகும் பெண் மீதான வன்முறை கருத்தியல் தளம் உட்பட எல்லா தளங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் குறிப்பாக நாம் வளர்ந்ததாகக் கருதும் மேலை நாடுகளிலும்கூட பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தே வந்திருக்கிறது.

ஆனாலும் சீன நகரங்களில் திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணமாக ஒன்று உண்டு. திருமணத்திற்கு முன்பு பாலுறவு என்பதை சீன நகரவாசிகள் மிகவும் பரந்த மனதுடன் ஏற்க ஆரம்பித்துள்ளதுதானாம். சுமார் 18 வருடங்களில் பிரம்மாண்ட மாற்றங்கள் இவ் விசயத்தில் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக நகரங்களில் திருமணத்தையும் பாலுறவையும் குழப்பிக்கொள்ளும் மனப்பான்மை; மறைந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புறத்து பெண்கள் திருமணத்தைப் பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போடுகின்றனர். பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆண்-பெண் பாலியல் தீர்மானிக்கப்படுவது ஆணின் விந்திலிருந்து வெளியாகும் ஒல குரோமோசொம்களைப் பொறுத்தே என்ற அறிவியல் பரப்புரை ஆண் வாரிசுகள்., சொத்துரிமை குறித்த சமூக மதிப்பீடுகளைத் தகர்த்துள்ளது… என்று பல விடயங்களை ஆய்வுடன் தொட்டுச் சென்றது அவரது உரை. புதிய மாதவியின் உரையைத் தொடர்ந்து பல ஆரோக்கியமான  விவாதங்கள் நடைபெற்றன

புதியமாதவியைத் தொடர்ந்து பேசிய ராஜேஸ்பாலா அவர்கள் "புனிதம் என்ற போர்வையில் பெண் தற்கொலைதாரிகள்" பற்றிய சிறு குறிப்பொன்றை  வாசித்தார்.  ஆண்களால் எழுதப்பட்ட சரித்திரங்களின் மாவீரக் கதாநாயகர்களான அலெக்ஸான்தர், ஜெங்கிஸ்கான் போன்ற ஆதிக்க விரிவாக்க வெறிபிடிதவர்கள் தாங்கள் வெற்றிகொண்ட நாடுகளில் உள்ள பெண்களைப் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தியதுபோல், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஏழைகளை புலிகள் தற்கொலைதாரிகளுக்கு பயன் படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார். புராணங்களிலோ, இதிகாசங்களிலோ இல்லாத "பெண் தற்கொலைதாரிகள்" அம்சத்தை முழுக்க முழுக்கப் பாவித்து அப்பாவிப் பெண்களையும், குழந்தைகளையும் புலிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தை அவர் முன் வைத்தார். இவரின் பேச்சைத் தொடர்ந்து பலர் கேள்விகளைக் கேட்டு விவாதித்தனர். அனைத்து இயக்கங்கள் செய்யும் மனித உரிமைகளுக்கு எதிராக பலர் கருத்துக்களை கூறினர். ஆனாலும் பலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் தற்கொலைதாரிகள் பற்றிய பார்வை இவரிடம் குறைவாகவே காணப்பட்டது என்ற கருத்து அங்கு முன்வைக்கப்பட்டது.

ராஜேஸ்பாலாவின் நிகழ்வைத் தொடர்ந்து  பாரிஸை சேர்ந்த ஊடகவாதியான ஜெயா பத்மநாதன் "பெண் உடல் ரீதியாக மாற்றம் அடைந்தால் வரும் விளைவுகள்" எனும் கட்டுரையை வாசித்தார். தமிழ் பெண்களுக்கு தங்கள் உடல் மாற்றங்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் அறிவைக் கொடுக்க வேண்டும். குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம். இந்தச் சமயங்களில் எதிலெதில் கவனமாக இருக்க வேண்டும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தது.

இரண்டாம் நாள் 14.10.2007  ஞாயிற்றுக்கிழமை

தாமதமாகவே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

முதலாவது நிகழ்வாக "சிவப்பு கட்டுமரங்களும் வெள்ளை சிலந்திகளும்" என்கின்ற தலைப்பில்  கவிஞை ஆழியாள் பேசினார்.  அவுஸ்திரேலிய கவிஞைகளான வென் காவுட், யூடித் றொட்டிக்குவே, டோறதி போட்டன் போன்ற கவிஞர்களின் பெண்ணிய அரசியலைப் பற்றி எடுத்துக் கூறினார். மிகவும் ஆதர்சபூர்வமாக விளக்கிய ஆழியாள் மூன்று அவுஸ்திரேலிய பெண் கவிஞைகளின் படைப்பு உலகமும் பெண்ணிய அரசியலும், கவிதை என்ற வகைமை என்ற அடிப்படைகளில் இதை அவர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கினார். சமகாலப் பகுதியில் வாழ்ந்து இருந்தாலும் அவரவர் தேடல்களும், படைப்பு உலகமும், தேடல்களை ஒட்டிய கருத்துருவாக்கமும் அவர்கள் எடுத்துக் கையாண்டிருக்கும் படிமங்களும் வெவ்வேறானவை. இவர்களின் படைப்புகளில் சில பொதுவான அம்சங்கள் காணப்பட்டாலும், பொதுவற்ற விடயங்களே அதிகம். இந்த பொதுவற்ற தன்மையே இவர்களின் தனித்தன்மையையும், ஆளுமையையும் வெளிக்காட்டுவதுடன் பெண்ணிய அரசியலுக்கு வலுவும் சேர்க்கின்றது. அத்துடன் பெண் படைப்பாளிகளின் படைப்புலகம் சில பொதுத் தலைப்புகளுக்குள் அடங்கி விடுவதில்லை என்பதற்கு நல்ல முன்மாதிரிகளாகவும் இவர்களின் கவிதைகள் அமைகின்றன. எதை எதை எழுத விழைகிறோமோ அதை எம் அனுபவச்செறிவு, படைப்பாக்கத்திறன், ஆளுமையோடு எம் பார்வையில் எமக்கு ஏதுவான வெளிப்பாட்டு முறைமையில் பதிவு செய்வது முக்கியம். சில குறித்த தலைப்புகளுக்குள் எம்மை அடக்கிக் கொள்வது கூட ஆதிக்க மரபுகள், ஆதிக்க சக்திகள் நாமில்லாத வெளிகளில் பலப்பட வழியமைத்துவிடும் என்றார். இவற்றை பல கவிதைகளுடன் ஆதாரப்படுத்தி சுட்டிக்காட்டிய ஆழியாளின் பேச்சுத்திறனும் ஆளுமையையும் பலரையும் கவர்ந்தது.

ஆழியாளின் நிகழ்வைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து கலந்துகொண்ட எழுத்தாளரும், விழுது அமைப்பைச் சேர்ந்தவருமான சாந்தி சச்சிதானந்தம் இலங்கையின் போர்ச்சுசூழலில் பெண்களுக்கான வேலைத்திட்டங்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார். மக்கள் தங்கள் வாழ்வைத் தாமே நிர்ணயிக்கும் அளவிற்கு வலுவூட்டப்பட வேண்டுமெனில் சமூகத்தில் நிலைத்திருக்கும் அதிகாரரீதிலான உறவு முறைமைகளை அதன் சகல மட்டங்களிலும் தகர்க்க வேண்டியிருப்பதைப் எடுத்துக் கூறினார். இன்று தொண்டர் நிறுவனங்கள் செயலாக்கும் திட்டங்களை ஒரு பிரதேசத்தில் அமுல்படுத்த முன்னர் அப் பிரதேசத்தில் அடிப்படை மனிதஉரிமைகளுக்கு நேரிடும் அச்சுறுத்தல்களை கவனத்தில் எடுத்து அவற்றை ஈடுசெய்யக்கூடிய சம்பந்தப்பட்ட நிறுவனங்ளோடு இதுபற்றி ஆராயப்படுகின்றது. அதற்கு ஏற்ப இலக்குகளும் நோக்கங்களும் செயற்படுத்தப்படுகின்றன.  அவை சமூக கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட வேண்டிய தேவை உள்ளதையும்  இப்படியான  பணிகளை செயற்படுத்தப்பட அடித்தளமாக இயங்கும் நிதிக்கொடை நிறுவனங்களின் பலவீனங்களையும் சுட்டிக்காட்னார். வறியவர்களுக்கெனப் பெறப்படும் நிதிகள் அநாவசியமான பெரிய அலுவலகங்களுக்கும் குளிரூட்டிகளைச் செயற்படுத்துவதற்கும் வாகன வசதிகளுக்கும் செலவழிக்கப்படுவதையும்; மற்றும் சம்பளம் கொடுப்பதற்கும் இது பயன்படுத்தப்படுவதையும் நாம் காண்கின்றோம் என்றார். தாங்கள் எதிர்பார்க்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமல் இருக்கின்றது என்கின்ற தனது ஆதங்கத்தையும் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

சாந்தி சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை சற்று தூக்கலாக  நான் என்ற  ஒரு வித  அகங்கார தொனியாக இருந்தது.  கேள்வியொன்றுக்குப் பதிலளிக்க வேண்டி வந்தபோது அவர் அதை எதிர்கொண்ட விதம் அதிகாரத்துவத் தொனியில் அமைந்தது. அதை சுட்டிக்காட்டிய நிர்மலா இந்தவித பண்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தனது விமர்சனத்தை முன்வைத்தார். தொடர்ந்து நிர்மலா கூறுகையில், ஆசியாவிலேயே இலங்கையில்தான்; அதிகமான என்.ஜி.ஓ அமைப்புகள் உள்ளன, அவை கிட்டதட்ட 700 எனக் குறிப்பிட்டு, அவையெல்லாம் பணத்தைக் கொடுத்து உங்களை சேவை செய்யச்சொல்கிறது, ஆகவே எப்படி  நீங்கள் அவர்களிடம் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை எதிர்பார்ப்பீர்கள்? என்.ஜி. ஓ அமைப்புகள்; சொல்வதைத்தான் நீங்கள் செய்யமுடியுமே தவிர உங்களால் சுதந்திரமாக எந்த வேலையையும் செய்ய முடியாமா? என்றும் கேள்வி எழுப்பினார்  என்.ஜி.ஓ அமைப்புகள் மக்களுக்காக வேலை செய்வதில்லை என்றும் அதனால் தான் தாங்கள் லண்டனில் ஒரு எந்த என்.ஜி.ஒ  அமைப்பிடமும் பணம் வாங்காமல் சுதந்திரமாக வேலை செய்வதாகவும் குறிப்பிட்டார்.

நிர்மலாவின் கருத்தை ஏற்றுக் கொண்ட சாந்தி இலங்கையில் என்.ஜி.ஓ அமைப்புகளின் ஆதிக்கம் கூடுதல் தான் எனவும் குறிப்பிட்டார். என்.ஜி.ஓ அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள் 'விபச்சாரத்தில்' ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்பி அரியேந்திரன் பாராளுமன்றத்தில கூறியிருந்தாரே அதற்கு எதிராக உங்களது பெண்கள் அமைப்பினர் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சாந்தி, தாங்கள் பல  எதிர்ப்பு வேலைகளைச் செய்ததாகவும், அதனால் பல அரசியல் தலையீடுகள் குறுக்கீடுகள் தமக்கு எற்பட்டதாகவும்,  அத்தோடு பெண்கள் வீடுகளில் மஞ்சள் துணிகளைக் கட்டி தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததாகவும் கூறினார்.

சாந்தியின் நிகழ்வைத் தொடர்ந்து புதிய மாதவியின்  படைப்புகள் சம்பந்தமாக விஜி, ஷீலா ஆகியோர் தமது கருத்துகளைத் தெரிவித்தனர். புதியமாதவியின் கவிதைத் தொகுப்புக்களான 'நிழல்களைத் தேடி' ,' ஹே..ராம்.' போன்றவற்றில் உள்ள கவிதைகளில் முக்கியமாக மத எதிர்ப்பும், தீண்டாமை எதிர்ப்பும் அதிகமாக காணப்படுகின்றன. இவை அவர் வாழ்கின்ற சூழலை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்பட வேண்டியவை. மதங்களின் பெயரால் ஏற்படுத்தப்படும் அநியாயங்களை, கலவரங்களை மிகவும் ஆவேசமாக அந்த மதக்கடவுள்களை கேள்வி கேட்பதோடு, அவரது ஆழ்ந்த வேதனையையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. மேலும் அவரது கட்டுரை, விமர்சனங்களின் தொகுதியான 'சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள்' அறிமுகப்படுத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து தர்மினி 'மை' புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந் நூலை அறிமுகம் செய்யவென இருந்த மாதுமை சந்திப்புக்கு வரமுடியாமல் போனதால் இதை அறிமுகம் செய்ய முன்வந்தார் தர்மினி. முற்தயாரிப்பு எதுவும் இல்லாத நிலையிலும் தனது பார்வையை முன்வைத்த விதம் பாராட்டுக்குரியது. இது ஊடறுவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு என்றும் ஊடறுவில் வெளிவந்த 35 கவிஞர்களின் கவிதைகள் இவை என்றும் கூறிய தர்மினி சில கவிதைகளையும் வாசித்துக் காட்டி தனது கருத்துகளை முன்வைத்திருந்தார்.

கவிதைத் தொகுதி விமர்சனங்களைத் தொடர்ந்து  பெண்ணியவாதியான நிர்மலா 'பெண்ணியச் சிந்தனைகளும் தமிழ்பெண்களின் விடுதலையும்' என்ற தலைப்பின் கீழ் பேசினார் மிகவும் ஆழமாக மிகத் தெளிவாக தனது கருத்துக்களை முன்வைத்தார் பெண்ணியம,; தேசியம், இனத்துவம் ஆகியவற்றை முன்னெடுக்கும் கருத்தாடல்களில் விரவியுள்ள நமது தமிழ் பெண்களின் விடுதலையில் பெண் என்ற விளக்கம் உள்ளடக்கும் பிறகூறுகள் எவை? அவை முன்வைக்கும் அரசியல் உணர்வை அணுக வேண்டியது அவசியமாகும். தன்னிலையைப் புரிதல் என்பதோடு பிறஅம்சங்களுக்கும் பெண்ணியத்தின் நீர்த்துப்போகாத செயல்பாட்டு ஊக்கம் நிறைந்த கருத்து நிலையாக காட்ட முடியும். இந்த அடிப்படையில் உணர்வு பெற்ற பெண்ணால் தான் உணரமுடியும். படிநிலைத்தன்மைகள் கொண்ட சமூகம் எவ்விதம் தனது செயல்பாடுகளையும் வெளிப்பாடுகளையும் மறுக்கிறது?  நவீனத்துவம், பின்நவீனத்துவம், மார்க்சியம், தேசியம் முதலாளித்துவம் என தற்போது பேசப்பட்டு வருகின்றன. பெண்களின் பிரச்சினைகளும் பெண்ணியம் என்ற வரையறையை தாண்டிச் சென்றுகொண்டிருக்கும் காலம் இது. அதாவது பால்நிலை போன்ற பிரச்சினைகள் இன்றும் கலாச்சார கட்டுமானங்களால் பின்தள்ளப்பட்டுள்ளது. பெண்கள் தாசியாகவும், தாயாகவும் இருக்கிறாள். சமுதாயம்  பாலியல் உறவை எப்படிப் பார்க்கிறது. ஆண்-பெண் உறவு, ஒரினச்சேர்க்கையாளர்கள் என பல்வேறுபட்ட பால்நிலையைச் சேர்ந்தவர்கள் இன்று சமுதாயத்தில் உள்ளனர். 

அரசியல் களத்துள் பெண்ணின் பிரச்சினைகளைக் கொண்டு வரவும் அரசியல் பிரக்ஞையை செழுமைப்படுத்தவும் பெண்ணியம் என்பதன் கருத்துநிலை அடிப்படையாக அமைய முடியும். பெண் என்பவள் யார்? அவளது செயற்பாட்டை வெளிப்பாடுகளை தீர்மானிக்கும் சக்திகள் யாவை?  அந்தச் சக்திகள் எத்தகைய கருத்தாடல்களை கையாளுகின்றன என்பது பற்றிய விசாலமான பார்வை தேவை. சமுதாயத்தில் பெண்கள் கற்புடைய பெண்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை அவள் மீறும்போது 'விபச்சாரி' என்ற பட்டத்தில் சுடப்படுகிறாள். இப் பாலியல் பாகுபாடுகள் ஆணாதிக்க சமுதாயத்தின் கட்டுமானத்தை பலப்படுத்த உதவும் என தரனவை Batler  கூறுகின்றார்  என பல கருத்துக்களை கூறி தனது நிகழ்வை முடித்துக்கொண்டார் நிர்மலா

அடுத்து, இலங்கையில் நடைபெறுகின்ற போராட்டத்தில் இன்று சமாதானத் தீர்வுத் திட்டம் பற்றி பலமாக பேச்சுக்கள் அடிபடுவதும் அதில் பெண்களின் பங்கு அவசியம் என்பதை எந்த இயக்கமும், எந்தக் கட்சியும் கவனியாது இருப்பதையும் சுட்டிக்காட்டி யுத்தமும் பெண்களும் சமாதானத் தீர்வுகளும் என்ற தலைப்பில் விஜி கட்டுரையினை வாசித்தார். ஏற்கனவே இருக்கின்ற எமது சமூக அமைப்பில் பெண்ணின் நிலையும், போராட்டத்தினால் பெண்கள் மீது சுமத்தப்படும் சுமைகள் பற்றியும், சீரழிவுகள் பற்றியும் கவனத்திற்கு கொண்டுவந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் பங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இலங்கையில் தொடரும் போர் நிறுத்தப்பட்டு, சமாதான தீர்வுக்கான முன்னெடுப்பை கொண்டுவரவேண்டும் எனவும், அச் சமாதான பேச்சுவார்த்தைகளிலும், சமாதானத் திட்டங்களிலும் பெண்களின் பங்கு கணிசமானதாக மாற்றப்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் விவாதங்கள் நடைபெற்றன. சில நிகழ்வுகளுக்கு நேரம் பற்றாக் குறை காணப்பட்டது என்பது உண்மைதான் . பாரிஸ் பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்த விஜி, ஷீலா, பரிமளாவுக்கும் சந்திப்பை நடாத்த மண்டபத்தைத் இலவசமாக தந்துதவியத நிர்வாகத்தினருக்கும், சிற்றுண்டிகளை செய்து தந்துதவிய ரூபி, ஜெயந்தி, வசந்தி போன்றோருக்கும் நன்றிகள் சொல்லப்பட்டன.

இப் பெண்கள் சந்திப்பிலும் பல பெண்கள் மனம் திறந்து பேசினார்கள். ஆனால் பெண்கள் சந்திப்பு நடைபெற முன்னரும் நடைபெற்ற பின்னரும் தமது காழ்ப்புணர்வுகளையும் அவதூறுகளையும் புலிஆதவரளர்கள், புலி எதிர்ப்பாளர்கள்,  தம்மை மாற்றுக் கருத்தாளர்கள் என்றும் கூறிக்கொள்பவர்கள்… என ஒருசிலர் கொட்டித் தீர்த்தனர். அதிலும் வேடிக்கை என்னவெனில், ஒருசில பெண்கள் , பெண்கள் சந்திப்புக்கு  ஒருமுறை கூட வராமல் பெண்கள் சந்திப்பு பற்றிய கருத்துக்களை கூறுவதுதான்.

சிறு கூட்டமாக ஆரம்பித்த பெண்கள் சந்திப்பில் உலகெங்கிலும் இருந்து பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண்கள் எழுதுகின்றார்கள், பெண்களின் பிரச்சினைகள் பேசப்படுகின்றன என்றளவில் சமூக அக்கறையுடையோர் தாமாகவே இதில் பங்குகொண்டு தமது கருத்துக்களையோ விமர்சனங்களையோ முன்வைக்கும் சமூகக் கடமைப்பாடு உண்டு. விருப்புவெறுப்புகளைத் தாண்டிய செயற்பாடாக இது அமையும் என்பதோடு இது பெண்கள் சந்திப்பின் வளர்ச்சிக்கும் உதவும்.

அடுத்த பெண்கள் சந்திப்பு சுமதிரூபனின் வேண்டுகோளின் பெயரில் கனடாவில் நடத்துவதாகவும் முடிவுசெய்யப்பட்டது.

    

Posté par assura à 19:20 - Permalien [#]
« Accueil  1  2  3  4  5   Page suivante »