thuuuu

கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...

09 décembre 2006

நாடகம்

nadagam

    கேள்விகேட்டால் இது கதை. கேள்வி கிளம்பாத வரையிலே அது கடவுள், புராணம், மன்னர்! தலைவர்...! இதுபோல நயவஞ்சகம், துரோகம், சதி முதலியவை நிரம்பிய பல கதைகள்தான் பார்ப்பனிய புராணக் கதைகள். அவற்றில் ஒன்றுதான் இராமாயணம். இக்காவியத்தை தமிழில் மொழி பெயர்த்த கவிராயர் கம்பர் என்பதை அறிவோம். இக்காவியத்தில் அசுரனாக, அரக்கனாக, இரக்கமற்றவனாக கற்பிதப்படுத்தப்பட்ட பாத்திரம் இராவணன். அசுரத்தனம், அரக்கத்தனம், இரக்கமற்றதனம், என அனைத்தும் இராவணனிடமும், அவன் இனத்திடமுமே  உள்ளதாக பொருத்திப் புனைந்த  பார்ப்பனிய ஸனாதன கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அண்ணாத்துரை அவர்கள் ‘’ நீதிதேவன் மயக்கம்’’ எனும் தலைப்பில் ஒரு ‘பகுத்தறிவு’ நாடகத்தை எழுதியவர். அவரே தி.மு.கழகத்தின் ஸ்தாபகரும் ஆவார். தற்போது அக்கட்சி யாருக்கு சொந்தமானது!! என எவராலும் அறிதியிட்டுக் கூறமுடியாததன் காரணத்தாலும், அண்ணாத்துரையிடமும் அனுமதி பெறமுடியாத சூழ் நிலை நிலவும் நிலையில்; அந்நாடகத்தில் சில இடைச் செருகல்களைச் சொருகி... நாம் வெளியிடுகின்றோம்.

(‘’பூலோகத்திலே புதுக்கருத்துக்கள் பரவிவிட்டனவாம்! பழைய நிகழ்ச்சிகளுக்கு நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பிவிட்டது. ஆகவே இனிப் பழைய தீர்ப்புகள் செல்லுபடியாகா என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது. இதை உத்தேசித்து, புனர் விசாரணைக் கோர்ட் நியமித்திருக்கிறேன்.’’ என்று ஆண்டவன் அறிவித்தார். நீதிதேவன் வழக்கு மன்றத்தைக் கூட்டினார். முதல் புனர் விசாரணையாக, இராவணனின் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்பர், பழைய கோர்ட் தீர்ப்பின்படி இராவணன் குற்றவாளிதான், இலங்கையை அழித்தது நியாயமே. இராவணன் இரக்கமற்ற அரக்கன் என்று நீதிதேவனிடம் சமர்ப்பிக்கின்றார். இராவணன்  தன் வழக்கை தானே நடத்த இசைகிறான். கோர்ட்டிலே, நீதிவான் தலைமை தாங்குகிறார். கம்பர் ஓலைச் சுவடிகளுடன் தயாராக இருக்கிறார். சாட்சிகளாக சூர்ப்பனகையும், கைகேயியும், ஆஜராகியுள்ளனர். இராவணன் எப்போதும் போலவே கம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.)

நீதி:- இலங்காதிபனே! உன் கட்சியை எடுத்துக் கூற யாரை நியமித்திருக்கிறீர்?

இரா:- என்னையே நம்பி ஏற்றேன் இப்பணியையும்! கம்பரே! உமது கவிதையிலே கொஞ்சம் எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள்.
(கம்பர் புன்னகை புரிகிறார்)

நீதி:- உமது கட்சியை நீரே எடுத்துப் பேசப்போகிறீரா?

இரா:- ஆமாம்...நான் போதும் அதற்கு என்று நம்புகிறேன்.

நீதி:- வணங்கா முடியான் என்றோர் பெயர் உமக்குண்டா?

கம்:- பெயர் என்று கூறுவதைவிட ‘வசைமொழி’ என்பது பொருந்தும்.

இரா:- பொருத்தம் பார்ப்பதானால், வணங்காமுடியான் என்று ஓர் பழிச்சொல் உண்டு என்று கூறலாம்.

நீதி:- சொல் விளக்கத்துக்குள் நுழைய வேண்டாம். அவ்விதம் அழைக்கப்பட்டதுண்டா?

இரா:- அமாம்

நீதி:- ஏன்

இரா:- நான் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா அது!

கம்:- எவர்க்கும் வணங்கினதில்லை மதிப்பதில்லை. அவ்வளவு மண்டைக் கர்வம் என்று பொருள்படும்.

இரா:- பொருள்படும் என்று இழுப்பானேன் கம்பரே! நீரேதான் சொல்லிவிடுமே, எனக்கு மண்டைக் கர்வம் என்று!

நீதி:- எவரையும் வணங்காத காரணம்?

இரா:- அவசியம் ஏற்படாததால்!

நீதி:- தக்க சமாதானமா இது?

இரா:-நான் மட்டுமா? எத்தைனையோ மண்டலாதிபதிகள் வெற்றி வீரர்களாக இருக்கும் வரையிலே, வணங்காமுடி மன்னர்களாகத்தான் இருந்தனர்.

கம்:- அவர்கள்கூட, தமது இன்ப வல்லிகளின் தாளிலே வீழ்ந்ததுண்டு. மஞ்சத்திலே.

இரா:- நமது கம்பருக்கு அந்த ரசவர்ணனையிலே அபாரத் திறமை!

நீதி:- மாலை நேரப் பேச்சு, காலை வேலைக்கு உதவாது.

இரா:- பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்காமுடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம். வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்.

கம்:- அந்த விடயம் பற்றிய விவாதத்தை விடடு விடலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் வணங்கா முடியோன் என்ற பெயர் துரியோதனனுக்கும் உண்டு. ஆகவே, இந்தச் சில்லறைச் சிந்தனையைச் செலவிட வேண்டாம். முக்கியமான விசயத்தைக் கவனிப்போம். ஐம்புலன்களை அடக்கி, ஒடுக்கி, பரமனை வேண்டித் தவம் செய்து வந்த முனிவர்களின் யாகயோகாதி காரியங்களை இலங்காதிபன் கெடுத்து நாசமாக்கி வந்தான். இப் பெருங் குற்றத்துக்கு என்ன பதில் கூறுவான்?

இரா:- தவம்-ஆரிய முறை. அதை என் இனக் கலாச்சார முறைப்படி நான் ஆதரிக்க முடியாது. ‘யாகம்’ என்பது ஜீவன்களை வதைத்து, பொருளைப் பழாக்கி, மக்களை ஏய்க்கும் ஆரிய தந்திரம் என்பது, என் இனத்தின் சித்தாந்தம். ஆகவே என் ஆட்சிக்குட்பட்ட இடங்களிலே, ஆரியர் பிரவேசித்து என் கலாச்சாரத்துக்கு  விரோதமான காரியத்தைச் செய்து, அதன் மூலம் என் கட்டளையை மீறினதால் நான் யாகங்களை அழித்தேன்.

கம்:- அதைத்தான் குற்றம் என்று கூறுகிறோம்.

இரா:- அது எப்படி குற்றமாகும்? என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்று தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப்பவர்களைத் தண்டிக்கவும் எனக்கு அரச உரிமை உண்டு. அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்வமேத யாகத்தையா அழித்தேன்? என் ஆளுகையில் இருந்த தண்டகாரண்யத்திலே, தவசி வேடத்திலே புகுந்து, என் தடை உத்தரவை மீறினவர்களை, யாக காரியங்கள் செய்யலாகுது என்று தடுத்தேன். மீறிச் செய்தனர். அழித்தேன். உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக அவனுடைய இராஜ்ஜத்தில், அவன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி ஒரு சூத்திரன் தவம் செய்தது குலமுறைக்குத் தகாது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய ராமன், ஆரிய பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அநாரியத் தவசியைக் கொன்றான்! அவன் அது என் உரிமை என்றான். என் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா?

கம்:- அதுகூடக் கிடக்கட்டும்...நீ இரக்கமெனும் ஒரு பொருளிலா அரக்கன். ஆகவேதான் உன்னை இராமர் கொன்று இலங்கையை அழித்தார். இரக்கம், உயர்ந்த பண்பு, அதை இழந்தவர்களை தண்டிப்பது, வேதப் பிரீதியான காரியம். அதுவே நியாயம், தர்மம், அவஸ்யம்!

நீதி:- (கம்பரைப் பார்த்து) இரக்கமின்றி இராவணன் நடந்து கொண்டவைகளை விபராமகக் கூறும்…

கம்:- ஆகா! தடையின்றி….இராவணன் மகா பண்டிதன்@ வல்லமை மிக்கவன்@ தவசியும் கூட. எல்லாம் இருந்தது அவனிடத்தில். ஆனால் இரக்கம் என்ற ஒரு பொருள் தான் இல்லை. இரக்கமின்றி இராவணன் செய்த பல கொடுஞ் செயல்களை நான் விபரமாகக் கூறுகிறேன், கேளுங்கள்….

இரா:- கம்பரே! சிரமம் ஏன் தங்களுக்கு? இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத அரக்கன் என்பது தங்கள் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் கூறி ஏன் அலுத்துப்போகவேண்டும்? நானே கூறுகிறேன், கேளும்...பூங்கொடி துவள்;வது போலானாள், அந்தப் பெண், பிரகாஷம் பொருந்திய  மேனியாள் சீதா– நான் சிறையெடுத்தபோது. அலறினாள்-நான் அரக்கன் என்று அறிந்ததும்! நான் இரக்கங்காட்டவில்லை. ‘சபித்துவிடுவேன்’ என்றாள்@ புன்னகை புரிந்தேன். அழுதாள், சிரித்தேன். ‘பிராணபதே’ என்று கூவினாள்@ எதற்கும் நான் இரக்கம் காட்டவில்லை. ‘’அடே துஷ்டா  ஹரிபரந்தாமனின் அவதாரமடா இராமன். அவனுடைய தர்ம பத்தினியையா இந்தக் கோலம் செய்கிறாய்?’’ என்று வயோதிக சடாயு வாய்விட்டு அலறினான்- சீதை உயிர் சோர, ஆடை நெகிழ, அலங்கோலமாக இருக்கக்கண்டு! ‘போடா போ’ என்றேன். போரிடத் துணிந்தான். போக்கினேன் அந்தப் புள்ளின் உயிரை! இரக்கம் காட்டினேனா? இல்லை…

அரசிளங்குமாரி சீதையை அசோக வனத்தில் சிறை வைத்தேன். ராஜபோகத்தில்: இருக்க வேண்டிய அந்த ரமணியைக் காவலில் வைத்தேன். ஏவலர் புடைசூழ நந்தவனத்திலே ஆடிப்பாடி இருக்க வேண்டிய அழகியை, அரக்க மாதர் உருட்டி மிரட்ட, அவள் அஞ்சும் படியான நிலையிலே வைத்தேன். அந்த அழகியின் கண்கள் குளமாயின. நான் இரக்கம் காட்டினேனா? இல்லை… இரக்கம் காட்டவில்லை. ‘தேகம் துரும்பாக இளைத்துவிடுகிறது, தேவகாலனே!’ என்று என்னிடம் கூறினர்@ ‘கோதாக் கூந்தல்-பேசா வாய்-வற்றாத ஊற்றெனக் கண்ணகள்! வைதேகி, விசாரமே உருவெடுத்தது போலிருக்கிறாள்’ என்று சொன்னார்கள். ‘பழம், பால், மது, மாமிசம், மலர்-எதனையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி’ என்று தெரிவித்தார்கள். ‘’சரி, புத்தி கூறு, மிரட்டு, கொன்றுபோடுவேன் என்று சொல், பிடிவாதம் கூடாது என்று தெரிவி, தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காபதி, ஒரு அழகியின் கண்ணீருக்கு அஞ்சமாட்டான் என்று சொல்’’ என்றுதான் என்னிடம் சேதி சொன்னவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன். இரக்கம் காட்டவில்லை?

கொலு மண்டபத்திலே கொட்டி அளந்தான் விபீஷணன்! ‘’தம்பி உனக்கு அடிமைப் புத்தி தலைக்கேறிவிட்டதா!’’ என்று உட்கார வைத்தேன் இரக்கம் காட்டவில்லை. போதுமா?...இன்னமும் ஏதாகிலும் கூறட்டுமா, ஈரமற்ற நெஞ்சினன் நான் என்பதற்கான ஆதாரங்கள்! இதேது, அரக்கன் முரடன் மட்டுமில்லை@ முட்டாளாகவுமன்றோ இருக்கிறான்! எதிர்க்கட்சிக்காரன் கூறுவதைவிட, ஆணித்தரமாகக் குற்றப் பட்டியலைத் திட்டமாக கூறுகிறானே என்று யோசிக்கிறீர்களா? இன்னமும் கொஞ்சம் செந்தேன் ஊற்றுகிறேன் உங்கள் சிந்தைக்கு.

களத்திலே என் தம்பி மாண்டான்@ கதறினர் மக்கள். என் மகன் மாண்டான், மண்டோதரி மாரடித்து அழுதாள். என் மக்களின் பிணம் மலை, மலையாகக் குவிந்தன. எங்கும் ரத்தம்! எங்கும் பிணம்! நாசம் நர்த்தனமாடிற்று. அயோத்தியான் ஏவிய அழிவு, ஆழிசூழ் இலங்கையில் இடம் பிடித்துக் கொண்டது. கானமும் கட்டளையும், ஏவலரின் பணிவான பேச்சும், காவலரின் கெம்பீரமான முழக்கமும், எந்த இலங்கையிலே நித்திய நாதமாக இருந்ததோ, அங்கு குடலறுந்தோர் கூக்குரல், கரமிழந்தோர் கதறல், பெண்டிரின் பெருங் குரல், பிணங்களைக் கொத்த வந்த பெரும் பறவைகளின் சிறகொலி-இவை நிரம்பின. நான் இரக்கம் காட்டினேனா? அதுதான் இல்லை…

(இராவணன், படபடவென்று பேசினவன், கொஞ்சம் களைத்து உட்கார்ந்தான், கோர்ட்டாரின் உத்தரவின் பேரில் அவனுக்கு ஒரு கோப்பையில் சோமபானம் தருகிறார்கள். இராவணன் புன்னகையுடன் மறுத்துவிடுகிறான்.!)

‘’என் அரசு உலர்ந்து, அது தெரிந்து என் உற்சாகம் உலர்ந்தபோது, இதுபோல் சோமபானம் நான் பருகிடவில்லை. ‘பழிவாங்குதல்’ எனும் பானத்தையே விருபம்பினேன். இரக்கம் என்ற பொருள் இல்லை அரக்கன்! கம்பரே! இதுதானே உமது கவிதா நடையிலே உள்ள வாசகம்? என் மீதுள்ள குற்றச்சாட்டு? இராவணன் ஏன் அழிக்கப்பட்டான்? அவன், இரக்கம் என்ற பொருள் இல்லா அரக்கனானபடியால்! மிகச் சுருக்கமாக முடித்து விட்டீர் உமது கவியை! நான், என் மீது குற்றம் சாட்டுபவருக்குச் சிரமம் அதிகம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், எந்தெந்த சமயத்திலே நான் இரக்கமின்றி நடந்து கொண்டேன் என்ற விஷயங்களை கூறினேன்.

கம்:- எங்களால்கூட முடியாது-இவ்வளவு தெளிவாகக் கூற!

இரா:-இதைவிடத் தெளிவாக இருக்கும்…இனி என்னுடைய பதில்!

நீதி:-பல சமயங்களில் இரக்கமின்றி நடந்து கொண்டதை விபரமாக எடுத்துக்கூறிய பிறகு பதில் என்ன இருக்கிறது தெரிவிக்க?

நீதி:- பதில் ஏராளமாக இருக்கிறது. அநீதியுடன் நடந்தாக வேண்டும் என்று தீர்மானிக்கும் வழக்கு மன்றங்களைக்கூட, நீதியின் பக்கம் இழுக்கக்கூடிய அளவுக்குப் பதில் உண்டு-கேளுங்கள்! இரக்கம் காட்டவில்லை நான்...யாரிடம்? ஒரு பெண்பாலிடம்! அபலையிடம்! ஏன்? அரக்கனல்லவா நான்! இரக்கம் என்ற ஒரு பொருள்தானே கிடையாது, கம்பர் கூறியதுபோல்! கம்பர் கூறுவதானாலும் சரியே...தாங்கள் கூறினாலும் சரியே! இரக்கம் என்றால்  என்ன? இலட்சணம் கூற முடியுமா? இன்னவிதமான நிலைமைக்குத்தான் இரக்கம் என்று பெயர் என்று திட்டவட்டமாகக் கூறமுடியுமா?

நீதி:-இலங்காபதி வழக்கு மன்றத்திலே நிற்கிறார், பள்ளிக்கூடத்திலல்ல!

இரா:-நீதியின் கூடத்திலே நிறுத்தப்பட்டிருக்கிறேன். ஆகவேதான் என் மீது சாட்டப்பட்ட குற்றத்தின்  தன்மையை, குற்றம் சாட்டுபவர்கள் முதலில் விளக்க வேண்டும். என்று கேட்கிறேன். உங்களுக்கு தண்டிக்க மட்டும்தான் தெரியுமா? விளக்கவும் தெரிய வேண்டுமே! கூறுங்கள் … இரக்கம் என்றால் என்ன?

நீதி:-இரக்கம் என்றால் பிறருடைய நிலைமை கண்டு-வேதனையைக் கண்டு பரிதாபப்படுவது, மனம் இளகுவது, இளகி அவர்களுக்கு இதம் செய்வது…

கம்:-இதம் செய்யாவிட்டாலும் போகிறது, இன்னல் செய்யாமலாவது இருப்பது…

இரா:-அதாவது...தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்ற ஆதிக்கம் இருக்கவேண்டும். அந்த ஆதிக்கத்தைக்கண்டு அஞ்சுபவன் ஒருவன் இருக்கிறான். அவனால் ஆதிக்கக்காரனை எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான,  உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம் உருகுவது, அவனுக்கு கேடு எதுவும் செய்யாதிருப்பது, கூடுமானால் அவனுக்குள்ள கஷ்ட்டத்தைப் போக்குவது- இதுதானே இரக்கம்!

கம்:-மாகா பண்டிதனல்லவா! அருமையான வியாக்கியானம் செய்துவிட்டாய். இரக்கம் என்ற தத்துவத்திற்;கு…

இரா:-தாக விடாயால் தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு புள்ளிமான். ஏரியிலே நீர் தேடி அலைகிறது… அந்த நேரத்திலே சிறுத்தை ஒன்று மானைக் கண்டுவிடுகிறது. மான் மிரளுகிறது, சிறுத்தை அதன் நிலை கண்டு, மனம் இளகி@ ‘பாவம்! இந்த மானைக் கொல்லலாகாது’ என்று தீர்மானித்து, இரக்கப்பட்டு, மானை அருகாமையிலுள்ள நீர் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அது நீர் பருகும்போது வேறு துஷ்ட மிருகத்தால் தீங்கும்
நேரிடாதபடி காத்துக் கொண்டிருக்கிறது. அதுதானே இரக்கம்?

கம்:- சிலாக்கியமான இரக்கம்! ஆனால் சாத்தியமா என்பது வேறு விஷயம்.

இரா:- மானை அம்பு எய்திக் கொல்ல வருகிறான் வேடன்...வேடனுக்கு இரக்கத்தின் மேன்மையை எடுத்துக் கூறி தவசி தடுக்கப் பார்க்கிறார். வேடன் என்ன செய்வான்?

கம்:- வேடனா! அவன் தவசியின் பேச்சை தள்ளிவிடுவான். முரடனல்லவா அவன்?

இரா:- முரடனாக மட்டுமா இருக்கிறான்? ஞானக் கண்ணில்லாக் குருடன்…

கம்:-வாஸ்தவம், வாஸ்தவம்…

இரா:-அந்த முரடன், குருடன், ஊமையல்ல! அவன் என்ன செய்வான் தெரியுமா, தவசியைப் பார்த்து? ‘முனிவரே! என் தொழில் காட்டிலே வேட்டையாடுவது. இந்த மானை நான் கொன்றால்தான் இன்றைய வாழ்வு எனக்கு! ‘இரக்கமில்லையா…’ என்று கேட்கிறீர். முனிவரே! பரமனையே நோக்கி தவம் புரியும் உமது கூட்டத்தவர் யாகங்களிலே, ஆடுகளைப் பலியாக்குகிறீர்களே, அந்தச் சமயம் இரக்கம் என்ற ஒரு பொருள் உம்மை விட்டுப் போய்விடும் காரணம் என்ன’ என்று கேட்பான். ஏன், கேட்டான் என்று கருதுவோம்-முனிவர்– என்ன சொல்வார்?

கம்:-முட்டாளே! யாகம் பகவத் ப்ரீதிக்கான யாகம் என்று கூறுவார்.

இரா:-‘இறைவன் வழிபாட்டடிற்கான காரியத்திற்கும் இரக்கம் என்ற பண்புக்கும் தீராப் பகையா...சுவாமி?’ என்று வேடன் கேட்பானே !

நீதி:-கற்பனைக் காட்சிகள் ஏன்? உன் நியாயத்தை மட்டும் கூறு. இரக்கம் என்றால் பிறர் கஷ்டப்படுவது கண்டு மனம் இளகுவது. அந்த உயரிய பண்பு உன்னிடம் இல்லை…இருந்ததா?

இரா:-இல்லை! நானே கூறினேனே, எந்தச் சமயங்களிலே இரக்கம் கொள்ளவில்லை என்பதை. நான் இரக்கப்பட்டேன் என்று புளுகு பேசித் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. என் வாதம் வேறு…

நீதி:-அது என்ன வாதம் கூறும்…. கேட்போம்!

இரா:-இரக்கம்—எனக்கு இல்லை என்று கூறி, அந்த ஒரு பொருள் இல்லாத நான், அரக்கன் என்று கூறி, அரக்கனான நான் அழிக்கப்பட்டது, இரக்கம் எனக்கு இல்லாததால்தான் என்று பேசுகிறார்களே, அது வீண் அபவாதம்! அவனவனுடைய தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் என்பவற்றைப் பொறுத்திருக்கிறது...அந்த நிலையிலே, ‘கருணாகரமூர்த்தி’ என்று புகழ் பாடுபவர்களும்கூட பல சமயங்களிலே இரக்கமற்று இருந்திருக்கிறார்கள். இரக்கமில்லாதார் அரக்கர் என்றால் அனைவரும், ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்தான்…

நீதி:-இது விசித்திரமான வாதமாக இருக்கிறது.

இரா:-வேடன், இரக்கத்தை கொள்ள முடியாததற்கு காரணம் அவனுடைய வாழ்க்கை முறை, தொழில்! வேதமோதி வேள்வி; நடாத்தும் முனிவர்கள், யாகப் பசுக்களைச சித்திரவதை செய்யும்போது இரக்கம் காட்டாதது, அவர்கள், இரக்கம் என்பதைவிட, பக்தி என்ற வேறோர் இலட்சியத்துக்கு அதிக மதிப்புத் தருவதே காரணம். வேடனின் வாழ்வும், வேதமோதியின் உயர்வும் அவரவர்க்கு இரக்கத்தைவிட அதிக அவசியமுள்ளதாக தெரிகிறது. ஆஸ்ரமங்களிலே உள்ள மான் தோல் ஆசனங்கள் என்ன இரக்கத்தின் அடையாளச் சீட்டுக்களா? விதவிதமான யாகங்கள், இரக்க லட்சியவாதிகளின் செயலா? எங்கே இரக்கம்? ஏன் இல்லை? அவர்களும் அரக்கரல்லவா? நான் மட்டுமா அரக்கன்?

கம்:-இது ஓவர், வேதாந்திகளை, புரோகிதர்களை அரக்கராக்கி விட்டார் இலங்கேசன்! இனி எமது கருணாகரமூர்த்தியாம் சிவனையும் குற்றம் சாட்டுவார் போலும்!

இரா:- தாய் பிடிக்க, தந்தை அறுக்க, சீராளனைக் கறியாக்கும்படி கருணாகரமூர்த்தி சோதித்தது, இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாதவர் அரக்கர் என்ற உமது இலக்கணத்தைப் பொய்யாக்கத்தான்! சிறுத்தொண்டன் உமது சிறுமதிக் கோட்பாட்டைப் பெருநெறியெனக் கொண்டிருந்தால், சிவனாரை நோக்கி, ‘ஐயனே! பாலகனைக் கொன்று கறி சமைக்ச் சொல்கிறீரே, எப்படி மனம் வரும்? இரக்கம் குறுக்கிடுமே!’ என்று கூறி இருந்திப்பார். உமது தொண்டர் புராணமும் வேறு உருவாகி இருக்கும். அல்லவா?

கம்:-பேசினால் மிருகத்தின் கதை@ இல்லாவிட்டால் மகேசன் கதை! இவ்வளவுதானா? இவை இரண்டும் வாதத்துக்கு தக்கவையாகா. ஒன்று பகுத்தறிவு இல்லாத பிராணிக் கதை, மற்றொன்று மனித நீதிக்கு கட்டுப்படவேண்டிய அவசியமில்லாத மகேஸ்வரன் விஷயம். பிரஸ்தாப வழக்குக்கு இரண்டும் பொருந்தாது.

நீதி:-கம்பர் கூறினது முற்றிலும் உண்மை. காட்டில் புலியும், கைலையில் உலவும் ஈசனும் கோர்ட் விவகாரத்திலே உனக்கு உதவி செய்ய முடியாது.

இரா:-வேள்வி செய்யும் முனிவர்கள், இரக்கம் கொள்ளவில்லை என்பதைக் கூறினேன்…

நீதி:-ஆமாம் கம்பரே! நோட் தர் பொயின்ர். இராவணரே! வேறு உண்டா?

இரா:-ஏராளமாக! ஆமாம்... தாங்கள்  எதற்குக் கட்டுப்பட்டவர்.

நீதி:-நீதிக்கு!

இரா:-மண்டோதரி, இது சமயம் இங்கு நின்று கதறினால்…

நீதி:-நீதி நெறியினின்றும் நான் அப்போதும் தவறமுடியாது.

இரா:-அவளுடைய கண்ணீரைக் கண்டும்…

நீதி:- கண்ணீருக்காக கடமையினின்றும் தவறமாட்டேன்.

இரா:-அப்படியானால் கடமை பெரிதா, இரக்கம் பெரிதா?

நீதி:- சிக்கல் நிறைந்த கேள்வி…

இரா:-சிக்கல் நிறைந்ததுதான்! ஆனால் பலருக்கும் இந்தப் பிரச்சனை வந்தே தீரும். கடமையின் படிதானே நீர் நடந்தாக வேண்டும்?

நீதி:-ஆமாம்!

இரா:-கடமையை நிறைவேற்றுகையில் அச்சம், தயை, தாட்சண்யம் எதுவும் குறுக்கிடக் கூடாது, ஆக, அறமன்றத்திலே நீர் வீற்றிருக்கும் போதெல்லாம் அரக்கன் தானே?

நீதி:-கம்பரே, பிளீஸ் நோட் திஸ் பொயின்ர் ஓல்சோ !

கம்:-உயர்ந்த இலட்சியத்திற்காக உழைக்கிறவர்கள்; இரக்கம் என்பதை இலட்சியப்படுத்தாது குற்றமல்ல..

இரா:-ஆம்! ஆனால் எது உயர்ந்த இலட்சியம்-எது குறைந்த-இலட்சியம் என்பது அவரவர்களின் சொந்த அபிப்பிராயம். அந்த அபிப்பிராயத்தை உருவாக்குவது அவரவர்களின் தொழில், வாழ்க்கை முறை, ஜீவியத்திலே அவர்களுக்கென்று ஏற்பட்டுவிடும் குறிக்கோள் இவற்றைப் பொறுத்தது.

நீதி:- சரி வேறு உண்டா?

இரா:- ஏன் இல்லை! முனிவரும் (கம்பர்) நீதிபதியும் மட்டுந்தானா! என்னைப் போன்றவர்கள் இன்னும் ஏராளம்! சாட்சிகளை அழையுங்கள் இனி…

(சாட்சிகள் பட்டியைப் பார்க்கிறார் நீதிபதி…சூர்ப்பனகை வருகிறாள்)

இரா:-தங்கையே! உன் கதையைக் கூறு…

நீதி:-எழுதிக் கொடுத்து விடட்டுமா?

இரா:-ஆமாம்! ஆயிரமாயிரம் வீரர்களுக்கு அதிகாரியாக வீரமொழி பேசி வந்த என் அன்புத் தங்கை, என் சுவாசத்தின் அங்கம், இப்போது இந்த அவையிலே, நாலு பேர் நடுவிலே நின்று பேச முடியாதபடி ஆக்கப்பட்டு விட்டாள்…

(சூர்ப்பனகை ஓர் ஓலையைக் கொடுக்கிறாள், கோர்ட்டிலே ஒருவர் அதை வாசிக்கிறார்…)

‘’இராமர் இலட்சுமணரைக் காட்டில் கண்டேன். மூத்தவரிடம் மோகம் கொண்டேன். எவ்வளவோ எடுத்துக் கூறினேன், காதல் கனலாகி என்னைத் தகித்தது. மன்றாடினேன்.!’’

இரா:-கொஞ்சம் நிறுத்து! நீதி தேவா! ஒரு பெண் அரச குடும்பத்தவள், அதிலும் வணங்காது வாழ்ந்து வந்த என் தங்கை வலிய சென்று, தன் காதலை வாய்விடடுக் கூறினாள். இராமன் மறுத்தான்...ஏன்?

கம்:-இது தெரியதா அர்ப்பனே! ஸ்ரீராமச்சந்திரர் ஏகபத்தினி விரதர்.

இரா:-ஏகபத்தினி விரதம் என்ற இலட்சியத்திலே அவருக்கு பற்றுதல்…

கம்:-ஆமாம்!

இரா:-அந்த இலட்சியத்தை அவர் பெரிதென மதித்தார்.

கம்:-பெரிதென மட்டுமல்ல உயிரென மதித்தார்.

இரா:-தாம் உயிரென மதித்த இலட்சியத்தின்படி நடந்து கொள்ள வேண்டுமென்று, ஒரு மங்கையின் கண்ணீரைக் கண்டால் இயற்கையாக வரும் இரக்கத்தை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி தள்ளிவிட்டார்.

கம்:-இரக்கம் காட்டுவதா இந்த அரக்கியிடமா?

இரா:-காதலை தெரிவிப்பவர்களும், அரக்கர், அரக்கியரா?

கம்:-இஷ்டமில்லை என்று கூறின பிறகு, வலியசென்று மேலே விழுவது, உயர்குல மங்கையின் பண்போ?

இரா:-கம்பரே! என் தங்கை சூர்ப்பனகை கண்ட ஆடவர் மீது காமுற்று கருத்தழித்தவளா? இராமனைக் காணுமுன்பு, அன்று நடந்து கொண்டதுபோல என் தங்கை வேறு எந்தச் சமயத்திலும் நடந்து கொண்டவளா?

கம்:-இல்லை ஒருமுறை செய்தால் குற்றம் குறைந்து விடுமா, என்ன?

இரா:-அதற்கல்ல நான் கேட்பது? ஒரு நாளும் இன்றி, அன்று இராமனைக் கண்டதும் காதல் கொண்டாள். அதற்கு அவளுடைய குணமே கெட்டது என்றா அதற்கு பொருள்? அன்று மட்டும் அவ்விதமான எண்ணம் ஏற்பட்டது ஏன்?

இரா:-என் இராமனுடைய சௌந்தர்யத்தைக் கண்டு!

கம்:-குற்றம் அவளுடையதா?

கம்:- ன் இல்லை? சீதையிருக்க, இவள் எப்படி…

இரா:-மன்னர்கள் பல மனைவியரை மணம் செய்வது வழமை தானே! தசரதனுக்கு அறுபதுநாயிரம் மனைவியரென்று நீர்தானே கூறியுள்ளீர்!

கம்:-ஆமாம்! ஆனால் இராமன் ஏக பத்தினி விரதனாயிற்றே!

இரா:-அதை என் தங்கை அறியமாட்டாளே! ஆகவேதான், தன் ஆசையைத் தெரிவித்தாள். அன்றுவரை அவள் எந்த ஆடவரிடமும் வலிய சென்று காதலை வெளியிடும் பழக்கமற்றவளல்லவே! அன்று ஓர் வடிவழகனைக் கண்டாள்@ மன்றாடி நின்றாள், இரக்கம் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாமே! தனது ஏக பத்தினி விரதத்துக்குப் பங்கம் வரக்கூடாதென்பதிலே விசேஷ அக்கரை கொண்டு, அவளை நிராகரிப்பதானாலும், இப்படி அலங்கோலப் படுத்தாது இருந்திருக்கலாமே! அவளுடைய நாசியைத் துண்டித்தபோது இராம-இலட்சுமணர்கள்  இரக்கத்தை எந்த எல்லை வரை விரட்டினார்கள்? அவர்கள் அரக்கரல்லவா?

கம்:- காமப்பித்தம் பிடித்து அலைந்தவளைத் தண்டிக்காமல் விடுவாரா.

இரா:-கம்பரே நான் இருக்கிறேன் , தண்டனை தர! என் தங்கைகையின் துர்நடத்தையை எனக்குத் தெரிவித் திருக்கலாமே! ஏதாவது தந்திரம் பேசி, அவளை அனுப்பிவிடுவது@ மறுபடி அவள் வருவதற்குள் எனக்குச் செய்தி அனுப்பினால் நான் இருக்கிறேன், அவளுக்கு புத்தி புகட்ட! இரக்கமும் இல்லை, யூகமும் இல்லை. இதோ இங்கே நிற்கிறாள், நாசியற்ற நங்கை! இரக்கத்தை மறந்த அரக்கரால் அலங்கோலப் படுத்தப்பட்டவள்!தங்காய் போ! தயையே அவதாரம் எடுத்தவர்களின் தீர்ப்பு! நான் இரக்கமென்று பொருள் இலா அரக்கன் என்பது! ஒரு நாள் சிக்கின சூர்ப்பனகை, எந்த நாளும், எவர் முன்பும் வரமுடியாத நிலையைப் பெற்றாள். என் கைதியாகப் பல நாள் இருந்த சீதை, சௌந்தர்யவதியாய், சகல சௌபாக்கியங்களையும் அயோத்தியிலே பிறகு அனுபவித்தாள். அனால் நான் அரக்கன்…! அவர்கள் வணக்கத்துக்குரியோர்….

(சூர்ப்பனகை போய்விடுகிறாள். நீதிதேவன் மறுபடியும் சாட்சிப்பட்டியைப் பார்க்கிறான்)

இரா:-நீதிதேவா! சாட்சிப் பட்டியிலே தாடகை, பாகு, மார்சன், கரன் முதலிய வதைபட்ட என் மக்களின் பெயர் இருக்கும். அவர்களெல்லாம் துஷ்டர்கள். ஆகவே தண்டித்தார் என்று கம்பர், பல்லவி பாடுவார். ஆகவே அவர்களை விட்டுவிடும். கூப்பிடும் கைகேயி அம்மையை!

(கைகேயி பம்மியபடி வருகிறாள்)

இரா:-கேகயன் மகளே! மந்தரையின் சொல்லைக்கேட்ட பிறகு, இராமனைப் பட்டத்துக்கு வரவிடாமல் தடுக்க நீ திட்டம் போட்டாயல்லவா?

கைகேயி:-ஆமாம்!

இரா:-பட்டம் கூடாது எனபது மட்டுமல்ல, இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென்பதும் உன் திட்டம். அல்லவா?

கை:-ஆமாம்!

இரா:-சக்கரவர்த்தியின் மூத்த குமாரன் என்ற முறையிலே இராமனுக்கு அயோத்தியிலே ஆனந்தமான வாழ்வு இருந்ததல்லவா?

கை:-ஆமாம்!

இரா:-அதிலும் கண்ணோடு கண் கலந்த காதல் வாழ்க்கை நடாத்தி வந்த காலம்…

கை:-ஆமாம்…

இரா:-அப்படிப்பட்ட ஆனந்த வாழ்விலே இருந்த இராமனைக் காடு போகச் சொன்னபோது, காட்டிலே உள்ள கஷ்டம், ஆபத்து இவைகளுக்கு இராமன் உள்ளாகி, மிகவும் கஷ்டப்படுவானே என்று உமக்குத் தோன்றவில்லையா?

கை:-தோன்றிற்று...ஆனால் பரதன் நாடாள்வதாக இருந்தால் இராமன் காடேகத்தான் வேண்டும் என்று தீர்மானித்தேன். வேறு வழியில்லை.

இரா:-பஞ்சணையில் துயிலும் இராமன் பசும்புல்தரையிலே படுப்பான், கனகமணி அணிந்தவன் மரவுரி தரிப்பான்@ ராஜபோஜனம் உண்டவன் காய்கறி தின்பான், வசிட்டரை கண்டு களித்த கண்களால், துஷ்ட மிருகங்களைக் கண்டு கலங்குவான்@ அரசாள வேண்டியவன் விசாரத்திலே-வேதனையிலே மூழ்குவான் என்று தெரிந்திருந்தும்...

கை:-காடு ஏகத்தான் வேண்டும் என்று கூறினேன்.

இரா:-இராமன் காடு ஏகுவான் என்ற நிலை வந்ததும் அயோத்தியிலே இருந்தவர்கள் எப்படியானார்கள்?

கை:- சொல்ல முடியாத அளவிற்குக் கஷ்டப்பட்டார்கள். (கம்பரைப் பார்க்கிறாள்)

இரா:-கம்பர், அதுபற்றி விபரமாகப் பாடி இருக்கிறாரே, என்கிறீரா? நான் அவருடைய கவிதை சில வற்றிலிருந்து குறிப்பு வாசிக்கிறேன். அவை உண்மையா என்று பாரும், முடியுமானால் கூறும்…

(கம்பரின் காப்பியத்தைப் புரட்டிக்கொண்டே) அயோத்தியா காண்டம், நகர் நீங்கும் படலத்திலே, ஊரார் துயரைக் கம்பர் உள்ளம் உருகும் முறையிலே இருபது பாடல்களுக்குமேல் வர்ணித்திருக்கிறார். ‘இராமர் காடு செல்வான்’ என்ற சொல் காதில் வீழ்ந்ததோ, இல்லையோ– அரசரும் அந்தணரும், மற்ற மாந்தரும் தசரதனைப் போலவே துயருற்றுக் கீழே சாய்ந்தார்களாம்...புண்ணிலே நெருப்பு பட்டது போலிருந்ததாம். அந்தச் செய்தி. மாதர்கள், கூந்தல் அவிழப் புரண்டு அழுதனராம்! அடியற்ற மரமெனக் கீழே வீழ்ந்தனராம்! ‘அம்மே, கைகேயி’ என்று கம்பர் பாடுகிறார்.

கம்:-உண்மையே மானுடர்கள் மட்டுமா! இராகவன் காடு செல்கிறான் என்று கேள்விப்பட்டவுடன் பட்சிகளும் பூனைகளும், யானைகளும், குழந்தைகளும்கூட அழுதன என்று பாடினதுண்டு,

நீதி;-சரி இராமன் வனம் புகுவது கேட்டு அயோத்தி ஒரே அழுகுரல் மயமாகிவிட்டது. அதனால்…

இரா:-(கைகேயியைப் பார்த்து) ஏனம்மா கைகேயி! இராமன் காடு போகிறான் என்பதைக் கேட்டு பூனையும், யானையும், குதிரையும், குழந்தையும், பூவும், மரமும் என அனைத்தும் மனம் உருகி அழுதனவாமே! அந்த நேரத்திலும் தங்கள் மனம் இளகவில்லையோ?

கை:-இல்லை…

இரா:-ஊரார் ஏசினர் நீதிதேவனே! ஒரு மன்னரின் மனைவியைச் சொல்லத்தகாத மொழியில் கூட ஏசினர், ‘கொடியவளே!’ என்று தசரதன் ஏசினார், ஊரார் என்ன சொன்னார்களாம் தெரியுமோ? கம்பரே!

கம்:-எந்தப் பாடலைச் சொல்லப் போகிறீர்?

இரா:-நீர் பாடியதைத்தான்! நான் என்ன கவியா, சொந்தமாக பாட! ‘கணிகை நான் கைகேசி’ என்று ஊரார் பேசினராம்! ( கைகேகி இராவணனை கோபமாகப் பார்க்க) அம்மே! அரக்கனாம் என் மொழி அல்ல இது. அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம், 109 ஆம் பாடல். இதை கம்பர்தான் பாடினவர்!

கம்:-கணிகை காண் கைகேசி என்றால் விலை மகள் என்று பொருள். நான் அப்படிப் பாடவில்லை. கொஞ்சம் இடைச்செருகல் புகுந்து விட்டது. நான் பாடினது, ‘கணிகை நாண் கைகேசி’ என்றுதான்…

இரா:-பாட்டு, பழுது பார்க்கப்பட்ட பிறகு பொருள் முன்பு இருந்ததைவிட மோசமாகிவிட்டது. கம்பரே!.. முன்பாவது கைகேயியை வேசி என்று கூறினீர்! இப்போது வேசையாரும் கண்டு வெட்கப்படுவர், கைகேயியின் கெட்ட குணத்தை கண்டால் என்றல்லவோ பொருள்?

கம்:-வேறு விதமாகத்தான் இருக்க வேண்டும். அதை நிதானமாக யோசித்தால்தான் முடியும். கைகேயியை நான் கணிகை என்று கூற முடியுமா?

இரா:-கூறினீர்! வேறோர் சமயம் திருத்திக் கொள்ளும். சரி, ஊரார் கண்டபடி ஏசினர். ஆனால் கேகைய குமாரியின் மனம் மாறவில்லை.

நீதி:-ஆமாம்..ஆமாம் கொஞ்சமும் இரக்கமில்லை…

இரா:-அரக்க மாதல்ல நீதிதேவா கைகேயி அம்மை! தசரதன் சோகமுற்று, ‘மானே! மடமயிலே! கேகயன் மகளே! கேளடி என் மொழியை! பேயும் இரங்குமே, பெண்கட்கரசே! நீ இரங்காயோ?’ என்று எவ்வளவோ கெஞ்சினான். கைகேயி மன்னனின் புலம்பலைக் கேட்டும் மனம் இளகவில்லை. மன்னன் மூர்ச்சித்துக் கீழே விழுந்தான். அம்மையின் மனதிலே இரக்கம் எழவில்லை. கம்பர் கூறினார். மன்னர் பலர், எந்த தசரதனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்களோ, அப்படிப்பட்ட மன்னர் மன்னன், கைகேயியின் காலிலே விழுந்தான். கைகேயி சூழ்வினைப் படலம் 25 வது செய்யுள். தன் மனாளன், மன்னர் மன்னன் தன் காலில் விழுந்து அழுது, கெஞ்சி, ‘எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும். என் மகன் இராமன் நாடாளாவிட்டால் போகிறது@ காடு போகச் செய்யாதே! அவன் போனால்  என் உயிர் நில்லாதே! என்று உள்ளம் உருகிக் கதறுகிறான். கேகயகுமாரி அப்போதாவது இரக்கம் காட்டினதுண்டா? இல்லை! கோசலை அழுதபோது? இல்லை! சீதை மரவுரி தரித்தபோது? இல்லை! ஊரே புரண்டு அழுதபோத? இல்லை! துளியும் இரக்கம் காட்டியதில்லை. வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன் அன்றிரவு துயிலில் நிம்மதியாக ஈடுபட்டார்களாம்! கம்பர் கூறியுள்ளார். உண்மைதானே கம்பரே?

கம்:-உண்மைதான்!

இரா:-இரக்கம் என்ற பொருள் இல்லாதார் அரக்கர்! உமது இலக்கணமல்லவா அது? கைகேயி அம்மையிடம் அந்த இரக்கம் ஒரு துளியும் இல்லையே! ஏன், அரக்கர் குலமாக்கவில்லை கைகேயி அம்மையை! இரக்கமென்ற ஒரு பொருள் இல்லாத காரணதாலேயே நானிருந்த இலங்கை அழிந்தது என்றீரே,இரக்கத்தை எள்ளளவும் கொள்ளாத இந்த அம்மையார் இருந்தும், அயோத்திக்கு அழிவு வராத காரணமென்ன? என் தங்கைக்கு பங்கம் செய்தவர்களைப் பழிவாங்க வேண்டுமென்ற என்ற எண்ணம் என் கண்முன், சீதை கதறிய போதிலும் இரக்கப்படக் கூடாது-இரக்கத்துக்காக வேண்டி,  அரக்கர் குல அரச மங்கையின்  அங்கத்தைத் துண்டித்த ஆரியர்களை வதைக்காது விட்டோமானால் எமது குலத்தையே ஆரியகுலத்தின் அடிமையாக்கி வைக்கும் இழிசெயல்  புரிந்தவனாவோம் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின் முன் இரக்கம் தலைகாட்டவில்லை. இரக்கம் காட்டாததற்காக நான் அழிந்துபோவது! இரக்கமின்றி என் தங்கையைப் பங்கப்படுத்தி, வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன், தெய்வமென்று கொண்டாடப்படுவது, தேன் தமிழிலே இந்தக் கம்பனுக்கு பாட்டுக்கட்டத் தெரிந்தால், நீதிதேவா! இது சரியா? சீதையை நான் களவாடிச் சென்று சிறை வைத்தேன். மூவர்கள் இதுபோல் பலமுறை செய்திருக்கிறார்களே! நான் சீதையின் சம்மதம் கிடைக்கட்டும் என்று சிந்தையில் மூண்ட காமத்தைக்கூட அடக்கினேன். மும்மூர்த்திகள் அழகிகளைக் கண்ட நேரத்தில், அடக்க முடியாத காமத்தால் ஆபசங்கள் பல செய்திருக்கின்றனரே! எந்தத் தேவன் கற்பை மதித்தான் எத்தனை ஆலமரங்கள் விபச்சார விடுதிகளாக இருந்ததற்குச் சான்றுகள் வேண்டும்? என்னை மானைக் காட்டி மயக்கினேன் என்று கூறினர். சிசுபாலனுக்கு நிச்சயிக்கப்பட்ட ருக்குமணியை அவளின் விருப்பத்திற்கு மாறாக கடத்திச் சென்று சூறையாடிவரன்றோ மற்றோர் அவதார புருஷரான கிருஷணர். அவரின் பல்லாயிரக்கணக்கான மனைவியர் அனைவருமே மாற்றாரின் மனைவிகள் என்பதை நீதி தேவனே நீங்கள் அறியவில்லையா? முருகன் யானையைக்காட்டி மிரட்டினானே வள்ளியை! இங்கே உள்ள தேவரும் மும்மூர்த்திகளும்  செய்யாததையா நான் செய்ததாக குற்றம் சாட்டுகிறீர்கள். ருசுப்படுத்துங்கள் பார்ப்போம்! சீதை போன்ற ஜெகன்மோகினி என் கரத்திலே சிக்கியும் சீரழிக்காது நான் விட்டதுபோல் எந்தச் சிங்காரியையாவது இந்தத் தேவர்களும், மும்மூர்த்திகளும் விட்டிருப்பார்களா? கூறுங்கள் நெஞ்சில் துணிவிருந்தால் நீதிதேவனவர்களே? இரக்கம் இல்லை என்று குற்றம் சாற்றினது அக்ரமம்! அதற்காக இலங்கையை அழித்தது அநீதி! என் வேலை தீர்ந்தது. இனி நீதியின் வேலை நடக்கட்டும்….

( இராவணன் பேசி முடிக்கவும் நீதிதேவன் படாரென மயங்கி கீழே விழுகிறார். ஜீரிகள் எழுந்து நிற்கிறார்கள். நீதிதேவனுக்கு மயக்கம் தெளிந்த பிறகு தீர்ப்பு என்று கோர்ட் சேவகர் தெரிவிக்கிறார். ‘’ அது நெடுநாளைக்குப் பிறகுதான் சாத்தியம்’’ எனக்கூறிக் கொண்டு தனது புஜத்தை நிமிர்த்தியவாறு வீர நடை நடந்து இராவணன் போய்விட. கோர்ட் கலைகிறது. கம்பர் அங்குமிங்குமாகப் பார்த்து கால் இடறி விழுந்து ஓடுகிறார்.)

Posté par assura à 14:24 - நாடகம் - Permalien [#]


« Accueil  1