20 mars 2008
மக்களின் தீர்ப்பை மதிக்கின்ற பக்குவத்தை
ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல்கள் (10-03-2008) நீதியான முறையிலும் சுதந்திரமான முறையிலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாநகரசபை மற்றும் 8 நகரசபைகளையும் ரி.எம்.வி.பி. கைப்பற்றியதின் ஊடாக புதியதொரு அரசியல் எழுச்சியையும் கிழக்குமாகாண மக்கள் தோற்றுவித்துள்ளார்கள். கடந்துவந்த 30 ஆண்டுகாலங்களில் நடந்துமுடிந்த எல்லாத் தேர்தல்களையும்விட ஜனநாயக மீட்சிக்கான போராட்டப்பாதையில் இத்தேர்தலானது பாரிய திருப்பு முனையொன்றையும் ஏற்படுத்திச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புகள் எழுந்துகொண்டிருந்தன. சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் எதிர்க்கட்சிகள், வெகுஜன ஊடகங்கள் அனைத்தும் இத்தேர்தலானது சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடத்தப்படுமா என்று கேள்வியெழுப்பின. பலத்த சந்தேகங்களும் நம்பிக்கையீனங்களுமே மக்களிடத்தில் பரப்பப்பட்டன.
இம்முறை கிழக்குமாகாணம் மீட்கப்பட்டது போல கடந்த காலங்களிலும் தமிழீழவிடுதலைப்புலிகளிடமிருந்து பலதடவைகளில் வடக்கு கிழக்கின் பல பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. எனினும் அப்பகுதிகளில் ஆயுதக் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளை ஒழித்து இயல்புநிலை ஒன்றுடனான சுதந்திரமான தேர்தல் ஒன்றை இதுவரை சாத்தியப்படுத்த யாராலும் முடியவில்லை. இதற்கு இந்திய அமைதிகாக்கும் படையினரின் மேற்பார்வையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்கூட விதிவிலக்காக அமையமுடியவில்லை என்பது கசப்பான உண்மை.
மட்டக்களப்பில் இம்முறை உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளில் மேற்படி கடந்தகால தேர்தல் அனுபவங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் காரணமாக இருக்கலாம். ஆனாலும் பலதடவைகளில் இத்தேர்தலினூடு ஜனநாயக நீரோட்டத்தில் கலக்க விரும்பிய ரி.எம்.வி.பி. எனும் பதிய அரசியல் கட்சியின் வரவுமீதான காழ்ப்புணவே மேலோங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. இப்புதிய அரசியல் சக்தி கொண்டிருந்த மாற்று அரிசயல் சிந்தனையே இவ்வெதிர்ப்புகளுக்கு காரணமாயிற்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கோலலோச்சி வந்த தமிழ் தேசியக் கோட்பாட்டின் போலித் தன்மையை ரி.எம்.வி.பி. எனும் புதிய அரசியல் கட்சியின் வரவு கேள்விக்குள்ளாக்கியிருந்தது. இந்நிலையில்தான் புலி ஆதரவு, புலிஎதிர்ப்பு என்கின்ற வேறுபாடுகள் அற்று தமிழ் தேசியக் கோட்பாட்டின் சார்பு நிலையில் இருந்து எழுந்த குரல்களே மனித உரிமைக் குரல்களாக மேலேழுந்து இத்தேர்தல் நடாத்தப்படுவதை தடுக்க முனைந்தன.
ஆனாலும் நடந்துமுடிந்திருக்கின்ற இத்தேர்தலானது அதைத் தடுக்க முனைந்தவர்கள் முன்வைத்த எதிர்வு கூறல்களையெல்லாம் பொய்யாக்கியுள்ளது. கண்காணிப்பு அமைப்புகளும் போலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்புகளும் இத்தேர்தலானது சுதந்திரமாகவும் நீதியாகவும் நடந்து முடிந்திருப்பதை உறுதி செய்திருக்கின்றன. அந்த வகையில் ஒரு பாசிச அமைப்பான தமிழிழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தவர்கள் ஜனநாயகத்தின்பால் கொண்டிருக்கக்கூடிய தமது ஈடுபாட்டை மீள உறுதிசெய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான முன்னாள் தீவிரவாதிகளை கொண்டிருந்த போதிலும் ரி.எம்.வி.பி.ஆனது ஒரு சிறந்த பண்பட்ட அரசியற் கட்சிக்குரிய அறிகுறிகளை வெளிக்காட்டியுள்ளது. சிறந்த கட்டுக்கோப்பும் ஜனநாயகப் பாரம்பரipயங்களை மதிக்கின்ற பக்குவமும் தமது அமைப்பு உறுப்பினர்களுக்கு உண்டு என்பதை சர்வதேசத்திற்கு இப்புதிய அரசியற் கட்சியானது பறைசாற்றியுள்ளது.
தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் யாழ் மேலாதிக்க தலைமைகளைக் கொண்ட தமிழ் தேசியவாதக் கட்சிகள் படுதோல்வியைத் தழுவியுள்ளமையையும் கிழக்கில் இருந்து உருவாகிய ரி.எம்.வி.பி.யானது அமோக வெற்றியீட்டியுள்ளமையும் கீழ்வரும் செய்தியை வெளிக்காட்டியுள்ளது. கிழக்கிலங்கை மக்கள் தமிழ் தேசியத்தை முற்றாக நிராகரித்திருக்கின்றார்கள். தமது தலைமையை தமது அரசியலை தாமே தீர்மானிக்க வேண்டும் என்கின்ற உரிமைக்குரலை தமது தீhப்பின் மூலம் அம்மக்கள் பறைசாற்றியிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ் இன ஒற்றுமை என்கின்ற இனவாதப் பார்வைகளுடனான அரசியலை நிராகரித்து கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லினங்களை கொண்ட பிரதேச ஒற்றுமையின் அவசியத்தை இத்தேர்தல் முடிவுகள் எல்லோருக்கும் எடுத்துச் சொல்லியிருக்கின்றது. மக்கள் வழங்கியுள்ள இந்தத் தீhப்பினை எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசியல்வாதிகள் அனைவரும் மதித்து அதன்படி ஒழுகவேண்டும், அதுவே ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒவ்வொருவரினதும் பண்பாக இருக்கமுடியும் என ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி
19-03-2008
kilakku@hotmail.com