thuuuu

கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...

31 janvier 2008

இரண்டாவது தலித் மாநாடு லண்டன்

வரும் 16-02-2008  சனிக்கிழமையும் 17-02-2008 ஞாயிறும் லண்டனில் நடைபெறுகிறது.

மாநாட்டு நிகழ்ச்சி நிரல்_

Posté par assura à 13:51 - Permalien [#]


30 janvier 2008

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? எனும் தலைப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் அவர்கள் 2002 ஆம் அண்டில் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். ரவிக்குமார் அவர்கள் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர்.  அவரையும், அவரது எழுத்துக்களையும் ‘நிறப்பிரிகை’ எனும் சஞ்சிகையினூடாகவே என்னைப்போல் இலங்கை வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர் எனக் கருதலாம். ரவிக்குமார் அவர்கள் தற்போது ’காலச்சுவட்டு’ முகாமுக்குள்ளும், ‘விடுதலைச்சிறுத்தைக்’ கூட்டுக்குள்ளும் அடைபட்டு தனது தனித்துவத்தை இழந்த நிலையில் செயல்படும் ஒருவராக தோற்றமளிப்பதையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அவரது தனித்துவமிழந்த செயலுக்கான ஓர் உதாரணத்தை மட்டும் இங்கே கூறலாம். ‘2007 இல் ஓர் அலசல், நீயா...நானா’ எனும் தலைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று பார்க்கக நேர்ந்தது. அந்நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், திரப்பட இயக்குனர்கள் பங்குகொண்டிருந்தார்கள். அதில் எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகளின் சட்ட மன்ற உறுப்பினருமான ரவிக்குமார் அவர்களும், எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களும் கலந்து கொண்டார்கள். ஒரு சம்பவத்தில் உங்களுக்குப் பிடித்ததும்,பிடிக்காததுமான திரப்படங்கள் எவை என நிகழ்ச்சித் தொகுப்பாளரால் கேட்கப்பட்டது. அதற்கு சாருநிவேதிதா தனக்குப் பிடித்த திரைப்படம் பரித்திவீரன், பிடிக்காத படம் சிவாஜி எனக் கூறினார். இதே கேள்வியை ரவிக்குமார் அவர்களிடம் கேட்கப்பட்டபோது. தனக்குப்பிடித்த படம் சிவாஜி என்றும் பிடிக்காத திரைப்படம் பரித்திவீரன் எனவும் பதிலளித்தார். இவரது பதில் தனித்துவமானதாக இருந்ததா அல்லது சாருநிவேதிதாவுக்கு எதிராக பதிலளித்துள்ளாரா என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் புரிந்து கொள்ளலாம். சாருநிவேதிதா ‘காலச்சுவட்டை’ப் பார்த்து சீறுபவர். அதுதான் ரவிக்குமார் சாருநிவேதிதாவைப் புரட்டியிருக்கிறார். திரைப்படம் சம்பந்தமாக நியாயமான அபிப்பிராயத்தை ரவிக்குமார் வழங்கவில்லை எனத் தோன்றுகிறது.

மேற்குறிப்பிட்ட தலைப்பில் 2002 இல் ரவிக்குமார் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட கேள்விகளானது இன்று முன்வைக்கப்படும் இலங்கைத் தமிழருக்குரிய அரசியல் உரிமைகளுக்கான இடைக்காலத் தீர்வு எனும் அம்சத்துக்குள்ளும் கேட்கப்பட வேண்டிய கேள்விகளாகவே தேங்கிக்கிடக்கிறது. அந்தவகையில் ரவிக்குமார் அவர்கள் எழுதிய கட்டுரையில் பல அம்சங்கள் விரிவாக பேசப்பட்டிருப்பினும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் மக்கள், இந்திய வம்சாவளி மக்கள், பற்றியெல்லாம் அக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் இலங்கைத் தலித் சமூகம் பற்றிய அவரின் பார்வை மட்டும் இங்கு மீள் பிரசுரமாகிறது.

2002 இல் ரவிக்குமார் அவர்கள் எழுதிய கீழ்வரும் கட்டுரையானது இன்றைய அவரது நிலைப்பாட்டிலும் அக்கருத்துக்களில் அவர் உறுதியாக இருப்பாரா என்பது எமக்கு சந்தேகமே. காரணம் அவர் புலிகளின் தீவிர பிரச்சாரக் கட்சியான திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகளின் ‘மதியுரைஞராகவும்’ முகம்காட்டும் சூழலில்….!!!


ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

(ரவிக்குமார்)

இலங்கையில் அமைதி திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளில் பிரபாகரனின் செய்தியாளர் சந்திப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என பேசப்படுகிறது. ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பினை சன் டி வி முழுமையாக ஒளி பரப்பியது.

செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குள் முஸ்லீம்களது பிரச்சனை குறித்தும், மலையக தமிழர் பிரச்சனை குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகள் முக்கியமானவை. அவற்றுக்குப் பதிலளித்த பிரபாகரன்/பாலசிங்கம் அந்தத் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்காக அழைத்திருப்பதாகவும் அதன் பின்னர் அவை குறித்து முடிவு செய்யப்படுமெனவும் தெரிவித்தனர். அதுபோலவே இப்போது அவர்களோடு உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது.

இரண்டரை மணி நேரம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்ததும் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அங்கு கேட்கப்படாத கேள்வியைக் குறித்தும் சொல்லப்படாத பதிலைக் குறித்தும் நான் கவலை கொண்டேன். ஈழத் தமிhகளில் சுமார் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையைப் பற்றி ஒருத்தரும் கேள்வி எழுப்பவுமில்லை, எனவே பதில் சொல்லப்படவுமில்லை. அதுதான் என் மன உளைச்சலுக்குக் காரணம்.

ஏன் இந்த நிலை? அங்கு தாழ்தப்பட்டோர் பிரச்சனை தீர்ந்து போய்விட்டதா? நிச்சயமாக இல்லை. ஈழத்து எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் தனது கந்தன் கருணை நாடக நு}லின் முன்னுரையில் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளதுபோல (11-12-1999) ‘’துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன, மரித்து விடவில்லை ‘’. அப்படியானால் ஏன் அது பற்றி எவரும் கேள்வி எழுப்பவில்லை.அதற்கான சமூக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடிய தாழ்த்தப்பட்டோர் அரசில் இயக்கம் தற்போது இல்லாததே அதற்கான முக்கியமான காரணமாகும். ஆனால் இலங்கையின் வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு அரசில் இயக்கங்களை உருவாக்கிஆற்றல் மிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தீண்டாமை ஒழிப்புக்காக ஆயுதம் ஏந்திப் போராடியதன் மூலம் தமிழ் நாட்டைக்காட்டிலும் முன்னே நின்றவர்கள் அவர்கள். இப்போதோ அவர்களுக்கென தனி இயக்கம் இல்லாததால், அவர்களது பிரச்சனை அங்கு எழுப்பப்படவில்லை. எனவே இன்று அங்கே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையைப் பற்றிப் பேசி அவர்களது உரிமைகள்  நிலைநாட்டப்பட ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய கடமை தமிழ் நாட்டிலுள்ள தலித் இயக்கங்களுக்கும் தலித் சிந்தனையாளர்களுக்கும் உள்ளது.

ஈழத்துச் தமிழ்ச் சமூகம் இன்று தமிழ் நாட்டுக்கு முன்னோடியாகக் காட்டப்படுகிறது.. ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘’சாதனையை‘’ இங்கே இருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் முன்னுதாரணமாகக் காட்டுகின்றனர். அதைவிடவும் வேறுசில ‘’சிறப்புகளும்‘’ ஈழத்துக்கு உண்டு. அந்த சமூகம்தான் ஆறுமுக நாவலரைத் தந்தது. ‘’பறையும், பெண்ணும், பஞ்சமரும் அடிவாங்கப் பிறந்தவை‘’ என்ற அரிய கருத்தைச் சொன்னவர் ஆறுமுகநாவலர். இன்றளவும் அங்கே வேர் கொண்டிருக்கிற சாதி வெறியை நீரூற்றி வளர்த்தவர் அவர்...

….அங்கிருக்கும் பிரச்சைனைக்கு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு எப்படி கேள்வி எழுப்பலாம் என்று யாரேனும் கேட்கலாம் ‘’இந்தியா எங்களது தந்தை நாடு‘’ எனவும் ‘’தமிழர்களோடு எங்களுக்கிருப்பது தொப்புள்கொடி உறவு‘’ எனவும் புலிகள் மீண்டும் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் நினவுபடுத்தும் உறவோ ஆதிக்கத்தின் அடிப்படையிலானது. ஆனால் இலங்கையில்தீண்டாமை என்னும் கொடுமைக்கு ஆளாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களோடு தம்மை இணைப்பதோ பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலான தோழ-மையாகும். பறையும், பெண்ணும், பஞ்சமனும் அடிபடப் பிறந்தவை என்று சாதித் திமிரோடு சொன்ன ஆறுமுகநாவலரைச் சொந்தம் பாராட்ட இங்குள்ள சாதித் தமிழர் முன்வரும்போது அதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கும்போது நாம் படுவதுபோன்ற கொடுமையை எதிர்கொண்டு அல்லல்படும் ஒருத்தனின் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள நமக்கெப்படி உரிமையில்லாமல் போய்விடும்.

அதுமட்டுமல்ல இன்று சிங்கள அரசை சமாதான மேசைக்கு இழுத்து வந்துள்ள தீரமிக்க போராட்டத்தை நடத்தியதில் தாழ்த்தப்பட்டவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். யுத்தம் அவர்களுக்கு ஒரு மதிப்பை, தேவையை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசுக் கட்சியினர் எத்தகைய நிர்ப்பந்தத்தில் அன்று தாழ்த்தப்பட்டோர் பிரச்சனையைப் பேசினார்களோ அதேவிதமான நிர்ப்பந்தத்தினால்தான் இன்று புலிகள் தாழ்த்தப்பட்டோரை இயக்கத்தில் வைத்துள்ளனர். ஆனால் தமிழரசுக் கட்சி எப்படி அவர்களை கைவிட்டதோ அப்படி புலிகளும் தாழ்த்தப்பட்டோரை கைவிடுகிற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.

;இந்த அச்சம் தேவையற்றது என சாதித் தமிழர்களால் சொல்லப்படலாம். ஆனால் இந்தியாவின் வரலாறு இந்த அச்சத்தை நியாயப் படுததுகிறது.

1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது பம்பாய் மற்றும் சென்னையிலிருந்து படைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டிருந்தன பம்பாய் ராணுவம் மகர்களையும், சென்னை ராணுவப் பிரிவு பறையர்களையும் கொண்டிருந்தது. ஆனால் 1890 ல் இந்திய ராணுவத்தில் தீண்டாதார் சேர்வதற்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது.

ஆங்கிலேய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இந்துக்கள் பெருமளவில் ராணுவத்தில் சேரவில்லை அப்போது தீண்டாதாரே பிரிட்டிஷ் ஆட்சிக்கு உற்ற துணையாய்  ராணுவத்தில் இருந்துள்ளனர். இந்திய ஆட்சி அதிகாரம்; அரசர்களது கைகளிலிருந்து பிரிட்டிஷார் கைக்கு மாறி, அரசர்கள் செல்வாக்கிழந்தபோது இந்துக்கள் பிரிட்டிஷ் படைகளில் சேர வந்தனர். ஏற்கனவே படைகளில் இருக்கும் தீண்டாதாரை விரட்டினாலன்றி தங்களுக்கு இடம் கிடைக்காது என்பதால் இந்துக்கள்  தீண்டாதாரைப் படைகளில் சேர்க்கக் கூடாது என நிர்ப்ந்திக்க ஆரம்பித்தனர். இந்துக்களின் நெருக்குதலுக்குப் பணிந்து பிரிட்டிஷ் அரசும் தடைவித்தது. தங்களுக்கு நெருக்கடியான காலத்தில் கைகொடுத்த தாழ்த்தப்பட்டோருக்கு பிரிட்டிஷ் அரசு துரோகமிழைத்தது.

அதேபோன்றதொரு நிலை இப்போது இலங்கையில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. யுத்தம் ஏற்படுத்திய ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தை சமாதானம் வந்து பறித்துக் கொண்டுவிடக்கூடாது ஏனென்றால் சமாதானம் எட்டப்பட்டு ஒரு இடைக்கால அரசு அமைந்தால் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சாதித் தமிழர்கள் மீண்டும் இலங்கைகை;குத் திரும்புவார்கள் அந்த நாடுகளில் ஊட்டி வளாத்த சாதியுணர்வையும் அவர்கள் தம்மோடு அழைத்து வருவார்கள். மீண்டும் யாழ்ப்பாண சமூகம் ஆறுமுக நாவலரின் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு  செயல்பட வேண்டிய நிலை வரும் இப்போது உயிர் அச்சத்தால் தீண்டாதாரின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்கும் சாதித் தமிழர்கள் அந்த அச்சம்  விலகிவிட்டால் மீண்டும் தம் மண்டைக்குள்ளிலிருந்து சாதிய நசச்சரவுகளை எடுத்து தெருவில் விடுவார்கள். இந்த நிலை ஏற்படாமலிருக்க சில உத்தரவாதங்களைத் தாழ்த்தப்பட்டோர் பெறவேண்டும். தற்போது மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்களோடு என்னவிதமான ஒப்பந்தம் போடப்பட்டதென்கின்ற முழுமையான விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் நீண்ட நெடுங்காலமாகத் தாழ்த்துப்பட்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் இப்போதும் நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. இந்தியாவில் இருப்பதுபோன்ற இட ஒதுக்கீடோ அரசியல் அமைப்புச் சட்டபாதுகாப்போ அல்லது அமெரிக்காவில் உள்ளது போன்ற ஒத்தாசை நடவடிக்கைகளோ ( Affirmative Actions) இலங்கையில் நடைமுறையில் இல்லை. அங்கு இருப்பது எதற்கும் பிரயோசனப்படாத 1957 ஆம் வருடத்திய சமூக குறைபாடுகள் ஒழிப்புச்  சட்டம் மட்டும்தான்.

ஆகவே தாழ்த்தப்பட்ட மக்களது பிரச்சனையென்பது முஸ்லிம்களது பிரச்சனைபோல, மலையகத் தமிழர் பிரச்சனை போல தனிக் கவனம் செலுத்தி அணுகப்பட வேண்டிய தனித்துவமான பிரச்சனையாகும்.

‘கடக்க முடியாத நிழல்‘ எனும் ரவிக்குமாரின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து  எடுக்கப்பட்ட ஒருபகுதி

Posté par assura à 19:28 - Permalien [#]

26 janvier 2008

தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் எறிகணை இணையத்திற்காக வழங்கிய செவ்வி….

எறிகணைகள்…

உங்களால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகள் தொடர்பாக புலம் பெயர்நாடுகளில் 1989ம் அண்டு முதலே தனது செயல்பாடுகளிலும் படைப்புகளிலும் தலித்திய கருத்துக்களையே வலியுறுத்திவரும் கவிஞர் சுகன் தெரிவித்திருக்கும் விமர்சனம் அல்லது விசனம் தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்…?

தேவதாசன்…

நண்பன் சுகன் தனது பேட்டியில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்ளையே தெரிவித்துள்ளார்.அது அவருக்குள்ளான முரண்பாடாகவே தெரிகிறது. உதாரணமாக தலித் அரசியலை துரோக அரசியலாக முட்டாள்தனமாக அறிமுகப்படுத்தியதாக தெரிவிக்கிறார். துரோக அரசியல் எனக்குறிப்பிடும் கருத்து நிலையை வைத்தருப்பவர்கள் தமிழ்தேசிய வெறியர்களைத்தவிர வேறு யாரும் இல்லையென்றே சொல்லலாம்.

இவர் எந்த அரசியலுக்குள் தன்னை இனம் காட்டியுள்ளார் என்பது தெளிவாகிறது. வெள்ளாளர் புலிகளுக்கு தண்ணிகாட்டுகின்றனர் எனக்குறிப்பிட்ட அதேவேளை பிரபாகரன் சாதி காப்பாற்றும் புள்ளி எனவும் குறிப்பிடுகிறார். அறுபது வருடத்திற்கு முன்னர் சிறுபான்மைத்தமிழர் மகாசபையால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் தேவை இன்னமும் உள்ளது,இப்போது இயலாத காரியம், எனவும் தலித்துகள் அதிகாரத்தை கைப்பற்றுவது இனிய கனவு, இப்படி எல்லாம் சம்பந்தம் சமபந்தம இல்லாமல் உளறியிருக்கிறார். அவர் கூறிய கருத்துக்கள் மீது அவருக்கே நம்பிக்கை இருப்பதுபோல் தெரியவில்லை.

ஜேர்மன் சுட்காட்டில (stutgart) நடைபெற்ற அரசியல் தீர்வு மாநாட்டில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் ஓர் அறிக்கை சமர்பிக்கப்பட்டு சில தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன. அம்மாநாட்டில் சுகனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.(அது வெள்ளாளத் தலைமைக்கூட்டமாக படவில்லையா.?) எனினும் எமது தீர்மானம் தொடர்பாக எக்கருத்தையும் வெளிக்காட்டவில்லை. மேலும் எம்மால் நடாத்தப்பட்ட முதலாவது தலித்மாநாடு அவர் இருக்கும் வீட்டிற்கு 500 மீற்றர் தொலைவில்தான் நடைபெற்றது. அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது,ஆனால் கலந்து கொள்ளாமல் ஒழிந்து கொண்டார்.

மூன்று வெள்ளாளத் தலைமைகள் மாநாட்டிற்கு வாழ்த்து அனுப்பியதாகவும் அது மாநாட்டில் பெருமையாக பேசப்பட்டதாகவும் விசனம் தெரிவித்துள்ளார். ஒரு வானொலியில் எமது மாநாட்டு வாழ்த்து நிகழ்ச்சியிலேயே அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதை மாநாட்டில் யாரும் பெருமையாகப் பேசவில்லை.

ஜனநாயக ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளில் ஜனநாயகம் அவசியம் எனக்கருதுபவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பது தலித் சமூக மேம்பாட்டுக்கு விரோதமானது அல்ல. ஒன்றிற்கு ஒன்று முரணாக கூறி மொத்தத்தில் தனது காழ்ப்புணர்சியை வெளிக்காட்டியுள்ளார்.

தலித் சமூகமேம்பாட்டு முன்னணி சாதனை நிகழ்த்துவோமென யாருக்கும் சவால்விடவுமில்லை, சபதமெடுக்கவும் இல்லை.சாதிய ஒடுக்குமுறை பற்றி பேசுவது தேசியத் துரோகமாகவும், இதை மூடி மறைப்பதன் மூலம் சாதிப்பிரச்சினையை தீர்த்து விடலாமெனவும் செய்யப்பட்டு வருகின்ற பொய்யான பிரச்சாரத்தினை உடைத்து இது பேசப்படவேண்டும், தீர்க்கப்படவேண்டும் அதற்கு நாம் ஒரு உந்து சக்தியாக செயல்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.

எறிகணைகள்…

உங்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டு 1வருடத்திற்க்கு மேலாகிறதென்று நினைக்கிறேன். இதுவரை இலங்கையில் இன்றும் தலித்துக்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் இடர்களுக்கு தீர்வாக அல்லது அந்த தீர்வின் அடிப்படையிலான அந்த மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வளிவகுக்கும் வகையில் எப்படியான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறீர்கள்……? இது தொடர்பாக உங்கள் முன்னணியால் முன்வைக்கப்படும் அல்லது செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் என்ன….?

தேவதாசன்…

நான் முன்னர் கூறியது போன்று தமிழ்மக்களுக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு நிர்வாக பரவலாக்கல் செய்யப்படும் போது ஆண்டாண்டு காலமாக கல்வி,பொருளாதார,வேலைவாய்பு மற்றும் பலவகையிலும் பின்தள்ளப்பட்டிருக்கும் மக்கள் மேம்படும் முகமாக இணைக்கப்பட வேண்டிய திட்டாய்வுகளை அரசியல் தலைமைகளுக்கும், தீர்வுபற்றி பேசுபவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். அந்த அறிக்கையை “தூ” இணையத்தளத்தில் நீங்கள் இப்போதும் பார்வையிடலாம்.

இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழும் தலித் மக்களுக்கு விழிப்புணர்சியை ஏற்படுத்தும் வகையிலும்,முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்கும் வகையிலும் தொடர்ந்து மாநாடுகள்,கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறோம். எமது கருத்துகளை கூறுவதற்காக “வடு” என்னும் பத்திரிகையை மாதம் ஒரு முறை வெளிக்கொண்டு வருகின்றோம். முதலாவது மாநாட்டின் தொடர்சியாக லண்டனில் இரண்டாவது மாநாடு நடைபெற இருக்கிறது. எங்களது சக்திக்கு உட்பட்ட வகையிலான வேலைத் திட்டங்தளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

எறிகணைகள்…

அண்மையில் பிரான்சில் உங்கள் அமைப்பால் நடாத்தப்பட்ட மாநாடு மிகவும் வெற்றியளித்திருப்பதாக மாநாட்டின் இறுதியில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள் எந்த வகையில் மாநாடு வெற்றியளித்துள்ளதாக கருதுகின்றீர்கள்….?

இரண்டாவது மாநாடு லண்டனில் நடாத்துவதற்காக பல நண்பர்கள் முன் வந்திருப்பதே முதலாவது மாநாட்டின் வெற்றிதானே.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கொடி பிடித்து கோசம் போடும் ரசிகர்கள் அல்ல. மாறாக மாற்றுக் கருத்துகொண்டவர்கள்,சாதிமுறை அழிவின்மீது ஆர்வம் கொண்டவர்கள், முற்போக்கு சக்திகள்,பத்திரிகையாளர்கள், இடதுசாரிகள் என பலதரப்பட்ட பல திறமைவாய்ந்த சக்திகளின் சந்திப்பாக இருந்தது. பல விடயங்கள் பேசப்பட்டன. முதலாவது மாநாடுபற்றிய தொகுப்பு புத்தக வடிவில் விரைவில் வரவிருக்கிறது.

மாநாட்டிற்கு முன்னர் இலக்கியச் சந்திப்புகளிலும், சிறு கலந்துரையாடல்களிலும் பேசப்ட்டவிடயம் இன்று தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் பேசப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் பலவிதமான எமக்கு சார்பாகவும் எம்மை விமர்சித்தும் கருத்துக்கள் வெளிவருகிறது. இவைகள் யாவும் மிகப்பெரும் வெற்றியாகவே நாம் கருதுகிறோம். தலித் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளாத பலர் இன்று ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்..

எறிகணைகள்…

மிகப்பாரம்பரிய இடதுசாரிய சிந்தனையாளர்களினாலும்,அந்த மக்களுடன் மக்களாகவே வாழ்ந்து, தலித்திய ஒடுக்கு முறைகளை சந்தித்து, அவற்றிற்கு எதிராக களத்தில் நின்று குரல்கொடுத்து போராடிய அன்றைய அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும்,போராட்டங்களுக்கும் ஈடாக அந்த மக்களிடமிருந்து அன்னியப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களால் இங்கிருந்து கொண்டு எதனைத்தான் செய்துவிட முடியும் என எண்ணுகின்றீர்கள்…?

தேவதாசன்…

தலித்துகள் தங்கள் உரிமைக்காக போராடி வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருக்கையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஈழப போராட்டம் பின்னர், ஆயுதப்பேராட்டம் எனத்தொடர்ந்து இப்போது முப்பது வருடங்கள் முடிவுற்றுப் போய்விட்டது. ஆனால் சாதிய அமைப்பு வடிவம் அப்படியே இருக்கிறது. இன்று இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசத்தில்,குறிப்பாக சாதிய ஒடுக்குமுறை பெருமளவில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் வாய்திறந்து உண்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக இருக்கும் பட்சத்தில், எப்படி சாதிய விடுதலை பற்றிப் பேசவது. சாதியம் ஆயுதத்தால் ஒடுக்கப்பட்டுள்தே தவிர அழிக்கப் படவில்லை.

சாதியம் ஒழிக்கப்பட வேண்டுமானால் சாதியினால் ஒடுக்கப்பட்டவர்களே அப்பேராட்டத்திற்கு தலைமை ஏற்கவேண்டும். அவர்களுடன் முற்போக்கு சக்திகள் கரம் சேற்கவேண்டும். ஆனால் இலங்கையில் இப்போது இது சாத்தியம இல்லை.இருப்பினும் புலம்பெயர் நாடுகளில் ஜனநாயக சூழலில் கற்கவும்,தேடவும்,விவாதிக்கவும் வாய்புகள் இருக்கிறது. அந்த வாய்புகளுள் நாம் எமது சமூகத்தின் புற்று நோயான சாதியம் பற்றியும் பேச வேண்டியது அவசியம்.

இங்கிருந்து பேசப்படும் கருத்துகள் விவாதங்கள் இலங்கையில் தமிழர் வாழும் மூலை முடுக்குகளுக்கும் போய்சேரக்கூடிய தொழில் நுட்ப வளங்கள் பரவிக்கிடக்கின்றன. அதனூடாக மக்களுக்கு செல்லக்கூடிய வாய்புகன் இருக்கின்றன.அதன் மூலம அவர்கள் கருத்துக்களை உள்வாங்குவார்கள், பரிசீலிப்பர்கள்,முடிவெடுப்பார்கள்,செயல்படுவார்கள்.

எறிகணைகள்…

இலங்கையில் தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சிப்போக்கின் ஊடான ஆளுமையின் மத்தியில் அங்கு வாழும் தமிழ் மக்களில் கூடுதலான விகிதாசாரத்தினர் இன்று தலித் மக்களாகவே இருக்ககிறார்கள். ஆயுத விதைப்பு மிகவும் தாராளமாகவே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மனித உரிமை மீறல்கள் தேசியமயமாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த ஒரு தேசிய அமைப்பின் பின்னணியும் இல்லாமல் தலித்மக்களின் பெயரிலான இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்க மாட்டாது என ஆய்வாளர்களினால் நியாயமாகவே சந்தேகம் எழுப்பப்படுகிறது. இந்த நோக்கு தவறாயின் தமிழ்மக்களின் உரிமைப்போராட்டம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் போது அந்தப்பேராட்டம் தொடர்பான எந்த முன்வரைவுகளும் இல்லாமல் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்டுவதற்கும்,அதன் தொடற்சியாக புலம் பொயர்நாடுகளில் மட்டும் மாநாடுகள் நாடாத்தப்படுவதற்குமான அவசரத்தேவை தற்போது ஏன் ஏற்பட்டது…?

தேவதாசன்…

உங்களது கேள்வி அநியாயமான சந்தேகம் தலித்சமூகம் தனது விடுதலைக்காக எப்போதெல்லாம் பேராடமுற்பட்டதோ, தமிழர் உரிமைக்கு இடையூறாக வந்துவிடும் என ஜீ.ஜீ.பொன்னம்பலம் காலத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. பாடசாலைகளில் படிப்பதற்கு அனுமதியற்ற காலத்தில் அதற்கெதிராக போராட முற்பட்டபோது வெள்ளைக்கார ஆளுநர்களுக்கு சாதிப்பிரச்சினையே கிடையாது எனக்கூறி சாதியை வளர்த்த நிலை இன்றுவரை தொடர்கிறது.

இன்று இருக்கிற எந்தத் தேசிய அமைப்பும் தலித்துகளுக்கென ஒரு அமைப்பு உருவாவதை உள்ளத்தளவில் விரும்பமாட்டாது. நான் முன்னர் கூறியது போல முப்பது வருடகாலம் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது ஒருவித நம்பிக்கையும், இன்னொருவித ஆயுதபயமும் இருந்தது. ஆனால் இந்த முப்பது வருட காலத்தில் சாதிய அமைப்பு வடிவத்தை அசைக்க எவரும் முயற்சிக்கவில்லை என்பதுதான் நிஜம்.அதனால்தான் எந்த அரசியல் இயக்கத்தையும் சாராத ஒரு சமூகவிடுதலை இயக்கமாக, பெரியாரின் கருத்துக்களை உள்ளடக்கி நாம் தனித்துவமாக செயல்படுகிறோம்.

சாதிய அமைப்புக்கு அனைத்து வெள்ளாளர்களும் எதிரிகள் அல்ல.சிலர் தாம வெள்ளாளர் என்க்கூறவே கூச்சப்படுகின்றனர். ஏன்தான் இந்தச்சாதியில் பிறந்தோம் என வெட்கப்படுகின்றனர். மாறாக பலர் ஒரு கையிலே சாதியையும் இன்னொரு கையிலே தமிழர் விடுதலையையும் தாங்கிப்பிடித்து வருகின்றனர். இதுதான் இன்றுவரையும் தமிழர்களின் அழிவிற்கு முதற் காரணமாய் இருக்கிறது.

எறிகணைகள்…

ஒரு தலித்மகனின்/மகளின் உணர்வுகளை,அவர்கள் மனதில் ஏற்படுத்தப்பட்ட வடுக்களை அவர்களாலேயே உணர்ந்து கொள்ள முடியும். “அந்தமக்களின் போர்க்குரல் அந்த மக்களிடமிருந்தே ஒலிக்கவேண்டும”. பல தலித்திய சிந்தனையாழர்களினாலும் தெரிவிக்கப்பட்ட இந்தக்கருத்தை நீங்களும் முன்னர் பலதடவைகள் வலியுறுத்தியிருந்தீர்கள். ஆனால் தற்போது உங்களால் ஆரம்பிக்கப்ப்டடுள்ள அமைப்பில் தலித்துகள் அல்லாத பலர் முன்னணி செயல்பாட்டாளர்களாக இருப்பதும்,அண்மையில் உங்களால் நடாத்தப்பட்ட பிரான்ஸ் தலித் மாநாட்டில் கூட கூடுதலான வெள்ளாளர்களே கலந்து கொண்டதும்,தொடர்ந்து லண்டனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் மாநாட்டின் ஏற்ப்பாட்டாளர்களும் கூட யாழ்ப்பாண மேலாதிக்க சிந்தனையின் வழிவந்த வெள்ளாளர்களாகவே இருப்பதும் கண்கூடு. ஏன் இந்த நிலைமை…? அல்லது இதில் தவறெதுவும் இல்லையா…? தமிழ் மக்களின் பிரச்சினையில் பலர் குளிர்காய்வது போல இடதுசாரிய தலித்திய கருத்தாழம் மிக்க தலித்துக்களான உங்களைப் போன்ற ஒரு சிலரை முன்னிலைப்படுத்தி இந்த நெருக்கடியிலும், காய்தல் நாடகம் தொடராக்கப்படுவதாக நீங்கள் உணரவில்லையா…?

தேவதாசன்…

தலித்மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்டுவரும் வலிகளை அவர்களால்தான் உணர்ந்து கொள்ளமுடியும் என்பது மிக மிக உண்மையானது. பத்து மாதம் கருவை வயிற்றிலே சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கு இருக்கும் வலி தந்தைக்கு இருக்காது என்பது உண்மைதான்.அதேவேளை பெண்ணின் வலியை புரிந்துகொண்டு அவளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் மனிதம் உள்ள ஆணைப்போலத்தான்,தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கு ஆதரவு தருவதற்கு பலர் முன்வருகிறார்கள்.

சாதி வடிவத்தை அதனூடான சாதிய ஒடுக்கு முறையை கண்டு பிடித்தவர்களோ வளர்த்தவர்களோ தலித்துக்கள் இல்லை. இலங்கை ஆறுமுகநாவலர் தொட்டு தொடர்சியாக வந்த தமிழ்த் தலைவர்கள் உரம் போட்டு வளர்த்த சாதிப்படிமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் அழிப்பது ஒவ்வொரு மனிதாபிமானமுள்ள மனிதனதும் கடமையாகும். அந்த வகையில் வெள்ளாளர்கள் மத்தியில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் எமது முயற்சிக்கு முழு ஆதரவைத் தருகின்றனர். இது அவசியமானதென்றே நாங்கள் கருதுகின்றோம்.

தலித் சமூகமேம்பாட்டு முன்னணி என்பது தலித்துக்களுக்காக தலித்துக்ளால் அமைக்கப்பட்ட முன்னணியாகும்.ஒரு காலத்தில் இலங்கையில இடதுசாரிகள் மிகப்பெரும் பலத்துடன் அரசியல் இயக்கம் நடத்தியவர்கள். சோவியத் யூனியன் உடைவு,சீனப் பொருளாதார மாற்றம், ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி என்பன சிறிய நாடான இலங்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியதென்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதன்பின்னர் உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்காளர்கள்,புரட்சியாளர்கள் பலவகையான சிந்தனைப் போக்குடன் உலகமாற்றங்களை ஆய்வுசெய்ய ஆரம்பித்தனர். இந்த அடிப்படையில்தான் பின் நவீனத்துவம்,தலித்தியம் என்பன உருப்பெற்று வளர்கிறது. இச்சிந்தனை மாற்றங்கள் இலங்கைத்தமிழர்களை பொறுத்த வரையில் ஒருசில புத்தி ஜீவிகள் மட்டத்தில் மட்டுமே ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கிறது.

இது இன்னமும் பல மட்டங்களில் பேசப்படவேண்டும், விவாதிக்கப்படவேண்டும்,பரிசீலிக்கப்படவேண்டும் இதுவும் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினர் நடாத்தும் மாநாடுகளின் நோக்கமாக இருக்கிறது. அந்த வகையில் பங்கு கொள்பவர்கள் யார்…? என்ன சாதி…? என்பது முட்டாள்தனமான பார்வையாக இருக்கும்.தலித்திய கருத்துக்களைப்பற்றி பேச முற்படுபவர்களை அதுபற்றி தேட முனைபவர்களை குளிர்காய்தலுக்குள் உள்ளடக்கி கொச்சைப்படுத்துவது விசமத்தனமானதும் சாதி அமைப்பை தொடர்ச்சியாக கட்டிக்காக்கும் முயற்சியுமாகும்.

நன்றி

Posté par assura à 17:01 - Permalien [#]

01 janvier 2008

2008 புதுவருட வாழ்த்துக்கள் யாருக்கு?
சமாதானம் என்ற மெழுகுதிரி ஏன் உருகி எரியுது?

தத்துரூபமான கற்பனைகளையும்

கற்பனைக்கெட்டாத கனவுகளையும்

சுமந்துகொண்டு இன்னும் இன்னும்

கழியும் ஆண்டுகளை

கடந்து போக வேண்டியிருக்கிறது.

உணவு உண்டுகொண்டு

இருப்பதால் மட்டும்

ஜீவன் இருக்கிறது

என்பதற்கப்பால்

நாம் எல்லோரும் கோமா நிலையிலேயே

வாழ்ந்து வருகிறோம்.

இதிலென்ன

நாள் மாறி 

வருடம் மாறி...! என்று 2007ம் ஆண்டின் பிறப்பிற்காக அனைவரும் காத்திருந்த போது எழுதினோம். அதையே திரும்பி எழுதவேண்டிய தேவையை உணருவதில் என்ன வெட்கம் என்றால் நமது வாழ்நிலைக்கு எதையும் புதிதாக எழுதிவிடத்தேவையில்லை என்றதுதான். இந்தக் கோமா நிலை கவலையளிப்பதாகத்தானே இருக்கிறது. இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கொலையில் தொடங்குகின்றதாக அனைவரும் கவலைகொண்டுள்ளோம்.

இன்று காலை மகேஸ்வரன் எம்.பி. பொன்னம்பலவாணேஸ்வரத்திற்கு வழிபாட்டுக்குப் போனபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென்பற்றிக் தேவாலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். (இதுபற்றி அந்த நேரத்தில் கிழக்கில் நடந்த எந்தக் கொலைக்கும் வாய்திறக்காத சுகனே கவலைப்பட்டு எழுதியிருந்தது நீங்கள் அறிவீர்கள்.) இப்படிஒவ்வொருவருடத் தொடக்கத்திலும் யாரையாவது இழந்து விடுகிறோம். நாம் இன்னும் இன்னுமாய் இழப்பதற்கு தயாராய் இருக்கிறோம்.ஒவ்வொரு வருடத் தொடக்கம் என்பதைவிட ஒவ்வொரு விடியலிலும் யாரையாவது தொலைத்துவிட மனம் தயாராய் இருக்கிறது. இதற்கு அப்பால் நமக்குத் தெரியாத ஒரு சமாதானம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பாசிசம் பூசிய அந்தச் சொல் குறித்த அனைத்துப் பரிமாணங்களையும் தவிர்த்து விட்டு ஒன்றும் அறியாத குழந்தையைப்போல் சமாதானம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

புதுவருடப்பிறப்பில் சமாதானம் ஏற்படவேண்டும் என்று பேசிக் கொள்ளும் அனைவரும் அது குறித்து ஒரு விசாரணயற்ற, உரையாடலற்ற தன்மையிலிருந்து வானத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமாதானம் என்ற நகைப்பிற்குரிய அந்தச்சொல் எம்மிடம் எதாவது ஒரு இடத்தில் குடிகாண்டுள்ளது என்று யாராவது அடையாளம் காட்ட முடியுமா? ஒவ்வொரு சமாதானத்திற்கு முன்னும் பின்னும் தொடர் யுத்தத்தைத்தானே கடந்திருக்கிறோம். யுத்தத்தில் நடந்த கொலைகளை விட சமாதான காலத்தில் நடந்த கொலைகளின் பட்டியல்தானே நம்மிடம் அதிகமாகவுள்ளது. அதைவிட சமாதானம் என்று இதுவரை பேசிய காலங்களில் யார் யாருடன் எல்லாம் பேசியிருக்கிறோம்? ஏன் அவை எல்லாம் சாத்தியப்படாமற் போயிற்று? முதலில் சமாதானம் யாருக்கும் யாருக்குமானது? யார் யாருக்கிடையில் சமாதானம் தேவை? யார் யார் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? சண்டையிடாதவர்கள் யார்? சண்டையிடாதவர்களுக்கு ஏன் சமாதானம்? கடந்த சமாதான காலங்களில் நாம் கண்ட படுகொலைகளின் வீரியம் என்ன? வங்காலைப ;படுகொலை, அல்லப்பிட்டிப் படுகொலை, எல்லாம் நம்மை எவ்வளவு பாசிசவாதிகளாக்கி விட்டிருக்கிறது? இதற்கப்புறம் இன்னொரு சமாதானத்தில் நாம் எவ்வளவு படுகொலைகளைச் சந்திக்கப்போகிறோம்? என்று நாம் யோசிக்காத வரையில் சமாதானம் என்ற பாசிசச் சொல் நமக்கு தேவையற்றது. புதுவருடம் என்று ஒவ்வொரு ஜனவரி 1ம் திகதியைக் கொண்டாடுவதும் தேவையற்றது.

கற்சுறா
01.01.2008

Posté par assura à 21:08 - Permalien [#]
« Accueil  1