17 novembre 2007
தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளிடப்பட்டு வரும் 'வடு' சஞ்சிகையின் ஒக்டோபர் மாதப் பிரதி வெளிவரத் தாமதமாகியதால் நவம்பர் மாதப் பிரதியுடன் சேர்த்து ஒன்றாக வெளிவருகிறது.
வரும் பிரதியில் மாநாட்டு விபரங்களும் வெளிவருவதுடன் மாநாட்டு வரவு செலவுகளையும் எமது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றனர். மேலும் 'வடு' சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதற்கான சகல ஒத்துழைப்புகளையும் (குறிப்பாக நிதி) நல்குமாறும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியனர் வேண்டிக் கொள்கின்றனர்.
அத்துடன் மாநாட்டுச் செலவிற்காக மண்டபத்தில் நிதி உதவி செய்தவர்களுக்கும் மற்றும் பிற உதவிகள் செய்த அன்பர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தொடர்புகளுக்கு vaduworld@hotmail.fr
09 novembre 2007
சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...
இது எமது தலித் சமூகங்களுக்கு வரலாற்று ரீதியாக தொடரும் மரபாகவே நீடிக்கின்றது.
சாதியத்தின் கொடுமையும் அதன் தீண்டாமை உணர்வும் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பரிமாணங்களில் தனது கோரமுகத்தைக் காட்டவே செய்கின்றது. அதன் வரலாற்றுத் தொடர்ச்சியின் மற்றோர் வடிவம்தான் அண்மையில் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கு எதிராக புகலிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்களாகும்.
ஆம்… பார்க்காமலும்... கேட்காமலும்...பேசாமலும் குந்தியிருக்கும் குரங்கு நிலைச் சமூகமென எம்மை நிரூபிக்க எத்தனிக்கும் செயல்தான் புகலிடத்தில் நிகழ்ந்து வருகிறது.
1970 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தொடர்ச்சியான தலித் சமூக விடுதலைப் போராட்டமானது தமிழ்த் தேசிய விடுதலை எனும் பெயரால் திசைமாற்றப்பட்டது. ஆனால் தலித் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையானது தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலிலிருந்து உரித்தெடுக்க முடியாது ஊனிலும், உணர்விலும் உறைந்து நிற்கிறதே.. ஏன்..!
எமது சமூகம், எம் மத்தியில் நிலவும் சாதியம், எமது அரசியல், எமது ஆயுதப்போராட்டம், அதை முன்னெடுத்த இயக்கங்கள், சர்வதேசியக் கோட்பாடுகள் என அனைத்திலும் எமக்குள்ள அதிகபட்ச அனுபவமும் தேர்ச்சியுமே எமது தற்போதைய இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி எனும் வளர்ச்சி நிலை. தொடரும் யாழ்ப்பாணிய மேலாதிக்கத்தின் தொடர்ச்சிதான் எம்மை பரந்துபட்ட சிந்தனைக்கான களம் நோக்கியும் நகர்த்தியது.
எமது முன்னெடுப்புக்களில் பல்வேறு தரப்பினர் மத்தியில் மாறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். இப்பினும். அதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் ஏற்பாடு செய்த தலித் மாநாட்டிற்கு பல்வேறு தரப்பினருடைய ஒத்துழைப்பும, உதவிகளும, ஆலோசனைகளும் கிடைத்ததானது எம்மை உச்சாகப்படுத்தியதென்னவோ உண்மைதான்!
மாற்றுக் கருத்தியலாளர்கள், ஜனநாயக முற்போக்கு சக்திகள், பல்வேறுபட்ட தமிழ் அரசியல் கட்சிகள், பல்வேறு ஊடகங்களான, இணையத் தளங்கள், வானொலிகள், பத்திரிகைகள், என நீங்கள் அனைவரும் எமக்கு பக்கபலமாக இருப்பதாகவே நாம் கருதுகிறோம். ஆனால் உங்கள் ஆதரவும், எங்களது நியாயமான கோரிக்கைகளையும் பொறுக்காத ஒரு சிலரின் நயவஞ்சக, அயோக்கியத்தனமான நடவடிக்கைகளானது எமக்கும் உங்களுக்குமிடையிலான உறவுகளையும்; எமது தலித் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளையும் சிதைக்கும் பாசிசப் போக்காக முகம் காட்டுகிறதே... ஏன்..!
தலித் மாநாடு ஆரம்பமாவதற்கு சில நாட்கள் முன்பாகவே எமது முன்னணியில் வன்முறையையும் கொலைகளையும் ஆதரிக்கும் அங்கத்தவர்கள் இருப்பதாக கேள்வி பரப்பப்பட்டது. பிற்பாடு அசோக் யோகன் கண்ணமுத்து அவர்கள் தலித் மாநாட்டிலும் இக்குற்றச்சாட்டை எம்மீது சுமத்தினார்.
கொல்லப்படுவதற்கும்... கொல்லக் கொடுப்பதற்கும் உகந்த ஒரு சமூகமாகவே எமது தலித் சமூகம் கருதப்பட்டு வருவதை எமது சமூகம் சார்ந்து சிந்திப்பவர்கள் அறிவீர்கள். இது வரலாற்று உண்மையல்லவா? ஆனால் எம்மத்தியில் கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆதரவுளிப்பவர்கள் இருப்பதாகப் புனையப்படுகிறதே ஏன்?
எம்மிடம் கொலையைத் தூண்டுபவர்களும், வன்முறை ஆதரவாளர்களும் இருப்பதாக மறைமுகமாகக் கூறி ஒற்றைக்கால் தவம் புரிகிறார்கள் இந்தத் ‘தவசிகள’. இவர்கள் வேறு யாரும் அல்ல ‘அனைத்து அராஜகங்களுக்கும’ எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகவும். மிகப் பென்னாம்பெரிய ஜனநாயகவாதிகளாகவும் தம்மை இனம் காட்டிக் கொள்கின்ற நிழல் மனிதனான ‘கருணைதாசன்’ எனும் ‘நபரும்.’ தீப்பொறி எனும் இணையத்தளமுமே ஆகும். இவர்களையே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியை ஒழித்துக்கட்ட முனையும் நயவஞ்சகத்தனம் கொண்ட அயோக்கியத்தனமான சக்திகளாக நாம் இனம் காண்கின்றோம்.
மாநாடு முடிந்து அதனது சுமைகளை நாம் இறக்கும் முன்பாகவே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அங்கத்தவரான எம்.ஆர். ஸ்டாலின் (ஞானம்) மீதான அவுதூறுகளை மேற்படி இரு அயோக்கிய நயவஞ்சக சக்திகள் மொட்டைக் கடிதங்களாகவும், ஆதரமற்ற செய்திகளாகவும் பரப்பிவருகிறார்கள். இதற்கான பிரதம சூத்திரதாரியாக இருப்பது நிழல் மனிதனான ‘கருணைதாசன’ என்பது எம்மைப்போலவே அம் மர்ம ‘நபரை’ நீங்களும் இனம் காண்பதொன்றும் கடினமானதல்லவே!!
இவர்களின் திட்டமும்...நயவஞ்சக நோக்கமும்.
கடந்த காலத்தில் தலித் சமூக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இடது சாரிச் சிந்தனையாளர்கள் இடையில் மௌவனமாகி அடங்கிப்போனது எதனால்? அதை நாம் அதிகம் விளக்கத்தேவையில்லை. தமிழ்த் தேசிய விடுதலை என்பதற்குள் எமது தலித் சமூகத்தையும் உள் இழுத்து.. ஆயுதம் முகம் காட்டிப் பல்லிளித்துச் சன்னதமாட...; அடங்கிப்போனது தலித் சமூகத்திற்கான கேள்விகள்.
அன்று நேராக ஆயுதம் எம்முன் நீண்டது... நாம் மௌனமானோம். அது அன்றைய வைதீக பாசிசம். இன்று எம்மீது ஆயுதம் நீட்டத் தூண்டுகிற செயலானது நவீன பாசிசம்.
எமது அங்கத்தவர் ஞானம் கருணாவுடன் தொடர்பு கொண்டவர். கருணாவிடம் பணம்வாங்கி வீடுகள் சொத்துகள் வாங்கிக் குவிப்பவர். அவரின் சொந்தப் பெயர் இது. அவர் இன்ன விலாசத்தில் இருக்கிறார். இப்படி அனைத்துத் தகவல்களும் கொடுத்து... புலிகளே உங்கட எதிரிகளை நாம் காட்டியுள்ளோம் உங்களுக்கு தில் இருந்தால் போய் சுடுங்கள்....!!! இதுதான் நவீன பாசிசம்.
இவர்கள் அனைத்து அராஜகங்களுக்கும் எதிரானவர்களாம், மிகப்பென்னாம் பெரிய ஜனநாயகவாதிகளாம். இவர்கள் தாம் ஜனநாயகத்தை நேசிப்பதாகவும், அனைத்து அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் புரட்டுகள் புனைந்து கொண்டு தமது பாசத்திற்கும் நேசத்திற்குமான புலிகளுக்கு ஆதரவான நிதர்சனம் எனும் இணையத்திலும் எமக்கான அவதூறுகளையும் பிரசுரித்து மகிழ்கின்றார்களே . இதன் மர்மம்தான் என்ன…!!!
நிதர்சனத்தின் புனைவுகளுக்கும், தீப்பொறி, கருணைதாசன் போன்றவர்களின் புரட்டுகளுக்கும் புனைவுகளுக்கும் என்ன வேறுபாடு…! என்ன உறவு…!!!
மேலும் இந்தக் கருணைதாசன் எனும் ‘நிழல் மனிதன்’ பல மறுப்புக் கருத்துக்களெனும் தனது நிலைப்பாடுகளை புலிகளின் ஈழமுரசு பத்திரிகையின் ஊடாக பிரசுரித்தும் வருகிறார் எனும் செய்தியும் உலாவுகிறதே!! இதனதும் மர்மம்தான் என்ன…!!!
இவர்களது சதித்திட்டமானது தலித் சமூக மேம்மாட்டு முன்னணிக்கும் சேர்த்தே நிகழ்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஞானத்துடன் இருந்த தனிப்பட்ட பிரச்சனையும் தீரும். தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகளும் முடங்கிவிடும். கருணாவின் ஆள், கருணாவின் செல்வாக்கு, கருணாவின் பணம் இதெல்லாம் தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கும் சொரிகிறது. என யாழ்ப்பாணிய பொதுப் புத்தி இலகுவாகவே சாட்சியம் சொல்லும் எனும் நம்பிக்கையிலல்லவா இவர்கள் செயல்படுகிறார்கள். பாசிசத்திலே பால்குடித்து (!!!) வளர்ந்த ‘நபர்களாக’ அல்லவா இனம் காட்டிக் கொள்கிறார்கள் கருணைதாசனும், தீப்பொறி இணையத்தளமும்.
எமது வேலைத்திட்டத்தின் முன் நிபந்தனையாக இருப்பது கலாச்சாரப் பண்பண்பாட்டுத் தளத்திலான சமூக விடுதலை என்பது. அதை நாம் தலித் மாநாட்டிலும் வலியுறு த்தியுள்ளோம். எமது முன்னணியின் செயற்கபட்டாளர்களில் ஒருவரான ஸ்ராலின் ஒரு தலித்தாகவும், பிராந்திய ரீதியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகவும் உள்ளார். ஒடுக்கப்படும் இப்பிரிவினர்மீது சமூக அரசியல் தளங்களில் மேலாதிகம் செலுத்துவது ‘யாழ்மையவாத’ கருத்தியலே என்பதை அடையாளம் கண்டு அவற்றை கணக்கில் எடுத்துச் செயல்படுபவர். அந்தவகையில் தான் யாழ்மேலாதிக்க அரசியல் செயல்பாடுகளுக்கு எதிராகவும், இராணுவ சக்திகளால் நிர்மூலமாக்கப்பட்ட முஸ்லிம்களுக்காகவும் அவரது குரல் கடந்த காலங்களில் பலமாக ஒலித்து வந்தது. இலக்கிய சந்திப்புகளிலும், மாற்று சஞ்சிகைகள், மற்றும் வெளியீடுகள் போன்றவற்றிலும் இருந்துவரும் அவரது பங்களிப்புகள் இவற்றை உறுதிப்படுத்தியே வந்திருக்கின்றன. புகலிட இலக்கியம் கொண்டிருக்கும் பாசிச எதிர்ப்புக் கூறுகளுக்கு எம்.ஆர்.ஸ்ராலினது பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியன அல்ல. அவர் புலியிலிருந்து கருணா பிரிந்ததன் பிற்பாடுதான் இதைப் பேசத் தொடங்கியவரல்ல என்பதையும் பலர் அறிவர். ஆகவே சமூகம் சார்ந்த சாதியப் பிரச்சனைகளையும், பிராந்தியம் சார்ந்த அரசியலிலும் ஞானம் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர்.
தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் சாதியம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டுமாகவே அவரது பங்களிப்பும் நிகழ்ந்து வருகிறது. அவரது நேர்மையிலும் அவரது செயல் பாடுகளிலும்; தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய நாம் மிகுந்த நம்பிக்கையுடனேயே செயல்பட்டு வருகின்றோம். அவர் தொடர்பாக ‘குறைந்த பட்ச நேர்மையும் அற்று’ நிழல் ’நபரான’ கருணைதாசன் எழுதும் முட்டாள்தனமான மொட்டைக்கடிதத்தையும், தீப்பொறியின் ஆதாரம் அற்ற செய்திகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு ஈ.பி.டி இயக்கத்தின் பொருளாதார உதவியுடனேயே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணி செயல்படுகிறது எனும் குற்றச்சாட்டும் தலித் மாநாடு தொடங்கவதற்கு முன்பாகவே பரப்பப்பட்டது. இவையாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்படி நயவஞ்சக அயோக்கியத்தன முடையோரின் செயல் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எமது த.ச.மே. முன்னணிக்கு ஆதரவு வழங்குபவர்களான ஜனநாயக முற்போக்கு சக்திகளே நீங்கள்தான் இதை பரிசீலிக்கவேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கிறீர்கள் என நாம் கருது-கின்றோம். தலித் சமூகத்தின் கடந்த காலப் போராட்டங்கள் திசைதிருப்பப்பட்டதன் ஓர் தொடர்ச்சியாகவே நாம் இதையும் அடையாளம் காண்கின்றோம்.
அப்படி நாம் கருதுவதில் தவறுகள் இருப்பின் அதைக்களைந்து எமது சமூகத்தின் நம்பிக்கைக்கு உதவுமாறும் உங்ளைக் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது தலித் சமூகத்தின் துன்பங்களும், துயரங்களும் செவிகளில் நுழையாது வெறுமனே காற்றில் மட்டுமே கரைந்து கொண்டிருப்பதா?
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)
02 novembre 2007
26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
றஞ்சி
17 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் புகலிடப் பெண்கள் சந்திப்பின் 26 வது தொடர் மூன்றாவது முறையாக பிரான்சில் ஒக்ரோபர் 13, 14 ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பை மூன்றாவது முறையாகவும் பொறுப்பெடுத்து நடத்தும் விஜியுடன் இணைந்து சீலா, பரிமளா ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர். இச் சந்திப்புக்கு பிரான்ஸ், சுவிஸ் ஜேர்மன், லண்டன், அவுஸ்ரேலியா இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 40க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டதுடன் அவுஸ்ரேலியாவிலிருந்து கவிஞர் ஆழியாளும் இந்தியாவிலிருந்து எழுத்தாளர், கவிஞர் புதியமாதவியும் இலங்கையிலிருந்து எழுத்தாளர் (விழுது அமைப்பைச்சேர்ந்த) சாந்தி சச்சிதானந்தமும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
புரிந்துணர்வுக்கான சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
முதல் நிகழ்வாக பெண்கள் சந்திப்பு பற்றிய மீளாய்வை நான் செய்தேன்.. பெண்கள் சந்திப்பினாது பெண்விடுதலை நோக்கிலான பெண்ணிய சிந்தனை கருத்தாடல்களுக்கும், அனுபவப் பரிமாற்றங்களுக்கும் உரமேற்றும் ஒருகளமாகவே இப் பெண்கள் சந்திப்பு இயங்கிவருகிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும், தோரணையும் இல்லாமல் பெண்ணிய நிலைப்பாட்டை முன்னெடுப்பதற்கு இத்தொடர் கூடல்கள் புகலிடப் பெண்களுக்கு பெரும் வாய்ப்பளித்திருக்கின்றது. மேலும் இங்கே பல்வேறுபட்ட கருத்;துக்களுக்கும், கொள்கைகளுக்கும் இடமளிக்கப்பட்டு பங்குபெறும் ஒவ்வொருவரும் சுதந்திரமாக தம் எண்ணங்களை வெளியிடவும் முடிகிறது. ஏதாவது ஒரு செயற்பாட்டின் ஊடாகவே நாம் எம்மிடையே அதாவது பெண்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்றும் பெண்கள் சந்திப்பு எங்கு யாரால் தொடங்கப்பட்டது, எந்தெந்த நாடுகளில் யாரால் பொறுப்பேற்கப்பட்டு பெண்கள் சந்திப்பு நடைபெற்றது பற்றியும் எடுத்துரைத்தேன். அத்துடன் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்பவர்களினால் குழு அமைக்கப்பட்டு பெண்கள் சந்திப்பு மலர் வெளிவருவதையும் சுட்டிக்காட்டியதோடு, ஆரம்பத்தில் 200, 300 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பு மலர் தற்போது 1000 பிரதிகள் வரை அச்சடிக்கப்படுகின்றதையும்;, இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு இலவசமாகவும் அனுப்பி வைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி இவை பெண்கள் சந்திப்புக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்றும் கூறினேன். பெண்கள் சந்திப்பு பற்றிய விரிவான விவரணப்படம் ஒன்றை சென்ற ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் உமா செய்திருந்ததையும் சுட்டிக்காட்டினேன். பெண்கள் சந்திப்பின் வரலாற்றை சிலர் திசைதிருப்ப முயலுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டி எனது நிகழ்வை முடித்துக்கொண்டேன்.
அடுத்த நிகழ்வாக சிறுகதை எழுத்தாளர், ஊடறு ஆசிரியர்களில் ஒருவரான தேவா (ஜேர்மனி) குடும்ப வன்முறை பற்றி எடுத்துக் கூறினார். குடும்பத்துள்ளே நடைபெறும் இத் தனிமனித போராட்டங்கள் வன்முறைகளின் உச்சகட்டத்தை தொடுகிறன. புகலிடத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான பெண்கள் தனிமை, மொழிபுரியாமை போன்றவற்றினால் தமக்கு ஏற்படும் வன்முறைகளை மூடிமறைக்க முயலுகின்றனர் இதனால் விரக்தி நிலை ஏற்பட்டு தற்கொலை செய்யக்கூடத் தயங்குவதில்லை. சிலர் தாம் வன்முறைக்கு ஆளாவது சரியானதே என நினைக்கும் மனநிலைக்கு சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு முறை சாதமாகிவிடுகிறது. இலங்கைத் தமிழர் மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு இனமக்களிடையேயும் இவ்வன்முறை கூடிக்கொண்டு வருவதாகவும், தனிப்பட்ட வாழ்க்கைமுறை, சொந்தங்கள் உறவுகள் அற்ற நிலை, பொருளாதாரச் சூழ்நிலை, ஆண் உயர்ந்தவன் என்ற கலாசாரக் கோட்பாடு போன்ற பல காரணிகள் குடும்ப வன்முறைக்கு உந்துகோல்களாக இருக்கின்றன என குறிப்பிட்டார். பாதுபாப்புத் தேடி இன்னொரு தேசத்தில் வாழுவதை மட்டுமே நிம்மதியான வாழ்வு என கருதிக்கொள்கின்றனர். அமைதியான வாழ்வு இடப்பெயர்வில் மட்டும் தங்கியில்லை. மனங்களின் அடிப்படையில் தங்கியுள்ளது. வெளிநாடுளுக்கு வந்தபின் எல்லோரும் மாறிவிடுகின்றார்கள் என்பது பெண்ணை நோக்கியே குறிவைக்கப்படும் ஆயுதம். இது சரியென ஒத்துக்கொண்டால் தாய்நாட்டில் வாழும் பெண்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாதிருக்கவேண்டுமே. மீடியாக்களில் வெளிவரும் விடயங்கள் எல்லாம் பொய்யானதாய் இருக்கவேண்டும். அகதிமுகாம்களிலும் கூட வன்முறை இருக்கிறது என்பது நாம் அறிந்ததே என குடும்பவன்முறை பற்றிய பல கருத்துக்களை தகவல்களுடன் கூறினார்.
அடுத்து ஊடறு வெளியீடாக வெளிவந்திருக்கும் மலையகப் பெண்களின் கவிதைத் தொகுதியான இசைபிழியப்பட்ட வீணையை கவிஞை ஆழியாள் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகத்தின்போது மலையகப் பெண்களின் எழுத்துக்களை அன்ரனிஜீவா போன்றோர் செய்திருந்தனர். தற்போது ஊடறுவின் முயற்சியினால் மலையகப் பெண்களின் கவிதைத்தொகுதி வெளிவருகின்றது என்றும் குறிப்பிட்டார். 1935 களில் மீனாட்சியம்மை அவர்கள் மலையக மக்களுக்காக போராடியதை 'இசைபிழியப்பட்ட வீணையில்' நினைவு கூர்ந்துள்ளார்கள் என்றும் இப் புத்தகத்தில் வெளிவந்துள்ள பல கவிதைகள் அவர்களின் வாழ்நிலையையும் அவலங்களையும் சித்தரிக்கின்றன என்றும் கூறி சில கவிதைகளைச் சுட்டிக்காட்டினார்.
புத்தகம் பற்றிய அவரின் அறிமுகத்தைத் தொடர்ந்து பிராந்திய, சமூக பாரம்பரிய மொழி பற்றிய விவாதம் தொடர்ந்தது. அத்துடன் 'இசைபிழியப்பட்ட வீணை' என்ற தலைப்பு மலையகப் பெண்களின் வாழ்வியலை பிதிபலிப்பதற்கான சரியான பதமா என்ற கேள்வியை புதியமாதவி தொடுத்தார். இசை பிழியப்பட்ட வீணை என்பதன் பொருளை மட்டும் நாம் பார்த்திருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு படைப்பு அச் சமூக, பிராந்திய மொழியினூடாக வெளிவரும்போதுதான் அதற்குரிய உண்மையான உயிர்ப்பு இருக்கும், வீணை என்ற இசைக்கருவியை எவ்வாறு மலையகத்துடன் தொடர்புபடுத்துவது என்ற கருத்துக்கள் ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கி வைத்தது. கவிதைத் தொகுதியை கவிஞர் ஆழியாள் வெளியிட இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட கவிஞர் புதியமாதவி பெற்றுக்கொண்டார்.
உறவுச்சிக்கல்கள் என்ற தலைப்பின் கீழ் புதியமாதவியின் நிகழ்ச்சி ஆரம்பமானது அவரது ஆழமான உரை எல்லோரையும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் இழுத்து வைத்திருந்தது. புதியமாதவி தொடர்ந்து பேசுகையில் பல போராட்டங்களுக்குப் பிறகும் பெண் மீதான வன்முறை கருத்தியல் தளம் உட்பட எல்லா தளங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் குறிப்பாக நாம் வளர்ந்ததாகக் கருதும் மேலை நாடுகளிலும்கூட பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தே வந்திருக்கிறது.
ஆனாலும் சீன நகரங்களில் திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணமாக ஒன்று உண்டு. திருமணத்திற்கு முன்பு பாலுறவு என்பதை சீன நகரவாசிகள் மிகவும் பரந்த மனதுடன் ஏற்க ஆரம்பித்துள்ளதுதானாம். சுமார் 18 வருடங்களில் பிரம்மாண்ட மாற்றங்கள் இவ் விசயத்தில் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக நகரங்களில் திருமணத்தையும் பாலுறவையும் குழப்பிக்கொள்ளும் மனப்பான்மை; மறைந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புறத்து பெண்கள் திருமணத்தைப் பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போடுகின்றனர். பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆண்-பெண் பாலியல் தீர்மானிக்கப்படுவது ஆணின் விந்திலிருந்து வெளியாகும் ஒல குரோமோசொம்களைப் பொறுத்தே என்ற அறிவியல் பரப்புரை ஆண் வாரிசுகள்., சொத்துரிமை குறித்த சமூக மதிப்பீடுகளைத் தகர்த்துள்ளது… என்று பல விடயங்களை ஆய்வுடன் தொட்டுச் சென்றது அவரது உரை. புதிய மாதவியின் உரையைத் தொடர்ந்து பல ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன
புதியமாதவியைத் தொடர்ந்து பேசிய ராஜேஸ்பாலா அவர்கள் "புனிதம் என்ற போர்வையில் பெண் தற்கொலைதாரிகள்" பற்றிய சிறு குறிப்பொன்றை வாசித்தார். ஆண்களால் எழுதப்பட்ட சரித்திரங்களின் மாவீரக் கதாநாயகர்களான அலெக்ஸான்தர், ஜெங்கிஸ்கான் போன்ற ஆதிக்க விரிவாக்க வெறிபிடிதவர்கள் தாங்கள் வெற்றிகொண்ட நாடுகளில் உள்ள பெண்களைப் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தியதுபோல், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஏழைகளை புலிகள் தற்கொலைதாரிகளுக்கு பயன் படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார். புராணங்களிலோ, இதிகாசங்களிலோ இல்லாத "பெண் தற்கொலைதாரிகள்" அம்சத்தை முழுக்க முழுக்கப் பாவித்து அப்பாவிப் பெண்களையும், குழந்தைகளையும் புலிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தை அவர் முன் வைத்தார். இவரின் பேச்சைத் தொடர்ந்து பலர் கேள்விகளைக் கேட்டு விவாதித்தனர். அனைத்து இயக்கங்கள் செய்யும் மனித உரிமைகளுக்கு எதிராக பலர் கருத்துக்களை கூறினர். ஆனாலும் பலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் தற்கொலைதாரிகள் பற்றிய பார்வை இவரிடம் குறைவாகவே காணப்பட்டது என்ற கருத்து அங்கு முன்வைக்கப்பட்டது.
ராஜேஸ்பாலாவின் நிகழ்வைத் தொடர்ந்து பாரிஸை சேர்ந்த ஊடகவாதியான ஜெயா பத்மநாதன் "பெண் உடல் ரீதியாக மாற்றம் அடைந்தால் வரும் விளைவுகள்" எனும் கட்டுரையை வாசித்தார். தமிழ் பெண்களுக்கு தங்கள் உடல் மாற்றங்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் அறிவைக் கொடுக்க வேண்டும். குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம். இந்தச் சமயங்களில் எதிலெதில் கவனமாக இருக்க வேண்டும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தது.
இரண்டாம் நாள் 14.10.2007 ஞாயிற்றுக்கிழமை
தாமதமாகவே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
முதலாவது நிகழ்வாக "சிவப்பு கட்டுமரங்களும் வெள்ளை சிலந்திகளும்" என்கின்ற தலைப்பில் கவிஞை ஆழியாள் பேசினார். அவுஸ்திரேலிய கவிஞைகளான வென் காவுட், யூடித் றொட்டிக்குவே, டோறதி போட்டன் போன்ற கவிஞர்களின் பெண்ணிய அரசியலைப் பற்றி எடுத்துக் கூறினார். மிகவும் ஆதர்சபூர்வமாக விளக்கிய ஆழியாள் மூன்று அவுஸ்திரேலிய பெண் கவிஞைகளின் படைப்பு உலகமும் பெண்ணிய அரசியலும், கவிதை என்ற வகைமை என்ற அடிப்படைகளில் இதை அவர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கினார். சமகாலப் பகுதியில் வாழ்ந்து இருந்தாலும் அவரவர் தேடல்களும், படைப்பு உலகமும், தேடல்களை ஒட்டிய கருத்துருவாக்கமும் அவர்கள் எடுத்துக் கையாண்டிருக்கும் படிமங்களும் வெவ்வேறானவை. இவர்களின் படைப்புகளில் சில பொதுவான அம்சங்கள் காணப்பட்டாலும், பொதுவற்ற விடயங்களே அதிகம். இந்த பொதுவற்ற தன்மையே இவர்களின் தனித்தன்மையையும், ஆளுமையையும் வெளிக்காட்டுவதுடன் பெண்ணிய அரசியலுக்கு வலுவும் சேர்க்கின்றது. அத்துடன் பெண் படைப்பாளிகளின் படைப்புலகம் சில பொதுத் தலைப்புகளுக்குள் அடங்கி விடுவதில்லை என்பதற்கு நல்ல முன்மாதிரிகளாகவும் இவர்களின் கவிதைகள் அமைகின்றன. எதை எதை எழுத விழைகிறோமோ அதை எம் அனுபவச்செறிவு, படைப்பாக்கத்திறன், ஆளுமையோடு எம் பார்வையில் எமக்கு ஏதுவான வெளிப்பாட்டு முறைமையில் பதிவு செய்வது முக்கியம். சில குறித்த தலைப்புகளுக்குள் எம்மை அடக்கிக் கொள்வது கூட ஆதிக்க மரபுகள், ஆதிக்க சக்திகள் நாமில்லாத வெளிகளில் பலப்பட வழியமைத்துவிடும் என்றார். இவற்றை பல கவிதைகளுடன் ஆதாரப்படுத்தி சுட்டிக்காட்டிய ஆழியாளின் பேச்சுத்திறனும் ஆளுமையையும் பலரையும் கவர்ந்தது.
ஆழியாளின் நிகழ்வைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து கலந்துகொண்ட எழுத்தாளரும், விழுது அமைப்பைச் சேர்ந்தவருமான சாந்தி சச்சிதானந்தம் இலங்கையின் போர்ச்சுசூழலில் பெண்களுக்கான வேலைத்திட்டங்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார். மக்கள் தங்கள் வாழ்வைத் தாமே நிர்ணயிக்கும் அளவிற்கு வலுவூட்டப்பட வேண்டுமெனில் சமூகத்தில் நிலைத்திருக்கும் அதிகாரரீதிலான உறவு முறைமைகளை அதன் சகல மட்டங்களிலும் தகர்க்க வேண்டியிருப்பதைப் எடுத்துக் கூறினார். இன்று தொண்டர் நிறுவனங்கள் செயலாக்கும் திட்டங்களை ஒரு பிரதேசத்தில் அமுல்படுத்த முன்னர் அப் பிரதேசத்தில் அடிப்படை மனிதஉரிமைகளுக்கு நேரிடும் அச்சுறுத்தல்களை கவனத்தில் எடுத்து அவற்றை ஈடுசெய்யக்கூடிய சம்பந்தப்பட்ட நிறுவனங்ளோடு இதுபற்றி ஆராயப்படுகின்றது. அதற்கு ஏற்ப இலக்குகளும் நோக்கங்களும் செயற்படுத்தப்படுகின்றன. அவை சமூக கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட வேண்டிய தேவை உள்ளதையும் இப்படியான பணிகளை செயற்படுத்தப்பட அடித்தளமாக இயங்கும் நிதிக்கொடை நிறுவனங்களின் பலவீனங்களையும் சுட்டிக்காட்னார். வறியவர்களுக்கெனப் பெறப்படும் நிதிகள் அநாவசியமான பெரிய அலுவலகங்களுக்கும் குளிரூட்டிகளைச் செயற்படுத்துவதற்கும் வாகன வசதிகளுக்கும் செலவழிக்கப்படுவதையும்; மற்றும் சம்பளம் கொடுப்பதற்கும் இது பயன்படுத்தப்படுவதையும் நாம் காண்கின்றோம் என்றார். தாங்கள் எதிர்பார்க்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமல் இருக்கின்றது என்கின்ற தனது ஆதங்கத்தையும் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
சாந்தி சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை சற்று தூக்கலாக நான் என்ற ஒரு வித அகங்கார தொனியாக இருந்தது. கேள்வியொன்றுக்குப் பதிலளிக்க வேண்டி வந்தபோது அவர் அதை எதிர்கொண்ட விதம் அதிகாரத்துவத் தொனியில் அமைந்தது. அதை சுட்டிக்காட்டிய நிர்மலா இந்தவித பண்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தனது விமர்சனத்தை முன்வைத்தார். தொடர்ந்து நிர்மலா கூறுகையில், ஆசியாவிலேயே இலங்கையில்தான்; அதிகமான என்.ஜி.ஓ அமைப்புகள் உள்ளன, அவை கிட்டதட்ட 700 எனக் குறிப்பிட்டு, அவையெல்லாம் பணத்தைக் கொடுத்து உங்களை சேவை செய்யச்சொல்கிறது, ஆகவே எப்படி நீங்கள் அவர்களிடம் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை எதிர்பார்ப்பீர்கள்? என்.ஜி. ஓ அமைப்புகள்; சொல்வதைத்தான் நீங்கள் செய்யமுடியுமே தவிர உங்களால் சுதந்திரமாக எந்த வேலையையும் செய்ய முடியாமா? என்றும் கேள்வி எழுப்பினார் என்.ஜி.ஓ அமைப்புகள் மக்களுக்காக வேலை செய்வதில்லை என்றும் அதனால் தான் தாங்கள் லண்டனில் ஒரு எந்த என்.ஜி.ஒ அமைப்பிடமும் பணம் வாங்காமல் சுதந்திரமாக வேலை செய்வதாகவும் குறிப்பிட்டார்.
நிர்மலாவின் கருத்தை ஏற்றுக் கொண்ட சாந்தி இலங்கையில் என்.ஜி.ஓ அமைப்புகளின் ஆதிக்கம் கூடுதல் தான் எனவும் குறிப்பிட்டார். என்.ஜி.ஓ அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள் 'விபச்சாரத்தில்' ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்பி அரியேந்திரன் பாராளுமன்றத்தில கூறியிருந்தாரே அதற்கு எதிராக உங்களது பெண்கள் அமைப்பினர் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சாந்தி, தாங்கள் பல எதிர்ப்பு வேலைகளைச் செய்ததாகவும், அதனால் பல அரசியல் தலையீடுகள் குறுக்கீடுகள் தமக்கு எற்பட்டதாகவும், அத்தோடு பெண்கள் வீடுகளில் மஞ்சள் துணிகளைக் கட்டி தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததாகவும் கூறினார்.
சாந்தியின் நிகழ்வைத் தொடர்ந்து புதிய மாதவியின் படைப்புகள் சம்பந்தமாக விஜி, ஷீலா ஆகியோர் தமது கருத்துகளைத் தெரிவித்தனர். புதியமாதவியின் கவிதைத் தொகுப்புக்களான 'நிழல்களைத் தேடி' ,' ஹே..ராம்.' போன்றவற்றில் உள்ள கவிதைகளில் முக்கியமாக மத எதிர்ப்பும், தீண்டாமை எதிர்ப்பும் அதிகமாக காணப்படுகின்றன. இவை அவர் வாழ்கின்ற சூழலை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்பட வேண்டியவை. மதங்களின் பெயரால் ஏற்படுத்தப்படும் அநியாயங்களை, கலவரங்களை மிகவும் ஆவேசமாக அந்த மதக்கடவுள்களை கேள்வி கேட்பதோடு, அவரது ஆழ்ந்த வேதனையையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. மேலும் அவரது கட்டுரை, விமர்சனங்களின் தொகுதியான 'சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள்' அறிமுகப்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து தர்மினி 'மை' புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந் நூலை அறிமுகம் செய்யவென இருந்த மாதுமை சந்திப்புக்கு வரமுடியாமல் போனதால் இதை அறிமுகம் செய்ய முன்வந்தார் தர்மினி. முற்தயாரிப்பு எதுவும் இல்லாத நிலையிலும் தனது பார்வையை முன்வைத்த விதம் பாராட்டுக்குரியது. இது ஊடறுவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு என்றும் ஊடறுவில் வெளிவந்த 35 கவிஞர்களின் கவிதைகள் இவை என்றும் கூறிய தர்மினி சில கவிதைகளையும் வாசித்துக் காட்டி தனது கருத்துகளை முன்வைத்திருந்தார்.
கவிதைத் தொகுதி விமர்சனங்களைத் தொடர்ந்து பெண்ணியவாதியான நிர்மலா 'பெண்ணியச் சிந்தனைகளும் தமிழ்பெண்களின் விடுதலையும்' என்ற தலைப்பின் கீழ் பேசினார் மிகவும் ஆழமாக மிகத் தெளிவாக தனது கருத்துக்களை முன்வைத்தார் பெண்ணியம,; தேசியம், இனத்துவம் ஆகியவற்றை முன்னெடுக்கும் கருத்தாடல்களில் விரவியுள்ள நமது தமிழ் பெண்களின் விடுதலையில் பெண் என்ற விளக்கம் உள்ளடக்கும் பிறகூறுகள் எவை? அவை முன்வைக்கும் அரசியல் உணர்வை அணுக வேண்டியது அவசியமாகும். தன்னிலையைப் புரிதல் என்பதோடு பிறஅம்சங்களுக்கும் பெண்ணியத்தின் நீர்த்துப்போகாத செயல்பாட்டு ஊக்கம் நிறைந்த கருத்து நிலையாக காட்ட முடியும். இந்த அடிப்படையில் உணர்வு பெற்ற பெண்ணால் தான் உணரமுடியும். படிநிலைத்தன்மைகள் கொண்ட சமூகம் எவ்விதம் தனது செயல்பாடுகளையும் வெளிப்பாடுகளையும் மறுக்கிறது? நவீனத்துவம், பின்நவீனத்துவம், மார்க்சியம், தேசியம் முதலாளித்துவம் என தற்போது பேசப்பட்டு வருகின்றன. பெண்களின் பிரச்சினைகளும் பெண்ணியம் என்ற வரையறையை தாண்டிச் சென்றுகொண்டிருக்கும் காலம் இது. அதாவது பால்நிலை போன்ற பிரச்சினைகள் இன்றும் கலாச்சார கட்டுமானங்களால் பின்தள்ளப்பட்டுள்ளது. பெண்கள் தாசியாகவும், தாயாகவும் இருக்கிறாள். சமுதாயம் பாலியல் உறவை எப்படிப் பார்க்கிறது. ஆண்-பெண் உறவு, ஒரினச்சேர்க்கையாளர்கள் என பல்வேறுபட்ட பால்நிலையைச் சேர்ந்தவர்கள் இன்று சமுதாயத்தில் உள்ளனர்.
அரசியல் களத்துள் பெண்ணின் பிரச்சினைகளைக் கொண்டு வரவும் அரசியல் பிரக்ஞையை செழுமைப்படுத்தவும் பெண்ணியம் என்பதன் கருத்துநிலை அடிப்படையாக அமைய முடியும். பெண் என்பவள் யார்? அவளது செயற்பாட்டை வெளிப்பாடுகளை தீர்மானிக்கும் சக்திகள் யாவை? அந்தச் சக்திகள் எத்தகைய கருத்தாடல்களை கையாளுகின்றன என்பது பற்றிய விசாலமான பார்வை தேவை. சமுதாயத்தில் பெண்கள் கற்புடைய பெண்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை அவள் மீறும்போது 'விபச்சாரி' என்ற பட்டத்தில் சுடப்படுகிறாள். இப் பாலியல் பாகுபாடுகள் ஆணாதிக்க சமுதாயத்தின் கட்டுமானத்தை பலப்படுத்த உதவும் என தரனவை Batler கூறுகின்றார் என பல கருத்துக்களை கூறி தனது நிகழ்வை முடித்துக்கொண்டார் நிர்மலா
அடுத்து, இலங்கையில் நடைபெறுகின்ற போராட்டத்தில் இன்று சமாதானத் தீர்வுத் திட்டம் பற்றி பலமாக பேச்சுக்கள் அடிபடுவதும் அதில் பெண்களின் பங்கு அவசியம் என்பதை எந்த இயக்கமும், எந்தக் கட்சியும் கவனியாது இருப்பதையும் சுட்டிக்காட்டி யுத்தமும் பெண்களும் சமாதானத் தீர்வுகளும் என்ற தலைப்பில் விஜி கட்டுரையினை வாசித்தார். ஏற்கனவே இருக்கின்ற எமது சமூக அமைப்பில் பெண்ணின் நிலையும், போராட்டத்தினால் பெண்கள் மீது சுமத்தப்படும் சுமைகள் பற்றியும், சீரழிவுகள் பற்றியும் கவனத்திற்கு கொண்டுவந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் பங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இலங்கையில் தொடரும் போர் நிறுத்தப்பட்டு, சமாதான தீர்வுக்கான முன்னெடுப்பை கொண்டுவரவேண்டும் எனவும், அச் சமாதான பேச்சுவார்த்தைகளிலும், சமாதானத் திட்டங்களிலும் பெண்களின் பங்கு கணிசமானதாக மாற்றப்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் விவாதங்கள் நடைபெற்றன. சில நிகழ்வுகளுக்கு நேரம் பற்றாக் குறை காணப்பட்டது என்பது உண்மைதான் . பாரிஸ் பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்த விஜி, ஷீலா, பரிமளாவுக்கும் சந்திப்பை நடாத்த மண்டபத்தைத் இலவசமாக தந்துதவியத நிர்வாகத்தினருக்கும், சிற்றுண்டிகளை செய்து தந்துதவிய ரூபி, ஜெயந்தி, வசந்தி போன்றோருக்கும் நன்றிகள் சொல்லப்பட்டன.
இப் பெண்கள் சந்திப்பிலும் பல பெண்கள் மனம் திறந்து பேசினார்கள். ஆனால் பெண்கள் சந்திப்பு நடைபெற முன்னரும் நடைபெற்ற பின்னரும் தமது காழ்ப்புணர்வுகளையும் அவதூறுகளையும் புலிஆதவரளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், தம்மை மாற்றுக் கருத்தாளர்கள் என்றும் கூறிக்கொள்பவர்கள்… என ஒருசிலர் கொட்டித் தீர்த்தனர். அதிலும் வேடிக்கை என்னவெனில், ஒருசில பெண்கள் , பெண்கள் சந்திப்புக்கு ஒருமுறை கூட வராமல் பெண்கள் சந்திப்பு பற்றிய கருத்துக்களை கூறுவதுதான்.
சிறு கூட்டமாக ஆரம்பித்த பெண்கள் சந்திப்பில் உலகெங்கிலும் இருந்து பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண்கள் எழுதுகின்றார்கள், பெண்களின் பிரச்சினைகள் பேசப்படுகின்றன என்றளவில் சமூக அக்கறையுடையோர் தாமாகவே இதில் பங்குகொண்டு தமது கருத்துக்களையோ விமர்சனங்களையோ முன்வைக்கும் சமூகக் கடமைப்பாடு உண்டு. விருப்புவெறுப்புகளைத் தாண்டிய செயற்பாடாக இது அமையும் என்பதோடு இது பெண்கள் சந்திப்பின் வளர்ச்சிக்கும் உதவும்.
அடுத்த பெண்கள் சந்திப்பு சுமதிரூபனின் வேண்டுகோளின் பெயரில் கனடாவில் நடத்துவதாகவும் முடிவுசெய்யப்பட்டது.

