thuuuu

கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...

29 juillet 2007

நன்றி தலித்முரசு

periyar_1_

மீள்கோணம்

அழகிய பெரியவன்

"திரைப்படத்தின் ஆற்றல், நீண்ட காலத்திற்கு ஓடக்கூடிய அதன் நடிப்பியக்கத்திலோ, எளிதில் நெருங்க முடியாத அதன் விலகிய தன்மையிலோ இல்லை. மாறாக, பாத்திரங்களின் அக உலகை ஊடுறுவிப் பார்ப்பதிலும், அப்பாத்திரங்களின் ஆழ்ந்த தன்மைகளையும் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிக்கொணர்வதிலே - வேறெந்த கலைக்கும் இல்லாத சாத்தியங்களைக் கொண்டிருப்பதிலும்தான் இருக்கிறது.''

- கிளப் பான்பிலோவ், ‘வேலன்டினா' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை அளித்த ரஷ்ய இயக்குநர்


rajani1

rajani2


வேலூருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்தின் பின் இருக்கையில் ஒடுங்கியபடி உட்கார்ந்து வர ஓர் இடம் கிடைத்தது. கருணையுடன் அந்த இடத்தை வழங்கிய சக பயணிகள், என்னை கடையேழு வள்ளல்களின் கண்கொண்டு பார்த்தனர். நான் ஒரு புன்னகையுடன் கணக்கை தீர்த்துக் கொண்டேன்! பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் இடம் பிடிப்பதும், பயணம் செய்வதும் ஒரு தனிக் கலை. அப்பயணங்களின் போதுதான் நம்மால் மனிதர்களின் உண்மையான முகங்களைப் படிக்க முடிகிறது.

பேருந்து பொய்கையைத் தாண்டியிருக்கும். ஒரு பயணி வண்டியை நிறுத்தி ஏறினார். பின்னால் இருக்கையில் கடைசியாக அமர்ந்திருந்தவர் ஆர்ப்பாட்டத்துடன் எழுந்து, அவருக்கு தன் இடத்தை அளித்தார். இருவரும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் என்பது, அவர்கள் பேச்சிலே தெரிந்தது. புதிதாக வந்தவர் குடித்திருந்தார். அவர் கைகளில் கற்றையாக துண்டறிக்கைகளைப் போல ஒட்டிகள் (stickers) இருந்தன. கவிழ்த்து வைத்திருந்த அவற்றிலிருந்து சடாரென ஒன்றை எடுத்து திருப்பினார். ‘சிவாஜி' ரஜினி - வெண்ணிறப் பொய் முடியுடன் போலிச்சிரிப்பு சிரித்தார்! ஒரு தரிசனம் போல அப்படத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் ஒட்டியை கவிழ்த்து வைத்துக் கொண்டு அங்கிருப்பவர்களைப் பெருமிதத்துடன் பார்த்தார் புதியவர். குடியேற்றத்தில் அவர் இறங்கும் வரை, நான் அவரை அவ்வப்போது கவனித்தபடி வந்தேன்.

rajani
அந்த மனிதரின் ரத்தம், சதை, எலும்பு, பேச்சு, நினைவு... எல்லாவற்றிலும் ரஜினி மீதான வெறி நிறைந்திருந்தது. கடிகாரத்தின் பட்டியில் ரஜினி படம். கைப்பேசியின் பின்புறம் ரஜினி படம். அதில் தொலைபேசி அழைப்பு வந்தால், அழைத்திடும் பாடல் ரஜினியின் படப் பாடல். தனக்கு அமர இடம் அளித்த நண்பரோடு அவர் ‘சிவாஜி' பட வெளியீடு பற்றியும், அதன் ஏற்பாடுகளைப் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார். ரசிகர் மன்ற சிறப்பு முதல் காட்சிக்கு அனுமதி சீட்டுகளை பல ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கியிருப்பதாகச் சொன்னார். தன் சட்டைக்குள்ளே மடித்து வைத்திருந்த இரு உறைகளை எடுத்து, உள்ளிருக்கும் கடிதங்களை பிரித்துப் பார்த்தார்.

தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்திலிருந்து, மாநிலத் தலைவர் சத்தியநாராயணா கையொப்பமிட்டு வழங்கிய கடிதம் அவை. அக்கடிதங்களைக் கொண்டு வரும் ரசிகர்களுக்கு இலவசமாய் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கும்படி பரிந்துரை செய்திருந்தது. தான் வாழ்வில் பெற்ற பெறர்க்கரிய விருதினைப் போல அக்கடிதங்களை கையாண்ட அவர், மிக ‘நிதானத்தோடு' மடித்து உறையிலிட்டு சட்டைக்குள் திணித்துக் கொண்டார். இடையிலே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நான் வேலைக்கு 2 நாள் லீவு போட்டுட்டு வந்துடுவேன். பேனர் வைக்கிறது, போஸ்டர் ஒட்டறது, எல்லாத்தையும் கிட்ட இருந்து பாத்துக்கலாம். பட்டாசு. தோரணம், மாலை, மேளதாளம் எல்லாம் ரெடி பண்ணிடனும். ஊரையே ஒரு கலக்கு கலக்கிப்புடனும். தலைவரு படம்னா சும்மாவா?'' தொலைபேசியில் கட்டளைகளை இட்ட பின்பு தலையை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொண்டார். தீவிரமான ரஜினி ரசிகராகத் தெரிந்த அவருக்கு, வயது நாற்பத்தைந்தை தாண்டியிருக்கும்! என் மனம் கலக்கத்தில் உறைந்து போனது.

குடும்பம் குழந்தைகளோடு, அரசுப் பணியிலிருக்கும் ஒருவருக்கே இப்படி ஒரு திரைப்பட கதாநாயக வெறி இருக்கின்றது எனில், வேலையற்ற அல்லது வேலைசெய்ய மனமின்றி சுற்றிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு - இந்த வெறியின் தீவிரம் எவ்வளவு அதிகம் இருக்கும்? எவ்வளவு அதிகம் இருக்கின்றது என்பதை ரஜினியின் புதிய திரைப்படம் வெளியான அன்று தமிழகம் கண்டது. காசு செலவின்றி ஊடகங்களால் அளிக்கப்பட்ட விளம்பரங்கள். எந்த நாளேட்டைத் திருப்பினாலும் ‘சிவாஜி' திரைப்படம் பற்றிய செய்திகள். ரஜினியின் கழிவறை மற்றும் படுக்கையறை தவிர்த்த பிற செயல்பாடுகள் எல்லாமே செய்தியாக்கப்பட்டன.

தமிழக முதல்வர் தனிக்காட்சியில் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து சொன்னார். ஜெயலலிதா அவர்களும் இப்படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினியை வானளாவ புகழ்ந்திருந்தார். சன் தொலைக்காட்சி குழுமத்தின் தெலுங்கு அலைவரிசை ஒளிபரப்பில் சந்திரபாபு (நாயுடு) திரைப்படத்தைப் பார்த்ததையும், ரஜினி நன்றி சொல்லி பேசியதையும் தலைப்புச் செய்தியாக்கினார்கள். திரைப்படம் வெளியான அன்று தமிழகம் இதுவரை சந்தித்திராத கீழ்த்தரமான ரசிக மனோபாவத்தின் கேலிக் கூத்துகள் நடந்தன. ரஜினியின் வெட்டுப்படங்களின் (கட்அவுட்) மீது பால் முழுக்கும், பீர் முழுக்கும் செய்யப்பட்டன. திரைப்படம் வெளியான திரைப்பட அரங்குகளை ஒட்டியிருக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது. காவலர்கள் தடியடி நடத்தினர். ரசிகர் மன்றத்தினர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி அலகு குத்தி தொங்கியபடி வந்தனர். பெண்கள் பால் குடம் எடுத்தனர். கோவிலில் வைத்து பூசை போடப்பட்டு படப்பெட்டி - யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலம் மாறிவிடவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் திரைக் கொட்டகைகளில், எம்.ஜி.ஆர். படங்களுக்கு பெண்கள் கைகளிலேயே கற்பூரம் கொளுத்தி ஆரத்தி எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அதைப் போலவேதான் இன்றும் நடக்கிறது. இத்தனை ஆண்டுகால வளர்ச்சியில் உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால், ரசிக மனோ பாவங்களும், தமிழர்களின் திரை அறிவும் மாறவேயில்லை. மாற முற்பட்டாலும் இங்கிருக்கும் புற சக்திகள் விடுவதில்லை. திரைப் படம் ஒரு கலையாக இங்கே இல்லை. அது அரசியல் பெருமுதலாளிகள், தமது சுரண்டல் பணத்தை முதலீடு செய்யும் வணிகம்; மக்களை ஏமாற்றும் ஆன்மிகம் ஆகியவற்றின் கூட்டுச் சதியாக இருக்கிறது. அதிகாரம், ஆபாசம், அடிமைத்தனம், மூடபழக்கங்கள், சாதியம், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையாக விளங்குகிறது.

வணிகத் திரைப்படத்தின் வரவேற்பும் ஆர்ப்பாட்டமும் இப்படி இருக்க, மக்களுக்கான திரைப்படங்களின் நிலையோ வேறு மாதிரி இருக்கிறது. அண்மையில் வெளிவந்த ‘பெரியார்' திரைப்படத்திற்கு இருந்த வரவேற்பைப் பற்றி நாம் ஒப்பீடு செய்து பார்க்கலாம். பத்து நாட்களுக்கு மேல் ஓடவில்லை அப்படம், எங்கள் ஊர் திரையரங்குகளில். அம்பேத்கர் திரைப்படம் ஒரு வாரம் மட்டுமே திரையரங்குகளில் ஓடியதாக, மும்பை நண்பர்கள் சொல்லி அறிந்து கொண்டேன்.

அண்மையிலே ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு பகுதிகளுக்கு தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கென வந்திருந்தார் தங்கர் பச்சான். ‘பெரியார்' படத்தின் ஒளிப்பதிவினை தங்கர்பச்சான்தான் செய்திருந்தார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு' என்கின்ற தனது நாவலை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் அவர். சத்தியராஜ் அப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். எங்கள் ஊரில் படப்பிடிப்பு நடந்தபோது, நான் தங்கர் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். படபிடிப்பினைப் பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இளையோர், முதியோர் என எந்தப் பாகுபாடும் இல்லை. எல்லோரும் ஆண்களே. ஒப்பீட்டளவில் பெண்கள் சிலரும் வந்திருந்தனர். காவலர்களாலும், நலம் விரும்பிகளாலும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

தங்கர்பச்சான் அக்கூட்டத்தைப் பார்த்தபடி வேதனையோடு என்னிடம் சொன்னார் : "படப்பிடிப்பை பார்க்க வந்த இவ்வளவு கூட்டமும், ‘பெரியார்' படத்தைப் போய் பார்த்திருந்தா எவ்வளவு மகிழ்ச்சியா இருந்திருக்கும்? இங்க நடிக்க வந்திருக்கிற சத்தியராஜ் தானே அதிலேயும் நடிச்சிருக்காரு?!'' தங்கர் பச்சான் அவர்களின் கேள்வியில் இருக்கும் முரண் சுவையும், வேதனையும் எல்லோரையும் பாதிக்கக் கூடியது. ஆனால், என்ன செய்ய? தமிழக திரைப்பட ரசிகர்களின் மனோபாவம் பழக்கப்படுத்தப்படாமல், வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிபோல இருக்கிறது. தன் மகனை சிறுவயதிலிருந்தே பக்குவப்படுத்தி, பயிற்றுவித்து வளர்க்காமல் விட்டுவிட்டு, காலம் கடந்த பின்பு அமர்ந்து கவலைபட்டுக் கொண்டிருக்கும் தந்தையைப் போலத்தான் இந்த நிலைமை.

திரைப்படத்தை, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கூட்டம் எப்போதுமே ஆதிக்க சாதி பெரு வணிகக் கூட்டம். அதைத் தமது அரசியலுக்காகப் பயன்படுத்த நினைத்தோர் பயன்படுத்திவிட்டு எறிந்து விடுகிறவர்களாகவே இருந்தனர். அதிகாரத்துக்கு வர நினைத்தோர் அதைத் தனது வழியாக மட்டுமே நினைத்துக் கொண்டனர். வழியின் இருமருங்கிலும் கழிந்து வைத்திருந்ததை அவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டும், கண்களை மூடிக் கொண்டும் சகித்துக் கொண்டனர். பலர் அதை பணம் மற்றும் புகழுக்கான களமாக எண்ணினர். பெரும்பாலானோர் அதை ஒரு கலையாக நினைக்கவேயில்லை. அதன் ஆற்றலைப் புரிந்து கொள்ளவே இல்லை. எனவே, தமிழ் சினிமா பிச்சை எடுக்கும் யானையாக மாற்றப்பட்டு வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறது.

திரைப்படத்தின் மாபெரும் ஆற்றலை புரிந்து கொண்டு, அதைத் தமது கருத்தியல் பரப்புக் களனாக மாற்றிக் கொண்ட சோவியத் யூனியன் முதல் இன்றைய ஈரானிய படங்கள் வரையிலான வரலாற்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சோவியத் புரட்சிக்குப் பின்பு திரைப்படத்தைப் பற்றி தவறான கண்ணோட்டத்தினைக் கொண்டிருந்த லெனின் அவர்கள் – ‘போர்க் கப்பல் போடெம்கின்', ‘தாய்' ஆகிய திரைப்படங்களைப் பார்த்த பிறகு தனது கருத்தினை மாற்றிக் கொண்டிருக்கிறார். புரட்சிக்குப் பிறகான சோவியத் சமூகத்தில் திரைப்படம் ஓர் ஆற்றல் வாய்ந்த கருத்தியல் ஊடகமாக இருந்திருக்கிறது. மக்களை கலக்கமடையச் செய்த வினாக்களுக்கு உரிய விடைகளை திரைப்படத்தின் வழியாக அறிந்து கொண்டிருக்கிறார்கள். பொழுதுபோக்குக்காக அல்லாமல் கருத்தியல் தெளிவும், புதிய கல்வியும், சமூக அரசியல் பாடமும் படிக்க சோவியத் மக்கள் திரைப்பட அரங்குகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.

டிகா வெர்டோவ், லேவ் குளேசேவ், அலெக்சாண்டர் டோவ்சென்கோ, புடோவ்கின், செர்ஜி அய்சான்ஸ்டைன் என்ற பல திரைப்படைப்பாளிகள் உலக திரைப்படத்தையே ஆதிக்கம் செய்பவர்களாக - சோவியத் சினிமாவிலிருந்து உருவாகியிருக்கிறார்கள். "சோவியத் சினிமா புரட்சியிலிருந்து தொடங்கியது. புரட்சிகரமான சமூகத்தினை புதுப்பிப்பதில் பங்காற்றுகிறது'' என்கிறார் சியாம் பெனகல். இங்கே சமூகப் புரட்சியும் இல்லை. திரைப்புரட்சியும் இல்லை. குறைந்தபட்சம் திரைப்பட ரசனையையும், ஒரு படத்தை எப்படி பார்ப்பது என்ற அடிப்படையையும் கூட நாம் வளர்த்தெடுக்கவில்லை.

இப்பணிகளை செய்யாத வரை ‘சிவாஜி'க்கு ஆர்ப்பாட்டமும், ‘பெரியார்', அம்பேத்கர் திரைப்படங்களுக்கு பாராமுகமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தமிழ்ப் படைப்பாளிகளும், கலைஞர்களும், சிந்தனையாளர் களும், மாற்று அரசியல் தோழர்களும், திரைப்படத்தை குறித்து கவலை கொள்ள வேண்டும். கவலை கொண்டு அந்தத் துறையில் நுழைந்த பிறகு, தன்னை அத்துறையின் அத்தனை சீரழிவுப் போக்குகளோடும் இணைத்துக் கொள்வதே வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி இல்லாத உண்மையான அக்கறையாக இருக்க வேண்டும். மாற்றுச் செயல்பாடுகள் இன்றயை திரைப்படத்தின் சீரழிவு கலாச்சார இடத்தை நீர்த்துப் போகச் செய்யும்.

திரைப்பட யானை பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு, மூட அரண்களைத் தகர்க்க வரும்.

Posté par assura à 18:10 - Permalien [#]


"ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை''

சி. ஜெய்சங்கர் - மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ‘மூன்றாவது கண்' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். ‘மூன்றாவது கண்' என தமிழிலும், ‘தேர்ட் அய்' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.

1965 டிசம்பரில் யாழ்ப்பாணம் மற்றும் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம் - யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.

குழந்தை மா. சண்முகலிங்கம் அவர்களைத் தனது முதன்மை ஆசானாகக் கருதும் இவர், யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் ‘தலித் முரசு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி.(யின் சிறுபகுதி)
சந்திப்பு : ரா. முருகப்பன்

போர்ச் சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது; மறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாகக் கூறினால், ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால், மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர் பிழைக்க ஓடி கோயிலில் தஞ்சம் புகும்போதுகூட, சாதிப்படி நிலை வெளிப்படும். ஓடி தஞ்சமடையும்போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்தப் பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும் உத்தரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கவுரவமான கட்டியக் காரன் போல, அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கவுரவமாகவே பணியாற்றுவது எதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கவுரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினையில்லை. அது நல்லதுதான். ஆனால், அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்க மாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.

(நன்றி தலித்முரசு)

Posté par assura à 17:53 - Permalien [#]

24 juillet 2007

kalai

கடந்த 15 ஆம் திகதி ஞாயிறு  தோழர் கலைச்செல்வனின் இரண்டாவது நினைவஞ்சலிக் கூட்டமும், சமகால அரசயில் நிகழ்வு பற்றிய கலந்துரையாடலும் நிகழந்தது. இந்நிகழ்வை பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட நான் இந்நிகழ்வில் இறுதிவரை பங்கு கொள்ள முடியாத சூழலினால்  நான் இருக்கும்போது நிகழ்ந்தவைகளையும் பிற்பாடு நிகழ்ந்த சம்பவங்களை அறிந்த செய்திகளையும் சுருக்கமாகத் தெரிவிக்கின்றேன்.

நிகழ்வு மாலை 4 30 மணியளவில் ஆரம்பமானது. ஆரம்ப உரையை தோழர் கிருபவன் அவர்கள் பேசினார்.அவர் கலைச் செல்வனின் இழப்பும் அவரது ஜனநாயகச் செயல்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார். அதைத்தொடர்ந்து நிகழ்வை நெறிப்படுத்தியவர் நண்பர் அருந்ததி.

கலைச்செல்வனின் நினைவுப் பேருரை எனும் தலைப்பில் நா சபேசன் அவர்கள் லண்டனிலிருந்து வந்து உரையாற்றினார். அவர் தனக்கும் கலைச்செல்வனுக்குமான பால்ய நட்பின் ஆழமான பிணைப்பும் அவருடான சமூக வேலைத்திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார். சபேசன் அவர்கள் கலைச்செல்வனின் நினைவைத் தான் இங்கு பகிர்ந்து கொள்வதோடு இன்றைய எமது அரசியல் சமூக நிகழ்வுகழ்கள் மீதான தனது கேள்விகளை இங்கு முன்வக்கப் போவதாகவும் பிற்பாடு அக்கேள்விகள் மீதான் கலந்துரையாடல்களை நாம் மேற்கொள்வது ஒர் அரோக்கியமான நிகழ்வாக இருக்குமெனக் கூறி பின்வரும் சில கேள்விகனை முன்வைத்தார்.

1)அரசியல் தீர்வின் ஆதரவாளர்கள் ஏன் தோல்வியைத் தழுவுகிறார்கள்?

2)மார்க்சிய சமூகப் பார்வையும் அதனூடான தேசியமும், தேசியத் தோற்றமும் எவ்வாறு நோக்கப்படுகிறது?

3)முஸ்லிம் மக்கள், கிழக்கு மாகாண மக்கள்,  தலித் மக்கள் போன்ற தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே இருக்கக்கூடிய தனித்துவ இனங்கள் மீதான கரிசனை தற்போது மேலோங்கி நிற்;கும் சூழலை நாம் எப்படி எதிர்கொள்வது?

3)முஸ்லிம் மக்கள் மத்தியில் மதவாதமானது மேலோங்கி நிற்கிறது. இம்மக்களின் மதவாதம் பற்றியதையும் ஓர் கேள்வியாக முன்வைக்கிறேன். என்பதாகவும்  சபேசன் அவர்கள் தனது கேள்விகளை முன்வைத்தார். இக்கேள்விகளுக்கான கலந்துரையாடல்கள் இறுதியில் நிகழ்த்த விரும்புவதாகவும். இக்கலந்துரையாடல்களில் பங்கு பற்றுவோர் அதற்கான தயாரிப்புகளில் இருக்கும்படியும் அருந்ததி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

அதைத்தொடர்ந்து தமரா, அருணா எனும் சிறுவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

P1010086

P1010090

ஒளிப்படக் கலைஞர் தமயந்தியின் புதல்வியான இலக்கியாவின் ஒளிப்படக் காட்சிகளை திரையில் பதிவு செய்து காண்பித்தார்கள். அத்துடன் அவரது ஒளிப்பட பிரதிகள்; சுவர்களையும் அலங்கரித்திருந்தது. திரையினுடாக அவரது படைப்புக்களை தெளிவாகப் பார்க்கமுடியாத சூழல் அரங்கத்தில் நிலவியபோதும். சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த அNது விதமான ஒளிப்படங்களை நாம் இரசிக்கக்கூடியதாகவே இருந்தது.

இதன் பிற்பாடு நிகழ்ந்த நிகழ்வுகளான நிரந்தரத் தீர்வுத் திட்டம் பற்றிப் பேசியவர்கள் தோழர் விஸ்வலிங்கம் சிவலிங்கம், முஹம்மது எஸ். ஆர். நிஸ்தர். ந. சுசீந்திரன். ராகவன். டொக்டர். பாலா. போன்றோர்களாகும்;. இந்நிகழ்வையும் அதன் பிற்பாடான கலந்துரையாடலிலும் நான் கலந்து கொள்ளாத போதும் அறிந்தவையை கூறுவதும் தவறில்லையெனக் கருதுகிறேன்.

P1010099

மேற்படி நிகழ்வில் பேசிய சுசீந்திரன் கருத்திலேயே பலர் முரண்பட்டுப் பேசியதாகவும் அறிந்தேன் குறிப்பாக அவரது உரையை விமர்சித்வர்களில் குறிப்பாக கீரன், ராகவன் எம.ஆர்.ஸ்டாலின் போன்றோர் இருந்துள்ளனர். சுசீந்திரனின் உரையில் இலங்கை அரசானது « மகாவம்ச » மனநிலையில் இருப்பதாகவும் மேலும் அவரது பேச்சானது புலிகளின் தமிழ்த் தேசியத்திற்கு வலுவூட்டும் தன்மை கொண்டதாகவம் காணப்பட்டதனாலேயே அவர் மீதான விமர்சனங்கள் காரசாரமாக இருந்ததாக அறிந்தேன். மேலும் புலிகள் இந்தியாவிலிருந்து; தமது பிரச்சாரத்திற்காக நெடுமாறன், திருமாவளவன் போன்றோரை அழைக்கும் சிரமத்தை குறைப்பதற்கு, சுசீந்திரனை அவர்கள் உபயோகிக்கும்படி எம்.ஆர். ஸ்டாலின் பரிந்துரை செய்ததாகவும் அறிந்தேன். நான் இருந்திருந்தால் பகவத்கீதை மனநிலையில் உள்ள சமூகத்தைவிட மகாவம்ச மனநிலை கொண்ட சமூகம் ஒன்றும் அபாயகரமானதல்ல எனும் பதிலை நண்பன் சுசீந்திரனுக்கு கொடுத்திருப்பேன்.

இந்நிகழ்வில் பல நாடுகளிலிருந்தும் கலைச்செல்வனின் நண்பர்களும் அவரது இலக்கியத் தோழர்களும் வந்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

10

Posté par assura à 23:18 - Permalien [#]

20 juillet 2007

stuttgard1

கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை ஜேர்மனியிலுள்ள சுருட்காட் எனும் நகரில்   ஐக்கிய ஜனநாயக முன்னணியினரால் ஓர் கலந்துரையாடல் மகாநாடு ஒழுங்கு படுத்தப்பட்டது. இச்செய்தியானது    எமது இணையத் தளத்தினூடாகவும்  அறிமுகப்படுத்தப் பட்டிருந்ததை எமது வாசகர்களாகி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஐக்கிய ஜனநாயக முன்னணித் தோழர்களும் நண்பர்களும் இவ்வாறான மகாநாடொன்றை  ஏற்கனவே  நடாத்தி முடித்தவர்கள். கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மகாநாட்டின் பிரதான நோக்கமும், ஏற்கனவே இவர்களால் நடாத்தப்பட்ட மகாநாட்டிற்கான நோக்கமும் ஓன்றாகவே இருந்தது.

Composition1

அதாவது முதலாவது மகாநாடும் இலங்கை இனப்பிரச்னையின் தீர்வு சம்பந்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டம் பற்றிய ஆலோசனைகளும் அதற்கான ஆதரவைப் பெறும் நோக்கமாகவும் இருந்தது. இரண்டாவது முறையாக நடைபெற்ற மகாநாட்டின் நோக்கமும் தீர்வுத்திட்டம் பற்றியதாகவே இருந்தது. ஆனால் இம்முறை இலங்கையிலிருந்து மூன்று கட்சியின் பிரதி நிதிகளாக, தலைவர் திரு. சித்தார்தன் (புளொட்) தோழர் சுகு (ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியினரின் செயலாளர் நாயகம்) திரு.ஆனந்தசங்கரி (த.வி.கூ தலைவர்) போன்ற கட்சியினர்  சமூகமளித்திருந்தனர். மேற்படி கட்சியினர் தாம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தின்  ஆதரவைப் பெறுவதற்காக ஐக்கியப்பட்டு செயல்படுவதாகவும், அத்தீர்வித்திட்டம் பற்றி பிறகட்சிகளுடனும் பேசி அவர்களும் அதற்கு ஆதரவு தரும்பட்சத்தில் அவர்களுடனும் இணைந்து தற்போதைய தமது ஐக்கியமுன்னணியை பலப்படுத்தவும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இம் மகாநாட்டிற்காக கலந்து கொள்வதற்கென கனடா, லண்டன், சுவிஸ், நோர்வே, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.  இலங்கை ஐனநாயக முன்னணியினர் பிரான்சிலுள்ள இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய எம்மை இரண்டாவது முறையாகவும் மகாநாட்டில் கலந்து கொண்டு தீர்வித்திட்டம் பற்றிய எமது அபிப்பிராயங்களையும் எமது தலித் சமூகம் பற்றிய பிரச்சனை பற்றியும் விவாதிக்கும் சந்தர்ப்பத்தைத் தந்து, அம் மகாநாட்டிற்கு இரண்டாவது முறையாகவும் அழைப்பு விடுத்தனர்.

அந்த வகையில் இலங்கை ஜனநாக முன்னணியின் உறுப்பினர்களுக்கு எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் சார்பில் இரண்டாவது முறையாகவும் நன்றியைத் தெரிவிக்க கடைமைப் பட்டுள்ளோம். எமது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் சார்பில் தேவதாசன், சுந்தரலிங்கம், எம்.ஆர் ஸ்டாலின், அசுரா போன்றோர் கலந்து கொண்டோம்.

கூட்டம் லோகநாதன் மாஸ்டரின்  தொடக்கவுரையுடனும் தோழர் அலெக்ஸ் அவர்களின் நெறிப்படுத்தலூடாகவும் ஆரம்பிக்கப்பட்டது. வரவேற்புரை இ.ஜ.முன்னணியின் தலைவர் ஜெயக்குமாரால் ஆற்றப்பட்டு அதைத் தெடர்ந்து மகாநாடு பிறபேச்சாளர்களுக்காகவும்  நகர்த்தப்பட்டது.
P1010078

தோழர் ஜெகநாதன் கட்சிப் பிரதிநிதிளுக்கு முன்பாக உரையாற்றினார். அவர் வழமைபோல் அனைத்து ஒடுக்குமுறைக்குள்ளான சமூகங்களின் நியாயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதாகக் கூறினார்.

இக்கலந்துரையாடலானது இலங்கையிலிருந்து வருகைதந்த கட்சிப்பிரதிநிதிகளின் பேச்சுக்களின் சாராம்சத்திலிருந்தும், பார்வையாளர்களிடம் இலங்கை இனப்பிரச்னை சம்பந்தமான அய்யப்பாடுகள் இருப்பின் அதுபற்றிப் பேசினாலும் அதற்கான பதில்களை கட்சிப்பிரதிநிதிகள் தருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

முதலில்  த.வி. கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் உரையாற்றினார். அவரின் உரை எமக்கு ஏற்கனவே பனப்பாடம் செய்யப்பட்ட ஒன்று. இம்முறை புதிய செய்தியாக  தான் பிரபாகரனுக்கு எழுதுகின்ற கடிதங்கள் பற்றியும் அக் கடிதக் குவியல்களில் இரண்டை இலங்கை அரசாங்கம் நூல் வடிவில் வெளியிட்டிருப்பதையும் புளகாங்கிதத்துடன் தெரியப் படுத்தினார். தனது அக்கடிதங்களில் தான் இலங்கை அரசாங்கத்தையே பெரிதும் விமர்சித்திருந்தும் அவர்கள் தனது கடிதத்தை பிரசுரித்திருக்கிறார்களெனில் அது எவ்வளவு முக்கியமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.
P1010066

இரண்டாவதாக உரையாற்றிய சித்தார்த்தன் அவர்கள் இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இலங்கை அரச தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தங்கள் பற்றியும், இலங்கை அரசானது ஒரு பேரினவாத அரசு எனவும். அவ்வரசானது நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதாகவும் பேசினார்.

P1010070

தோழர் சுகு பேசுகின்றபோது  தனது பேச்சின் தொடக்கத்திலேயே இங்கு தேசிய ஒடுக்குமுறை தொடர்பாக அக்கறையுள்ளவர்கள், சமூக மாற்றம் வேண்டி அக்கறையுள்ளவர்கள், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர்கள் ,பெண்கள் தொடர்பாக அக்கறையுள்ளவர்கள், பிரதேச பாரபட்சம் தொடர்பாக அக்கறையுள்ளவர்கள்….. எனத் தொடங்கி, பயங்கரவாதச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இலங்கை அரசபடையால் இன்பம், செல்வம் சுட்டுக் கொன்று வீசி எறியப்பட்டதற்கு எதிராக நாம் குரல் கொடுத்த காலகட்டத்திலேதான் புன்னாலைக்கட்டுவன் எனும் ஊரில் சி.ரி.பி. றைவரான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அண்ணாச்சாமி எனும் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு அவரது இரத்தத்தை அவருக்கே பருக்கிய சம்பவம் நடைபெற்றது. அதை நாம் எப்படி கண்டித்தோம்!!! எனக் கூறியதோடு இன்றைய சிந்தனையின் பன்மைத்துவங்கள் பற்றியும் அது மதிக்கப்பட வேண்டும் என்பதாகவும் பேசியதோட, யாழ்ப்பாண மேலாதிக்கமானது   கிழக்கு மாகாண மக்களை , முஸ்லிம் மக்களை , மலையக மக்களை பிரதேச ஒடுக்குமுறைக் குள்ளாக்கியதென்பதையம் விபரித்தார். இறுதியில்   இலங்கைப் பேரிவாத அரசானது தமிழ் மக்களின் கல்வி மொழி வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டியதன் விளைவே எமது போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் கூறினார். பிராந்திய மக்களின் தனித்துவம் பற்றிப்பேசிய தோழர் சுகு இறுதியில் இணைந்த வட-கிழக்கைத்தான் நாம் விரும்புகின்றோம் என முடிவுரையாகவும் அழுத்திச் சொன்னார்.

கட்சிப் பிரதிநிதிகளின் பேச்சுக்களுக்குப் பிற்பாடு கலந்துரையாடலில் கீழ்காணப்படுவோர் உரையாற்றிய போதும் எமது தலித் சமூகத்தின் அக்கறையுள்ளவர்களின் உரையாடல்களையே நாம் இங்கு முக்கியத்துவப் படுத்தியுள்ளோமே தவிர பிறர் பேச்சுக்கள் பயனற்றதென்பதன் நோக்கமல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டுகின்றோம்.  எமது உரையாடல்களையும் எமது கேளவிகளையும் பிற ஊடகங்கள் கவனம் கொண்டிருப்பின் எமக்கு இதை எழுதும் தேவை கூட நிகழ்ந்திருக்காது. புளொட் தலைவர் சித்தார்த்தன் மீதான கேள்விகள் முன்வைக்கப்பட்டபோதும் அவர் அதற்கான பதில்களை அளிக்காத பட்சத்தில் புளொட் அமைப்பின் சவிஸ் பொறுப்பாளர் தோழர் ரஞ்சன் அவர்களே பதிலளித்மையால் அவரது கருத்தையும் நாம் பதிவு செய்துள்ளோம்.

உரையாடலில் பங்கு கொண்டோர்.

சிவகுருநாதன்
பீட்டர் குலம்

ஜெயா
சோலையூரான்
அசுரா
ஜெமினி
தேவதாசன்
குமார்
டொக்டர் பாலா
திருமதி சறீகாந்தா
திருமதி லோகநதன்
இராகவன்
ரஞ்சன்
புதுவை லோலன்
கீரன்   

தேவதாசன் பேசுகின்ற போது இக்கலந்துரையாடலின் நோக்கம் போன்றே கடந்த முறை நடைபெற்ற கலந்துரையாடலின் நோக்கமும் இருந்தது. நாம் கடந்த கலந்துரையாடலில் எமது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் அவர்கள் பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையும் அக்கலந்துரையாடலில் வெளிப்படுத்தியிருந்தோம். அதன் அவசியத்தையே நாம் இங்கும் வலியுறுத்துகின்றோம். எமது மக்களின் பிரச்சனை கவனத்தில் கொள்ளப்படாது எடுக்கும் எம் முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை என்பதாகவும் உரையாற்றினார்.

இதற்கு பதிலளித்த தோழர் சுகு அவர்கள் தாம் எமது அறிக்கையை வாசித்ததாகவும் அதிலுள்ள நியாயங் கவனிக்கப்பட வேண்டியவை எனக் கூறியதுடன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை அப்போது சாதி குறைந்தவர்கள் எனும் அடையாளத்துடனேயே பார்க்கப்பட்டதாகவும். தாம் தலித் மக்கள் பிரச்சனை சம்பந்தமாக பல போராட்டங்கள் செய்ததையும் விபரித்தார்.

அசுரா பேசுகின்றபோது. இச் சந்திப்பிலே முதலிலே உரையாற்றிய லோகநாதன் மாஸ்டர் அவர்கள் இந்து மதமானது ஐக்கியத்தை வலியுறுத்தும் மாதமக உள்ளது என்றும் இங்கு வந்துள்ள கட்சி உறுப்பினர்களின் ஐக்கியமும்  அதே போல் ஐக்கியத்துடன் செயல் படுமென்றும் கூறினார். அதற்கு விடையாக அசுரா லோகநாதன் மாஸ்டரின் இந்து மதத்தின் மீதான அவரது நம்பிக்கையை மதிப்பதாகவும் தாம் தமது ‘வடு’ பத்திரிகையில் இந்து மதத்தின் சமூக வஞ்சனைகளை தொடர்ந்து எழுதி வருவதாகவும் அதன் மீதான விமர்சனங்களை எவர் முன்வைப்பினும் அதைத் தாம் ஓர் ஆரோக்கியமான விவாதமாக   மேற்கொள்ள முடியுமெனவும் கூறினார். கட்சி அங்கத்தவர்களின் உரையின் முரண்பாடுகளை பற்றிக் கூறும்போது, ஆனந்த சங்கரி அவர்கள் எப்போதும் படிக்காதவர்களை கிண்டல் செய்வதும் ஜி.ஜி. பொன்னம்பலம், சேர் பொன் இராமநாதன் போன்றவர்கள் பெரிய அறிவாளிகள்; அவர்கள் மகாராணியே போற்றும் அறிவாற்றல் பெற்றவர்கள் எனபதாக சென்ற இடங்களிலெல்லாம் அவர்களின் புகழ் பாடுவதுபோல், இக் கூட்டத்திலும் அவர்கள் மேன்மை கூறிப் புளகாங்கிதம் அடைந்தார். அதற்காக அசுரா இவ்வாறான பேச்சானது எமது சமூகத்தை இழிவு படுத்துவதாகவும் ஆனந்த சங்கரி அவர்கள் கூறிப் பெருமைப்பட்ட அறிவாளிகளான ஜி.ஜி பொன்னம்பலமும் , இராமநாதனுமே தலித் மக்களுக்கான கல்வி மறுப்புக்கும், அவர்களது சமூகப் புறக்கணிப்புக்கும் அரசியல் காரணிகளாக செயல்பட்டவர்கள். எனவே இவரது பேச்சானது எமது மக்களை அவமானப் படுத்தும் செயல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.

சித்தார்தன் அவர்களின் உரையின் முரண்பாடு பற்றி அசுரா கூறும்போது. சித்தார்த்தன் அவர்கள் புலி மக்கள் விரோதிகள் என ஒரு பக்கமாகவும, புலிகள் கிழக்கில் தோற்கடிக்கப்பட்டது போல் வடக்கிலும் தோற்கடிக்கப்பட்டால் எமது நிலை என்னவாகும் என்றும் பேசியதோடு  முதன்மை எதிரியாக சிங்கள அரசே இருக்கிறதெனும் போக்கில் பேசியதை சுட்டிக் காட்டினார்.

தோழர் சுகுவின் உரையிலும் பல முரண்பாடுகள் அசுராவால் சுட்டிக்காட்டப்பட்டது. தலித் சமூகங்களின் நிலைமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும், தனித்துவங்கங் பேணப்பட வேண்டும் பிராதேச பாகுபாடுகள் மிக மோசமான செயல் என்பதாகக் கூறியபோதும். இறுதியில் கல்வி, வேலைவாய்ப்பு, மொழித் திணிப்புகளே தமிழர்களின் போராட்டத்திற்கு காரணமாக இருந்தது. என்ற அவரது பேச்சுக்கு அசுரா அவ்வாறான தேவைகள் எந்த சமூகத்திற்கு அவசியமானதாக இருந்தது எம் மக்களுக்கு சிங்கள அரசு வெகு தூரத்திலேயே இருக்கிறது. எமது « பேரினவாதிகள் » பக்கத்து வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். எல்லாத் தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம் என்பது  தவறானதும் அது ஆதிக்க சமூகத்திற்கு மட்டுமே தேவையான ஒன்றாக இருந்ததென்றும் கூறியதோடு. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும், கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் மனித மேன்மை பற்றியெல்லாம் பேசுகிற நாம் சமூக ரீதியாக புறக்கணிக்கப்படும் நிகழ்வுகள் எப்படி கவனம் கொள்ளாது போகும் எனவும் கேள்வி எழுப்பினார். தனிமனித நேர்மையான போக்கை தோழர் சுகுவிடம் காணப்படுகின்றபோதும் அவரது முரண்பாட்டிற்கான காரணமாக அவர் ஓர் கட்சி சார்ந்து செயல்படுவதும் கட்சியைக் காப்பாற்றும் தேவையே அவரது முரண்பாட்டிற்கான காரணமா இருப்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஈ.பிஆர்.எல். எவ் (ப.நா) கட்சியானது எமது தலித் சமூக மேம்பாட்டு அமைப்பு சார்ந்தவர்களை சந்தித்து எமது பிரச்சனை பற்றி பேசியபோது எமது பிரச்சனை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று எனக் கூறியதோடு நாம் கேட்டுக் கொண்டபடி அதனது கட்சிப் பத்திரிகையான ‘கண்ணோட்டத்தில்’ எமது நிலைப்பாடுகள் பற்றி எழுதுவதாகவும் கூறியதை செயல் படுத்தப்பட வில்லை என்பதையும் அசுரா சட்டிக் காட்டினார்.

அதற்கு பதிலளித்த தோழர் சுகு அவர்கள் நாம் எதிர்காலத்தில் இதைக் கவனத்தில் கொள்வோம் எனக் கூறினார். இருப்பினும் தோழர் சுகு அவர்கள் சுவிசில் நடைபெற்ற சந்திப்பில் தீண்டாமை பற்றியோ தலித் சமூகங்கள் பற்றியோ எவ்வித உரையாடலையும் மேற்கொள்ளாது. நாம் கலந்து கொண்ட ஜேர்மன் மகாநாட்டில் மட்டும் இது பற்றிப் பேசியதானது கட்சிகள் மீதான நடவடிக்கைகளை மீண்டும் நாம் ஆழமாக பரிசீலிக்கும் தேவையையே உணர்த்துகின்றது.

அடுத்ததாகப் பேசிய எம்.ஆர் ஸ்டாலின்  இலங்கையிலிருந்து வந்திருக்கின்ற மூன்று அமைப்புக்களின் நிலைப்பாட்டில் இருந்துதான் இதுவரையான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கிறததே தவிர தமிழ் மக்கள் பற்றிய கவனம் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த மூன்று அமைப்புக்கள் சார்ந்த விடயத்துடன் தான் காலையிலிருந்து உரையாடப்படுகிறது. தமிழ் மக்களின் அரசியல் நிலை என்ன என்பதும் அவ்வரசியலை எந்த ஆதிக்க சக்திகள் முன்னெடுத்துச் செல்கின்றன என்பது பற்றியம் காலையில் சுகுத் தோழரும் விளக்கமாகக் கூறினார். அதாவது தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற ஆதிக்க சக்திகள் தான்  அவ்வரசியலையும் தீர்மானிக்கிறவர்களாக இருந்து வந்துள்ளனர்.

இதுவரையான இருபத்து ஐந்து வருடகால ஆயுதப்போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்களை ஒரு பாசிசச் சூழலுக்குள் இட்டுச் சென்றிருக்கிறது. அதனால் அந்தப் பாசிசச் சக்திகளை வழி நடத்திய சக்திகள் யார் என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும்.  இவ்வாறான ஆதிக்க சக்திகளை அடையாளம் காண்பதன் ஊடாகத்தான்   உண்மையான  தமிழ் மக்களின் பிரச்சனை என்னவென்பதை ஆராய முடியும். அந்த வகையில் இங்கு அவ்வாறான நிலைமைகளை ஆராயும் நோக்கம் எதுவும் பேசப்படவில்லை. தமிழரசுக் கட்சியாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் பரப்பப்பட்ட பொய்யுரைகளான, சிங்களச் சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டம், கல்லோயா குடியேற்றச் சட்டங்கள் என்கின்ற மெருகூட்டப்பட்ட விடயங்கள் தவிர தமிழ் மக்களுக்கான ஏனைய பிரச்சனைகள் அதிகமாக இருந்தன. இவர்களால் கூறப்பட்ட விடயமெல்லாம் யாழ்ப்பாணத்திலேயுள்ள மத்தியதர மேட்டுக் குடியினரின்  நலன்கள் சார்ந்த விடயமாகவே இருந்தன.

பக்கத்திலுள்ளவரை பள்ளிக்கூடம் செல்ல மறுத்துக் கொண்டு இருந்த ஓர் உயர் சாதி ஆதிக்கச் சமூகமானது பல்கலைக் கழக வாய்ப்பு மறுக்கப்பட்ட செயலை தமிழ் மக்கள் எல்லோருக்குமான பிரச்சனையாக பரப்பப்பட்டது.  உயர் கல்வி மறுக்கப்பட்டாதாகப் பிரிவினை கோரிய நீங்கள் ஆரம்பக் கல்வியே மறுக்கப்பட்ட தலித்துக்களுக்கு நீங்கள் என்ன  பிரித்துக் கொடுக்கப் போகிறீர்கள்? கிழக்கு மக்கள் பிரச்சனை, முஸ்லிம் மக்கள் பிரச்சனை, தலித் மக்கள் பிரச்சனைகள் என தற்போது வெளி வரும சூழலுக்கு அடிப்படைக் காரணம் என்ன? தமிழ் மக்களுக்குள்ளேயே தனித்துவமான மேற்படி இனங்களின் சமூக, அரசியல் பிரச்சனைகளை மறைத்துக் கொண்டு எழுப்பப்பட்ட தமிழீழக் கொள்கை பேசியவர்கள் எல்லோருமே வெளிநாடுகளுக்கு ஒடித் தப்பிவிட தற்போது மூன்றில் ஒரு வீதமான மக்களே போராட்டம் எனும் பெயரில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அம் மக்களும் ஆதிக்க சாதியனிரின் ஒடுக்குமறைக்கு பலியாகிய மக்களாகவே இருக்கிறார்கள்.  மேற் கூறிய தனித்துவமான இனங்களின் அரசியல் சமூக விவகாரங்கள் கவனத்தில் கொண்டு அவர்களுக்குரிய அரசியல், சமூக உத்தரவாதங்களை நீங்கள் முன்வைக்கும் பட்சத்திலேயேதான்  உண்மையான சமூக அமைதியை நோக்கி நாம் நகர முடியும் என்பதாக ஸ்டாலின் அவர்கள் தனது கருத்தை முன்வைத்தார்.

இதற்கு முதலில் பதிலளித்த சுகுத்தோழர். அவர்கள் தனது பதிலில் நாங்கள் வைத்த தீர்வித்திட்டமானது மாற்றப்பட முடியாத வேதமோ, பைபிளோ அல்ல ஜனநாயக முறைப்படி அதில் மாற்றங்கள் செய்யய நாம் தடையாக இருக்கப்போவதில்லை. மற்றது கருணாவினதும் புலிகளினதும் பிரச்சனையாக மட்டும் கிழக்குப் பிரச்சனையை பார்க்கமுடிதென்றுதான் நான் நினைக்கிறேன். காரணம் என்னவெனில் பலதரப்பட்ட கட்சியிலும் கிழக்கு மாகணத் தோழர்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். மற்றும் வந்து கிழக்கின் குரலின் செய்தியை நான் பல தடவை படித்துப்பார்த்தேன்.    அதில வந்து ஈ.பி.ஆர்.எல.எவ் இல் இருக்கும் கிழக்கு மாகாண மக்கள் தமது பிரதேச மக்களுக்கு துரோகமிழைக்கக் கூடாது எனக் கூறப்பட்டதை நான் ஒரு  கருத்து வன்முறையாகவே பார்க்றேன்.   என தனது பதிலில் கூறினார்.

பிற்பாடு ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த ஐயா ஆனந்த சங்கரி அவர்கள் கொஞசம் கடுப்பாகிப் பேசினார். அதாவது நீங்கள் பேசியமாதிரி நாம் பேச வெளிக்கிட்டால்… உங்களை விட நான் பத்து மடங்கு பாய்வன். ஆனால் நான் பேசவில்லை. நீங்கள் பேசுற மாதிரி நாங்கள் பேசமுடியாது. நாங்கள் முள்ளில விழுந்த சீலையை மெதுவாகத்தான் எடுக்கவேண்டும். நீங்கள் சொல்லுகிற பிரச்சனை எதுவும் வட-கிழக்கு மாகாணத்தில இல்லை. எனது முக்கிய பணியாக நான் கருதுவது இந்தப் பாசிசக் கும்பலான புலிகளிடமிருந்து எமது மக்களை காப்பாற்றவேண்டும். நீங்கள் கூறுகிற மாதிரி தலித்துக்கள்தான் அங்கு இறந்து கொண்டு இருக்கிறார்கள் என்றில்லை. எல்லாரும்தான்      அங்கு இறந்து கொண்டு இருக்கிறார்கள். என மீண்டும் ஒரு நீண்ட புராணம் பாடி முடித்தார்.

நண்பர் கீரன் தனதுரையில்  என்னைப் பாதித்த விடயம் என்னவென்றால் ஐயா (ஆ.ச) கூறிய விடயம் பற்றியே.. அதாவது ‘நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் நாங்கள் ஒரு பூர்வீகக் குடிகளெண்டு’  அந்த பூவீகக் குடிகள் பற்றி எனக்கு விளங்கவில்லை. என்னை நான் ஒரு பூர்வீகக் குடியாக கருதவில்லை. வேணுமெண்டால் என்னை நான் ஒரு ‘பெரும் குடி’ என்று சொல்லலாமே தவிர பூர்வீகக் குடியென்று சொல்ல முடியாது.

இந்துத்துவம் பற்றியும் நாம் பரவலாக பல பரிமாணங்களில் பேச வெண்டும். நாம் 60 ஆம் ஆண்டு கால கட்டத்தைப் பார்த்தோமாயின் இந்துத்துவமானது அது எல்லா அரசியல் பேசியவர்களிடமும் ஆழமாக இருந்துள்ளது. அதாவது முற்போக்கு, பிற்போக்கு என பேசியவர்களிடத்திலும் ஆழமாக வேரூன்றி இருந்துள்ளது. அதற்கு நான் ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் தோழர் சண்முகதாசன் (சீனக் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்) அவர்கள் ஒரு கூட்டத்தில் ஆயுதப் போராட்டத்திற்கான் விளக்கம் ஒன்றைச் சொல்வதற்காக சூரன் போரிலிருந்து ஒரு எட்டு அடி கொண்ட பாடலை உதாரணத்திற்கு படித்துக்காட்டினார். அந்த எட்டு அடிப்பாடலிலும் ஆறு அடிகள் யுத்தத்தைப் பற்றியதாகவே இருந்தது, மிகுதி இரண்டடி மட்டுமே முருகனைப் பாடும் வரிகளாக இருந்துது. ஆகவே இந்து மதத்தின் சமூகப் போக்கை நாம் விரிவான பார்வைக்குட்படுத்த முனைய வெண்டும். மற்றது கிழக்குமாகணம் பற்றியது  கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்க இருப்பது பற்றி இங்கு யாரும் பேசவில்லலை. கிழக்கில் நடை பெறப் போகும் தேர்தலூடாக கட்சிகளாகிய நீங்கள் ஓர் முன்மாதிரியாக நடப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் இது. அங்கு வாழ்கின்ற சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் அந்த ஒற்றுமையூடாக நடைபெறும் தேர்தலில் புலிகள் தோற்கடிக்ப்பட வெண்டும். இவ்வாறான ஜனநாயக செயல் பாட்டின் வெற்றிதான் வடக்கிலும் நாம் மேற்கொள்ள முன்மாதிரியாக இருக்கும் . ஆகவே இது உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி இதை நீங்கள் செயல் படுத்துவதுதான் நியாயமாக இருக்கும் என நான் கருதுகிறேன். என கீரன் அவர்கள் குறிப்பிட்டார்.

மற்றது புளொட் அமைப்பின் தலைவர் பற்றிய விமர்சனங்களுக்கு அக் கட்சியின் சுவிஸ் பொறுப்பாளர். ரஞ்சன் அவர்கள் பதிலளிக்கும்போது. சித்தார்த்தன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக செயல் பட்டார் என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதற்கு நான் அக்கட்சியின் உறுப்பினன் என்ற வகையில் பதிலளிக்க விரும்புகிறேன் அதாவது அக்காலகட்டமானது ஒரு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலகட்டமாகும். அது வந் து அப்பேச்சுவார்த்தைக் காலட்டத்தினூடாக மக்களுக்கு ஓர் தீர் எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சில நடவடிக்கைக்காக செயல் பட்ட ஒன்றே தவிர புலிகளை ஆதரிக்கவேண்டும் என்ற நிலையிலிருந்து அவர் அப்படி செயல் படவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மற்றுது கிழக்கு மாகாணத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டது போல் வடக்கிலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டால் எமது மக்கள் நிலை என்னவென்று யோசிக்க வேண்டும் என்று அவர் கூறியதன் அர்த்தம் வந்து புலிகள் இல்லாவிட்டால் மக்களை யாரும் காப்பாற்ற முடியாதென்ற அர்த்தத்தில் அல்ல. (!!!!) இந்த விடயம் பற்றி தலைவர் எமக்கு பல முறை தெளிவு படுத்தியுள்ளார். அதாவது அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஓர் தீர்வை  வைத்தால்தான்  பிரச்சனை தீரும் என்பதே தவிர வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதால் தீர்வு ஏற்பட்டுவிடாது என்பதுதான் அதன் அர்த்தம் (!!!!)

அடுத்ததாக எனது நண்பர் சுந்தரமூர்த்தி ஒரு கருத்தை தெரிவித்தார் கிழக்குமாகாணம் குறித்து அவர் நல்ல கருத்தை தெரிவித்திருக்கிறார். உண்மையில் நாம் கிழக்கு மாகாணம் குறித்து பல வேலைகள் செய்யவேண்டும். தோழர் சுந்தரமூர்த்தி குறிப்பிட்டபடி இந்த மூன்று கட்சியினரும் கொழும்பில் ஒழிந்து கொண்டே மக்களுக்கு வேலை செய்யும் நிலை இருப்பதாகவும். கிழக்கில் நேரடியாக மக்கள் மத்தியில் வேலை செய்யும் சூழல் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறதென்றும் தெரிவித்தார்.  ஆனால் நாங்களும் வவுனியா, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலும் மக்கள் மத்தில் வேலை செய்து வருகிறோம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரம்புகிறேன் என தனது உரையில் குறிப்பிட்டார்


Posté par assura à 11:03 - Permalien [#]

03 juillet 2007

இலங்கையர் ஐனநாயக முன்னணி

 

தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுத்திட்டமும்
(கூட்டுமுன்னணித் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் ஜனநாயகசக்திகளுடனான
கலந்துரையாடல்)

கருத்தரங்கு
(மு.கார்த்திகேசன் நினைவரங்கம்)

14.07.2007 – 15.07.07

இலங்கையர் ஜனநாயக முன்னணி
ஜேர்மனி

Srilankan Demokratic Forum

               Adresse:  srilankische Demokratische Forum

                                    Postfach: 1231

                                    70797 Kornwestheim Germany

                                    E-mail: sldf_germany@yahoo.de

14.07.07

09.00  காலை உணவு

10.00:  வரவேற்புரை  தலைவர் ச.nஐயக்குமார்

10.15  ஆரம்ப உரை. (கலந்துரையாடலின் நோக்கமும் தேவையும்.)
       – ஜெகநாதன்

10.45:  தீர்வுத்திட்டம் தொடர்பாக கட்சித்தலைவர்களது முயற்சிகளும் 
      விளக்கங்களும்

13.00:  மதிய உணவு

14.00:  தீர்வுத்திட்டம் தொடர்பான கட்சிகள் முன்வைத்திருக்கும் யோசனைகள்
      குறித்து கட்சித்தலைவர்களுடனான நேரடிக்கலந்துரையாடல்

16.00  தேனீர் இடைவேளை

18.00: இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களும்
     அவற்றுக்கெதிரான ஐரோப்பிய புலம்பெயர் தமிழ்மக்களின்
     முன்முயற்சிகளும்.

கலந்துரையாடல்.

20:00 இரவு உணவு

15.07.07 ஞாயிற்றுக்கிழமை
8.00  காலை உணவு
9.00:  தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஊடகங்களின் முயற்சிகளும்
     அதற்கான பங்களிப்புகளும்

11.00: தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுத்திட்டங்களில்
     ஜனநாயகசக்திகளின் கூட்டுமுயற்சிகளும் பங்களிப்புகளும்

     நன்றியுரை.  .சந்திரன் (இலங்கையர் ஜனநாயக முன்னணி)
13.00 மதிய உணவு

கருத்தரங்கு நடைபெறுமிடம்:

In der & Versammlungshalle

Vaihingen, Katzenbachstr. 27

70563 Stuttgart - Germany

Tel:      0711-9335266

Handy: 015115911257,  017624603501

   
முக்கிய குறிப்பு:
அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்கள் மட்டுமே. அனுமதிக்கப்படுவார்கள். ஜூன் 30ந்திகதி முன்னதாக பதிவு செய்து கொள்ளவும். தங்குமிட வசதி தேவைப்படுபவர்கள் முன்கூட்டி அறியத்தரவும்.

நுழைவுக்கட்டணம்: 30.00€
நுழைவுக்கட்டணம் + தங்குமிடவசதி – 50.00€
புகைப்படம்;; வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது

Posté par assura à 21:51 - Permalien [#]
« Accueil  1